Chapter 18
விசாலாட்சியின் வார்த்தைப் பிரயோகத்தைக் கேட்டு மைதிலியின் மனம் நடுக்கமுற்றது. ‘அம்மா என்ன சொன்னாள்..?’
‘உன் வருங்காலக் கணவரும், மாமனாரும் மாமியாரும்’ என்று சொன்னாள்… சொல்லலாமா..? அப்படிச் சொல்லலாமா..? மைதிலியை அவர்களுக்குப் பிடித்திருந்தால் போதுமா..? அவளுக்கு அவர்களைப் பிடிக்க வேண்டாமா..?
இப்போதுதான் என்றில்லை.. எப்போதுமே மைதிலியைப் பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வரும்போது அவர்களுக்கு மைதிலியைப் பிடிக்க வேண்டுமே என்று தான் விசாலாட்சி கவலைப்படுவாள்.. ஓர் முறை கூட அவளுக்கு மாப்பிள்ளையைப் பிடிக்க வேண்டுமே என்று கவலைப்பட்டதில்லை..
“என்ன சொல்றீங்க அம்மா..?”
“உனக்கு விடிவு காலம் வந்து விட்டது மைதிலி.. அதிர்ஷ்டம் உன் கதவைத் தட்டுகிறது.. ராஜா போல் மாப்பிள்ளை.. பெரிய பணக்காரர்.. வீட்டுக்கு ஒரே பிள்ளை.. கட்டினால் உன்னைத் தான் கட்டுவேன்னு உன் போட்டாவைப் பார்த்து விட்டு முடிவு பண்ணிட்டாராம்..”
“என் போட்டோ அவருக்கு எப்படிக் கிடைத்தது..?”
“அப்பா கல்யாண புரோக்கர் கிட்ட கொடுத்திருந்தது எதுவாவது கிடைத்திருக்கும்.. இப்ப அதுவா முக்கியம்..? சீக்கிரம் முகம் கழுவி டிரெஸ் பண்ணிக்கிட்டு, உன் புது நகைகளை எடுத்துப் போட்டுக் கொள்.. முல்லைப்பூ.. உனக்கு பிடிக்கும்ன்னு உன் அண்ணன் சொன்னானாம்.. ஒரு பந்துப் பூ வாங்கி வந்திருக்கிறார்கள்..”
பேசிக்கொண்டே விசாலாட்சி பரபரப்பாய் காரியங்களை கவனித்துக் கொண்டு இருந்தாள்..
“தனம்.. அங்கே என்ன பண்றே..”
“ஹரிஷ்.. அழுதான் அத்தை சமாதானம் பண்ணிக் கிட்டு இருக்கேன்.. ஹரிஷ் இங்கே வந்து பார்.. உன் அத்தை வந்து விட்டாள்..”
“உன் புருசனும், மாமனாரும் எங்கே..”
‘பின் பக்கம் வாழையிலை நறுக்கப் போனார்கள்.. நான் இலை போட்டு பரிமாற ஆரம்பிக்கவா..?’
“வேண்டாம் அதை நான் பார்த்துக் கொள்கிறேன்.. இந்தப் பெண்ணைக் கொஞ்சம் அலங்காரம் பண்ணிவை..”
தனலட்சுமி மைதிலியை பார்த்த பார்வையில் பொறாமை இருந்ததோ..?
“ம்ஹூம்.. இருந்த பெண்ணுக்கு இசைந்த மாப்பிள்ளை என்பார்கள்.. உனக்கென்னம்மா.. வெளிநாட்டு படிப்பு படித்த மாப்பிள்ளை.. செல்வம் கொழிக்கிற புகுந்த வீடு.. காரும் பங்களாவுமாய் வாழப் போகிறாய்.. கல்யாணம் ஆன பின்னால் எங்களையெல்லாம் மறந்து விடாதே மைதிலி..”
மைதிலி எரிச்சல் பட்டாள்..
“அம்மா.. நான் என்ன சொன்னேன்..?”
“என்ன சொன்னாய்..?”
“இந்தப் பெண் பார்க்கும் சடங்கெல்லாம் எனக்குப் பிடிக்கவில்லைன்னு சொன்னேனா இல்லையா..?”
“ஏண்டி உனக்குப் புத்தி, கித்தி பிசகி விட்டதா..? கல்யாணத்துக்குப் பணம் சேர்த்த பின்னால் பெண் பார்க்க வரச் சொல்லுங்க.. அதுவரை வேண்டாம்ன்னுதானே சொன்னே.. இப்ப உன்னை வைரத்தால் இழைச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டுப் போக செல்வச் சீமானே வந்திருக்கிறார்.. இப்பப் போய் பினாத்திக்கிட்டு.. போ.. போய் ரெடியாகு..”
“அம்மா..” என்று மைதிலி ஏதோ சொல்ல முயல,
“மைதிலி..” என்று அழுத்தத்துடன் ஒலித்தது விசாலாட்சியின் குரல்..
“ஏன் பிடிவாதம் பிடிக்கறேன்னு நான் கேட்க மாட்டேன்.. நேற்று ஊர் பேர் தெரியாத ஒருத்தர் வீட்டு விருந்துக்குப் போக அவ்வளவு ஆர்வமாய் அலங்கரிச்சுக் கிட்டவ.. இன்றைக்கு வீடு தேடி வந்த பெரிய மனிதர் வீட்டு மாப்பிள்ளையின் முன் நிற்க அடம் பிடிக்கிறாய்ன்னா.. அதுக்கு என்ன காரணம்ன்னும் நான் கேட்க மாட்டேன்.. இது உன் அம்மாவின் உத்திரவு.. போ.. போய் இன்னும் ஐந்து நிமிசத்தில் ரெடியாகு..”
“அம்மா நான் சொல்வதைக் கொஞ்சம்..”
“கேட்க முடியாது.. இது நீ நினைத்த மாதிரி ஆடும் விஷயமல்ல.. கல்யாண விஷயம்.. உன் அப்பாவுக்கும், அண்ணனுக்கும் உன் அடம் தெரிந்தது.. கொன்று விடுவார்கள்.. உன்னையல்ல, என்னை.. பெண்ணை வளர்க்கத் தெரியாமல் வளர்த்திருக்கேன்னு..”
தனலட்சுமி குற்றவாளி போல் பார்க்க மைதிலி செயலற்றுப் போனாள்.. தன் மனம் கோணாமல் தன் தாயின் மனம் கோணாமல் அலங்கரித்துக் கொண்டு அவர்கள் முன் வந்து நின்றாள்.. அதற்குள் கிருஷ்ணமூர்த்தியும், வைத்தீஸ்வரனும் அங்கு வந்து அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தார்கள்… மைதிலியின் அழகை ஆவலுடன் விழுங்குவதைப் போல் பார்த்தன வினய்யின் விழிகள்.. எதிர்சோபாவைக் காட்டி,
“உட்காருங்கள்.. ஏன் நிற்கிறீர்கள்..” என்றான் அவன்.
“பரவாயில்லை.. எனக்குக் கஷ்டமில்லை..”
“எனக்கில்லையா கஷ்டமாக இருக்கிறது.. நீங்கள் நின்றால் என் கால் வலிக்கிறதே..”
ரங்கநாதனும் ஜானகியும் சிரித்தனர்..
“இங்கே வந்து இப்படி உட்காரும்மா..” என்று ஜானகி தன் அருகே அழைத்தாள்.. அதற்கு மேலும் மறுப்புச் சொல்ல முடியாமல் மைதிலி அவள் அருகே சென்று அமர்ந்தாள்..
“சென்னையில் மேக்-அப் முகங்களையே பார்த்த கண்களுக்கு உன் இயல்பான அழகான முகம் இதத்தைத் தருகிறது..” என்றாள் ஜானகி புன்முறுவலுடன்.
என்ன பேசுவது என்று தெரியாமல் மைதிலி தவிக்கும் போது,
“கிருஷ் நான் உங்கள் தங்கையுடன் தனியாகப் பேச வேண்டுமே..” என்றான் வினய்.. மைதிலிக்கு உயிர் வந்தது.. அவனிடம் தனியாகச் சொல்லச் சந்தர்ப்பம் கிடைக்கும் போல இருக்கிறதே.. ஆனால்..
“இது என்ன புதுப் பழக்கம்.. நம்ம குடும்பத்தில் இதெல்லாம் வழக்கமில்லையே..” என்று தடுத்தார் வைத்தீஸ்வரன்.
“அவங்க ஒருத்தரை ஒருத்தர் தெரிந்துக்க வேண்டாமா.. பேசட்டும்..” என்றார் ரங்கநாதன்.
“நான் என் பெண்டாட்டி கூட பழகிட்டா கல்யாணம் பண்ணிக்கிட்டேன்..? இல்லை என் மகன் தான் என் மருமகளைப் பற்றி தெரிந்துக்கிட்டு கல்யாணம் பண்ணிக் கிட்டானா..?” என்று வைத்தீஸ்வரன் வாதாட,
“அதைச் சொல்லு.. முதலிலேயே தெரிந்திருந்தால் உன் மாமனாருக்கு நான் கழுத்தை நீட்டியிருப்பேனா..” என்று மருமகளிடம் சலித்துக் கொண்ட விசாலாட்சி உள்ளிருந்தபடியே, “கிருஷ்ணா” என்று குரல் கொடுத்தாள்.
அந்த அழைப்பின் பொருள் புரிந்த மகன்,
“அப்பா.. கொஞ்சம் அடங்குறீங்களா..” என்று தகப்பனின் காதோரம் எச்சரித்தான்.. பின்னர் வினய்யைப் பார்த்து,
“தப்பா எடுத்துக்காதீங்க.. எங்க அப்பா அந்தக் காலமனிதர்..” என்றான்..
“அதனால்தான் அவரை எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது..” என்று வினய் கூற,
“என்னது..” என்று ஆச்சரியப்பட்டுப் போனான் கிருஷ்ணமூர்த்தி.. உள்ளே திரும்பி தாயைப் பார்க்க அவள் விழிகளிலும் வியப்பு தெறித்ததை உணர்ந்தான்.
“இந்த மனுசன் பேசின பேச்சில் மூத்த மாப்பிள்ளை மறு வீடே வேணாம்ன்னு ஓடிப் போனார்.. இந்த மாப்பிள்ளை எப்ப ஓடுவாரோன்னு நான் பயந்துகிட்டு இருக்கேன்.. இவரானா.. மாமனாரை பிடிச்சிருக்குங்கிறார்.. தனம், இதுக்காகவே உன் நாத்தனார் மாப்பிள்ளையின் காலைத் தொட்டுக் கும்பிடணும், இவர் மனிதப் பிறவியே இல்லை..”
“ஐயோ.. என்ன அத்தை.. இப்பத்தான் ஆஹா, ஓஹோன்னு புகழ்ந்தீங்க.. இப்பப் போய் இப்படிச் சொல்றீங்க..”
“அவர் தெய்வப் பிறவிம்மா..”
“அதுதானே பார்த்தேன்..”
கிருஷ்ணமூர்த்தி மைதிலியைப் பார்த்து,
“மைதிலி மாப்பிள்ளையை மொட்டை மாடிக்குக் கூட்டிக்கிட்டுப் போம்மா..” என்றான்..
“காபி, பலகாரம் இன்னும் சாப்பிடவில்லையே..” என்று உள்ளேயிருந்து விசாலாட்சி குரல் கொடுக்க,
“வந்து சாப்பிட்டுக் கொள்கிறோம்.. கமான் மைதிலி..” என்றபடி வினய் எழுந்து மாடிப்படிகளில் ஏறினான்.. மைதிலி பின் தொடர்ந்தாள்..
இதமான முன்னிரவு நேரம்.. திருச்சி மாநகரம் விளக்குப் புள்ளிகளால் ஜொலித்து.. தூரத்தில் உச்சிப் பிள்ளையார் கோவில் விளக்குத் தெரிந்தது.. சிலுசிலுவென்று காவேரி ஆற்றுக் காற்றாடித்து உடலைத் தழுவிச் சென்றது.. வினய் சிலிர்த்தான்.
“ஹௌ நைஸ்.. எனக்கு உங்கள் ஊரை ரொம்பப் பிடிச்சிருக்கு மைதிலி..” என்றவன் தொடர்ந்து.. “உங் களையும் தான்..” என்றபடி அவளை ஆழ்ந்து பார்த்தான்..
மைதிலியின் மனம் படபடத்தது.. அவனது பார்வை தன்னை துளைப்பதை உணர்ந்தாள்.. நா உலர்ந்து போனது.. தொண்டை வறண்டது.. மெதுவாய் திணறிய படி,
“நான் உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும்..” என்றாள்..
“ஒன்றென்ன.. கோடி சொல்.. கேட்கிறேன்.. அதற்கு முன் நான் ஒன்று சொல்லவா..?”
அவள் ஏறிட்டுப் பார்க்க,
“உன் விழிகள் அழகாக இருக்கின்றன மைதிலி.. உனக்கு மை விழி என்று பெயர் வைத்து இருக்கலாம்.. உன் விழிகள் மேல் இமைகள் படபடக்க நீ பார்க்கும் போது.. என் மனதைக் கொள்ளை அடிக்கிறாய்.. உன் போட்டோவைப் பார்த்ததுமே உன் விழிகள் தான் என்னைக் கவர்ந்தன தெரியுமா..” என்று அவன் கூறிக் கொண்டிருக்கையில் மைதிலி இடைமறித்தாள்..
“என் போட்டோ உங்களுக்கு எப்படிக் கிடைத்தது..?”
“மேனகா அனுப்பினாள்.. உன்னைத் தெரியுமென்று சொன்னாளே..”
“அவள் உங்களுக்குத் தெரிந்தவளா..” மைதிலி கலங்கிப் போனாள்.. கடைசியில் மேனகா செய்த வேலையா இது..?
“எஸ்.. வி ஆர்.. கிளாஸ்மேட்ஸ் ஃபாரினில் ஒன்றாகப் படித்தோம்.. என் பிரண்ட்..”
“வினய் சார்.. உங்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.. நீங்கள் ஒரு உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும்..” என்று மைதிலி அவசரமாய் கூறிக் கொண்டிருந்தபோது,
“ஹாய் வினய்..” என்ற குரல் கேட்டது.. இருவரும் திரும்பிப் பார்த்தனர்.. கையில் செல்போனுடன் மேனகா நின்றிருந்தாள்.. அவர்கள் இருவரின் அருகேயும் வந்தவள்,
“என்ன வினய்.. உங்கள் வருங்கால மனைவி மைதிலிகிட்டப் பேசினால் நேரம் போவதே தெரியாதா.. கீழே நீங்கள் சாப்பிட வரவில்லைன்னு உங்கள் மாமியார் தவிக்கிறாங்க.. இதோ உங்கள் மைத்துனனே தேடி வந்து விட்டாரே..” என்று கூற.. கிருஷ்ணமூர்த்தி மாடிக்கு வந்தான்..
“வாங்க மாப்பிள்ளை.. சாப்பிட்டு விடலாம்..” என அவன் அழைக்க..
“கிருஷ்ணன் சார்.. ஒரு நிமிசம்..” என்று அவனிடம் ஏதோ பேச ஆரம்பித்த மேனகா தன் கையிலிருந்த செல்போனை மைதிலியிடம் கொடுத்து..
“நம்ம பிரண்டுதான்.. நந்தாவாம்.. பேசு..” என்றவாறு கிருஷ்ணமூர்த்தியிடம் திரும்பி, “வினய்.. உங்கள் வீட்டு மாப்பிள்ளையாக வருவதற்கு நான்தான் முக்கிய காரணம் தெரியுமா..” என்று கூறிக் கொண்டிருந்தாள்..
நடுங்கும் கைகளால் செல்போனை வாங்கிய மைதிலி அது தொடர்பில் இருந்ததைக் கவனித்தாள்.. காதில் வைத்தாள்.. “ஹலோ” என்றாள்..
“கேட்டேன்டி.. எல்லாம் கேட்டேன்.. போனை ஆன் பண்ணுகிறேன்.. உன் மைதிலியை மணக்கப் போகிறவனின் குரலைக் கேள் என்று பத்து நிமிடத்திற்கு முன்னாலேயே ‘ஆன்’ பண்ணி வைத்து விட்டாள் மேனகா.. நீ மொட்டை மாடியில் அவன் கூடத் தனியாக நின்று பேசிக் கொண்டிருக்கிறாயா.. நேற்று என்னுடன் மாமரத்தின் கீழ் காதல் சல்லாபம்.. இன்று மற்றொருவன் முன்னால் மணப்பெண் கோலம்.. மேனகா சொன்னபோது சவால் விட்டேனடி.. என் மைதிலி மற்றவன் முன் பெண் பார்க்க என்று நிற்க மாட்டாள் என்று.. நீ மொட்டை மாடிக்கே அவனுடன் கொஞ்சப் போய் விட்டாயேடி..”
சீறிப் பாய்ந்தன நந்தகுமாரனின் சொற்கள்.. மைதிலிக்கு கண் இருண்டது..
Reviews — Kadalin Pon Vethiyle / காதலின் பொன் வீதியிலே
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.