Chapter 03

0Shares

அன்று மைதிலியைப் பெண் பார்க்க வந்திருந்தார்கள்.. பூவாசம் கூடத்தை நிரப்பியிருந்தது.. விரிக்கப்பட்டிருந்த புது ஜமுக்காளத்தில் பெண்கள் அமர்ந்திருக்க போடப் பட்டிருந்த நாற்காலிகளில் ஆண்கள் வீற்றிருந்தனர்.. நடுவில் பரப்பப்பட்டிருந்த தட்டுக்களில் பழங்களும், பூவும் இருந்தன.. சளசளவென்று பேசிக் கொண்டிருந்தவர்களிடம் டிபன் தட்டுக்களைக் கொடுத்துக் கொண்டு வந்தாள் விசாலாட்சி.. பின்னாலேயே காபித் தட்டைக் கொண்டு வந்து அனைவருக்கும் காபி கொடுத்துக் கொண்டு வந்தாள் தனலட்சுமி.

வந்திருந்தவர்களில் ஒருவர்,

“நேரமாச்சுங்க.. பெண்ணைப் பார்த்து விடலாமே..” என்றார்..

“பொண்ணுப் பார்க்கத்தானே வந்திருக்கீங்க.. பொண்ணைக் கண்ணில் காட்டாமலா போய்விடுவோம்..” என்று வைத்தீஸ்வரன் வாயைத் திறக்க விசாலாட்சி பயத்துடன் மகன் கிருஷ்ணமூர்த்தியைப் பார்த்து ஜாடை காட்டினாள்.. புரிந்து கொண்ட மகன் தகப்பனைப் பார்த்து, ‘அமைதியாய் இருக்கும்படி ஜாடை காட்ட அவர் உஷ்ணமாய் மகனை முறைத்தார்.. அதைவிட உஷணமாய் மகன் திரும்பி முறைக்க அங்கே விழிப் போர் நடந்து கொண்டிருந்தது… உள்ளேயே விசாலாட்சிக்கும், மைதிலிக்கும் வார்த்தைப் போர் நடந்து கொண்டிருந்தது..

“அம்மா..! இந்தப் பெண் பார்க்கும் படலமே எனக்குப் பிடிக்கலைம்மா.. ஏன் என்னை அவமானப்படுத்தறீங்க..? இந்த இடத்தில்தான் எனக்குக் கல்யாணம் முடியப் போகுதுன்னு என்ன நிச்சயம்…? அதை நிச்சயம் பண்ணாம யாரோ ஒருத்தர் முன்னாடி போஸ் கொடுத்து உட்கார்ந்திருக்கிறது எனக்குப் பிடிக்கலைம்மா..”

“பிடிவாதம் பிடிக்காதே மைதிலி.. உன் அப்பா கிட்டயும் அண்ணன் கிட்டயும் நான் படும் பாடு போதும்.. நீயும் என்னைப் படுத்தாதே..” என்று மகளின் வாயை அடைக்க விசாலாட்சி கூறிய வார்த்தைகள் தனலட்சுமியின் கோபத்தைக் கிளறின..

“மாமாவைச் சொல்லுங்க.. மைதிலியோட அண்ணனை ஏன் தேவையில்லாமல் வம்புக்கு இழுக்கறீங்க..”

“தப்புத்தாம்மா.. அவன் என் பிள்ளைன்னு நினைச்சுச் சொல்லிட்டேன்.. உன் புருசன்கிறதை மறந்துட்டேன்..” என்று குத்தலாய் விசாலாட்சி மொழியவும் தனலட்சுமி முணுமுணுத்துக் கொண்டே வெளியேறினாள்..

மருமகள் வெளியேறியதும் மகளின் தாடையைப் பிடித்துக் கெஞ்சிய விசாலாட்சி, கூறினாள்..

“வந்திருக்கிறது நல்ல இடம் மைதிலி.. உன் அழகுக்கும், வேலைக்கும் இந்த இடம் கட்டாயம் அமையும்.. நீ வேணா பாரேன்..”

பார்த்திருக்கிறாள்.. இதற்கு முன் மூன்று பெண் பார்க்கும் படலங்களை மைதிலி பார்த்திருக்கிறாள்.. மைதிலியின் அழகிலும், மத்திய அரசு வேலையிலும் மயங்குபவர்கள் அடுத்துப் பேசும் பேரங்கள் படியாமல் அவையெல்லாம் முறிந்து போயிருக்கின்றன..

அன்னையின் கண்ணீருக்குக் கட்டுப்பட்டு எழுந்தவள் முன்னறைக்கு வந்து காட்சி கொடுத்தாள்..

வழக்கம்போல் மைதிலியைப் பார்த்ததும் பிடித்து விட்டது.. மாப்பிள்ளை வீட்டாருக்கு அதன் பின்னால் நடந்த பேச்சு வார்த்தை பிடிக்காமல் போனது.

“மாப்பிள்ளை பேங்கில் உத்தியோகம் பார்க்கிறார்.. கைநிறைய சம்பாதிக்கிறார்..”

“எங்க பெண்ணும் சென்ட்ரல் கவர்ன்மெண்ட் வேலை பார்க்குது.. அதுக்கும் கை இருக்குது.. அது நிறைய அதுவும் சம்பளம் வாங்குது..”

இடக்கு பேசுவதில் கைதேர்ந்த வைத்தீஸ்வரன் பதிலளிக்க மாப்பிள்ளை வீட்டார் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.. பொதுவாக ஒருவர் கூறினார்..

“இல்லைன்னு யாருங்க சொன்னது..? ஆனால் கல்யாணம்ன்னு வந்தால் பெண்ணுக்கு நகை நட்டு போட்டுத்தானே ஆகணும்..”

“ஏங்க சம்பாதிக்கிற பெண்ணுக்கு நகை நட்டு எப்படிங்க போட முடியும்..” என்று வைத்தீஸ்வரன் பதில் கொடுத்தார்.. விசாலாட்சி மகனைப் பார்க்க அவன் மௌனம் சாதித்தான்..

“அது சரி நகை நட்டுக்கே வழியில்லைன்னா.. அதுக்கப்புறம் கல்யாணச் செலவு.. மாப்பிள்ளைக்கு பைக்.. வைர மோதிரம்.. வெள்ளிப் பாத்திரம்.. கையில் ரொக்கம்.. இதுக்கெல்லாம் என்ன செய்வீங்க..? யோவ் தரகரே..! நல்ல இடத்தில் பெண் காட்டுன்னா இங்கே கூட்டி வந்தாயே..”

சபை கலைய மைதிலி ‘இது போதுமா’ என்பது போல் விசாலாட்சியைப் பார்த்தாள்.. விசாலாட்சி மகனிடம் பாய்ந்தாள்..

“கிருஷ்ணா.. நீயும் உன் அப்பாவும் என்னதாண்டா மனசில் நினைச்சிருக்கீங்க..?”

“அம்மா.. என் மேல் கோபப்பட்டால் எப்படி..? சாவித்திரி கல்யாணத்தில் வாரி விட்டதற்கு வாங்கிய கடனுக்கு வட்டி கட்டியே இத்தனை நாள் ஓய்ந்து போய் நின்னுக்கிட்டு இருக்கேன்.. புதுசா ஒரு சுமைன்னா என்னால் சுமக்க முடியுமா..?”

அவன் கேள்வியில் நியாயம் புரிய விசாலாட்சி கையைப் பிசைந்தாள்.. மைதிலிக்கு தாயைப் பார்க்க பாவமாக இருந்தது..

“அம்மா.. நான் என்ன கூனா..? குருடா..? முடமா..? கைநிறைய சம்பாதிக்கிறேன் இல்ல.. நான் சம்பாதித்து சேர்த்து வைக்கிறேன்.. இரண்டு மூன்று வருடம் போகட்டும்.. அதற்குப் பின்னர் நான் சேர்த்து வைத்த காசை வேட்டு விட்டு கல்யாணம் நடத்துங்கள்.. இப்போது என் கல்யாணப் பேச்சு வேண்டாம்..”

மைதிலியின் முடிவிற்கு எதிராய்.. ஏன் அந்த வீட்டில் தன்னைத் தவிர யார் முடிவு எடுத்தாலும் அதற்கு எதிராய் வாதம் செய்யும் வைத்தீஸ்வரனே அன்று பேசாமல் இருக்க.. மைதிலி ஒரு வழியாய் பெண் பார்க்கும் படலத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாள்..

அந்த நாளின் கசப்பு மறுநாளும் இருக்க வேலையில் மைதிலி தவறு செய்தாள்.. அவளைக் கண்டிக்க காலம் பார்த்துக் காத்திருந்த ஹெட் கிளார்க்கிடம் மாட்டினாள்..

உணவு இடைவேளையில் ஹெட்கிளார்க்..

“மைதிலி இங்கே வாம்மா..” என்று கூப்பிட்டார்..

“என்ன சார்..” என்றபடி அருகே சென்றவளின் முகத்தில் படுவது போல் ஒரு ஃபைலை தூக்கி வீசி எறிந்தாள்..

விக்கித்துப் போனாள் மைதிலி..

“என்ன சார்.. இப்படிச் செய்கிறீர்கள்..?”

“மன்த்லி ஸ்டேட்மெண்ட் பிரிப்பேர் பண்ணியிருக்கிற லட்சணமாம்மா இது..? தலையும் இல்லாமல், வாலும் இல்லாமல்.. இப்படியே ஹெட் ஆபிசுக்கு அனுப்பி வைத்தால் எனக்கு இல்ல மெமோ கொடுப்பார்கள்..” என்று கத்தினார்..

அவசரமாய் கம்ப்யூட்டரை உயிர்ப்பித்து திரையைப் பார்த்தாள் மைதிலி… அவள் தயாரித்திருந்த ஸ்டேட்மென்டின் முதல் வாரக் கணக்கும், கடைசி வாரக் கணக்கும் அழிக்கப்பட்டிருந்தன.. அதிர்ந்து போனவள்..

“ஐயோ..! யாரோ டெலிட் பண்ணியிருக்காங்க சார்..” என்றாள்..

“நான் டெலிட் பண்ணிட்டேன் என்கிறாயா..?”

“சார் நான் உங்களைச் சொல்லவில்லை.. நான் இந்த மாதம் பூராவும் கம்ப்யூட்டரில் கணக்கை ஏற்றி விட்டேன்.. எப்படி டெலிட் ஆனதுன்னு தெரியலை..”

“ஏதாவது பூதம் வந்து அழிச்சிருச்சா..? என்ன கதைம்மா சொல்றே..?”

“சார்..” என்று பல்லைக் கடித்த மைதிலி தன்னை நிலைப்படுத்திக் கொண்டாள்..

“நான் இப்போ என்ன செய்யணும் சார்..?”

“சாயந்திரம் இந்த ஸ்டேட்மென்ட் ஹெச்.ஓ.விற்குப் போக வேண்டும்.. ரெடி பண்ணுங்க..”

“சாயங்காலத்திற்குள்ளா..?” மைதிலி ஸ்தம்பித்து நிற்க அவர் தன் அதிகாரம் நிலை நாட்டப்பட்ட திருப்தியுடன் எழுந்து போய் விட்டார்..

எப்படி முடியும்..? மாதம் பூராவும் கம்ப்யூட்டரில் ஏற்றிய கணக்கை ஏற்றி முடிக்கவே நான்கு நாள்கள் ஆகும்.. இதில் டேலி பண்ணி.. எப்படி முடியும்..? மதிய உணவுக்கு கேண்டின் போக தன் அறையை விட்டு வெளியே வந்த நந்தகுமாரன் மைதிலி மட்டும் தனியே கம்ப்யூட்டரில் வேலை செய்து கொண்டிருப்பதைப் பார்த்து அருகில் வந்தான்..

“என்னங்க சாப்பிடப் போகவில்லையா..?”

‘இல்லை’ யென்பதாய் தலை ஆட்டினாள் மைதிலி.. ‘ஏன்..?’ என்பதாய் அவன் முகத்தில் கேள்வி தோன்ற கம்ப்யூட்டர் திரையைக் காட்டினாள்..

“மன்த்லி ஸ்டேட்மென்டைப் பாருங்க..”

“முதல் வாரமும், கடைசி வாரமும் போஸ்டிங்க போடலையா..? அந்த டேட் என்ட்ரி இல்லாம இருக்கே..”

“நான் போஸ்டிங் போட்டு விட்டேன்.. ஸ்டேட்மென்ட் டேலி பண்ணியும் விட்டேன்.. ஆனால் ஹெட் கிளார்க் பார்க்கும்போது இது டெலிட் ஆகி இருக்கு..”

“யார் செய்த வேலையா இருக்கும்..? ம்.. உங்கள் பாஸ் வெர்டு வேற யாருக்கும் தெரியுமா..?”

“தெரியாது.. ஆனால் ஹெட்கிளார்க்கின் பாஸ்வெர்டு எல்லோருக்கும் தெரியும்..”

“அப்போ அதில் போயிருப்பாங்க..”

“இப்போ ஈவினிங்குக்குள் நான் இந்த ஸ்டேட் மெண்டை முடிக்க வேண்டும்.. நான்கு நாள்கள் பிடிக்கும் வேலையை.. ஈவினிங்குக்குள்.. நான் எப்படி..?”

பேச முடியாமல் தொண்டை கட்டிற்று மைதிலிக்கு.. இமையோரம் விளிம்பு கட்டியிருந்த தண்ணீர் ‘இப்போது விழவா, பிறகு விழவா’ என்று நேரம் பார்த்துக் கொண்டிருந்து.. தன் முகத்தை அவன் பார்ப்பதை உணர்ந்த மைதிலி முகத்தைத் திருப்பிக் கொண்டாள்..

‘அடுத்தது காட்டும் பளிங்கு போல்..’ இவளது முகம் என்று எண்ணிக் கொண்டான் நந்தகுமாரன்.. அவனது பசியை விட அவளது மனநிம்மதி ஒன்று மட்டுமே இப்போது பிரதானமாகத் தோன்ற,

“இவ்வளவுதானே.. ஒருவர் வேலை செய்தால்தான் நாள் கணக்கில் வேலை இழுக்கும்.. அதையே இருவர் செய்தால் மணிக்கணக்குத்தான்.. இதுக்கா இவ்வளவு வருத்தம்..?” என்றவன் அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்து அந்தக் கம்ப்யூட்டரை உயிர்ப்பித்தான்..

“சார்.. நீங்கள்.. சாப்பிடப் போனீர்களே சார்..”

“சாப்பாடு எப்போது வேண்டுமானாலும் கிடைக்கும்.. கம்ப்யூட்டர் சீட்டில் ஆள் இல்லாதபோதுதான் கிடைக்கும்.. டேவிட் வீட்டுக்குச் சாப்பிடப் போயிருக்கிறான்.. வர எப்படியும் இரண்டு மணி நேரம் ஆகும்.. அதற்குள் வேலை முடித்து விடலாம்.. முதல் வார வவுச்சரை நீங்க ஏற்றுங்கள்.. கடைசி வாரத்தை என்னிடம் கொடுங்கள்.. க்விக்..” என்றவன் வேலையில் மூழ்க.. அவள் பிரமிப்புடன் அதி வேகமாய் செயல்பட.. ஆச்சரியமாய் டேவிட் வருவதற்குள் ஸ்டேட்மென்ட் தயாராகி விட்டது..

“இவ்வளவுதான்.. டோட்டல் டேலியாயிருச்சு.. போய் பூதத்தோட பிரண்ட் கிட்ட கொடுங்க..”

“பூதமா யார் அது..?”

“பாடுபட்டு செய்த வேலையை அழிப்பவன் மனிதனா..? பேய், பிசாசு, பூதம் தானே.. உங்க பாஸ்வெர்டில் உள்ளே நுழைய முடியாது.. ஹெட் கிளார்க் பாஸ்வெர்டில் தானே நுழைய முடியும்..? அப்போ அந்த வேலையைச் செஞ்ச பூதம் அவரோட பிரண்டு தானே..?”

மைதிலி சிரித்தாள்.. அவள் முகம் மலர்ந்திருந்தது..

“அப்பாடா ஒரு வழியாய் சிரிச்சீங்க.. பிரச்னை வந்து விட்டால் அதனுடன் மோதிப் பார்க்கணும்ங்க.. அதுதான் திரில்.. அழுதுகிட்டு உட்காரலாமா..?”

பெரிய மீசையுடன் கரிய நிறத்துடன் ஆஜானுபாகு வாய் அமர்ந்தவாறு அவன் கேட்ட விதம் கம்பீரமாய் இருந்தது.. எதிர்த்து நிற்கும் வலிமையுடைய ஆண் மகன் அவன் என்பதை அவனது தோரணை காட்டியது..

பிறந்ததில் இருந்து தெருவில் ஒரு சிறு சத்தம் வந்தால் கூடக் கதவை அடைத்துக் கொள்ளும் சுபாவம் உடைய குடும்பத்தில் பிறந்தவளுக்கு அவனது அஞ்சாமை ஆச்சரியத்தைக் கொடுத்தது..

இப்போது யோசித்துப் பார்கையில் அந்த முரட்டுத் தனமும், தைரியமும்தான் தன்னை அவனிடம் ஈர்த்துது என்று மைதிலிக்குப் புரிந்தது..

“போச்சா.. கணக்கெல்லாம் தப்பாப் போச்சு.. கவனமிருக்கணும்… அதுதான் உனக்கு சுட்டுப் போட்டாலும் வராதே..”

அப்பா இந்தச் சூழ்நிலையில் இருந்திருந்தால் இதைத் தான் கூறியிருப்பார்..

“ஆபிஸில் அனுசரித்துப் போகத் தெரியணும் மைதிலி.. இப்பப்பார்.. யாருன்னு முகம் தெரியாத எதிரி ஒருவரை உருவாக்கிக்கிட்டு இருக்கே.. இனி பயந்து பயந்துதான் நீ வேலை செய்யணும்..”

அண்ணா இதை அறிந்தால் இப்படித்தான் பேசியிருப்பான்..

யாருமே நந்தகுமாரனைப் போல் ‘எதிர்த்து நில்’ என்று கூறி – இருக்க மாட்டார்கள்.. கம்ப்யூட்டரின் கீ போர்டில் லாவகமாய் செயல்படும் அவனது வலிமை மிகுந்த விரல்களைப் பார்த்தவள் அவன் முகத்தைப் பார்க்கத் துடித்த மனதை அடக்கிக் கொண்டாள்.. அந்த நேரம்,

“இந்த ஸ்டேட்மெண்ட் பிரிண்ட்டைக் கிழித்தது யார்..?” என்று தவறான ஸ்டேட்மென்டின் கிழிபட்ட பேப்பரைக் காட்டி நந்தகுமாரன் பழைய நினைவில் துக்கம் தொண்டையை அடைக்க,

“ஹெட்கிளார்க் கிழிச்சார்.. சும்மா கிழிக்கவில்லை.. அதைக் கிழித்து என் முகத்தில் மோதாத குறையாக என் மீது வீசினார்..” என்றாள்..

நந்தகுமாரன் கோபத்தில் பல்லைக் கடித்தான்.. ‘குடும்பவன்முறையைத் தடுக்க சட்டம் வந்து விட்டது.. அலுவலக வன்முறையை தடுக்கவும் சட்டம் உள்ளது.. எந்தச் சட்டம் எங்கே கொண்டு வந்தாலும்.. பெண்ணே..! உன் கதி இதுதானா..? எங்கும் மரியாதை இல்லாமல் நீ கடைநிலை ஆளாகவே இருக்க வேண்டுமா..?’ அவள் முகம் வாடி விட்டதைப் பொறுக்காதவன்,

“ஹெட்கிளார்க் வேலையே செய்வதில்லைன்னு ஆபிசில் ஒரு பேச்சு இருக்கு.. இனிமேல் அவரை யாரும் அப்படிச் சொல்ல முடியாது.. ஏன் சொல்லுங்க..?” என்றான்.. மைதிலி விழித்தாள்.. “ஏன் சார்..?”

“அவர்தான் வேலை செய்து கிழித்து விட்டாரே.. அதுவும் மன்த்லி ஸ்டேட்மென்டைக் கிழித்து நிரூபித்து விட்டாரே..”

மைதிலி பொங்கிச் சிரித்தாள்.. சுழித்தோடும் காவிரியாய் பொங்கிச் சிரிக்கும் அவளது சிரிப்பு.. காவிரி நீர் கண்டு வாடிய பயிர்கள், செழித்து நிமிர்ந்ததைப் போல் நந்தகுமாரனின் மனமும் நிறைந்தது.

அவளது முகவாட்டம் ஏன் அவனை இந்த அளவு பாதிக்கிறது..? என்று மனம் கேட்ட கேள்வியுடன நிமிர்ந்தவன் டேவிட் அவர்கள் இருவரையும் பார்த்தபடி வருவதைக் கண்டு எழுந்தான்.. டேவிட்டின் கண்களிலும் கேள்வி இருந்தது..

0Shares

Reviews — Kadalin Pon Vethiyle / காதலின் பொன் வீதியிலே

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link