Chapter 39
உன்மீது விழுந்து.. என்மீது தெரித்த..
மழைத்துளிக்குக்கூட.. என் காதல் தெரிகிறது..
தினந்தோறும் உன்னிடம்.. என் காதல் சொல்லியும்
உன் மனதுக்குமட்டும்.. என் காதல் தெரியவில்லை..
காதலாகி.. கசிந்துருகி..
கடற்கரையோரம்.. ஜீவாவும் சந்தியாவும்.. தங்கள் காதலைப் பற்றிய மலரும் நினைவுகளை அசை போட்டுக் கொண்டிருந்த போது காயத்ரி அந்தக் காதலை கலைக்கும் வேலையில் மும்முரமாக இறங்கியிருந்தாள்..
ஜீவாவின் அம்மா.. காய்களை வாங்கிக் கொண்டு திரும்பும் வழியில் தற்செயலாக சந்திப்பதைப் போல அவளைச் சந்தித்தாள்.. வணக்கம் சொன்னாள்..
“யாரும்மா நீ..”
“நீங்க ஜீவானந்தத்தின் அம்மாதானே..”
“என்னை உனக்கு எப்படித் தெரியும்..?”
“அப்பா சொன்னார்.. என் அப்பாவிற்கு உங்கள் குடும்பத்தைப் பற்றி நல்லாத் தெரியும்..”
“அப்படியா யார் உங்க அப்பா..”
“தக்கலைதான் எங்க ஊர்.. என் அப்பா பெயர் மூர்த்தி..”
மகேஸ்வரிக்கு சட்டென்று காயத்ரி யார் என்று புரிந்துவிட்டது.. மகனுக்குப் பெண் பார்க்கும் உணர்வில் காயத்ரியை ஏற இறங்க பார்த்தாள்..
மகேஸ்வரியைப் பார்க்கப் போகும் ஜாக்கிரதை உணர்வுடன் காயத்ரியும் தன்னை.. குடும்ப பாங்காய் அலங்கரித்துக் கொண்டு வந்திருந்தாள்..
‘ம்ம்.. பொண்ணு பார்க்க அம்சமா அழகாகத்தான் இருக்காள்.. அந்தப் பயலுக்கு பிடிக்கனுமே..’
“என்னம்மா படிச்சிருக்க..?”
காயத்ரி.. தன் படிப்பைச் சொன்னாள்..
“எங்கேம்மா வேலை பார்க்கிற..?”
காயத்ரி தன் வேலையைப் பற்றிச் சொல்லி விட்டு கூடுதலாக தன் சம்பளத் தொகையையும் சொன்னாள்..
‘பரவாயில்லையே.. கை நிறைய சம்பாதிக்கிறாளே..’ மகேஸ்வரிக்கு பரம திருப்தியாக இருந்தது..
“ஆண்ட்டி.. அந்தப் பார்க்கில் கொஞ்ச நேரம் உட்கார்ந்து விட்டுப் போகலாமா..”
வழியில் இருந்த பூங்காவைக் காட்டி காயத்ரி பணிவாக வேண்டுகோள் வைத்தாள்..
‘இந்த உச்சி வெயிலில் இந்தப் பெண்ணுடன் என்ன பேச்சுவார்த்தை வேண்டிக் கிடக்கு..’
மகேஸ்வரியின் மனதிற்குள் நுழைந்து பார்த்தவளைப் போல.. வெள்ளையாய் ஒரு நம்பகச் சிரிப்பை உதிர்த்தாள் காயத்ரி..
“நல்ல வெயில் ஆண்ட்டி.. பார்க்கில் ஓரமாய் இளநீர் விற்கிறாங்க.. இரண்டு இளநிகளை குடித்து விட்டு ஓய்வாக நீங்க உட்கார்ந்தால் நான் உங்களிடம் பேச வந்ததைப் பேசுவேன்..”
வினயமாய் காயத்ரி பேசிய விதத்தில் மகேஸ்வரி மறுபேச்சுப் பேசாமல் பூங்காவுக்குச் சென்றாள்.. வாக்களித்தபடி அவளுக்கு இளநீர்களை வாங்கிக் கொடுத்த காயத்ரி செயற்கை நீருற்றின் பக்கத்தில் மரங்கள் அடர்ந்த குளுமையான பகுதியில் இருந்த சிமிண்ட் பெஞ்சில் அவளை உட்கார வைத்தாள்..
‘யாரிடமாவது காரியம் ஆக வேண்டியிருந்தால் அவர்கள் நல்ல மனநிலையில் இருக்கும் போது அவர்களை அணுக வேண்டும்..’
ஒரு புத்தகத்தில் படித்திருந்ததை நினைவுபடுத்திக் கொண்டு.. புத்திசாலித்தனமாக காரியமாற்றிக் கொண்டிருந்தாள் காயத்ரி..
வயிறும் மனமும் குளிர்ந்திருக்க வெயிலின் வெம்மை தாக்காத இதமான சிலுசிலுவென்ற காற்று உடல் தழுவ மகேஸ்வரி மிகவும் இதமாக உணர்ந்தாள்..
“ஹப்பா.. இந்த வெயிலுக்கு இந்த இடம் எவ்வளவு சுகமாயிருக்கு தெரியுமா..?”
மகேஸ்வரியின் மனநிலை தனக்குச் சாதகமாக இருப்பதை புரிந்து கொண்ட காயத்ரி.. மெதுவாக பேச்சை ஆரம்பித்தாள்..
“ஆண்ட்டி.. நான் ஏன் உங்களுடன் பேசனும்னு நினைத்தேன் தெரியுமா..?”
“நீ சொன்னால்தானே தெரியும்..”
“என் அப்பாவிற்கு ஜீவானந்தத்தின் மேல் நல்ல அபிப்ராயம்..”
“என் மகன் நல்லவன்.. அதனால் அபிப்ராயம் வைத்திருப்பார்.. இதையா பெரிய விசயம் போல பேச வந்த..?”
“இல்லை ஆண்ட்டி.. உங்க மகன் நல்லவராக இருக்கலாம்.. ஆனால் அவர் பழகுற ஆள் நல்லவங்களா இருக்கனுமில்ல..”
மகேஸ்வரி காயத்ரி எதையோ பூடகமாக சொல்ல முனைவதை கண்டு கொண்டு புருவம் சுருக்கினாள்..
“நீ என்னம்மா சொல்ல நினைக்கறே..”
“சந்தியான்னு ஒரு பொண்ணு..”
காயத்ரி ஆரம்பிக்கவும் மகேஸ்வரியின் முகம் விழுந்து விட்டது..
“எனக்கும் அது தெரியும்மா.. ஏதோ அந்தப் பெண் பாவம்ன்னு நினைத்து இவன் உதவி செய்யப் போனானாம்.. அந்தப் பெண்ணும் நல்லவிதமாய் பழகுச்சாம் திடீர்ன்னு இவனுக்கு அந்தப் பெண்மேல பித்துப் பிடிச்சுப் போச்சு.. அந்தப் பொண்ணு விலகிப் போயிருச்சு..”
“இல்லை ஆண்டி.. அவள் விலகிப் போகவில்லை..”
“உனக்கு எப்படித் தெரியும்..?”
“அவள் ஹாஸ்டலில் என்னுடன்தான் ரூம் மேட்டாக இருக்கிறாள்.. பலே கைகாரி.. உங்கள் மகனை மயக்கிப் பிடித்து விட்டாள்..”
மகேஸ்வரியின் முகம் வெளிறியது..
Reviews — Kadalaki Kasinthuruki / காதலாகி கசிந்துருகி
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.