Chapter 29
கல்லடியும் சொல்லடியும் பட்ட..
உன் காலடிச் சுவடுகளில் முத்தமிட்டேன்
போர்க்களத்தில் பூத்திருக்கும் பூவே..’
உன் புன்னகையை மட்டும் வரம் கேட்டேன்..
காதலாகி.. கசிந்துருகி..
மதிய உணவு விருந்து நடந்து கொண்டிருந்தது.. இன்னும் மாப்பிள்ளை வீட்டார் வந்திருக்கவில்லை.. பெண் வீட்டினரின் சொந்த பந்தங்கள் வந்து குழுமியிருக்க ஜீவா ஓடி ஓடிப் பரிமாறிக் கொண்டிருந்தான்..
‘இவன் என்ன சர்வரா.. ஏன் இப்படி இழுத்துப் போட்டுக் கொண்டு வேலையைச் செய்து கொண்டிருக்கிறான்..? உடம்பு சரியில்லாமல் விழுந்து விட்டால் என்ன செய்வது..’
சந்தியா மனதிற்குள் கவலைப்பட்டாள்..
‘அவனுக்கு என்ன ஆனால் உனக்கென்ன..? நீதான் அவனை வேண்டாமென்று தூக்கி எறிந்து விட்டாயே.. அப்புறம் ஏன் இந்த திடீர் அக்கறை..?’
அவளுடைய இன்னொரு மனம் கேள்வி கேட்டது.. மனதின் போராட்டத்தை மறக்க அவள் எழுந்து கவிதாவைத் தேடிப் போனாள்.. தலைக்கு குளித்து விட்டு முடியை காயப் போட்டுக் கொண்டிருந்த கவிதா சந்தியாவைக் கண்டதும் சிரித்தாள்..
“மெஹந்தி.. நல்லாச் சிவந்திருக்குடி..” என்றாள்..
“எங்கே காட்டு பார்ப்போம்..”
கவிதா கை விரல்களைக் காண்பிக்க சந்தியா ரசித்துப் பார்த்தாள்..
பியூட்டி பார்லர் பெண் வந்தவிட சந்தியா ஒதுங்கி அமர்ந்து கவிதாவிற்கு அலங்காரம் நடப்பதைக் கவனித்துக் கொண்டிருந்தாள்..
கவிதாவின் பெற்றோர் அவளுக்குப் பார்த்துப் பார்த்துச் செய்வதையும் அவளின் அண்ணன் அவளுக்காக சுழன்று சுழன்று வேலை பார்ப்பதையும் கவனித்துக் கொண்டிருந்தவளுக்கு தன்னிரக்கம் பொங்கியது..
‘ம்ஹீம்.. பெத்தவங்க சரியா இருந்தால்தான் ஒரு பெண்ணுக்கு கல்யாண வாழ்க்கையும் ஒழுங்காக அமையும் போல..’
ஜன்னல் வழி பார்வையைச் செலுத்தியவளின் பார்வை வட்டத்திற்குள் ஜீவா சிக்கினான்.. அவனது கம்பீரமான தோற்றத்தை தன்னையுமறியாமல் ரசித்தவள்
“சந்தியா..” என்று கவிதா அழைக்கவும் உலுக்கிப் போட்டவளாக திரும்பிப் பார்த்தாள்..
கவிதா அழகுப் பதுமையாய் அவள் முன்னால் நின்று கொண்டிருந்தாள்..
“வாவ்..” என்று வாய் விட்டுச் சொன்னாள் சந்தியா..
“எப்படியிருக்கேன்..” கவிதா பேஷன்ஷோவில் நடக்கும் மாடல் போல நடந்து காண்பித்தாள்..
“அப்படியே உன் வுட்பியை மயக்கம் போட்டு விழ வைக்கும் அளவுக்கு அட்டகாசமாய் இருக்கே..” என்றாள் சந்தியா..
“நிஜமாகவா..?” கண்களை அகல விரித்தாள் கவிதா..
“நிஜமாகத்தான்..” என்று அவளது கன்னத்தைக் கிள்ளிய போது..
‘இது போல எனக்கும் நடக்குமா..?’ என்ற ஏக்கம் சந்தியாவின் மனதில் எழுந்தது..
“சந்தியா நீயும் குளித்து டிரெஸ் சேன்ஜ் பண்ணிக்க.. பெண்ணுக்கு தோழி நீதானே..”
ரேணுகா முடுக்கி விட்டதும் சந்தியா குளித்து விட்டு பச்சை நிறத்தில் பட்டுச் சேலையொன்றைக் கட்டிக் கொண்டாள்.. காதுகளில் வெள்ளை முத்து பதித்த தோடு கழுத்தில் நீண்ட சரமாய் தொங்கும் முத்து மாலை..
தலையை வாரிப் பின்னலிட்டு மொட்டான மல்லிகைச் சரத்தை சூடி நின்ற போது ஒரு தேவதைபோல் சந்தியா இருந்தாள்..
“ஒரு மணி நேரம் மெனக்கெட்டு அலங்காரம் பண்ணி அம்மனுக்கு நகை சாற்றுவதைப் போல நகைகளைப் போட்டுக் கொண்டிருக்கிறேன்.. ஒரு நிமிடத்தில் என்னை ஓவர்டேக் பண்ணிவிட்டாயேடி..” கவிதா செல்லமாக சிணுங்கினாள்..
மாப்பிள்ளை வீட்டார் வந்து இறங்கி விட்டார்கள்.. ரேணுகா சந்தியாவை உதவிக்கு அழைத்தாள்..
“சந்தியா நீயும் குமாரும் ஜீவாவும் தான் மாப்பிள்ளை வீட்டாரை பார்த்துக் கொள்ளனும்.. நீங்க மூணு பேரும் போடற சோப்பில் மயங்கிப் போய் அவங்க வாயைத் திறந்து எதுவும் நொட்டை சொல்லவே கூடாது..” என்று அவள் கட்டளையிட..
“சரிங்க ஆண்ட்டி..” என்று வேறு வழியில்லாமல் ஒப்புக் கொண்டாள் சந்தியா..
“அம்மா ஸ்வீட் காரமெல்லாம் வந்து இறங்கிவிட்டது.. காகித பிளேட்களில் அதை வைத்து விட்டால் மளமளவென்று மாப்பிள்ளை வீட்டாருக்கு கொடுத்து விடலாம்..” என்றபடி அறைக்குள் வந்த ஜீவா சந்தியாவைக் கண்டதும் பிரமித்து நின்று விட்டான்..
அதுவரை அவன் சந்தியாவை அதுபோன்ற அலங்காரத்தில் பார்த்தது இல்லை.. தோளின் இருபக்கமும் குண்டு மல்லிகைச் சரம் வழிய அவள் வெட்டும் விழிகளால் அவனை நிமிர்ந்து பார்த்தபோது அவன் கிறங்கிப் போனான்..
அவளை விழுங்கி விடுவது போல அவன் சங்கோஜமில்லாமல் பார்த்துக் கொண்டு நிற்கவும் சந்தியாவிற்கு வெட்கம் பிடுங்கித் தின்றது..
‘இவன் ஏன் இப்படிப் பார்த்துத் தொலைக்கிறான்.. என்னை முன்பின் பார்த்தறியாதவன் போல இவன் இப்படி வெறித்துப் பார்த்து வைத்தால்.. நான் என்னதான் செய்வது..’
அவள் காகித பிளேட்களில் இனிப்பு கார வகைகளை பிரித்து வைப்பது போல தலையைக் குனிந்து கொண்டாள்.
“பெரிய டிரேக்கள் இருந்தால் எடுத்துக்கிட்டு வாங்கம்மா..”
“எதுக்கு ஜீவா..?”
“என்னம்மா இப்படிக் கேட்டு விட்டிங்க..? டிரேக்களில் அடுக்கித்தானே பிளேட்களை கொண்டு போக முடியும்..? காபி கப்புகளை எதில் அடுக்கி கொண்டு போவது..? டிரே அவசியம் வேண்டும்மா..”
“நான் அதை மறந்துவிட்டேன் பார்த்தாயா..?”
ரேணுகா அவசரமாய் அங்கிருந்து செல்ல அதைவிட அவசரமாய் சந்தியாவின் பின்னால் வந்து நின்று அவள் தோள் தொட்டு இறுக்கி அவள் தலையில் சூடியிருந்த மல்லிகையை முகர்ந்தான் ஜீவா..
“ஜீவா..” என்று அழைத்துக் கொண்டு குமார் அங்கே வரும் சத்தம் கேட்டதும் புயல் வேகத்தில் விலகி பழையபடி ஓரமாய் நின்று கொண்டான் ஜீவா..
“அம்மா எங்கேடா..?”
“டிரே எடுத்துக்கொண்டு வரப் போனாங்க..”
“நேரம் ஆச்சுடா.. காலாகாலத்தில் டிபன் காபி வேலையை முடித்தால்தான் நாம் பங்சனை ஆரம்பிக்க முடியும்..”
குமார் கவலையுடன் கூறிக் கொண்டிருந்த போது ரேணுகா கையில் டிரேக்களுடன் அங்கே வந்து விட்டாள்.
“இந்தா ஜீவா டிரே..”
ஜீவா சந்தியாவின் அருகே வந்து நின்று இனிப்பு காரம் இருந்த காகித பிளேட்களை டிரேயில் அடுக்கினான். சந்தியாவிற்கு படபடப்பாக இருந்தது..
அவள் ஜீவாவை அறியாதவள் அல்ல அவன் முகம் பார்த்துப் பேசிப் பழகியவள் ஆனால் இன்று அவள் கண்ட ஜீவா புதியவனாக இருந்தான்..
‘இனம் விளங்கவில்லை..’
எவனோ என்னகம் தொட்டுவிட்டான்.
பாரதியார் பெண்ணில்லையே முழுமையான ஆண் மகனாயிற்றே.. அவரால் பெண்மை உணர்ந்த இந்த உணர்வை எப்படி உணர முடிந்தது..
இனம் விளங்காத உணர்வை எப்படி அவர் உணர்ந்தார்.. சந்தியாவின் அகம் தொட்டு விட்ட ஜீவா அவளையே சுற்றிச் சுற்றி வந்தான்..
போலியாகக் கூட கடுமை காட்ட முடியாமல் சந்தியா தவித்துப் போனாள்..
‘இவன் காதலைச் சொன்னபோது முகத்தில் அடித்ததைப் போல பேசிவிட்டு இப்போது இவன் பின்னால் போனால் இவன் என்னைப் பற்றி என்ன நினைத்துக் கொள்வான்..?’
இந்த நினைவு மனதில் எழுந்த பின்புதான் சந்தியாவால் தன் மனதை கட்டுக்குள் கொண்டு வரமுடிந்தது..
‘நண்பனாகப் பழகிவிட்டு காதலைச் சொன்னான் என்று இவனைக் கோபித்துவிட்டு.. இப்போது நண்பனாகப் பழகியவனை நான் காதலிப்பது சரியாகுமா..?’
இந்தக் கேள்வியை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள் சந்தியா.. அது நேரம் வரை ஜீவாவை நிமிர்ந்து பார்க்க முடியாமல் கன்னம் சிவந்து கொண்டிருந்தவள் இப்போது தைரியமாக அவனை நிமிர்ந்து பார்த்து முறைத்தாள்..
அதுநேரம் வரை அமைதியாக இருந்தவள் இப்போது அனல் பார்வை பார்க்கவும் ஜீவா காரணம் புரியாமல் திகைத்தான்..
ஏதோ வேலையிருப்பது போல சந்தியாவின் அருகே வந்து நின்று கொண்டவன்.. அவளுக்கு மட்டும் கேட்குமாறு முணுமுணுத்தான்..
“என்ன ஆச்சு..? திரும்பவும் பேய் பிடித்து விட்டதா..?”
அவனின் நையாண்டிப் பேச்சை மனம் ரசித்தாலும் வெளியே கோபமாய் முகத்தை வைத்துக் கொண்டு அவன் பாணியிலேயே அவளும் பதில் சொன்னாள்..
“பேயின் கண்களுக்கு மற்றவர்களைப் பார்த்தால் பேய் போலத்தான் தெரியும் போல..”
“ஓஹோ.. திடீர்ன்னு என்ன கண்களில் அனல் பறக்குது..?”
“எப்போதும் இருப்பதுதான்.. திடீர்ன்னு புத்தி மாறுவது உங்கள் பழக்கம் எனக்கு அது பழக்கமில்லை..”
“பழக்கமில்லாத எதையும் நீ இன்றைக்கு சந்திக்கவே இல்லையா..?”
‘இவன் முத்தத்தை நினைவு படுத்துகிறான்..’
அதுநேரம் வரை முகத்தை கித்தாய்ப்பாய் வைத்துக் கொண்டு பேசியவளின் முகம் மீண்டும் சிவந்து விட்டது.
Reviews — Kadalaki Kasinthuruki / காதலாகி கசிந்துருகி
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.