Chapter 11
மைதிலியின் கண்கள் சுவர் கடிகாரத்தையே பார்த்துக் கொண்டிருந்தன.. இரவு முழுவதும் தூங்காமல் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தவள் காலை விடிந்தும் விடியாமல் இருக்கும்போதே படுக்கையை விட்டு எழுந்து விட்டாள்..
“என்னடி இவ்வளவு சீக்கிரம் ஆபிஸ் கிளம்பிட்டே..?”
“பெண்டிங் வொர்க் நிறைய இருக்கும்மா..”
“சரிசரி அதுக்காக கோழி கொறிப்பது போல் கொறிக்காம ஒழுங்கா ரெண்டு இட்லியை பிச்சு வாயில் போட்டுக் கொண்டு போ..”
“பசிக்கலை அம்மா..”
“மதிய டிபன் டப்பாவை எடுத்துக்கிட்டாவது போடி..”
“எடுத்துக்கிட்டேன் அம்மா… போய்விட்டு வருகிறேன்…” மைதிலி பரபரப்பாக வெளியேற வைத்தீஸ்வரன் முகத்தைத் துடைத்தபடி வந்தாள்..
“ஏண்டி உன் பொண்ணு இறக்கையில்லாமலே இறக்கை கட்டிக்கிட்டாற் போல் பறக்கிறாள்..?”
“இந்த வீட்டில் வந்து பிறந்திட்டாள் இல்லை.. அதனால்தான்..”
“ஏண்டி.. நல்லாத்தானே பேசிக்கிட்டு இருந்தே.. என்ன ஆச்சு..?”
“எதுவும் ஆகலை.. வழக்கமா நீங்கதானே வம்பிழுப்பீங்க.. மத்தவங்க குதர்க்கமா பேசினால் எப்படியிருக்கும்ன்னு நீங்க தெரிந்துக்க வேணாமா..?”
“தெரிய வைப்படி.. ஏன் தெரிய வைக்க மாட்டே.. ஐம்பது பவுன் நகை போடறேன்னு சொல்லிட்டு வெறும் ஐந்து பவுன் நகை போட்டு.. உங்க வீட்டில் என் தலையில் கட்டி வைச்சாங்களே.. அதைப் பற்றி வாய் திறக்காமல் குடித்தனம் பண்றேன் இல்லை.. ஏன் பேச மாட்டாய்..? வாய் கிழியப் பேசுவாய்..”
பாத்திரத்தை ‘ணங்’கென்ற ஓசையுடன் சமையல் மேடையில் வைத்த விசாலாட்சி கோபத்துடன் திரும்பி வைத்தீஸ்வரனை முறைத்தாள்..
“அநியாயமாய் பேசுவதற்கும் ஓர் அளவிருக்க வேண்டும்.. உங்க தங்கை கல்யாணத்துக்கு வேணுமின்னு நாற்பத்தி ஐந்து பவுனுக்கான பணத்தை முன்னாலேயே வாங்கி அதை வைத்து உங்க தங்கையை மேடேற்றிய குடும்பம் தானே உங்க குடும்பம்.. ஐம்பது பவுன் நகை போட வேண்டிய பெண் வெறும் ஐந்து பவுன் நகை போட்டுக்கிட்டு நிற்கிறாளேன்னு எங்க அம்மா மனசு கேட்காமல் அவங்க வளையலையும், நெக்லசையும் எனக்குப் போட்டுவிட்டு பதினைந்து பவுன் நகையோடு என்னை உங்ககூட இந்த வாழ்க்கையை வாழ அனுப்பி வைச்சது மறந்து போச்சா..?”
“‘இந்த வாழ்க்கை’ன்னு பொடி வைத்துப் பேசுற.. ஏன் இந்த வாழ்க்கைக்கு என்ன குறைச்சல்..?”
“ஒரு குறைச்சலும் இல்லை.. பொழுது விடிஞ்சு பொழுது இருட்டி கண் மூடுகிற வரைக்கும் உங்களுக்கு பேச்சுத் துணையா ‘உம்’ கொட்டிக்கிட்டு இருக்கேனில்லை.. அப்புறம் எங்கேயிருந்து குறை வரும்..”
“ஏண்டி புருசன் பக்கத்திலேயே இருக்கணும்ன்னுதான் எல்லாம் பெண்களும் ஆசைப்படுவாங்க.. நான் ரிடையரான இந்த ஐந்து வருடமாய்த்தான் உன் கூட இருக்கிறேன்.. அதுக்கே இந்தப்பாடா..?”
“ஐந்து வருடத்திற்கே இந்தப் பாடுன்னா.. கல்யாணமான நாளிலிருந்து நீங்க வீட்டிலேயே இருந்திருந்தீங்க.. அவ்வளவுதான்.. இந்நேரம் நான் அடுப்படியில் பாத்திரங்களை சுரண்டிக் கொண்டு இருந்திருக்க மாட்டேன்.. பாயைச் சுறண்டிக்கிட்டு பைத்தியமாய் ஆகியிருப்பேன்..”
வைத்தீஸ்வரன் வாயை மூடிக் கொண்டு நகர்ந்தார்.. அவர் வாயையும் மூட வைத்து விட்ட பெருமையில் விசாலாட்சி சமையலில் இறங்கினான்..
அலுவலகத்தில் எல்லோருக்கும் முன்னரே வந்து விட்ட மைதிலி இருப்புக் கொள்ளாமல் தவித்தாள்.. அவள் பொறுமையைச் சோதித்த மணித்துளிகள் நகர முதலில் பாத்திமா உள்ளே வந்தாள்..
“குட்மார்னிங் மைதிலி.. என்ன சீக்கிரம் வந்து விட்டாய்..?”
“வந்தவுடன் பஸ் கிடைத்தது.. வந்துவிட்டேன்..”
மற்றவர்கள் எல்லோரும் வந்துவிட மைதிலி படபடப்பாய் உணர்ந்தாள்.. அதோ.. நந்தகுமாரன் வந்து விட்டான்.. அவள் பார்வையில் ஒளி பிறந்தது.. டேவிட்டுடன் பேசிக் கொண்டே வந்த நந்தகுமாரன் அவன் அறைக்கு நேராகச் செல்லாமல் டேவிட்டின் அருகே ஒரு சேரை இழுத்துப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தான் டேவிட் கம்ப்யூட்டரை உயிர்ப்பித்தபடி,
“என்ன ஆபிசர் சார் இன்றைக்கு விச்ராந்தியாய் உட்கார்ந்து விட்டீர்கள்..” என்று கேட்டான்..
“சும்மாதான் டேவிட்.. உன் கூடப் பேசணும்னு ஆசைன்னு வைச்சுக்கோயேன்..”
“இப்ப வாசலில் நின்று ஐந்து நிமிஷம் பேசினோம்.. டீ டயத்தில் பேசப் போகிறோம்.. அப்புறம் என் மேல் என்ன திடீர் அன்பு..?”
மைதிலி கம்ப்யூட்டர் மவுசில் கையிருக்க கண்களால் நந்தகுமாரனை விழுங்கிக் கொண்டிருந்தாள்… நந்தகுமாரனின் வாய் டேவிட்டிடம் பேசிக் கொண்டிருக்க கண்களால் மைதிலியை அள்ளிப் பருகிக் கொண்டிருந்தான்..
மைதிலி அவனது கருநீலச் சட்டையை ரசிக்க அவனோ அவள் உடுத்தியிருந்த அரக்குச் சிவப்பில் பட்டுக் கரையிட்ட காட்டன் சேலையை ரசித்துக் கொண்டிருந்தான்..
அவனது வளுவான கரங்களில் விளையாடிய தங்க பிரேஸ்லெட்டை அவள் பார்க்க அவளது ஒற்றைக் கல் மூக்குத்தி ஒளிர்வதை அவன் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனது பெரிய மீசையின் கம்பீரத்தை அவள் வியக்க அவளது நீண்ட பின்னலை அவன் வியந்து கொண்டிருந்தான்..
அவனது முகத்தையே அவள் பார்க்க அவள் முகத்தையே அவன் பார்க்க இடையில் டேவிட்டின் குரல் புகுந்து அவர்களது மோன நிலையைக் கலைத்தது.
“என்ன ஆபிசர் சார்.. எந்த உலகத்தில் இருக்கறீங்க..?”
“ஏண்டா இந்த உலகத்தில் இருக்கிறோம்ன்னு நொந்துக்கிட்டு இந்த உலகத்தில் தான் இருக்கிறேன் டேவிட்..”
மைதிலி துணுக்குற்றாள்.. ‘என்ன பேச்சு இது..?’ என்று கண்களால் கடிந்து கொண்டாள்..
“என்ன நந்து சார் விளையாட்டாய் பேசினால் சீரியஸா பதில் சொல்றீங்க.. என்ன ஆச்சு..?”
“எதுவுமே ஆக மாட்டேங்குது டேவிட்.. அதுதான் பிரச்னை..” என்று சலித்துக் கொண்டான் நந்தகுமாரன்.
பேச்சை மாற்ற எண்ணிய டேவிட்..
“சரி விடுங்க நந்து சார்.. நேத்து சாயங்காலம் ஒரு அசத்தலான பொண்ணு அரேபிய குதிரை மாதிரி டாக் டாக்குன்னு நடந்து வந்து உங்களை காரில் கடத்திக் கொண்டு போனதே அது யாரு நந்து சார்.. உங்க சொந்தமா..?”
மைதிலியின் ஒளி படர்ந்த முகம் ஒளி குன்றியது.. நந்தகுமாரன் அவளைப் பார்த்த விழி மாறாமல் டேவிட்டிற்குப் பதில் சொன்னான்..
“சொந்தமாகணும்னு துடிக்கிறவங்க டேவிட்..”
“அட்ரா சக்கை அப்படிப் போகுதா கதை.. ஏன் ஆபிசர் சார் என்ன முடிவு எடுக்கப் போறீங்க..?”
“ஏன் அப்படிக் கேட்கிற..?”
“அதுவோ அல்ட்ரா மாடர்ன் பொண்ணு.. வெளிநாட்டுக் காரில் சர்ருன்னு வந்து நிற்குது.. இன்னைக் கெல்லாம் பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல் அப்படி ஓர் அழகு..”
மைதிலி டேவிட்டை முறைக்க நந்தகுமாரன் சிரித்தான்..
“அந்த அழகெல்லாம் சும்மா பார்த்துக்கிட்டு இருக்க மட்டும்தான் லாயக்கு.. குடும்பம் நடத்த இல்லை.. அப்புறம் டேவிட்.. அவளுடைய படகுக் காரில் அவள் மட்டும் தான் கோவிலில் இருந்து வீட்டிற்குத் தனியாகப் போனாள்.. நான் பஸ்ஸில்தான் போனேன்..”
“இதை எதற்கு என்னிடம் சொல்கிறீர்கள் என்று புரியவில்லையே..”
“புரிய வேண்டியவங்களுக்கு புரிந்தால் சரி..”
நந்தகுமாரன் எழுந்து சென்று அறைக்குள் மறைந்த அடுத்த கணம் அவனது செல்போன் ஒலித்தது.. யார் என்று அறிந்தவனாய் சிரிப்புடன்,
“என்னடி..?” என்றான்..
“நான் நைட்டெல்லாம் தூங்கவில்லை தெரியுமா..?”
“அதுதான் எனக்குத் தெரியுமே.. முட்டாள்.. என் முன்னாடியே ஒருத்தி உன்னை டீஸ் பண்ணுவாள்.. நான் அவளுடன் காரில் போவேனா.. இதோ பார்டி.. இப்பவும் சொல்கிறேன்.. நீ உன் வீட்டில் நம் காதலை ஓபன் பண்ணு.. நான் முறைப்படி பெண் கேட்டு வருகிறேன்..”
“சொல்லுகிறேன் நந்து.. இன்னும் கொஞ்ச நாளில் சொல்லி விடுகிறேன்..”
“ச்சு.. இதுதாண்டி உன்கூட பெரிய ரோதனை.. வாழவும் மாட்டாய்.. என்னையும் உயிரை எடுப்பாய்.. உனக்கெல்லாம் எதுக்குடி இந்தக் காதல்..”
அவன் போனை கோபத்துடன் துண்டித்து விட்டான்.. மைதிலி சோர்வாய் வேலையில் ஆழ்ந்தாள்..
வேம்பூரில் நந்தகுமாரனின் வீட்டில் மதிய உணவுக்காக சோலையம்மாள் சமைத்து வைத்திருந்தவைகளை சாப்பாட்டு மேஜையில் பரப்பி வைத்துக் கொண்டிருந்தாள்.. துரைசிங்கம் வயலில் இருந்து திரும்பி வந்தவர், கை கால் முகம் கழுவிக் கொண்டு வந்தபடி,
“மேனகாவைச் சாப்பிட வரச் சொல்லுடி..” என்றார்.
சோலையம்மாள் வேலைக்கு இருந்த பெண்களில் ஒரு பெண்ணிடம்,
“செங்கமலம் போய் அந்தப் பொண்ணைச் சாப்பிட வரச்சொல்லு..” என்றாள்..
“ஏன் மகாராணி போய் கூப்பிட்டு வந்தால் கிரிடம் இறங்கிடுமோ.. வேலையாள் கிட்ட வரச் சொல்லிவிடறே.. அதுவும் என்னன்னு சொல்லி விடறே..? அந்தப் பொண்ணை..! எந்தப் பொண்ணு..? அது ராஜ வம்சத்துப் பொண்ணுடி.. ஜமீன் பரம்பரை.. அதைத் தங்கத் தாம்பளத்தில் தாங்க வேண்டாமா..?”
“இதோ பாருங்க.. என் உடம்பு கல்லால் செய்து வைக்கப்படலை.. என் உடம்பில் ஆயிரம் நோய், நோக்காடுன்னு இருக்கு.. இந்த ஆட்டத்துக்கு எல்லாம் ஈடுகொடுக்க என்னால் முடியாதுன்னு நீட்டி, நிமிர்ந்து ஏதாவது ஆஸ்பத்திரியில் போய் படுத்துக்கிட்டேன்னு வைங்க.. என் பிள்ளை எனக்கு ராஜ வைத்தியம் பார்த்து குணமாக்கிடுவான்.. புருசன் ஆச்சே.. வீட்டுப் பொம்பளை நாம இழுத்துப் போர்த்திக்கிட்டு படுத்தால்.. அவர் என்ன பண்ணுவாருன்னு பார்த்தால் ஆட்டமா ஆடுறீங்க..? மாடி வீட்டு மகாராணி எப்பப் பார்த்தாலும் மாடியிலேயே அடைகாத்தால் நான் மேலே ஏறி அழைத்துக்கிட்டு வர முடியுமா..? எனக்கென்ன வயசா திரும்புது..?”
துரைசிங்கம் பயந்து போனார்.. மகன் ஒரு பக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டு இருக்க மனைவியும் நோயில் விழுந்து விட்டால் என்ன செய்வது..?
“சரி..சரி.. வீட்டுக்கு விருந்தாளி வந்திட்டால் நாம் தானே உபசரிக்கணும்..?”
“எத்தனை நாளைக்கு..? இல்லை.. எத்தனை நாளைக்குன்னு கேட்டேன்.. விருந்தாளி வந்தால் ஒரு நாள்.. இரண்டு நாள்.. ஏன் ஒரு மாதம் கூட இருப்பார்கள்.. இப்படியா மாதக் கணக்கில் இங்கே டேரா போடுவார்கள்..?”
“நீ ஏன் அந்தப் பொண்ணை வேற்றாளா பார்க்கிற.. வீட்டு ஆளா பார்..”
“அப்படியா சாமி.. சரி.. உன் வீட்டாள் விருந்தாளியை வரச் சொல்லி.. எனக்கு வேறு எதுவும் செய்யச் சொல்ல வேணாம்.. சமைச்சு வைச்சிருக்கேனே இதையெல்லாம் தானாய் போட்டுச் சாப்பிட்டுக்கச் சொல்லுங்க பார்க்கலாம்..”
“ஏண்டி.. இப்படிச் சொன்னால் எப்படிடீ..?”
“வேறு எப்படிச் சொல்ல..? பார்த்துப் பார்த்துப் பரிமாறினாலும் ஆயிரம் நொட்டை சொல்லிக்கிட்டு சாப்பிடுகிற பொண்ணை இப்போதுதான் பார்க்கிறேன்..”
“ஹாய் அங்கிள்..” என்றபடி மேனகா சாப்பிட வந்தாள்..
முகமெல்லாம் மறைத்திருந்த மீசையின் இடையே வெண் பற்கள் பளிச்சிட,
“ஆய்ய் மேனகா..” என்றார் துரைசிங்கம்.. சோலையம்மாள் பல்லைக் கடித்தாள்..
“அந்தப் பொண்ணு சொன்னால் நீங்களும் அதே போல் சொல்லணுமா..? சரியாகச் சொல்லத் தெரிந்தால் சொல்லணும்.. இல்லை வாயை வைத்துக் கொண்டு பேசாமல் இருக்கணும்.. சாப்பிடுகிற இடத்தில் என்ன வார்த்தையைச் சொல்கிறீர்கள்..”
“ஹி.. ஹி..” என்று துரைசிங்கம் அசடு வழிய மேனகா இறுகிய முகத்துடன்,
“இன்னைக்கு என்ன ஸ்பெஷல் ஆன்ட்டி..” என்றாள்..
“இது என்ன ஹோட்டலாம்மா..? வீடு.. ஏதோ என்னால் முடிந்ததைச் செய்திருக்கிறேன் சாப்பிடு..”
மேனகாவின் முகம் சுருங்கியது.. தோரணையாய் கைகழுவி விட்டு வந்து அமர்ந்தவளின் முன் தட்டைப் போட்டுப் பரிமாறியபடி,
“ஏம்மா ஊர் சுற்றிப் பார்க்கணுமின்னு சொல்லிட்டு நீ வந்து பத்து நாளுக்கு மேலாகுது.. எங்கேயும் வெளியே போகக் காணோம்.. ரூமிலேயே அடைஞ்சு கிடக்கிறதுக்கா.. இங்கே வந்தே..?” என்று கேட்டாள் சோலையம்மாள்..
“இதை உங்கள் மகனிடம் கேட்க வேண்டியது தானே..?”
“அவனிடம் என்ன கேட்கிறது..?”
“காலையில் ஆபிஸ் போகிறேன்னு போகிறவர் நைட் பத்து மணிக்குத் தான் வீட்டுக்கு வருகிறார்.. நான் ஆபிஸ் போனால் ஒன்று நான் போகிறதுக்கு முன்னாலேயே போய் விடுகிறார்.. இல்லாவிட்டால் வேலையிருக்குன்னு என்னை ஆபீஸ் வராண்டாவில் உட்கார வைத்து பியூனிடம் அழுக்கு தம்ளரில் டீ வாங்கித் தரச் சொல்லிவிட்டு போய் விடுகிறார்.. அப்புறம் நான் எப்படி ஊரைச் சுற்றுவது..?”
“அவனுக்கு வேலையிருக்கிறதுக்கும் நீ ஊரைச் சுற்றிப் பார்க்கிறதுக்கும் என்ன சம்பந்தம்..?”
“அவர்தானே எனக்கு ஊரைச் சுற்றிக் காட்டணும்..?”
“அவனுக்குத்தான் வேலையிருக்குன்னு சொல் லிட்டானே.. அவன் வராட்டி என்ன.. இவர் வயலுக்குப் போய் பார்க்கிறதை நான் பார்த்துக் கொள்கிறேன்.. இவரைக் கூட்டிக்கிட்டுப் போய் ஊரைச் சுற்று..”
“வாட்..” என்று மேனகா முறைத்தாள்… இந்தக் கிழவிக்கு என்ன தைரியம் இருந்தால் அவளை துரைசிங்கத்துடன் போகச் சொல்லுவாள்.. துரைசிங்கத்திற்கு இந்த சந்தர்ப்பத்தில் என்ன பேச என்று தெரியவில்லை.. மேனகா முடிவெடுத்தாள்.. இந்த சோலையம்மாளை எப்படியாவது அவமானப்படுத்த வேண்டும்.. அவள் விரும்பும் நந்தகுமாரனின் தாய் அவள் என்பது அவளுக்கு மறந்து போனது.. நந்தகுமாரன் தாயின் மேல் உயிராய் இருப்பவன் என்பது அவளுக்கு மறந்து போனது.. பிறந்ததில் இருந்து உடலில் ஓடும் மேல் தட்டு ரத்தம் ஒன்றுதான் நினைவில் இருந்தது.. அவளது இயல்பான திமிருடன்..
“வெயிட்.. வெயிட்.. இதென்ன.. என் பிளேட்டில் என்ன போடறீங்க..? வாட் இஸ் திஸ் நான்சென்ஸ்..” என்றாள்..
“கீரைம்மா.. தினமும் ஒரு கீரை எங்கள் வீட்டு சமையலில் இருக்கும்..”
“உங்கள் வீட்டிலிருந்தா அதை அப்படியே என் தட்டில் போடணுமா..? எனக்குப் பிடிக்குதா, பிடிக்கலையான்னு கேட்க வேண்டாமா..? கன்ட்ரி புரூட்.. சுத்தப்பட்டிக்காடு.. கீரையாம் கீரை.. மாடுகள் கூடப் பழகிட்டு அதே புத்திதானே இருக்கும்.. அதுதான் மாட்டுக்குப் போடுவது மாதிரி மனிதருக்கும் போட்டுக்கிட்டு.. ஷிட்..” என்றவள் தன் தட்டை சோலையம்மாளின் பக்கம் தள்ளிவிட அது அவள் மீது மோதி கவிழ்ந்தது.. கட்டியிருந்த சேலையெல்லாம் கீரை சிறத சோலையம்மாள் ரௌத்ரமாய் நிமிர துரைசிங்கம் பதறி எழுந்தார்..
“சோலையம்மா.. உனக்கு உடம்பு சரியில்லைன்னு சொன்னியே.. போ.. போய் ரூமில் படு.. ராக்காயி சாப்பாடு போடட்டும்.. அம்மா மேனகா நீ சாப்பிட உட்காரு தாயி.. ராக்காயி அம்மாவுக்கு எது பிடிக்கும்ன்னு கேட்டு பிடிச்சதை மட்டும் போடு.. என்ன புரியுதா..” என்றதும் அந்த ராக்காயி இன்றைக்கும் ஆயிரம் ரூபாய் அதிர்ஷ்டம் அடிக்கப் போகிற சந்தோசத்தில்,
“அதுக்கென்னங்க ஐயா.. அம்மா மனசு கோணாம சாப்பாடு போடுறேன்..” என்றாள் வாயெல்லாம் பல்லாக.
துரைசிங்கம் மனைவியைத் தரதரவென்று இழுத்துப் போகாத குறையாக தங்கள் அறைக்குத் தள்ளிக் கொண்டு போனார்.. உதடு துடிக்க நின்றவளிடம்,
“பாரு சோலையம்மா.. வெண்ணெய் திரண்டு வரும் போது பாத்திரத்தை உடைச்சிடாதே.. எனக்கும் அந்தப் பொண்ணு இப்படிச் செஞ்சது பிடிக்கலைதான்.. ஆனால் யோசிச்சுப் பாரு.. அவங்க அப்பா அந்தப் பொண்ணை நம்மை நம்பி அனுப்பி வைச்சிருக்கார்.. அதை நினைத்துப் பாரு..” என்று கெஞ்சினார்..
பதில் சொல்லாமல் கட்டிலில் அப்படியே சுருண்டு படுத்து விட்டாள் சோலையம்மாள்.. கணவன் எவ்வளவு கெஞ்சியும் உணவு உண்ணவில்லை.. கவலையுடன் துரைசிங்கம் தானும் சாப்பிடாமல் தோப்புப் பக்கம் சென்றுவிட மேனகா மட்டும் திருப்தியுடன் நன்றாகச் சாப்பிட்டுவிட்டப் பல்லைக் காட்டிய ராக்காயியை பணத்தால் அடித்துவிட்டுச் சென்று விட்டாள்..
இரவு நந்தகுமாரன் வந்ததும் தாயைத் தேடினான்..
“அம்மா, அம்மா.. செங்கமலம் அம்மா எங்கே..?”
“அம்மா ரூமில் படுத்திருக்காங்க சின்னய்யா.. மதியம் சாப்பிடலை..”
“ஏன் உடம்பு சரியில்லையா..?”
“இல்லைங்க ஐயா.. அது வந்து..” தயங்கிய செங்கமலம் என்ன நடந்தது என்பதைக் கூறிவிட்டாள்.. பணத்துக்காக இல்லாமல் உண்மையான விசுவாசத்தோடு வேலை பார்ப்பவள் அவள்.. ஊருக்கே பெரிய வீட்டின் எஜமானிக்கு நேர்ந்த அவமானம் அவளால் சகிக்கக் கூடியதாக இல்லை..
நந்தகுமாரன் கோபத்தோடு தாயின் அறைக்குச் சென்றான்.. இருண்டு கிடந்த அறையில் ஸ்விட்ச்சைத் தட்டி விளக்கைப் போட்டான்.. கண்ணில் நீர் வழிய தாய் படுத்திருந்த கோலம் அவனைத் தாக்கியது.
பிறந்தது முதல் செல்வச் சீமாட்டியாய் வாழ்ந்த மேனகா முதல் முதலாய் அவளை ஒரு பொருட்டாய் நினைக்காத ஆண் மகனால் மிகக் கடுமையாகக் கண்டிக்கப்பட்டாள்..
Reviews — Kadalin Pon Vethiyle / காதலின் பொன் வீதியிலே
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.