Chapter 21

0Shares

துரைசிங்கம் கோபக்காரர்.. கண்டிப்பானவர்.. இனப் பற்று மிகுந்தவர்.. பரம்பரை மேல் பக்திகொண்டவர்.. ஆயிரம் பேர் எதிர்த்து வந்தாலும் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு மீசையை முறுக்கிக் கொண்டு அவர்களை ஓட ஓட விரட்டும் சிங்கம்.. சிலம்பாட்ட வீரர்.. இவை அனைத்திலும் மேலாக மனைவியை நேசிப்பவர்.. அவள் தவமிருந்து பெற்ற தன் மகனின் மேல் உயிராய் இருப்பவர்.. தாய், மகனின் பாசப்பிணைப்பு அதிகம் போல் தோன்றும் அந்த வீட்டை ஊன்றிப் பார்ப்பவர்களுக்குத் தான் தெரியும்.. தந்தை தன் ராஜாங்கத்தை தன் மகனுக்கு விட்டுக்கொடுத்துவிட்டு தன்னை சாமானியன் ஆக்கிக் கொண்டிருப்பதை.. ஊரே துரைசிங்கத்தின் பார்வைக்கு அடங்கும்.. ஆனால் அவர் தன் மகனின் பார்வையில் அடங்கிவிடுவார். தன் மகனுக்கு அவன் விரும்பிய படிப்பைக் கொடுத்தார்.. நிலபுலன்களை அவர் தனியாளாய் கவனித்துக் கொண்டு அவன் விரும்பிய வேலையை அவன் பார்க்க விட்டார்.. கோவிலின் முதல் மரியாதையை பெறுபவர் கோவிலுக்குள் வர மறுக்கும் சுதந்திரத்தை அவனுக்கு அளித்தார்.. இத்தனைக்கும் மேலாக அவர் விரும்பிய மருமகளை மகனும் மனைவியும் விரும்பவில்லையென்றதும் அந்த எண்ணத்தையே கைவிட்டார்.. அப்படிப்பட்டவர் முன் மேனகா சொன்ன ஒரு வார்த்தைக்கு அவர் மனைவி ஏன் பதறிப் போனாள்..? உண்மை அறிய மனைவி இரவு சாப்பாட்டை மகனுக்கு எடுத்துச் செல்லும்போது அவளறியாமல் பின்தொடர்ந்தார்.. மேனகா ஒருமையில் தன் மனைவியை, “போ, போ” என்று ஏசியதும் அவர் மீசை துடித்தது.. இவ்வளவிற்கும் காரணம் அவரல்லவா..? மேனகா அறைக்கதவை அடைத்துக் கொண்டதும் மகனின் அறைக்கு வெளியே நின்று தாய் மகனின் உரையாடலை செவிமடுத்தார்.. அதன்பின் சோலையம்மாள் மகனின் அறையிலிருந்து வெளி வரும் போது மனைவியை அழைத்தவாறு வந்தார்..

கணவனைப் பார்த்ததும் சோலையம்மாள் பதறிப் போனாலும் தன்னை நிதானப்படுத்திக் கொண்டு, “கீழே வாங்க பேசிக்கலாம்..” என்று கூறியபடி படியிறங்கினாள்.. துரைசிங்கம் முகம் இறுகப் பின் தொடர்ந்தார்.. தங்கள் அறைக்குள் போனதும்,

“இப்பச் சொல்லுங்க.. உங்களுக்கு என்ன தெரியணும்,” என்றாள்..

“எனக்கு எல்லாம் தெரியும்டி.. நீங்க பேசினதை கேட்டுக்கிட்டுத்தான் இருந்தேன்..”

“கேட்டிங்கள்ல.. இப்ப மனசு குளுகுளுன்னு இருக்குமே.. சீமையில் படிச்சவ செஞ்சு வைச்சிருக்கிற கெடுதலைக் கேட்டிங்கள்ல.. இங்கே பாருங்க.. எனக்கு ஒன்னு தெரியணும்.. நம்ம நந்த வேற ஜாதிப் பொண்ணை கட்டிக்கிட்டா நீங்க என்ன செய்வீங்க..”

“ஆசிர்வாதம் செய்வேன்டி.. வேற என்ன செய்வேன்னு நினைச்சே.. அடி சோலையம்மாள்.. ஜாதி முக்கியம்தான்.. மனசு அதை விட முக்கியம்.. என் மகன் அவன் மனசுக்கு பிடிச்சவளோட வாழட்டும்டி.. நான் தடுக்க மாட்டேன்..”

சோலையம்மாள் முந்தானையால் கண்களை துடைத்துக் கொள்ள துரைசிங்கம் கூறினார்..

“அவன் வரட்டும்டி.. ஜெயிச்சு வரட்டும்.. பெத்தவங்க நாம துணை நிப்போம்.. அப்புறம் நடப்பது நாராயணன் செயல்டி.. நல்லதே நடக்கும் கண்கலங்காதே..”

அன்று இரவு அவர்கள் வெகுநேரம் மகனின் எதிர்காலம் குறித்துப் பேசினார்கள்..

மறுநாள் பொழுது விடிந்ததும் நந்தகுமாரன் பேப்பரோடு ஊஞ்சலில் ஆடிக்கொண்டே மேனகாவின் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.. அவன் கணிப்புப்படி மேனகா அவனை புண்படுத்த விரும்பி அவன் அருகில் வந்தாள்.

“ஹாய் குமார்.. குட்மார்னிங்..”

“பேட்மார்னிங் டு யு மேனகா..”

“எனக்கா..? உங்களுக்குத்தான் பேட் மார்னிங் குமார்.. உங்கள் முன்னாள் காதலி.. இன்றைய வினய்யின் நிச்சயதார்த்த பெண்.. நாளைய வினய்யின் மனைவி.. மறந்து விட்டதா..?”

“எதுவும் நடக்கும் வரை நிச்சயமில்லை மேனகா.. வினய் ஜென்டில்மேன்.. என்னைக் காதலித்த பெண்ணை அவன் எப்படி மணந்து கொள்வான்..”

“அதை நான் பொய் என்று சொல்வேனே.. மைதிலி வீட்டை மீறிப் பேசமாட்டாளே..”

“நான் ஆதாரத்தோடு நிரூபிப்பேனே..”

மேனகாவின் புருவங்கள் சுருங்கின.. கண்கள் இடுங்கின..

“என்ன ஆதாரம்..?”

“நீ என்ன முட்டாளா மேனகா..? இரண்டு வருடமாய் காதலிக்கிறோம்.. எத்தனை போட்டோக்கள் சேர்ந்து எடுத்திருப்போம்..? அதில் ஒன்றை வினயிடம் கொடுத்தால் போதுமே..”

“அவன் அட்ரஸ் உங்களுக்குத் தெரியாதே..”

“நீ வெளிநாட்டில் படித்தவள்தானா என்பதே எனக்கு சந்தேகமாக இருக்கிறது.. டால்பின் இம்போர்ட் அன்ட் எக்ஸ்போர்ட் கம்பெனி எது என்று சென்னையில் என்னால் கண்டு பிடிக்க முடியாதா..?”

“இப்போத என்ன செய்ய வேண்டும் என்கிறீர்கள்..?”

மேனகா இறங்கி வந்தாள்.. உண்மையில் அப்படி எதுவும் போட்டோக்கள் மைதிலியும் நந்தகுமாரனும் எடுத்துக் கொள்ளவில்லை.. நந்தகுமாரன் சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்ல தூண்டிலை வீசினான்.. மேனகா வகையாகச் சிக்கினாள்..

“இதோ பார் மேனகா.. எப்போது என்னை விட அதிகப் பணக்காரன் என்றதும் பல்லைக் காட்டிக் கொண்டு அந்த மைதிலி அவனுடன் மொட்டை மாடிக்கே போய் தனியாக பேச ஆரம்பித்துவிட்டாளே.. இனி என் மனதில் அவளுக்கு இடமில்லை..”

மேனகாவின் மனம் துள்ளியது, “அப்படியென்றால்..?”

“ஆமாம் மேனகா.. எனக்கு அவள் மேல் வெறுப்பாக இருக்கிறது.. அவளுக்கு மட்டும்தான் வீடு.. அதன் மனிதர்கள் முக்கியமா..? எனக்கு முக்கியமில்லையா..? என் அப்பா உன்னைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளச் சொல்லி எவ்வளவு கெஞ்சினார்.. நான் ஒரு மடையன்.. காதில் போட்டுக் கொள்ளவில்லை.. அவள் என்னை வஞ்சித்து விட்டாள் மேனகா..”

“விட்டுத் தள்ளுங்கள் குமார்.. ஏழைதானே.. பணம் பார்த்தவுடன் மயங்கிவிட்டாள்.. உங்களைக் கூட நீங்கள் ஆபிசர் என்பதாலும் அதிகப்பணக்காரர் என்பதாலும் காதலித்திருக்கக் கூடும்..”

“கூடும்.. என்ன மேனகா.. அதுதான் உண்மை.. பாதகி என்னை ஏமாற்றிவிட்டாள்.. நான் அவளைச் சும்மா விடப் போவதில்லை..”

“அதற்காக.. பழிவாங்க வேண்டுமென்று அவள் கல்யாணத்தை நிறுத்தப் போகிறீர்களா..?”

மேனகா ஜாக்கிரதையாய் கேட்டாள்.. நந்தகுமாரன் சிலுப்பிக் கொண்டான்.

“எனக்கென்ன தலையெழுத்தா.. இனி அவள் எனக்கு வேண்டாம்.. ஆனால் அவளைக் கடைசியாய் ஒரு தடவை பார்க்க வேண்டும்.. பார்த்து..”

“பார்த்து..?” மேனகா யோசனையாய் வினவினாள்..

“நான்கு வார்த்தை நாக்கைப் பிடுங்கிக் கொள்கிறார் போல் கேட்க வேண்டும்.. முகத்தில் உமிழாத குறையாக அவமானப்படுத்தி அனுப்ப வேண்டும்.. அப்போதுதான் என் மனம் ஆறும்.. மேனகா எனக்காக இதை நீ செய்வாயா..?”

“கட்டாயம் செய்கிறேன் குமார்..” என்றாள் மேனகா குதூகலமாக.. இதற்காகத்தானே அவள் இத்தனை பாடு பட்டாள்.. எப்படியாவது நந்தகுமாரனின் மனைவியாகி அந்த சோலையம்மாளின் கொட்டத்தை அடக்க வேண்டும்.. முடியாவிட்டால் குறைந்தது நந்தகுமாரன், மைதிலியை வெறுத்துப் பேசுவதை மைதிலி எப்படிக் கேட்டுக் கொள்கிறாள் என்று அப்போது அவள் முகம் போகும் போக்கைப் பார்த்து ரசிக்க வேண்டும்.. மேனகாவின் கால் தூசி பெறமாட்டாள் அவள்.. மேனகாவை மணக்க மறுத்து நந்தகுமாரன் அவளுக்கு மாலை சூட்டு வதை தடுத்து விட்டாலே மேனகா பாதி ஜெயித்ததுபோல.. நந்தகுமாரனுக்கு உதவி செய்யாவிட்டால் அவன் மைதிலியை பழிவாங்கும் வெறியில் வினய்க்கு அந்த போட்டோக்களை அனுப்பிவிட்டால் காரியமே கெட்டு விடுமே.. அந்த மைதிலி நந்தகுமாரனிடம் நாலு திட்டு வாங்கினால் அவளுக்கு வந்தது.. வாங்கட்டுமே..

மேனகா கிருஷ்ணமூர்த்தியை பார்க்குக்கு வரச் சொன்னாள்..

“மிஸ்டர் கிருஷ்ணன்.. நந்தகுமாரன் மிரட்டுகிறார்.. அவரும் மைதிலியும் சேர்ந்து எடுத்த போட்டாக்களை வினய்க்கு அனுப்பப் போகிறாராம்..”

“ஐயையோ.. இப்போது என்ன செய்கிறது.. நீங்கள் சொன்ன மாதிரி மைதிலியின் கையெழுத்தை போட்டு மெடிக்கல் லீவு அனுப்பிவிட்டேன்.. அவளுடைய செல்போனில் சிம் கார்டை கழட்டிப் போட்டுவிட்டேன்.. வினய் பேசும்போது கூட என் செல்போனில் இருந்து பேச வசதி செய்து பக்கத்திலேயே நான் நின்று அவள் உளறிக் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.. மைதிலிக்கு கட்டுக் காவல் அதிகம்.. இப்போது நந்தகுமாரனை எப்படிச் சமாளிப்பது..?”

“சிம்பிள்.. மைதிலியை நேரே பார்த்து நாலு வார்த்தை திட்ட வேண்டுமாம்.. திட்டி விட்டுப் போகட்டுமே.. அதுவும் நம் நன்மைக்குத்தான்.”

“விளையாடுகிறீர்களா.. என் தங்கையை எவனோ ஒருவன் திட்டுவதா..?”

“எவனோ ஒருவன் இல்லை மிஸ்டர் கிருஷ்ணன்.. உங்கள் தங்கையின் காதலன்..”

“இப்போது என்ன சொல்ல வருகிறீர்கள்..?”

“மைதிலியை நந்தகுமாரன் வெறுக்கிறார்.. அதனால் திட்டப்போகிறார்… மைதிலி இன்னும் நந்தகுமாரனை வெறுக்கவில்லை… நம்மை புரிந்து கொள்ளாமல் நம்மை அவமதிக்கிறானேன்னு அவள் நந்தகுமாரனை வெறுப்பாளா, மாட்டாளா..?”

“ஆமாம்.. அப்போது நாம் கட்டாயப்படுத்தாமலே முழுமனதாய் வினய்யை மணந்து கொள்வாள்.. வெல்டன் மேனகா.. நாம் மைதிலியை எங்கே கூட்டிப்போவது..?”

“கல்லனைக்கு.. நாளைக் காலையில் நந்தகுமாரன் அவருடைய டாடாசுமோவில் வருகிறாராம்.. நாம் என்காரில் போகலாம்..”

அவர்கள் பிரிந்தார்கள்.. மறுநாள் மைதிலியை ‘எங்கே போகிறோம்’ என்று சொல்லாமலே அழைத்துக் கொண்டு போனார்கள்.. கல்லனையை நெருங்கும் போது டாடா சுமோவில் சாய்ந்து கொண்டு நந்தகுமாரன் நின்று கொண்டிருப்பது தெரிந்தது.. பேன்ட் பாக்கெட்டில் இருக்கைகளையும் நுழைத்துக் கொண்டு நின்று கொண்டிருந்தான்.. மைதிலி பொங்கினாள்.. அவள் கண்களிலிருந்து கண்ணீரும் பொங்கியது.. இறங்கியவள் நேரே நந்தகுமாரன் முன் போய் மூச்சு வாங்க நின்றாள்.. அவள் இதழ்கள் துடித்தன.. கண்கள் அருவியாய் பொழிந்தன.. மேனகாவும், கிருஷ்ணமூர்த்தியும் அவசரமாய் அவளது இருபக்கமும் மெய்காப்பாளர்கள் போல் நின்று கொண்டனர்.. நந்தகுமாரன் மைதிலியை இத்தனை நாள் பார்க்காத பார்வையாய் புழுப்போல் பார்த்தான்.. மைதிலி திகைத்தாள்..

“என்னடி பார்க்கிற.. பெரிய நடிகைடி நீ.. என்னமா கண்ணீர் விடறே.. நம்ம போட்டோவை உன் வினய் பார்த்திட்டான்னா.. உன் கல்யாணம் நின்று போய் விடும்ன்னு பயந்துதானே ஓடி வந்திருக்கே.. நீயெல்லாம் ஒரு பெண்ணாடி..”

“போட்டோவா..” மைதிலி திணறினாள்.. ஆனால் அதைச் சட்டை செய்யாதவனாய் நந்தகுமாரன் தொடர்ந்தான்..

“உன்மேல் எனக்கு வெறுப்பாய் இருக்குடி.. உன்னைப் போயா நான் காதலித்தேன்.. சே.. என்னை ஏமாற்றி விட்டாயேடி..” என்று பேசிக்கொண்டே கண் இமைக்கும் நேரத்தில் அவள் கையைப் பிடித்து இழுத்து அவள் நெற்றியில் துப்பாக்கியை பதித்தவன்.

“கிருஷ்ணமூர்த்தி தள்ளிப்போ.. கிட்ட நெருங்கினால் இவள் பிணமாகி விடுவாள்.. என்னை ஏமாற்றிவிட்டு இன்னொருவனுடன் இவள் வாழ நான் விடமாட்டேன்.. சுட்டுத்தள்ளப்போகிறேன்..” என்றான்..

மேனகா ஸ்தம்பித்து விட்டாள்.. நந்தகுமாரன் மைதிலியைக் கொல்லும் திட்டத்தோடுதான் அவளை அழைத்து வரச் சொல்லியிருக்கிறான்.. துப்பாக்கியை கையில் பிடித்ததால்தான் பான்ட் பாக்கெட்டில் கையை விட்டு மறைத்துக் கொண்டு நின்றிருக்கிறான்.. இப்போது என்ன செய்வது.. மைதிலி செத்தால் அவளுக்கென்ன பிழைத்தால் அவளுக்கென்ன..

“கிருஷ்ணமூர்த்தி சார் வந்துவிடுங்கள்.. கிட்டப் போனால் மைதிலிக்குத் தான் ஆபத்து..” அவள் பின் வாங்கினாள்.. கிருண்ஷமூர்த்தி கைகளைப் பிசைய, தன் கைக்குட்டையை எடுத்து நந்தகுமாரன் மைதிலியின் மூக்கில் வைக்க, அதில் நனைக்கப்பட்டிருந்த மயக்க மருந்தில் அவள் மயங்கி விழ, நந்தகுமாரன் அவளை ஒரு கையால் தூக்கி காரில் போட்டு மறுகையில் துப்பாக்கியை காட்டி அவர்களை மிரட்டிக் கொண்டே டாடா சுமோவைக் கிளப்ப அது சீறிப்பாய்ந்தது..

0Shares

Reviews — Kadalin Pon Vethiyle / காதலின் பொன் வீதியிலே

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link