Chapter 17
“ஏம்மா நீ சைவமாச்சே அசைவம் எப்படிப் பரிமாறுவ..?”
“இட்லி வைக்கிறேன், தண்ணீர் ஊற்றுகிறேன்.. சரிதானே..”
சேலையை தூக்கிச் செருகி முந்தானையை இழுத்துச் செருகி நீண்ட பின்னல் சுழன்றாட அவள் பரிமாற சோலையம்மாள் வறுவலை மட்டும் வைத்துக் கொண்டு வந்தாள்.. நந்தகுமாரன் இலையருகில் மைதிலி வந்த போது அவன் விழியும் அவள் விழியும் கலக்க அவளது கன்னங்களில் செம்மையேறியது.. அதை ஜாடையாய் சோலையம்மாளும் கவனித்தாள்.. அவளது உள்ளத்தில் ஐயம் எழுந்தது.. அதன் விளைவாய் மைதிலியின் மேல் அவளுக்கு ஈர்ப்பு கூடியது..
பந்தி முடிந்து அவர்கள் அனைவரும் முன்புறம் சென்றுவிட சோலையம்மாள் மைதிலியுடன் சாப்பிட அமர்ந்தாள்.. மைதிலி சோலையம்மாளுக்குப் பரிமாற முனைய,
“உட்காரும்மா.. எல்லாப் பாத்திரமும் கைக்கு எட்டுவது மாதிரி தானே இருக்கு.. நாம போட்டுச் சாப்பிட்டுக்கலாம்..” என்ற சோலையம்மாள் தன் இலையில் இட்லிகளை வைத்துச் சட்னி, சாம்பாரை ஊற்றிக் கொண்டாள்..
“நீங்க அசைவம் போட்டுக்கலையா..”
“ஏம்மா.. நீ சாப்பிடாதபோது நான் மட்டும் சாப்பிடலாமா..?”
“அடடா.. நான் தனியாகச் சாப்பிட்டுக் கொள்கிறேன்.. நீங்க உங்களுக்குப் பிடிச்சதைச் சாப்பிட முடியாமல் பண்ணி விட்டேனே..”
மைதிலி எழ முயல சோலையம்மாள் அவள் கை பிடித்து உட்கார வைத்தாள்..
“நான் சாப்பிடாத அசைவ சாப்பாடா..? அது எனக்குப் பிடிச்சது இல்லம்மா.. நான் தனியா உட்கார்ந்து சாப்பிடுவேன்னு என் கூட உட்கார்நது நீ சாப்பிடுற பாரு.. இதுதான் கண்ணு எனக்குப் பிடிச்ச சாப்பாடு.. இது வரைக்கும் இவ்வளவு ருசியான சாப்பாட்டை நான் சாப்பிட்டதில்லைம்மா..”
மைதிலி பேச்சிழந்து போனாள்.. சோலையம்மாளின் முகம் பார்த்துக் கொண்டே இட்லியைப் பிட்டு வாயில் போட்டுக் கொண்டாள்..
சாப்பிட்டு முடித்தவுடன் அவர்கள் வீட்டின் முன்கட்டுக்குச் செல்ல “இதோ மைதிலி வந்தாகி விட்டது.. கிளம்பலாமா..” என்றாள் சுமதி..
“எங்கே..” என்றாள் மைதிலி..
“கோவிலுக்குத்தான்..” என்று அவள் கூற மைதிலி பாத்திமாவையும் டேவிட்டையும் பார்த்தாள்..
“நாங்க நந்தகுமாரனோடு கோவில் கடைகளைச் சுற்றிப் பார்ப்போம்.. வாங்க வாங்க போகலாம்..” என்றான் டேவிட்..
“நீங்களும் வாங்க..” என்றாள் மைதிலி சோலையம்மாளிடம்,
“நானா.. இங்கே சமையலை யார் பார்த்துக் கொள்வது..” என்று அவள் கேட்க,
“எல்லாம் செங்கமலம் பார்த்துக் கொள்வாள்.. வாங்கம்மா..” என்றான் நந்தகுமாரன்..
சோலையம்மாள் வாய் நிறைய சிரிப்போடு அவர்களோடு கிளம்பினாள்.. வழியில் அனைவரும் செட்டு, செட்டாகப் பிரிந்து பேசிக் கொண்டு செல்ல மைதிலி ஒட்டுப்புல்லாய் சோலையம்மாளுடன் ஒட்டிக் கொண்டாள்.. தாயுடன் பேசியவாறு வருவது போல் நந்தகுமாரன் அவர்களுடன் இணைந்து நடந்தான்.. நடுவில் மைதிலியை விட்டு அவனது வலது புறம் சோலையம்மாள் வர இடது புறம் இயல்பாய் நந்தகுமாரன் ஜோடி சேர்ந்து கொண்டான். வழியில் வெளியூரிலிருந்து வந்திருந்த உறவினர் பெண்மணி ஒருத்தி..
“என்ன அண்ணி சௌக்கியமா..?” என்று விசாரித்தாள்.
“ஆமாம் வடிவு.. நீ எப்போ வந்தே..” என்று சோலையம்மாள் நின்று விசாரிக்க மைதிலியும் நந்தகுமாரனும் தேங்கி நின்றனர்..
“நான் வந்து ஒரு மணி நேரம்தான் ஆகுது.. சிங்கப்பூருக்கு பிழைக்கப் போனால் உறவு முறை இல்லைன்னு ஆகிவிடுமா..? மகனுக்கு அழகு போல் பொண்ணைக் கல்யாணம் பண்ணியிருக்கீங்க.. எனக்கு ஒரு பத்திரிக்கை அனுப்பலையே..” என்று வடிவு குறைபட மைதிலி வெட்கிப் போனாள்.. நந்தகுமாரன் தாயை மறந்து அவளை ரசனையாய் நோக்க,
“நீங்க ரெண்டு பேரும் நடங்கப்பா.. நான் இந்தாவரேன்..” என்று அவர்களை முன்னே நடக்கவிட்டு பின்னால் அவர்கள் ஜோடிப் பொருத்தத்தைப் பார்த்து பூரித்துப் போனவள் அவர்கள் செவியில் விழாதவாறு..
“இன்னும் நடக்கலை வடிவு.. முதல் பத்திரிக்கை உனக்குத்தான்..” என்றாள்..
“அடி ஆத்தாடி.. அப்படிப் போகுதா கதை..” என்று வடிவு கன்னத்தில் கை வைக்க சோலையம்மாள் மகிழ்வுடன் நடந்த அதே நேரம் முன்னால் சென்று கொண்டிருந்த நந்தகுமாரன்.
“என்னடி.. மாமியாரை வந்தவுடனே கைக்குள் போட்டுக்கிட்ட..” என்றான்..
“ஸ்ஸ்.. என்ன பேச்சு இது.. உங்க அம்மாவை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு தெரியுமா..”
“அப்பா.. ஒரு கவலை விட்டது..” என்று அவன் சிரித்தான்.. அதற்குள் சோலையம்மாள் வந்துவிட அவர்கள் கோவிலுக்குள் சென்றனர்..
நந்தகுமாரன், டேவிட், பாத்திமாவுடன் இணைந்து கோவில் வாசலில் நின்று விட சோலையம்மாள், மைதிலியுடன் கோவிலினுள் சென்றாள்.. அர்ச்சனை முடிந்து கோவில் பிரகாரத்தில் அமர்ந்தவள்,
“ஏம்மா சாமி கும்பிடும்போது சுலோகம் சொன்னியே கடவுள் பக்தி அதிகமா..?” என்று கேட்டாள்..
“மூச்சுக் காற்றை அதிகமா இழுக்கறியா.. குறைவா இழுக்கறியான்னு கேட்டால் எப்படிப் பதில் சொல்வது..?” என்றான் மைதிலி..
“என் பையன் கடவுளே இல்லைம்பான்..”
“நான் கடவுளில்லாமல் எதுவுமே இல்லைம்பேன்..”
“அவன் நாத்திகம் பேசறவன்ம்மா..”
“நான் ஆன்மிகமே உலகம்ன்னு வாழ்கிறவள்..”
“அப்புறம் எப்படி ரெண்டு பேரும் பிரியப்பட்டீங்க..”
“அத்தை..” என்று திகைத்துப் போனாள் மைதிலி..
“அத்தைதானம்மா.. அப்படியே வாய் நிறையக் கூப்பிடு.. நான் பெரிய வீட்டுக்காரி.. நாலு நியாயம் சொல்ல வேண்டியவ.. கண் பார்த்து விசயத்தைச் சொல்லிப் புடுவேன்.. வரும்போது வடிவு கேட்டாளே.. இதுதான் உன் மருமகளான்னு நீ ஆத்திரப்படாமல் வெட்கப்பட்டாயே.. அப்போது தெரியாதாம்மா எனக்கு..?”
“அத்தை.. பெரியவங்களை மீறி நான் எதுவும் செய்ய மாட்டேன்..”
“பெரியவங்களா நானும், நந்துவோட அப்பாவும் உன்னையும், நந்தவையும் சேர்த்துத்தான் வைப்போம்.. பிரிக்க மாட்டோம்..”
“மாமா.. ரொம்பக் கோபக்காரர்.. என்று..” என்று மைதிலி திணறினாள்..
“கோபக்காரர்தான்.. ஜாதி பார்க்கிறவர்தான்… ஆனா பெண்டாட்டி, பிள்ளை மேல உயிரானவர்.. நான் பார்த்துக்கிறேன்.. நீ பயப்படாதே.. உன் வீட்டில் சொல்லி விட்டாயாம்மா..”
“இல்லை அத்தை.. அவங்கதான் ரொம்ப ஜாதி பார்ப்பாங்க..”
“பார்த்தால் பார்க்கட்டும்.. அம்மாடி.. கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்.. நான் வந்து பொண்ணு கேட்கிறேன்.. நீ கவலைப்படாதே..”
அவர்கள் நெடு நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்.. மற்றவர்கள் வந்துவிட எழுந்து வீட்டுக்கு வந்தனர்.. மதிய உணவு முடிந்து அவர்கள் இளைப்பாற மாடிக்குப் போக, பின்புறத் தோட்டத்திற்குப் போனாள் மைதிலி.. மாமரத்தில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் அமர்ந்து கொள்ள திடீரென்று ஊஞ்சல் ஆடவும் பயந்து போய் ‘வீல்’ என்று அலறப் போனாள்..
“ஷ்ஷ்.. கத்தாதே நான்தான்..” என்றான் நந்தகுமாரன்..
“இது என்ன விளையாட்டு நான் பயந்தே போனேன்..”
“அம்மாவுக்கு வேப்பிலை அடிச்சிட்ட போல.. ‘இருடா.. உன் முதுகில் நாலு போடறேன் படவா.. இத்தனை நாளா என்கிட்ட மறைத்து வைத்தாயான்னு மிரட்டுகிறாங்க..'”
“ம்ம்..” என்றாள் மைதிலி கட்டை விரலால் நிலத்தை கீறிக் கொண்டு..
“பார்த்துடி.. நகம் பேர்ந்து விடப் போகுது.. இப்ப எதுக்கு பூமியைத் தூர் வாருறே..”
“ச்சீ போங்க..” என்று சிணுங்கினாள் மைதிலி..
“அடிப்பாவி.. நீ எங்கே நிற்கிற.. நான் எங்கே நிற்கிறேன்.. நாலு அடி இடைவெளி இருக்கேடி.. நீ சிணுங்குகிறதை யாராவது கேட்டால் என்னைத் தானே தப்பா நினைப்பாங்க..” என்றபடி அவன் நெருங்க,
“இப்போ எதுக்குக் கிட்ட வருகிறீர்களாம்..” என்றாள் அவள்..
“நீ சிணுங்குவதை உண்மையாக்க..”
அவள் உதடு கடித்து முஷ்டி மடக்கி அவன் நெஞ்சில் குத்த அந்தக் கரங்களை பிடித்து அவன் அருகே இழுத்த வேகத்தில் பூமாலையாய் அவன் மேல் விழுந்தாள்.. அவன் மார்பில் அப்படியே அவள் முகம் புதைத்துக் கொண்டாள்.. அவளைச் சுற்றி வளைத்தன அவனது கரங்கள்.. அவள் கழுத்தில் இதழ் பதித்தவன் அப்படியே முகம் புதைத்துக் கொண்டான்..
மாடியிலிருந்து தன் வீடியோ கேமரா லென்ஸின் வழி அதைப் பார்த்துக் கொண்டிருந்த மேனகாவின் கண்கள் சிவந்தன..
‘அனுபவித்துக் கொள் நந்தகுமாரா.. இன்றுதான் உன் ஆட்டம்.. நாளை என் ஆட்டம் தொடங்குகிறது..’ என்று தலையை சிலுப்பிக் கொண்டாள்..
மாலை சிற்றுண்டி முடிந்து அனைவரும் விடை பெற்றுக் கொள்ள, சோலையம்மாள் மைதிலியை அணைத்து அவள் நெற்றியில் முத்தமிட்டு அனுப்பி வைத்தாள்.. பசுவைப் பிரிந்த கன்றாய் மைதிலி திருச்சிக்குத் திரும்பினாள்..
வேம்பூரின் இனிய நினைவுகள் நெஞ்சமெல்லாம் இனிப்பாய் நிறைந்து நிற்க தாய், தந்தை எதையோ கூற வந்ததைக் கவனித்தவளாய்,
“டயர்டா இருக்கும்மா.. காலையில் கேட்டுக்கறேன்..” என்றபடி தூங்கி விட்டாள்..
மறுநாள் மிகத் தாமதமாக விசாலாட்சி உலுக்கி எழுப்பியதால் எழுந்தவள், அவசரமாய் அலுவலகம் செல்லக் கிளம்பினாள்.. விசாலாட்சி எதையோ சொல்ல வர,
“நேரமாச்சும்மா.. சாயந்திரம் வந்து கேட்டுக்கிறேன்..” என்றபடி அவள் வாசலுக்கு வந்து செருப்பை மாட்ட பின்னாலேயே ஓடி வந்த விசாலாட்சி,
“ஏண்டி இன்னைக்குன்னு காலில் சக்கரம் கட்டிக் கிட்டுப் பறக்கிற.. சரிசரி.. சாயந்திரம் சீக்கிரம் வந்து விடு..” என்றாள்..
விட்டால் போதுமென்று, “சரி”யென்று தலையாட்டி விட்டு மைதிலி அலுவலகத்துக்கு ஓடினாள்.. நந்தகுமாரன் அவள் இருக்கையை கடந்து போகும்போது வழக்கமாய் சந்தித்துக் கொள்ளும் இரு ஜோடிக் கண்களிலும் ரகசியப் புன்னகை இருந்தது..
நேற்றைய நாளின் நினைவோடு உலவிக் கொண்டிருந்தவள் மாலை வீடு திரும்பினாள்..
வீட்டு வாசலில் பளபளவென்று புதிய வெளிநாட்டுக் கார்கள் இரண்டு நின்று கொண்டிருந்தன.. அவள் வருவதைப் பார்த்த பக்கத்து வீட்டுப் பெண்மணி,
“ம்ம்.. உனக்கு வந்த அதிர்ஷ்டத்தைப் பாரு..” என்று பெருமூச்சு விட்டாள்.. அவளை வினோதமாய் பார்த்தபடி வீட்டின் உள்ளே சென்ற மைதிலி திகைத்தாள்.. வரவேற்பறையில் அமர்ந்திருந்த மூவரும் திரும்பி அவளை ஏற இறங்க திருப்தியுடன் பார்த்தனர்.. மூவரில் இருவர் பெற்றவர்கள் போல் தோற்றமளிக்க அந்த இளம் வாலிபன்..
“ஹாய் மைதிலி.. வி ஆர் வெயிட்டிங் ஃபார் யு.. ஏன் லேட்..” என்றான்.. அவன் தாய்,
“ஷ்.. மிரட்டாதேடா.. என் மருமகள் பயந்து விடப் போகிறாள்..” என்றாள்.. அவனது தந்தையோ,
“வேலையில் டெடிகேசன் இருப்பது பாராட்டுக் குரியதுதான்..” என்றார்..
மைதிலி அவசரமாய் உள்ளே சென்று விசாலாட்சியிடம்,
“யாரும்மா.. அவங்க..” என்றாள்..
“உன் வருங்காலக் கணவரும், மாமனார், மாமியாரும்..” என்றாள் தாய்..
Reviews — Kadalin Pon Vethiyle / காதலின் பொன் வீதியிலே
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.