Chapter 34
உன் மனதைத்தான் கேட்டேன்..
வேறெதையும் கேட்கவில்லை..
உன் காதலைத்தான் கேட்டேன்..
சொத்து.. சுகம்.. கேட்கவில்லை..
காதலாகி.. கசிந்துருகி..
ஜீவாவின் வார்த்தைகளில் தெரிந்த மர்மம் என்ன என்பதை அறிந்து கொள்ளும் ஆவலுடன் சந்தியா..
“சொல்லுங்க..” என்று கேட்டாள்..
“இன்றைக்கு மதியம் மாடியில் உன்னை முதன் முதலாய் முத்தமிட்டேனே.. அப்போது ஏன் நீ காப்பாத்துங்க காப்பாத்துங்கன்னு சத்தம் போடவில்லை..?”
“ஜீவா ப்ளீஸ்..”
“கவிதாவின் ரூமில் உன் தலையில் பூவாசம் பிடித்தேனே அப்போது ஏன் நீ காப்பாத்துங்க.. காப்பாத்துங்கன்னு வெளியே ஓடவில்லை..?”
“ஜீவா.. வேண்டாம்..”
“ம்ம்.. நீ வேண்டாம்ன்னு சொல்லவே இல்லையே சந்தியா.. அப்புறம் தோட்டத்தில் இருட்டில்..”
“ஜீவா.. நான் நிஜமாகவே வண்டியை விட்டுக் குதித்து விடுவேன்..”
சந்தியா செல்லக் கோபத்துடன் அவன் முதுகில் குத்தினாள்.. அவன் சிரித்துக் கொண்டே வண்டியை நிறுத்தினான்..
“இறங்கு..”
இறங்கி நிமிர்ந்த சந்தியா..
“ஜவுளிக்கடை போல இருக்கே..” என்றாள்.
“ஜவுளிக்கடை போல இல்லை.. ஜவுளிக்கடையேதான்.. வா..” என்றபடி ஜீவா படிகளில் ஏற ஆரம்பித்தான்..
“இங்கே எதுக்கு வந்திருக்கோம்..?”
“ஜவுளிக்கடைக்கு வேற எதுக்கு வருவாங்க..? சினிமா பார்க்கவா வருவாங்க..? துணி எடுக்கத்தான் வருவாங்க..”
“எனக்கு எதுவும் வேண்டாம்..”
“எனக்கு வேண்டுமே..”
“ஓ.. நீங்க உங்களுக்கு துணி எடுக்கப் போகிறீங்களா..?”
“ஆமாம் எனக்காகத்தான் எடுக்கப் போகிறேன்..”
ஜீவாவிற்கு துணி எடுக்கப் போகும் நினைவில் சந்தியா ஆண்களுக்கான உடை இருக்கும் பகுதியில் நுழையப் போக.. ஜீவா தடுத்து நிறுத்தி..
“இங்கே வா..” சந்தியா மறுத்துப் பேச வாய் திறந்தாள்..
“மூச்..” ஒற்றை விரலை உதட்டின் மேல் வைத்து அதட்டினான் ஜீவா..
வேறு வழியில்லாமல் சந்தியா அவனைப் பின் தொடர்ந்தாள், மெரூன் வண்ணத்தில் மெஜந்தா நிற பார்டர் கொண்ட பட்டுச்சேலையை தேர்வு செய்தான் ஜீவா..
“இது கவிதாவிற்கு மாப்பிள்ளை வீட்டில் வாங்கிக் கொண்டு வந்த புடவை போலவே இருக்கிறதே..”
விழி விரிய அந்தப் புடவையை ஆசையாய் சந்தியா பார்த்ததை ஜீவா கவனித்து விட்டான் என்பது அவளுக்கு புரிந்து விட்டது..
காதலுடன் அவள் ஜீவாவைப் பார்க்க அவன் கண்சிமிட்டினான்..
“பிடித்திருக்கா..”
“உங்களைப் பிடித்திருக்கு..”
அவன் புடவையைக் கேட்க அவள் கவிதையாய் காதலைச் சொல்லிவிட்டாள்.. ஜீவாவின் கண்களில் காதல் பொங்கியது..
“ஏய்ய்..” என்றான்..
“ஸ்ஸ்.. இது ஜவுளிக் கடை..”
பணத்தைக் கொடுத்து விட்டு புடவையிருந்த பையை வாங்கி சந்தியாவிடம் கொடுத்த போது ஜீவாவின் மனம் நிறைந்திருந்தது..
அது ஆண்களுக்கே உரிய நிறைவு.. அவர்கள் கையால் அவர்களுடைய மனைவிகள் பூவையும் புடவையையும் நகையையும் வாங்கிக் கொள்ளும் போது அவர்கள் நெஞ்சம் பூரித்து விடும்..
இது இந்திய மண்ணுக்கே உரிய குணாதிசயம்.. கொடுக்கும் கை ஆணின் கையாக இருக்க அதைப் பெற்றுக் கொள்ளும் கை பெண்ணின் கையாக இருக்கும்.
ஜீவா கொடுக்க சந்தியா புடவையை பெற்றுக் கொண்டாள்.
ஹாஸ்டல் வாசலில் இறங்கி ஜீவாவுக்கு கையாட்டிவிட்டு நகர முயன்ற சந்தியாவை இழுத்துப் பிடித்து நிறுத்தினான் ஜீவா..
“கையை விடுங்க.. இது ஹாஸ்டல்..”
“உன்னுடன் பெரிய வம்பாகப் போய்விட்டது.. ஜவுளிக்கடையில் பேசினால் ஸ்ஸ்.. இது ஜவுளிக் கடைங்கிற.. ஹாஸ்டல் வாசலில் பேசினால் ஸ்ஸ்.. இது ஹாஸ்டல்ங்கிற.. நீ என்னதான் மனதில் நினைத்துக் கொண்டிருக்கிற.. இது ஹாஸ்டல்ன்னு எனக்குத் தெரியாதா..? வேண்டுமானால் இவன் என் கையைப் பிடித்து இழுத்து விட்டான்னு சத்தம் போடேன்..”
அன்று முழுவதும் சேர்ந்திருந்துவிட்டு பிரியப் போகும் கனம் மனதை அழுத்த ஜீவா கோபப்பட்டான்.. சுற்றுமுற்றும் பார்த்த சந்தியா அவசரமாய் அவனது கையை கிள்ளினாள்.. அந்த சிறிய தொடுகை அவன் மனதை சமாதானம் செய்தது..
Reviews — Kadalaki Kasinthuruki / காதலாகி கசிந்துருகி
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.