Chapter 20
சோலையம்மாள் மகனுக்கு சாப்பாடு எடுத்துக் கொண்டு போகும்போது மேனகா அவள் அறைவாசலில் நின்றிருந்தாள்.. ஒரு வினாடி தாமதித்தவள் அவளைப் பார்த்து,
“அடியேய்.. தோப்புர்காரி.. நான் துரைசிங்கம் பொண்டாட்டிடீ.. என்கிட்டயே உன் கைவரிசையை காட்டிட்ட இல்ல.. இந்த சோலையம்மாள் யாருன்னு இனி உனக்குக் காட்டறேன்..” என்றாள்..
“அதுக்கு முன்னாலேயே இந்த மேனகா யாருன்னு காட்டிவிட்டேன்.. சும்மா சத்தம் போடாதே.. போ.. போய் உன் மகனோடு சேர்ந்து ஒப்பாரி வை..”
“ஏய்.. துன்பம் வந்தால் எதிர்த்து நிற்கிற பரம்பரைடி எங்க பரம்பரை.. மூலையில் உட்கார்ந்து முக்காடு போட்டு ஒப்பாரிவைக்கிற பரம்பரையில் நான் பிறக்கவுமில்லை.. வாக்கப்படவும் இல்லை.. தெரிஞ்சுக்க..”
“ஓகோ.. தெரிந்துக்கிட்டேன்.. போதுமா..” மேனகா எள்ளலாய் கேட்டாள்..
“இது கிராமத்து மண்ணுடி.. சொந்த மண்ணையும், பொண்ணையும் யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டோம்டி.. என் மகன் அவன் மனசுக்கு பிடிச்சவளோடு வாழத்தான் போகிறான்.. அதை நீ பார்த்து வயிறு எரியத்தான் போற..”
“பார்க்கத்தான் போகிறேன்.. வினய், மைதிலி கூட வாழ்வதை..”
“பார்ப்போமா.. நீயா நானான்னு..” சோலையம்மாள் சொடுக்குப் போட்டாள்..
மேனகா ஆச்சரியப்பட்டுப் போனாள்.. நந்தகுமாரனின் தாய் கூட வீராங்கனையா..? அவள் இதழ்களில் ரசிக்கும் முறுவல் வந்தது..
“வெல்.. நான் சவாலை ஏற்கிறேன்..” என்ற மேனகா உள்ளே சென்று கதவை அடைத்துக் கொண்டாள்..
நந்தகுமாரனனின் அறைக்கதவைத் திறந்து உள்ளே சென்ற சோலையம்மாள் கதவை அடைத்து விட்டு மகனருகே வந்தாள்.. சிவந்திருந்த அவன் விழிகளைப் பார்த்தபடி..
“ஏண்டா மலைக்கிறே.. மலையே எதுத்து வந்தாலும் என் மகன் பேர்த்து எடுத்துடுவான்னு நான் பீற்றிக்கிட்டு இருக்கிறேன்.. நீயானால் காதலிச்ச பொண்ணை வேறொருத்தன் பொண்ணு பார்க்க வந்ததுக்கே இடிஞ்சு போய் உட்கார்ந்திட்ட..”
“அம்மா உங்களுக்கு எப்படித் தெரியும்..?”
“நம்ம வீட்டுக்கு வந்திருக்கும் பிடாரி சொல்லுச்சு..”
“அம்மா.. அவன் பெண் பார்க்க வந்தால் இவள் போஸ் கொடுக்கணுமா..?”
“யாருடா இவன்.. ஏண்டா அந்தப் பொண்ணு மட்டும் தனியாவா குடும்பம் நடத்துது..? பெற்றவங்க.. கூடப் பிறந்தவன் அதட்டினால் அந்தப் பிள்ளை என்ன செய்யும்.. பாவம்..”
“நீங்க என்னம்மா சொல்றீங்க..?”
“போடா பைத்தியக்காரா.. அந்தப் பொண்ணு ஏண்டா குட்டிபோட்ட பூனை மாதிரி என்னைச் சுத்தி வந்தது..? ஏன்னா நான் உன்னோட அம்மாங்கிறதால.. அவ்வளவு ஆசையை உன்மேல் வெச்சிருக்கிற பொண்ணு மன சோடவா போய் நின்னுருக்கும்..? வீட்டில் இருக்கிறவங்க கட்டாயப்படுத்தி இருப்பாங்க..”
“அம்மா அவன் கூட மொட்டை மாடியில் தனியா நின்று பேசியிருக்கா..”
“அவங்க வீட்டு மொட்டை மாடியில்தானே.. வெளியே போகலையே..”
“அவன்கிட்ட பேசணும்ன்னு அவ சொன்னதை நான் என் காதால் கேட்டேன்..”
“எப்படிக் கேட்ட.. இந்த மேனகா மேனாமினுக்கி ஏதாவது நாடகம் போட்டாளா.. அதை விடு அவள் என்ன பேசத் துடித்தாள்ன்னு உனக்கு எப்படித் தெரியும்..? ஒருவேளை உன்னைக் கல்யாணம் பண்ணிக்க விருப்பமில்லைன்னு சொல்ல நினைச்சிருக்கலாம்..”
“அம்மா.. அவள் போன் நம்பரை அவனுக்கு கொடுத்தாள்ம்மா..”
“இன்றைக்கு பேச முடியாமல் போயிருக்கும்.. போனில் அவன் பேசினால் சொல்லி கல்யாணத்தை நிறுத்த நினைத்திருக்கலாமில்ல..”
“அம்மா.. நீங்கள் யோசிப்பது போல் ஏன் நான் யோசிக்கலை..?”
“ஏன்னா.. நீ ஆம்பளை.. நான் பொம்பளை.. நான் வாழ்ந்து முடிச்சவடா.. ஒருத்தர் முகத்தைப் பார்த்தாலே தெரிஞ்சிடும்.. மைதிலியின் முகத்தில் உன்மேல் அவள் வைச்சிருக்கிற காதல்தாண்டா எனக்குத் தெரியுது.. துரோகம் தெரியலை..”
“அம்மா.. பெற்றவங்க கட்டாயப்படுத்தி இன்றைக்கு அவளை அடுத்தவன் முன்னால் பெண் பார்க்க நிறுத்தி வைத்தாங்களே.. நாளைக்கே கட்டாயப்படுத்தி அவளுக்குக் கல்யாணம் பண்ணி வைச்சிட்டா..”
“வைச்சிட்டா.. என்னடா ராகம் போடறே நீ கையை கட்டிக்கிட்டு உட்கார்ந்திருந்தால் அதைத்தான் செய்வாங்க..”
“அம்மா.. நான் என்னம்மா செய்ய..? இரண்டு வருடமா சொல்லிப் பார்க்கிறேன்.. வீட்டை எதிர்க்க மாட்டேன் என்கிறாளே..”
“அவள் வளர்ந்த விதம் அப்படி.. எதிர்க்கத்தான் மாட்டாள்..”
“அப்போ.. இதுக்கு என்னதாம்மா வழி..?”
“ஏண்டா.. நீ ஆம்பிள்ளைதானே.. துரைசிங்கம் பெற்ற சிங்கக்குட்டி பேசுகிற பேச்சாடா இது..? அவளைத் தூக்கிக் கொண்டு வந்து தாலி கட்டுவானா.. அதை விட்டுவிட்டு.. என்கிட்ட வழி கேட்கிறான்..”
“தூக்கிக் கொண்டு வருவதா.. அதுவும் தாலிகட்டுவதா.. நானா..?”
“பின்னே வேறு யாரோவா உனக்காகத் தாலிகட்டு வார்கள்.. நீதாண்டா..?”
“சும்மா இருங்கங்ம்மா.. பெண்ணைத் தூக்கி வருவது குற்றம்.. அதுவும் தாலிகட்டுவது என் கொள்கைக்கு உடன்பாடில்லாதது..”
“அட மடையா.. தாலி கட்டாவிட்டால் அவள் வீட்டில் சும்மா விடுவார்களா..? தாலி கட்டுவது மூட நம்பிக்கைன்னால்.. தாலி கட்டமாட்டேன்கிற கொள்கைளைக் கட்டிக்கிட்ட உட்கார்ந்திருப்பதும் மூட நம்பிக்கைதானே.. மகனே.. தாலிங்கிறது அவளைச் சுற்றி நீ போடும் வேலி.. அப்புறம் எந்த பட்டணத்துக்காரனும் வேலியில்லாப் பயிர்ன்னு அவளைப் பெண்பார்க்க வரமாட்டானில்ல..”
“அம்மா.. பகுத்தறிவு பேசும் நானே தாலிகட்டுவதா..?”
“பகுத்தறிவுன்னா என்னடா மகனே..! பகுத்து அறிவதுதானே.. அதைச் செய் முதலில்.. மற்றவர்கள் மாதிரி இல்லாமல் நீ யோசி.. கணவன் மனைவி வாழ்க்கை ஒப்பந்தம் தானே..? அதற்கு கையெழுத்து போடுவது போல் தாலியையும் கட்டுகிறாய்.. உன்னைப் பொறுத்தவரை அது கயிறு.. உன் மனைவியைப் பொறுத்தவரை அது அவளது உயிர்.. உன்னை மரபுகளை கடைபிடிக்கச் சொல்லி நான் வற்புறுத்தவில்லை.. அவளது மரபுகளை அவமதிக்காதே.. அவமரியாதை செய்யாதே என்றுதான் சொல்கிறேன்.. நந்து.. உன் கொள்கைப்படி தாலி என்பது பெண்களை அடிமைப்படுத்தும் அடிமைக்கயிறு.. நான் ஒன்று கேட்கிறேன்.. நீ அவளை அடிமைன்னு நினைப்பயா..”
“என்னம்மா இது ஆணும் பெண்ணும் சமம்மா..”
“அவளுக்கு சம உரிமை கொடுக்கணும்னு நினைத்தால் உன் கொள்கையை அவள்மேல் திணிக்காதே.. உன்னைக் கோவிலுக்குள் வரச் சொல்லி அவள் கட்டாயப்படுத்தியிருக்கிறாளா..?”
“இல்லைம்மா.. ஆனால் அவள் கோவிலுக்குப் போவதை நானும் தடை செய்யவில்லையே..”
“அதுபோல்தான் இதுவும்.. தாலி இல்லாத கல்யாணத்தை மைதிலி ஏற்றுக் கொள்ள மாட்டாள்.. அதனாலே.. உன் கொள்கையை உன்னோடு வைத்துக் கொண்டு அவள் மனதைப் புண்படுத்தாமல் ஒரு தாலியைக் கட்டு.. அப்புறம் அவள் தெய்வம் அவளுக்கு.. உன் கொள்கை உனக்கு..”
நந்தகுமாரன் யோசித்தான்.. கட்டுக்குள் அடங்கக் கூடாது என்பதுதானே அவன் கடைபிடிக்கும் மார்க்கம்.. அப்படியிருக்கும்போது ‘தாலிகட்டமாட்டேன்’ என்ற பிடிவாதமும் ஒரு கட்டுத்தானே..? மரபுகளை உடைப்பது தானே அவன் கொள்கை.. எனில் கருப்புச் சட்டைக் காரன் தாலிகட்டுவதை புறக்கணிக்க வேண்டும் என்ற மரபையும் உடைத்து விட வேண்டி வந்தால் ஏன் தயங்க வேண்டும்..? எதையுமே மனம் ஏற்க வேண்டும்.. தாலி கட்டினால்தான் மைதிலி பெண்டாட்டி என்று அவன் என்றும் நினைத்த தில்லை.. ஆனால் தாலி கட்டாத நந்தகுமாரனை காதலனாகத்தான் மைதிலியின் மனம் ஏற்கும்.. கணவனாக ஏற்காது.. மனம் விரும்பாத ஒரு வாழ்வை மைதிலியின் மேல் அவன் திணிக்கக் கூடாது.. அவன் அவளை நேசிப்பது உண்மையென்றால் அவள் உணர்வுகளை காயப்படுத்தக் கூடாது..
நந்தகுமாரன் முடிவெடுத்துவிட்டான்.. அவன் முகத்தில் அலைபாய்ந்த உணர்ச்சிகள் சமனப்பட்டு முகம் தெளிவடைந்தது.. மகன் துன்பத்திலிருந்து மீண்டு விட்டதை அறிந்து கொண்ட சோலையம்மாள் அவனைச் சாப்பிடச் செய்தாள்.. அதன் பின்தாயும் மகனும் தாழ்ந்த குரலில் சில திட்டங்களைப் போட்டார்கள்.. அதன் சாதக, பாதகங்களை ஒருவருக்கொருவர் வினவி தெளிவுபடுத்திக் கொண்டனர்.. திருப்தியுடன் எழுந்த சோலையம்மாள்,
“சரிடா தம்பி.. எல்லாம் உன் மனதுப்படி நடக்கும் இப்போத் தூங்கு” என்று கூறிவிட்டு மகனின் அறைக் கதவை திறந்து கொண்டு வெளியே வந்தாள்.. மகன் அறைக்கதவை மூடும்வரை காத்திருந்து அதன் பின்னர் அவள் கீழே செல்ல யத்தனிக்கும்போது,
“சோலையம்மா.. இங்கே வாடி..” என்ற குரல் கேட்டது.. திரும்பிப் பார்த்தாள்.. மாடி வராண்டாவின் இருளில் இருந்து துரைசிங்கம் வெளியே வந்தார்..
Reviews — Kadalin Pon Vethiyle / காதலின் பொன் வீதியிலே
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.