Chapter 41
காதலிக்கும் அந்த நொடிகளில்..
கண்ணோரம் ஓர் மயக்கம் பிறக்கும்..
அதை உணர்வதற்காகவாவது எனைக் காதலித்துவிடு..
என் உயிரைத் திருப்பித் தந்துவிடு..
காதலாகி.. கசிந்துருகி..
ஜீவா தெளிவாகச் சொல்லி விட்டான்..
“காயத்ரியிடம் நான் பழகியதில்லை சந்தியா.. உன்னைத் தவிர எந்தப் பெண்ணிடமும் சகஜமாய் பேசிப் பழக்கமில்லை.. கவிதா என் தங்கை போல.. காயத்ரி உன் பிரண்ட் என்பதற்காக ஒப்புக்கு இரண்டு வார்த்தை பேசியிருக்கலாம்.. அது கூட எனக்கு நினைவில்லை.. என் வீட்டில் சம்மதித்தாலும் சம்மதிக்காவிட்டாலும் நம் கல்யாணம் நடக்கும்.. என் நண்பர்கள் முன்னே நின்று நடத்தி வைப்பார்கள்.. ஆனால் ஏன் அவள் அப்படிப் பேசினாள் அம்மாவை ஏன் தூண்டி விட்டாள்.. இதை விசாரி சந்தியா..”
‘காயத்ரியா இப்படிச் செய்தாள்..?’ சந்தியாவினால் நம்ப முடியவில்லை.. ஜீவாவை அவள் பார்த்த சில பார்வைகள் சந்தியாவுக்குள் வலம் வர.. காயத்ரி இல்லாத போது அவளது அலமாரியை சோதனை போட்டாள் சந்தியா.. ஜீவாவின் புகைப்படம் கிடைத்தது..
‘பூனைக் குட்டி.. வெளியில் வந்து விட்டது..’
கையில் ஜீவாவின் படத்துடன் நின்று கொண்டிருந்த சந்தியாவைக் கண்டதும் காயத்ரி ஒரு வினாடி பேயறைந்தவள் போல நின்றாள். மறுவினாடி நிமிர்ந்து கொண்டாள்..
“என் பர்மிசன் இல்லாமல் என் அலமாரியைக் குடைவது அநாகரிகம்ன்னு உனக்குத் தெரியாதா..?”
“அநாகரிகத்தைப் பற்றி நீ பேசுகிறாயா..? என் காதலனின் போட்டோவை உன் அலமாரியில் பதுக்கி வைத்திருக்கிறாயே இதுதான் அநாகரிகத்தின் உச்சம்.. உன் மனதில் இப்படியொரு இருண்ட மூலையா..? சேச்சே.. உன்னை என் பிரண்டுன்னு சொல்லிக்கவே எனக்கு வெட்கமாக இருக்கிறது.. என்னை நம்ப வைத்து கழுத்தறுத்து விட்டாயே துரோகி.. இதைச் செய்ய உனக்கு எப்படி மனம் வந்தது..?”
“சும்மா அலட்டிக் கொள்ளாதேடி.. எனக்கும் பேசத் தெரியும்.. இன்றைக்குத்தான் ஜீவா உனக்குக் காதலன்.. இத்தனை நாளாய் அவருடைய அருமை தெரியாமல் தூக்கி எறிந்திருந்தவள்தானே நீ..”
“எங்களுக்குள் ஆயிரம் இருக்கும்.. அது உனக்கு தேவையில்லாதது..”
“பெண்ணென்று இருந்தால் ஆயிரம் பேர் பெண் கேட்பார்கள்.. மாப்பிள்ளைன்னு இருந்தாலும் அப்படித்தான்.. எனக்காக என் அப்பா ஜீவாவின் வீட்டில் சம்பந்தம் பேசுவார்.. உனக்காக அப்படிப் பேச நாதி இருக்கா..?”
காயத்ரி மிகவும் குரூரமாக சந்தியாவை குறி பார்த்து.. தாக்க வேண்டிய இடத்தில் தாக்கி விட்டாள்.. சந்தியா உடைந்தாள் மனம் குமுறி ஜீவாவிடம் அழுதாள்.. பொறுமையாக எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட ஜீவா மறுநாள் சந்தியாவிடம் ஒரு பெரிய பார்சலை நீட்டினான்..
“என்ன இது..?”
“உடைத்துப் பார்..”
சந்தியா உடைத்துப் பார்த்தாள்.. திருமண அழைப்பிதழ்கள் இருந்தன.. கை நடுங்க எடுத்துப் பார்த்தாள்..
“நம் கல்யாண இன்விடேசன்தான் பிரித்துப்படி..”
ஜீவா ஊக்குவிக்க சந்தியா ஆவலுடன் பிரித்துப் படித்தாள்..
‘எங்களைச் சுற்றியுள்ள நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இதை நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்..
அன்றொரு நாள் நாங்கள் பார்த்துக் கொண்டோம்.. பிறிதொரு நாளில் பழகிக் கொண்டோம்.. வரும் சுபதினநாளில் கணவன் மனைவியாக ஆகப் போகிறோம்.
வாழ்த்துச் சொல்ல வந்து விடுங்கள்..
இப்படிக்கு
ஜீவானந்தம் – சந்தியா..’
ஜீவா சொன்னதை செய்து காட்டினான்.. வள்ளுவரின் வாய்மொழியே சொல்லுதல் யார்க்கும் எளியது அரியவாம் சொல்லிய வண்ணம் செயல் என்கிறது..
ஆனால் ஜீவா சொன்னதைச் செய்தான்.. பெற்றவர்களுக்கும் உடன் பிறந்தவர்களுக்கும் அவனே திருமண அழைப்பிதழைக் கொடுத்தான்..
“ஏண்டா ஊருக்கு நாங்க பத்திரிகை கொடுக்கனும்.. நீ ஊருக்குள்ள இருக்கிறவர்கள்ல ஒருத்தரா நினைச்சு எங்களுக்கு பத்திரிகை கொடுக்கிறாயே.. இது நியாயமா..” என்று மகேஸ்வரி புலம்பினாள்..
“எனக்கு இதுதான் நியாயம்..”
மகனின் குணம் அறிந்த மகேஸ்வரி அமைதியாகி விட்டாள்.. ஊரை அழைத்து சுபயோக சுபதினத்தில் சந்தியாவின் கழுத்தில் தாலி கட்டி தன் மனைவியாக்கிக் கொண்டான் ஜீவா..
“இந்தாடா.. இதுதான் என் கல்யாணப் பரிசு..”
டேனியல் குலூமணாலிக்குச் செல்ல இரண்டு ரயில் டிக்கெட்டுகளை நீட்டினான்..
“பதினைந்து நாள்.. இந்த ஊரை மறந்து வேறு ஊருக்குப் போய் என்ஜாய் பண்ணுங்க.. தேநிலவை முடித்துக் கொண்டு திரும்பி வாங்க..”
புதுமணத் தம்பதிகள்.. தேநிலவைக் கொண்டாட ரயிலேறினார்கள்.. ‘தடக்.. தடக்..’ என்ற இனிமையான சப்தம் தாலாட்டுப் போல் இருக்க அந்த முதல் வகுப்பு கூபேயில் சந்தியாவின் அருகே நெருங்கி அமர்ந்தான் ஜீவா..
“டேனியல் புத்திசாலி..”
“எதை வைத்து இப்படியொரு அவசர முடிவுக்கு வந்தீங்க..”
“ஏண்டி என் பிரண்ட் புத்திசாலியாக இருக்க மாட்டானா..?”
“அவர் உங்களுக்குப் போய் பிரண்டாக இருக்கிறாரே.. அதனால்தான் எனக்கு இந்தச் சந்தேகமே வந்தது.. ஸ்ஆ.. காதை விடுங்க ஜீவா..”
சந்தியாவின் காதைப் பிடித்து ஜீவா திருக சந்தியா அவன்மேல் சரிந்து விழுந்தாள்.. அன்று போல் இன்றும் அவளுடைய அதரங்கள் அவனை அழைக்க அவள் இதழ் தேடி கள்வெறி கொண்ட மயக்கத்துடன் குனிந்தான்..
“ஸ்ஸ்.. இது டிரெயின்..”
“உன்னைக் கொன்றே விடுவேன்.. இது டிரெயின் என்று எனக்குத் தெரியாதா..? பர்ஸ்ட் கிளாஸ் கூபேடி.. நமக்காக டேனியல் யோசித்து ரிஸர்வ பண்ணியது.. வாயைத் திறக்காதே..” ஜீவா படர்ந்தான்..
ஜீவா.. காதலாகி.. கசிந்துருகி காத்திருந்தான்.. பின் வீறுகொண்டு எழுந்து தன் மனதுக்குப் பிடித்தவளை தன் சொந்தமாக்கிக் கொண்டான்.
… முற்றும் …
Reviews — Kadalaki Kasinthuruki / காதலாகி கசிந்துருகி
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.