Chapter 12

0Shares

அறைக்குள் வெளிச்சம் பரவியதும் சோலையம்மாள் கண்கள் கூசியவளாய் விழி விரித்துப் பார்த்தாள்.. மகனைக் கண்டதும் அவள் கண்கள் கலங்கி விட்டன.. நந்தகுமாரன்  தாயை தலை முதல் கால் வரை பார்த்தான்.. சேலை முழுவதும் கீரை தெறித்துக் காய்ந்து அப்பிப் போயிருந்தது.

“என்னம்மா கோலம் இது..?”

“எல்லாம் உன் அப்பா கொடுக்கிற இடம்பா.. ஜமீன் வம்சமாம் ஜமீன் வம்சம் – பொண்ணு பொண்ணா இருக்கணும்டா.. இவளை மாதிரி பிடாரியா இருக்கக் கூடாது..”

“நீங்க முதலில் எழுந்து சாப்பிடுங்க.. செங்கமலம்..” என்று கூவியவன் அவன் கூப்பிடும் முன்னரே சாப்பாட்டை எடுத்துக் கொண்டு அவள் வந்து நிற்பதைக் கண்டதும் மனம் கனிந்தவனாய்,

“வந்து விட்டாயா.. இங்கே கொடு..”  என்று வாங்கியவன், தாயை எழுப்பினான்.. “எழுந்திருங்கம்மா..”

“இல்லைப்பா.. என் மனசு ஆறலைடா தம்பி..”

“அதுக்காக பட்டினி கிடக்கிறதா..? அம்மா இது உங்கள் வீடு.. அவள் யாரு..? ஒண்ட வந்த பிடாரி.. அவளை வீட்டை விட்டு ஓட்டுவதை விட்டுவிட்டு.. எழுந்திருங்கம்மா..”

“நான் மாட்டோடு பழகுகிறவளாம்டா தம்பி..”

“மாடுன்னா மகாலட்சுமின்னு நீங்கதானே சொல்வீங்க.. நீங்க இந்த வீட்டு மகாலட்சுமி.. மகாலட்சுமி கூடத்தான் பழகுவீங்க.. அவளை மாதிரி மனுசப் பிறவியே இல்லாதவள்கிட்டயா பழகுவீங்க..”

தாயை சமாதானப்படுத்தி சாப்பிட வைத்தவன்,

“செங்கமலம் பாத்ரூமில் ஹீட்டரைப் போட்டுவிடு.. அம்மா இன்னும் பத்து நிமிசத்தில் நீங்கள் குளித்து வேறு சேலை கட்டிக்கிட்டு எனக்கு சாப்பாடு எடுத்துக்கிட்டு வரணும் புரியுதா.. செங்கமலம்..” என்று அழைக்க,

“நான் பார்த்துக்கறேன் சின்னய்யா..” என்றாள் செங்கமலம் உற்சாகமாய்..

மடமடவென்று மாடியேறியவன், மேனகாவின் அறைக்கதவைத் தட்டினான்.. திறந்தவள் மலர்ந்தாள்..

“ஓ..குமார்.. நீங்களா..? வாட் எ பிளசென்ட் சர்ப்ரைஸ்.. என் ரூம் கதவை நீங்க தட்டினீங்களா.. ஹய்யோ.. எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா..”

“உனக்குக் கொஞ்சமாவது மேனர்ஸ் இருக்கா.. சுத்தமாவே அது இல்லையா…? ஒரு வீட்டில் விருந்தாளியாய் வந்து வரக்கணக்கில் வெட்கமில்லாமல் டேராவும் போட்டு விட்டு.. வீட்டைச் சேர்ந்தவர்களிடம் மரியாதைக் குறைவாக நடந்து கொள்ள உனக்கு வெட்கமாக இல்லை.. சே.. என்ன பொடித்தனமான ஆள் நீ..”

“குமார்.. மைண்ட் யுவர் வெர்ட்ஸ்.. நான் யார் தெரியுமா..?”

“தெரியுமே.. திமிர் பிடித்தவள்.. அகங்காரி… பெரிய வங்களுக்கு மரியாதை கொடுக்கத் தெரியாத பண்பாட்டில்லாத ஜென்மம்.. உன்னைச் சொல்லிக் குற்றமில்லை.. உன்னை இந்த லட்சணத்தில் வளர்த்து வைத்திருக்கிற உன் பெற்றவங்களைச் சொல்லணும்..”

“குமார்.. என் பேரண்ட்ஸைப் பற்றிப் பேச நீங்கள் யார்..?” என்னைப் பற்றி பேசுங்கள்.. உங்கள் மேலுள்ள காதலால் கேட்க முயற்சி பண்ணுகிறேன்.. அவங்களைப் பற்றிப் பேசாதீங்க.. நான் கேட்டுக் கொண்டிருக்க மாட்டேன்..

“இவ்வளவு மரியாதையாய் நான் பேசும்போதே உனக்கு ரோசம் பொத்துக் கொண்டு வருகிறதே.. என் வீட்டில் தங்கிக் கொண்டு.. என் அம்மா சமைத்துப் போடுவதை சாப்பிட்டுக் கொண்டு.. சாப்பாட்டுத் தட்டைத் தூக்கி என் அம்மா மேல் வீசியிருக்கிறாயே.. உன்னை.. பெண்ணாகப் போய் விட்டாய்.. இல்லாவிட்டால்..”

“இல்லாவிட்டால்..?”

“ஒரே அறையில் முப்பத்திரண்டு பல்லையும் உதிர்த்திருப்பேன்.. ராஸ்கல்.. யாருகிட்ட உன் திமிரைக் காட்டுற..?”

“திமிர்தான்.. பரம்பரைத் திமிர்.. பணக்காரத் திமிர்.. என்னிடம் பேசும்போது யோசித்துப் பேச வேண்டும்.. இதை உங்கள் அம்மாவிடம் சொல்லி வையுங்கள் இல்லாவிட்டால் இப்படித்தான் நடக்கும்..”

“உன் பரம்பரைப் புத்தியைத்தான் பார்த்தேனே.. சே.. உன் பணத்திமிரை வேற யார் கிட்டயாவது காட்டு.. இது என் அம்மாவின் வீடு.. உன்னிடமெல்லாம் யோசித்துப் பேசணும்னு அவங்களுக்கு அவசியமில்லை.. நீ இந்த வீட்டில் இருக்க வேண்டுமானால் அவங்களிடம் யோசித்துப் பேசு.. பணிவாய், அடக்க ஒடுக்கமாய் நடந்து கொள்..”

“ஓகே.. அப்படியெல்லாம் நடக்காவிட்டால்..”

“உன் பெட்டி படுக்கையைத் தூக்கி ரோட்டில் போட்டு விடுவேன்.. ஜாக்கிரதை.. யாருகிட்ட உன் வேலையைக் காட்டுறே..? பொம்பளையா நீ..?”

“உங்கள் பார்வையில் மைதிலி மட்டும்தான் பெண்ணா..?”

“ஏய்.. ஏய்.. மைதிலியைப் பற்றி நீ பேசாதே.. உனக்கு அதற்குத் தகுதியில்லை… எங்கள் ஆபீஸ் பியூன் வயதானவர்… அவரைப் பெயர் சொல்லி அழைக்க மாட்டாள்.. ‘சார்..’ என்றுதான் கூப்பிடுவாள்.. என்னை உயிருக்குயிராய் காதலிக்கிறாள்.. நான் இல்லையென்றால் செத்து விடுவாள்.. ஒரே ஓர் வார்த்தை.. ‘நான் உன்னுடன் வந்து விடுகிறேன்..’ என்று அவள் சொன்னால் போதும்.. நான் அவளைத் தூக்கிக் கொண்டு வந்து பதிவுத் திருமணம் செய்து குடித்தனம் பண்ண ஆரம்பித்து விடுவேன்.. ஆனால் அவள் பெற்றோரை மீறி அந்த வார்த்தையை சொல்ல மாட்டாள்.. உன்னைப் போலப் பார்த்தவுடன் தகப்பனிடம் சொல்லி ‘அந்த மாப்பிள்ளையைப் பிடித்துக் கொடு’ன்னு சொல்கிற ரகமில்லை அவள்.. மனதிற்குள் ஒரு வருடமாய் என்னைக் காதலித்தும் தானாய் வாய்திறந்து தன் காதலைச் சொல்லாதவள்.. ஊர் விட்டு ஊர் வந்து.. என் வீட்டில் தங்கிக் கொண்டு இருக்கிறாயே.. ஒரே ஆபிசில் தான் வேலை பார்க்கிறோம்.. என்னைப் பார்ப்பதற்குக் கூடத் தவித்துப் போய் விடுபவள் அவள்.. எங்கள் காதலைச் சொல்லிக் கொண்டே இந்த 

ஒரு வருடத்தில் மாதம் ஒரு முறை.. அதுவும் கோவிலில் பார்த்து பேசிக் செல்லவே பயப்படுவாள்.. நீ அவளுக்கு இணையாகமாட்டாய்..”

“ஷட் அப் குமார்.. அந்தப் பெண் தான் எனக்கு இணையில்லை.. யாரோடு யாரை இணை சொல்வது..? என் கால் தூசி பெற மாட்டாள் அவள்..”

“அவள் கால் தூசி நீதான் பெற மாட்டாய்..!”

மேனகா பல்லைக் கடித்தாள்.. இவ்வளவு தீவிரமான அன்பா அந்த மைதிலி மேல்..?

“அப்படியென்ன குமார் என்னைவிட அவள் உசத்தி..? நானும் தான் உங்களை உயிருக்குயிராய் காதலிக்கிறேன்.. குமார் உங்களிடம் நியாயமில்லை.. இரண்டு பெண்கள் உங்களைக் காதலிக்கும்போது 

ஒரு பெண் மட்டும் ஏன் உங்களுக்கு உசத்தியாகத் தெரியணும்.. ஏனென்றால் நீங்கள் அந்தப் பெண்ணை விரும்புகிறீர்கள்.. ஒரு வேளை அந்தப் பெண் உங்களை விரும்பாமலிருந்தால்.. நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்..? என்னைப் போல் துரத்தித் துரத்தி காதலித்திருப்பீர்கள்.. வற்புறுத்தியிருப்பீர்கள்..”

“உன் புத்தி எப்படிப் போகும்..? இப்படித்தான் போகும்.. இங்கே பார் மேனகா.. மைதிலி என்னைக் காதலிக்கிறாள்.. அவள் மனதில் நானிருக்கிறேன் என்பதை தெளிவாகத் தெரிந்து கொண்ட பின்னால்தான் நான் அவளிடம் என் காதலைச் சொன்னேன்.. ஒருவேளை அவள் என்னை விரும்பாமலிருந்தால்.. அவள் மேல் ஒரு நட்போடு விலகி என் வழியில் சென்றிருப்பேன்..”

“மைதிலி.. மைதிலி.. அவள் ஒரு சாதாரண கிளார்க் குமார்.. நான் கோடீஸ்வரி.. என்னைத் திருமணம் செய்து கொண்டால் என் சொத்தெல்லாம் உங்களுக்குத்தான்..”

“மைதிலி என்னுடைய தேவதை மேனகா.. அவளுக்காக என் பரம்பரைச் சொத்தைக் கூட தூக்கி எறிந்து விடத் தயாராயிருக்கிறேன்.. உன் சொத்து எனக்கெதுக்கு..?”

மேனகாவின் கோபம் உச்சநிலையை அடைந்த நேரத்தில் துரைசிங்கம் அங்கே வந்து விட்டார்.. மகன் கோபமாய் மேனகாவிடம் பேசிவிடப் போகிறானென்ற பதட்டத்தில்,

“அது ஒண்ணுமில்லைடா நந்து.. மேனகாவிற்கு உடம்பு சரியில்லையாம்.. அதனால் கை தவறி..”

“அம்மாவின் சேலை மேல் கீரை கொட்டி விட்டது அப்படித்தானே.. அப்பா உங்களைப் பெரிய மனிதர்ன்னு நினைச்சேன்.. ஏம்ப்பா அவங்க என் அம்மா மட்டும் தானா..? உங்கள் பெண்டாட்டி இல்லையா..? உங்கள் கண் முன்னாலேயே ஒருத்தி சாப்பாட்டைத் தூக்கி உங்க பெண்டாட்டி மேல் வீசுகிறாள்.. நீங்கள் ஏன் என்று ஒரு வார்த்தை கூடக் கேட்கவில்லை.. அதை விட்டு விட்டு இந்த அகங்காரிக்கு ஆதரவாய் சப்பைக் கட்டு கட்டுகிறீர்கள்.. இதை நான் உங்களிடம் எதிர்பார்க்க வில்லை அப்பா..”

துரைசிங்கம் வாயடைத்துப் போனார்.. அவர் மீசை தளர்ந்து போனது..

“இங்கே பாருங்கள் அப்பா..” என்று மகன் அழைக்க ஏறிட்டுப் பார்த்தார்..

“இனிமேல் இந்த வீட்டில் இந்தப் பணத்திமிர் பிடிச்சவள் ஊருக்குப் போகிறவரை என் அம்மா சமைக்க மாட்டார்கள்.. பரிமாறுவது முதற்கொண்டு இங்கே கொண்டு வந்து குமித்து வைத்திருக்கிறீர்களே இந்த மகாராணிக்கு சேடிப் பெண்கள் போல்.. அந்த ராக்காயி, மூக்காயியை வைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.. புரிகிறதா..?”

நந்தகுமாரன் கோபமாய் அறைக்கதவைச் சாத்திய வேகத்தில் மேனகாவின் உடல் ஒருமுறை குலுங்கி அதிர்ந்தது..

“அங்கிள் இப்ப என்ன நடந்து விட்டதுன்னு இவ்வளவு கோபப்படுகிறார்..? ஒரு சின்ன விஷயம்.. அதைப்போய் இவ்வளவு பெரிதாகப் பேசுவானேன்..”

துரைசிங்கம் மேனகாவை வெறித்துப் பார்த்தார்..

“சின்ன விசயமா..? எது சின்ன விசயம்..? இன்று இந்த வீட்டில் நடந்ததா..?” தாலி கட்டிய நாளில் இருந்து குரலைத்தான் மனைவியிடம் உயர்த்திப் பேசி இருக்கிறார்.. அதுவும் கணவன் என்ற ஆளுமையை நிலை நாட்ட.. அவளை அவமரியாதை செய்ய அல்ல.. ஊரில் மதிக்கப்படும் முதல் மரியாதை பெறும் மூத்த பெண்மணி.. அவளை மதிக்கும் பண்பாடு தெரியாவிட்டாலும் பரவாயில்லை.. அவமானப்படுத்துவதா..? மனிதரை மனிதர் அவமரியாதை செய்வதா..? துரைசிங்கம் தன் பண்ணை ஆள்களை கண்டிப்பார்.. அவமதிக்க மாட்டார்.. முதன் முதலாய் தன் தேர்வு பற்றிய சந்தேகம் எழுந்தது..

‘தவறு செய்கிறேனே..?’ தன்னைத்தானே கேட்டுக் கொண்டார் துரைசிங்கம்.. மேனகாவைப் பார்த்து..

“இது சின்ன விசயம் இல்லை அம்மா.. நந்து தன் அம்மாவின் மேல் உயிரை வைத்திருப்பவன்.. என் பெண்டாட்டி மேல் நானும் உயிராய் இருப்பவன்தான்.. இன்று நடந்ததே கடைசியாய் இருக்கட்டும்.. இனி ஒருமுறை இப்படி நடக்கக்கூடாது..”

“ஆனால் அங்கிள்.. என் மேல் தவறில்லையே..”

“உன் மேல்தான்ம்மா தப்பு.. இதை மதியமே சொல்லியிருந்தால் இன்னும் பிரச்னை பெரிதாகியிருக்கும்.. அதனால்தான் சொல்லவில்லை..”

“அங்கிள் நீங்கள்கூட என்னைப் புரிந்து கொள்ள வில்லையா..?”

“அதிகம் புரிந்து கொள்ளக்கூடாதுன்னுதான் நினைக்கிறேன்.. போம்மா போய் கீழே ராக்காயி சாப்பாடு போடுவாள் சாப்பிடு..”

துரைசிங்கம் பேச்சை துடிண்டித்துக் கொண்டு கீழிறங்க மாடிப் படியின் கீழ் நின்று கொண்டு அவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த சோலையம்மாளின் கண்கலங்கியது… கீழே இறங்கிய துரைசிங்கம் மனைவியைப் பார்த்ததும் தடுமாறிப் போனார்… புதுமனைவியிடம் பேசும் கணவன் போல் முகம் பார்க்கக் கூச்சப்பட்டுக் கொண்டு,

“எங்கே போறவ..?” என்றார்..

சோலையம்மாள் முறுக்கிக் கொண்டாள்..

“ஏன் பார்த்தால் தெரியலையாக்கும்.. என் மகனுக்கு பலகாரம் கொண்டு போறேன்..”

“மகனுக்கு மட்டும்தான் சாப்பாடு போடுவியா.. புருசனுக்கு போடமாட்டியா..?”

“புருசனுக்குத்தான் புத்தி கெட்டுப் போச்சே..”

“அதுக்காக என்னை வெறுத்துருவியாடி.. காலையிலிருந்து பல்லில் பச்சைத் தண்ணி படாமல் பட்டினிகிடக்கிறேன்.. இப்படி நடக்குமின்னு கனவா கண்டேன்..? ஜமீன் வம்சம்ன்னு ஆளாப் பறந்துட்டேன்.. அதுக்காக நம்ம மரியாதையை விட்டு விடுவேனாடி..”

“ஆத்தாடி.. நீங்க இன்னும் சாப்பிடலையா.. பெருமாளே.. எனக்குத் தெரியாமல் போயிருச்சே.. வாங்க முதலில் உங்களுக்கு பலகாரம் போடறேன்..”

“ஏய்ய்.. போடி.. முதலில் நம்ம பிள்ளை வயிறை நிரப்பு.. அப்புறம் என்னைக் கவனிக்கலாம்..”

“அடேங்கப்பா.. பிள்ளை மேல் கரிசனம் பொங்குது.. இன்னைக்கு என்ன புதுசா ஞானம் வந்திருச்சோ..” சோலையம்மாள் கிண்டலடிக்க,

“அவன் அப்பனுக்கே பாடம் சொல்கிற சுப்பையன்டி.. அவன் அருமை எனக்குத் தெரியாதா என்ன..?” என்றார் துரைசிங்கம் பெருமையாய்..

“சரிசரி போய் குளிச்சிட்டு சாப்பாட்டு மேஜைக்கு வாங்க.. நான் அதுக்குள்ளே மகனை சாப்பிட வைத்து விட்டு வந்திடறேன்..”

சோலையம்மாள் மாடியேறிச் சென்றபோது கணவன், மனைவி உரையாடலை கேட்டுக் கொண்டு நின்றிருந்த மேனகாவைப் பார்த்தாள்.. அவள் விழிகளில் அரு வெறுப்பு படர்ந்தது..

‘தூ.. என்ன ஜென்மம் இது.. புருசன், பெண்டாட்டி பேசுவதை ஒட்டுக் கேட்டுக்கொண்டு..’ வெறுப்பை உமிழ்ந்த பார்வை பார்த்தபடி மகனின் அறைக் கதவைத் திறந்து கொண்டு அவள் உள்ளே போய்விட மேனகா அடிபட்ட புலியாய் நின்றாள்..

மேனகா அழகி.. சாதாரண அழகியல்ல.. அப்சரஸ் போன்ற அழகு.. ராஜ வம்சத்தால் அரசி போன்ற கம்பீரம் பெற்றவள்.. வெளிநாட்டுப் படிப்பு தந்த மினுமினுப்பு.. கோடிக்கணக்கில் பணம்… அவளது கடைக்கண் பார்வைக்காக சென்னையின் மேல்தட்டு வாலிபர்கள் துடித்துக் கொண்டிருக்க அவள் இந்தப் பட்டிக்காட்டு பாமரப் பெண்மணியிடம் தோற்றுப் போவதா..?

நந்தகுமாரன் மேல் கொண்ட காதல் தன்னை எந்த நிலைக்கு தாழ்த்துகிறது என்று தன்னையே கேள்வி கேட்டுக் கொண்டவள் யோசித்தாள்.. நிச்சயம் நந்தகுமாரன் அவளுக்குக் கிடைக்க மாட்டான்.. கிடைத்தாலும் இந்த அழுக்குப் பிடித்த கிராமத்தைவிட்டு இந்த பழைய கால புராதன வீட்டை விட்டு முக்கியமாய் சூனியக்காரி.. (!) போலிருக்கும் அவனது தாயை விட்டு மேனகாவின் பின்னால் வரமாட்டான்.. வெளிநாட்டில் செட்டில் ஆகும் முடிவிலிருந்த மேனகாவால் இந்தக் கிராமத்தில் அடைபட முடியுமா..? முடியாது என்று முடிவெடுத்தாள் அவள்..

‘சீச்சி இந்தப் பழம் புளிக்கும்..’ என்று நரியின் மன நிலைதான் மேனகாவுக்கு.. ஆனால் தோல்வியை ஒப்புக்கொள்ள அவளுக்கு மனமில்லை.. தன் மனம் போல் அடக்கி ஆள முடியாத நந்தகுமாரனைப் பழிவாங்க வேண்டுமென்ற வெறி கிளர்ந்தது..

தன் காதலை மதிக்காத நந்தகுமாரனுக்கு அவன் காதலி கிடைக்கக் கூடாது.. தனக்குக் கிடைக்காத.. இந்த கோடீஸ்வரிக்கு கிடைக்காத நந்தகுமாரன் சாதாரண அரசு குமாஸ்தாவான மைதிலிக்குக் கிடைக்கக் கூடாது..

அன்று இரவு முழுவதும் மேனகா யோசித்தாள்.. அவள் கனவுகளில் எல்லாம் மைதிலியும், நந்தகுமாரனும் இணைந்து வர தூக்கம் தொலைத்து யோசித்தாள்.. விடியலில் ஒரு முடிவை எடுத்தாள்..

0Shares

Reviews — Kadalin Pon Vethiyle / காதலின் பொன் வீதியிலே

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link