Chapter 19

0Shares

மேனகா கலகலவென்று நகைத்துக் கொண்டே மைதிலியைப் பார்த்து, “என்ன பேசிவிட்டாயா..?” என்றபடி போனை வாங்கித் திரும்பவும் கால் பண்ணி ‘ஆன்’ நிலையிலேயே வைத்தாள்.. அவளையே கவனித்துக் கொண்டு இருந்த மைதிலி செய்வது அறியாது தவித்தாள்..

“கீழே போவோமா..” என்று வினய் வினவ மைதிலி தயங்கினாள்..

“வினய்.. அதற்குள் என்ன சொக்குப்பொடி போட்டாய்.. இன்னும் உன்னுடன் தனியாகப் பேச மைதிலிக்கு விருப்பமாமே.. கீழே வரமாட்டாளாமா..” என்று மேனகா சிரிக்க வினய் கனிந்து போனான்..

மைதிலியைப் பார்த்து,

“இன்னும் கொஞ்ச நேரம் இங்கேயே இருக்கலாமா..” என்று மென்மையான குரலில் வினவினான்.

மைதிலிக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.. ‘சரி’ என்று கூறினால் அவனுடன் பேச தனிமை கிடைக்கும்.. தனிமை கிடைத்தால் உண்மையைச் சொல்லி விடலாம்.. வினய் நல்லவன்.. அவள் வாழ்க்கையில் குறுக்கிடாமல் விலகிப் போய் விடுவான்.. ஆனால்.. மேனகாவின் போனில் வழி நந்தகுமாரன் இதைக் கேட்டால் அவளை வெறுத்து விடுவான்..

இருதலைக் கொள்ளி எறும்பின் நிலை என்றால் இதுதானா..?

மைதிலி வெறுமையாய் வினய்யை நோக்கி ‘இல்லை’ என்பதாய் தலை அசைத்தாள்.. விர்ரென்று படிகளில் இறங்கி மறைந்தாள்.. வினய்யின் பார்வை அவளைத் தொடர மேனகா, “வினய்ய்..” என்று சிரித்தாள்..

“அவளுக்கு எவ்வளவு வெட்கம் பார்த்தாயா.. ஆமாம் உன் காதலை அவளிடம் சொல்லிவிட்டாயா..?”

“ம்ம்.. சொல்லிவிட்டேன்..”

“அவ என்ன சொன்னாள் வினய்.. கிருஷ்ணன், தவறாய் எடுத்துக் கொள்ளாதீர்கள்.. வினய் என் குளோஸ் பிரெண்ட்..”

“நான் தவறாய் எடுத்துக் கொள்ளவில்லை.. நீங்க பேசிவிட்டுக் கீழே வாங்க.. நான் முன்னால் போகிறேன்..”

நாசுக்காய் அவன் கீழே சென்றுவிட மேனகா தூண்டினாள்..

“சொல்லு வினய்.. நீ என்ன சொன்னாய்.. அவள் என்ன சொன்னாள்..”

வினய்யின் பதிலுக்காக செல்போனின் வழி கேட்டுக் கொண்டிருந்த நந்தகுமாரன் துடித்துக் கொண்டிருந்தான்.

“அவளைப் போட்டோவில் பார்த்த மறுகணமே எனக்குப் பிடித்து விட்டதுன்னு சொன்னேன்.. அவள் உங்களிடம் நானும் இதே போல் நிறையச் சொல்ல வேண்டும் என்றாள்.. அதற்குள் நீ வந்து விட்டாயே..”

மைதிலி எதற்காக தன்னிடம் பேச விரும்பினால் என்று அறியாத வினய் வெகுளியாய் கூற அதை வினயமாய் நந்தகுமாரன் எடுத்துக் கொண்டான்.. இன்னும் என்ன நடக்கப் போகிறது என்பதை அறிய செல்போனுடன் காதை ஒட்ட வைத்துக் கொண்டான்.. மேனகா செல்போனை அணைக்கவில்லை..

“வா வினய்.. கீழே போகலாம்..”

கீழே இறங்கி வந்தனர்.. சாப்பாட்டு மேஜையில் அனைவரும் அமர,

“இந்தப் பொண்ணு யாருன்னு சொல்ல வில்லையே..” என்றார் வைத்தீஸ்வரன்..

“மேனகா.. எங்க சிநேகிதர் வீட்டுப் பொண்ணு.. வினய்யோடு ஒன்றா படிச்ச பொண்ணு.. உங்க பொண்ணு.. மைதிலியைப் பற்றி மேனகாதான் எங்களுக்குச் சொன்னது..” என்று ஜானகி கூறினாள்..

“அப்படியாம்மா.. எங்க மைதிலியைப் பற்றி உனக்கு எப்படித் தெரியும்..?” என்று வைத்தீஸ்வரன் கேட்க,

“இப்போ அதுவா முக்கியம்.. பிரண்டா இருக்கும்..” என்றான் கிருஷ்ணமூர்த்தி..

“அப்புறம் மிஸ்டர் வைத்தீஸ்வரன்.. எப்போ கல்யாணத்தை வைத்துக் கொள்ளலாம்..” என்று ரங்கநாதன் கேட்டார்.

“அது.. முதலில் சாப்பிட்டு விட்டுப் பேசலாமே அண்ணா..” என்றாள் விசாலாட்சி..

“அதுவும் சரிதான்..” என்றாள் ஜானகி..

“சாப்பிட்டாச்சு.. இப்ப பேசலாமா..?” என்றான் வினய்.

“வினய்க்கு அவசரம்..” என்று சிரித்தாள் மேனகா..

“சொல்லுங்க வைத்தீஸ்வரன்.. இந்த மாதக் கடைசியில் நல்ல முகூர்த்த நாள் இருக்குது.. அதையே குறித்து விடுவோமா..?” என்று ரங்கநாதன் கேட்க,

“அவ்வளவு கிட்டத்திலா.. இன்னும் பத்து நாள்கள் கூட இல்லையே..” என்று விசாலாட்சி கைபிசைந்தாள்..

“டோன்ட் ஒர்ரி.. ஆன்ட்டி.. நாளைக்கே கல்யாணம் என்றாலும் நாங்கள் ஜமாய்த்து விடுவோம்..” என்றான் வினய்..

“பொண்ணுக்கு சீர் நகைன்னு..”

“பெண்ணை நீங்க கொடுங்க.. சீர், நகையை நாங்க கொடுக்கிறோம்..”

“நீங்க பெரிய இடம்.. நாங்க சாதாரண மனுசர்கள்..”

“அதனால் என்ன..?”

“இருந்தாலும் கல்யாணத்துக்கு எங்க பக்கத்திலிருந்து..”

“எதுவுமே செய்ய வேண்டாம்.. பெண்ணைக்கூட்டி வர கார் அனுப்புகிறோம்.. வந்து விடுங்கள்.. அப்புறம் உங்கள் பக்கத்துக்கு ஆயிரம் இன்விடேசன் போதுமா..?”

“ஐநூறே அதிகம்..”

“நாளைக்கே தபாலில் அனுப்பி விடுகிறோம்..”

அவர்கள் விடைபெற்றுக் கிளம்பும்போது மைதிலியை அழைத்தார்கள்..

“மைதிலி போய் வருகிறோம்மா..” என்று ரங்கநாதனும் ஜானகியும் விடைபெற,

“மைதிலி உன் போன் நம்பர் ப்ளீஸ்..” என்றான் வினய்.

மைதிலி உயிர் பெற்றாள்.. அவசரமாய் தன் போன் நம்பரைச் சொன்னாள்..

அதை உணர்ந்த வினய் மகிழ்ந்து போனான்.. தன் கூட பேச அவ்வளவு ஆசையா என்று கண்களால் அவளை வினவ மைதிலி ‘இது என்னடா புது துன்பம்..?’ என்று துயருற்றாள்.. வினய்யின் கார் கிளம்பிப் போக மேனகாவும்,

“ஓகே.. பை..” என்று விடைபெற்று தன் காரில் கிளம்பினாள்.. சிறிது தூரம் சென்றதும் காரை நிறுத்தியவள் தன் செல்போனை காதில் வைத்து,

“குமார்.. கேட்டீர்களா.. உங்கள் மைதிலி வினய்க்கு போன் நம்பரைக் கொடுத்த வேகத்தைக் கேட்டீர்களா..”  என்றாள்..

“மேனகா.. நீ எதையோ செய்கிறாய் என்று நினைத்தேன்.. இந்தக் கல்யாண புரோக்கர் வேலையைச் செய்வாய் என்று நினைக்கவில்லை..”

“நினைத்திருக்க வேண்டும் குமார்.. நான் எதையும் செய்வேன்..”

“அதுதான் தெரிகிறதே.. பாதகி.. நீயும் ஒரு பெண்தானே..”

“அதனால்தான் இன்னொரு பெண்ணுக்கு வளமான வாழ்க்கையை அமைத்துக் கொடுத்திருக்கிறேன்.. மைதிலி கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டாள்.. இப்படி ஒரு மேல் தட்டு வாழ்க்கை அவளுக்குக் கிடைக்குமென்று..”

“என் மைதிலி பணத்தைப் பார்த்து மயங்க மாட்டாள்..”

“அப்படியா.. வினய் எவ்வளவு பணக்காரன் தெரியுமா குமார்.. உங்களைப் போல் நூறு மடங்கு வசதியானவன்..”

“அவர்கள் வீட்டை இதில் இழுத்து விட்டாயே.. உன்னை..”

“குமார்.. அவர்கள் வீட்டில் இனம் பார்ப்பார்கள்.. மைதிலியின் பெற்றார் பணத்துக்காக இந்தத் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை.. வினய்யும் அவர்களும் ஒரே இனம்.. இப்போது புரிந்ததா..”

“நான் மைதிலியை விட்டுக் கொடுக்க மாட்டேன்..”

“அவர்கள் குடும்பத்திலும் அவளை விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.. உங்களுக்கு உங்கள் காதலில் உறுதி இருந்தால் ஏன் கவலைப்பட வேண்டும்.. மைதிலி உண்மையிலேயே உங்களைக் காதலித்தால் வீட்டை எதிர்த்துப் போராடட்டுமே.. நான் என்ன அவளைத் தடுக்கவா போகிறேன்..”

நந்தகுமாரன் செல்லை அணைத்து விட்டான்.. மேனகா உற்சாகமாய் வேம்பூரை நோக்கிக் காரைச் செலுத்தினாள்..

அவள் வீட்டுக்குள் சென்றபோது துரைசிங்கம் சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்.. சோலையம்மாள் பரிமாறிக் கொண்டிருந்தாள்..

“வாம்மா.. மேனகா.. சாப்பிடலாம் வா..” என்றார் துரைசிங்கம் அன்பாக..

“நான் சாப்பிட்டு விட்டேன் அங்கிள்.. உங்களிடம் இங்கு என் நண்பன் ஒருவன் வந்து தங்கலாமான்னு கேட்டேன் இல்லையா.. அவனும் அவன் பேரண்ட்ஸும் அவனுக்குப் பெண் பார்க்க திருச்சிக்கு வந்திருந்தனர்.. பெண் வீட்டிலேயே சாப்பிட்டு விட்டேன்.. அப்புறம் அங்கிள்.. அந்தப் பெண் கூட உங்களுக்குத் தெரிந்த பெண்தான்..” என்றாள் மேனகா சோலையம்மாளைப் பார்த்தபடி.

“யாரும்மா அது..?” என்று துரைசிங்கம் ஆச்சர்யமாய் வினவ,

“மைதிலி அங்கிள்.. நேற்று இங்கு வந்திருந்ததே.. அந்தப் பெண்தான்..”

மேனகாவின் பதில் கேட்ட சோலையம்மாள் கையிலிருந்த பாத்திரத்தை நழுவ விட்டாள்..

திருச்சியில் மைதிலியின் வீட்டில் குடும்பத்தினர் கூட இருந்தனர்.. மைதிலி குற்றவாளியாய் நின்று கொண்டிருந்தாள்.. மேனகா கிருஷ்ணமூர்த்தியை தனியாக அழைத்து மைதிலியின் காதல் விவகாரத்தைப் போட்டு உடைத்து விட்டுச் சென்றிருந்தாள்… கிருஷ்ணமூர்த்தி அனைவரையும் அழைத்து விசயத்தைக் கூற வைத்தீஸ்வரன் கொதித்துப் போனார்.. சும்மாவே ஆடுபவர் பேச விஷயம் கிடைத்தால் விட்டு விடுவாரா..?

“எல்லாம் இவ கொடுக்கிற செல்லம்.. என்ன நினைச்சுக்கிட்டு இருக்காடி உன் பொண்ணு.. இந்த வைத்தீஸ்வரன் பரம்பரையைப் பற்றித் தெரியுமா அவளுக்கு..”

வேறு நேரமாயிருந்தால் ‘எனக்குத் தெரியாதா உங்கள் பரம்பரையைப் பற்றி என்று கேட்டிருப்பாள் விசாலாட்சி..’ ஆனால் இது அவள் பேசும் நேரமல்ல..

“வைத்தீஸ்வரன் பெத்த பொண்ணு ஜாதி விட்டு ஜாதி கல்யாணம் பண்ணினால் என் மரியாதை என்ன ஆகிறது..? நாளை பின்னே இந்தத் தெருவில் நான் நெஞ்சை நிமிர்த்தி நடக்க முடியுமா..?”

“இப்ப நீங்க நெஞ்சை நிமிர்த்தி நடக்கிறதுதான் பிரச்னையா..? என் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டிருக்காள்.. அதை என்னன்னு கேட்டீங்களா.. சொந்தக்காரன், பந்தக்காரன்னு..” விசாலாட்சி சீறினாள்..

“என்னத்தைடி அவகிட்ட பேசறது.. அவகாலை ஒடித்து வீட்டுக்குள் போடுகிறேன்.. கல்யாணம் முடிகிற வரைக்கும் வாசல் பக்கம் கூட எட்டிப் பார்க்கக் கூடாது.. அதை விட்டு விட்டு.. அவகூட பேச்சு வார்த்தை நடத்தணுமா..?”

“இருப்பாங்கப்பா.. மைதிலி இங்கே வா.. நீ படிச்ச பொண்ணு.. புத்திசாலிப் பொண்ணுன்னு நினைத்தேன்.. இப்படிக் காதல் கத்தரிக்காய்ன்னு செய்துகிட்டயே..”

“அண்ணா அவரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டால் என் வாழ்க்கை நல்லாயிருக்கும்ன்னு தோணுது அண்ணா..”

“தோணினதையெல்லாம் செய்துவிட முடியாதும்மா.. இது குடும்பம்.. உன் வாழ்க்கை உன்னோடு முடிவதில்லை.. மற்றவரையும் பாதிக்கும்.. நான் காதல் கல்யாணம் செய்திருந்தால் சாவித்திரியை பெண் கேட்டு யாரும் வந்திருக்க மாட்டார்கள்.. நாளை சாவித்திரி அவள் வீட்டில் மதிப்பாய் வாழணும்னா நம்ம பக்கம் கௌரவமும் மரியாதையும் குறையாமலிருக்க வேண்டும்..”

மைதிலி தவித்துப் போனாள்.. கோபமாய் பேசினால் எதிர்த்துப் பேசலாம்.. தன்மையாய் பேசுபவனிடம் தண்ணீராய் தானே போக முடியும்..?

“மைதிலி.. இப்போ வந்திருக்கிறது நீ கனவிலும் எதிர்பார்க்காத வாழ்க்கை.. அவர்கள் பணக்காரர்கள் என்பதால் நாம் மனம் பேசவில்லை.. அவர்கள் நம் இனம் என்பதால் தான் ஒத்துக் கொண்டோம்.. கலப்பு மனம் நம் குடும்பத்தில் நடக்காது..”

“அண்ணா.. இப்போ காலம் மாறி விட்டது..”

“ஆனால் இந்த வீடு மாறாது நாங்க மாற மாட்டோம்.. ஒன்று நீ எங்கள் பேச்சைக் கேட்டு இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்கணும்.. இல்லைன்னா.. நாங்க எல்லோரும் இல்லைன்னு நீ தலை முழுகிடணும்..”

மைதிலி வாய் பொத்தி அழுதாள்.. வைத்தீஸ்வரன் கோபமாய் எழுந்து சென்றுவிட மற்றவர்களும் சென்று விட்டனர்..

தனிமை அவளைச் சூழ்ந்தது.

0Shares

Reviews — Kadalin Pon Vethiyle / காதலின் பொன் வீதியிலே

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link