Chapter 36
நீரும் நிலமும் நிலவும் அறியும் – என்
நெஞ்சில் இருப்பது நீதான் என்பதை..
ஊரும் உறவும் உலகும் அறியுமா – உன்
மனம் என்னை விசமாய் வெறுப்பதை..?
காதலாகி.. கசிந்துருகி..
சந்தியாவைத் தேடி ஜீவா ஹாஸ்டலுக்கு வந்த போதெல்லாம் காயத்ரியும் அவர்களுடன் நின்று பேசுவாள்.. அவளுக்கு ஜீவாவை பிடிக்கும்.. மிக மிக அதிகமாக பிடிக்கும்.. ஒருமுறை வெளியூருக்கு டூருக்குப் போன போது.. நண்பர்களுடன் எடுத்த புகைப்படத்தை குமார் சந்தியாவிடம் கொடுக்க அவள் அதை அறையில்.. கட்டிலில் அலட்சியமாக தூக்கிப் போட்டுவிட்டு சென்று விடடாள்..
காயத்ரி அதை எடுத்துப் பத்திரப் படுத்திக் கொண்டாள்.. சந்தியாவுக்கு தெரியாமல் கம்ப்யூட்டரில் கொடுத்து ஜீவாவின் உருவத்தை மட்டும் பெரிது பண்ணி வாங்கி வைத்துக் கொண்டாள்..
சந்தியா இல்லாதபோது ஜீவாவின் படத்தை எடுத்துப் பார்ப்பது காயத்ரி வழக்கமாக செய்யும் செயல்..
ஜீவா சந்தியாவைக் காதலித்ததை அவள் ஒருநாள் கோபத்தோடு வந்து சொல்லிய போது துடித்துப் போய் விட்டாள்.. ஆனாலும்.. தன் மனதை மறைத்துக் கொண்டு ஜீவாவிற்கு ஆதரவாகப் பேசினாள்..
சந்தியாவின் மனதை மாற்றுவதற்காக.. அவள் அப்படிப் பேசவில்லை.. சந்தியாவின் முடிவு என்ன என்பதைத் தெரிந்து கொள்வதற்காக.. அவள் அப்படிப் பேசினாள்..
“நண்பனாகப் பழகியவன் மனதில் காதல் வரலாமா காயத்ரி..”
“கூடாதுதான்.. ஜீவா இதைச் செய்திருக்கக் கூடாதுதான்.. மனதார நண்பன்னு நம்புகிற பெண்ணிடம்.. காதலைச் சொல்லியிருக்கக் கூடாதுதான்.. ஆனால் என்ன செய்வது ஜீவாவின் மனதில் காதல் வந்து தொலைத்து விட்டதே.. அவனும்தான் பாவம் என்ன பண்ணுவான்..?”
“நீ எனக்கு பிரண்டா..? அவனுக்கு வக்கீலா..?”
“இரண்டும்ன்னுதான் வைத்துக் கொள்ளேன்..”
“பேசாதே காயத்ரி.. நீ அவனுக்கு சப்போர்ட் பண்ணுவது எனக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை..”
“எனக்கும் நீ அவனை வெறுத்து ஒதுக்குவது பிடிக்கவில்லைதான்.. என்னதான் அவன் மனதிலிருப்பதை யோசிக்காமல் பேசியிருந்தாலும்.. நீ அவனை எடுத்தெறிந்து பேசியிருக்கக் கூடாது..”
“வேறு என்ன செய்திருக்கனும் என்கிறாய்..?”
“தன்மையாய் பேசியிருக்கலாம்.. அவன் மனதில் நீயிருப்பதைப்போல் உன் மனதிலும் அவன் இருக்கிறானான்னு யோசித்துப் பார்த்திருக்கலாம்..”
“உளராதே என் மனதில் அப்படிப்பட்ட எண்ணம் எதுவும் இல்லை..”
“இப்போது இல்லை.. இனிமேல் வரலாமில்லையா..” வீசினாள்..
“நோ சான்ஸ்.. நானாவது அவனை நினைப்பதாவது..”
சந்தியா உறுதியாகக் கூறினாள்.. காயத்ரி மனதிற்குள் மகிழ்ந்து போனாள்..
“சொந்தமாக ஜிம் வைத்திருக்கிறார்.. ரொம்ப நல்லவர்.. அம்மா அப்பா அண்ணன் தங்கைன்னு பாசமான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்.. அண்ணன் தங்கை இரண்டு பேருமே.. கல்யாணம் பண்ணிக் கொண்டு அவரவர் குடும்பத்துடன் செட்டிலாகிட்டாங்க..”
காயத்ரி கிராமத்திற்கு போயிருந்த போது அவளுடைய அப்பாவிடம் எடுத்துச் சொன்னாள் அவள் நீட்டிய போட்டோவை வாங்கிய அவளின் அப்பா மூர்த்தி போட்டோவை விட்டு விட்டு.. அவளை உற்றுப் பார்த்தார்.
“நீ இந்தப் பையனைக் காதலிக்கிறாயாம்மா..”
காயத்ரிக்கு அவளுடைய குடும்பத்தைப் பற்றி நன்றாகத் தெரியும்.. அவர்களுக்கு காதல் என்ற வார்த்தையே கட்டோடு பிடிக்காது.. அதிலும் மூர்த்தி.. காதல் என்ற வார்த்தையைக் கேட்டால் ருத்ர மூர்த்தியாகவே மாறிவிடுவார்..
“இல்லைப்பா.. எனக்குத் தெரிந்த பெண்ணிற்குத் தெரிந்தவர்.. அடிக்கடி இவரைப் பார்த்திருக்கிறேன்.. என்னவோ எல்லாரும் நல்ல விதமாய் இவரைப் பத்திப் பேசிக்கிறாங்க.. அதனால் உங்கள் காதில் போட்டு வைத்தேன்.. மத்தபடி நீங்க பார்த்து எந்த மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்டச் சொல்கிறீங்களோ அவனுக்கே கழுத்தை நீட்டி விடுவேன்.. நான் உங்க பொண்ணுப்பா..”
என்னவோ அவள் ‘ஊரான் பொண்ணு..’ என்று சொல்லி விட்டதைப் போல் கண்ணைக் கசக்கி வராத கண்ணீரை.. சுடிதாரின் துப்பாட்டாவினால் துடைத்துக் கொண்டாள் காயத்ரி..
முர்த்தி.. க்ளீன் போல்டாகி விட்டார்.. கன்யாகுமரியில் இருந்த அவருடைய நண்பரிடம் ஜீவாவைப் பற்றி விசாரித்த போது.. காயத்ரி சொன்னதையே அவரும் சொல்லி வைக்க.. மூர்த்திக்கு ஜீவாவைப் பிடித்துப் போய்விட்டது..
அவரே கன்யாகுமரிக்கு கிளம்பி வந்து ஜீவாவின் அம்மாவை நேரே பார்த்துப் பேசினார்.. அவரும் தன் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு முறைப்படி பெண்பார்க்க வருவதாக பதில் சொன்னாள்..
Reviews — Kadalaki Kasinthuruki / காதலாகி கசிந்துருகி
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.