Chapter 22

0Shares

வேம்பூர் கோவிலின் பத்தாம்நாள் திருவிழா.. ஊரே கோவிலில் கூடி இருந்தது.. அன்றுடன் திருவிழா முடிவதால் அனைவரும் கோவிலில் திரண்டு இருந்தனர்.. துரைசிங்கத்தின் வீட்டு வாசலில் பந்தல் போட்டு வாழை மரம் கட்டப்பட்டிருந்தது.. வீட்டின் பின்புறம் பெரிய அண்டாக்களில் கல்யாண விருந்து தயாராகிக் கொண்டிருந்தது.. துரைசிங்கமும், சோலையம்மாளும் கோவிலின் உள்ளே திருமண மேடை கட்டும் ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள்… பாலசிங்கம் அங்கே வேகமாக வந்தார்..

“என்னங்கண்ணா.. ஊருக்குள் என்ன என்னவோ பேசிக்கிறாங்க..”

“என்னடா பேசிக்கிறாங்க.. சொல்லு கேட்கலாம்..”

“நந்தகுமாரனுக்கு கல்யாணமாமே.. உண்மையா..?”

“ஆமாம்.. உண்மைதான்.. அதுக்கு என்ன இப்ப..?”

அங்கு நின்றிருந்த துரைசிங்கத்தின் தங்கை சுந்தராம்பாள் உள்ளூரிலேயே திருமணம் செய்து கொடுக்கப் பட்டவள் சண்டைக்கு வந்தாள்..

“ஏண்ணே.. இப்படிச் சொல்ல உங்களுக்கு எப்படி மனசு வருது..? ஒத்த தங்கச்சியை உள்ளூரில் கொடுத் திருக்கிறோமே.. நல்லது, கெட்டதுக்கு கலந்து பேசி முடிவெடுப்போம்ன்னு இல்லாம மூணாம் மனுசங்க சொல்லி உன் பிள்ளை கல்யாணச் செய்தியை நான் தெரிந்துக்கணுமா..? என்னைக் கட்டின மனுசன் எப்படி என்னை மதிப்பார்..? ஏண்ணே.. நான் தெரியாமல் தான் கேட்கிறேன்.. சுத்துப்பட்டி கிராமத்துக்கெல்லாம் பெரிய மனுசன் நீங்க.. உங்க பிள்ளை கல்யாணத்தை ஒளிஞ்சு மறைஞ்சு செய்யணுமா..?”

“பாலா, சுந்தரம் ரெண்டு பேரும் கொஞ்சம் பொறுமையா இருங்க.. இது நம்ம பிள்ளை வாழ்க்கைப் பிரச்சனை, நாம் விட்டுக் கொடுத்துப் போகணும்.. சோலையம்மா.. உன் கொழுந்தனுக்கும், நாத்தனாருக்கும் எடுத்துச் சொல்லு..”

அடுத்து நகர்ந்த நிமிடங்களில் அங்கே பலகுரலோசை கேட்டது.. கடைசியில் பாலசிங்கம் வழிக்கு வந்தார்..

“சரிங்கண்ணே நான் என்ன செய்யட்டும்..”

“அப்படிக் கேளு.. உன் காரை எடுத்துக்கிட்டு போய் ரெஜிஸ்டாரை கூட்டிக் கொண்டு வந்துவிடு..”

“சரி அண்ணி.. நான் என்ன பண்ணட்டும்.. எனக்கும் வேலை கொடு..”

“வீட்டுக்குப் போய் விருந்து ஆக்கறதை பார்த்துக்க..” பாலசிங்கமும், சுந்தராம்பாளும் சமாதானமாகி இணைந்து கொள்ள அடுத்த ஒரு மணி நேரத்தில் திருமண மேடை ரெடியாகிவிட்டது.. ரெஜிஸ்ட்டார் வந்து விட்டார்.. துரைசிங்கம் வேட்டியை மடித்துக்கட்டிக் கொண்டு கோவில் வாசலில் வந்து நின்றார்..

டாடா சுமோ வண்டி விரைந்து வந்து நின்றது.. ஊர் ஆள்கள் வண்டியைச் சூழ்ந்து கொள்ள லேசான மயக்க மருந்தை சுவாசித்திருந்த காரணத்தால் மைதிலி மயக்கம் தெளிந்து கொண்டிருந்தாள்.. நந்தகுமாரன் இறங்கி அவளைக் கைத்தாங்கலாய் பிடித்துக் கொள்ள ஊர் மக்களில் ஒருவர்,

“ஏம்பா.. அந்தப் பெண் ஏன் தள்ளாடி நடக்குது..?” என்று கேட்டார்..

“உடம்பு சரியில்லை பாட்டா..” என்ற நந்தகுமாரன்..

“அம்மா..” என்று அழைக்க சோலையம்மாளும், சுந்தராம்பாளும் வந்து மைதிலியை அணைவாய் நடத்திச் சென்றனர்.

அவளை முகம் கழுவச் செய்து சூடாய் காபி கொடுத்தார்கள்.. தந்நிலைக்கு கொஞ்சம் வந்த மைதிலி சுற்றும் முற்றும் பார்த்து விட்டுப் புரியாமல் சோலையம்மாளைப் பார்த்து,

“அத்தை..” என்றாள்.. சோலையம்மாள் புன்னகைத்தாள்..

“உன் அத்தைதான்ம்மா.. எழுந்து இந்தப் பட்டுப்புடவையை மாற்றிக் கொள்..”

“எதற்கு அத்தை..”

“இங்கே ஓர் விசேசம்மா.. அத்தை சொன்னால் கேட்கணும்..” மைதிலியை அலங்கரித்து திருமண மேடைக்கு அழைத்து வந்தார்கள்.. நந்தகுமாரன் பட்டுவேட்டி சட்டையோடு உட்கார்ந்திருந்தான்.. அருகில் மைதிலியை அமர வைக்க அரை மயக்கநிலையில் அவளிருக்கும் போதே அவள் கழுத்தில் நந்தகுமாரன் கட்டிய தாலி ஏறிவிட்டது.

புரிந்தும் புரியாமலேயே மைதிலி அக்கினியை வலம் வந்தாள்.. பெரியவர்களை நமஸ்கரித்தாள்.. ரெஜிஸ்டராரின் முன்னிலையில் பதிவேட்டில் கையெழுத்துப் போட்டாள்.. நந்தகுமாரனின் கை அணைப்பில் புகுந்த வீட்டில் காலடி எடுத்து வைத்தாள்..

நந்தகுமாரனின் டாடாசுமோ சீறிப்பாய்ந்து சென்ற பின்னர் ஓர் அரைமணி நேரம் மேனகாவும், கிருஷ்ண மூர்த்தியும்,

‘உன்னாலே நான் கெட்டேன்.. என்னாலே நீ கெட்டாய்..’ என்று சண்டைபோட்டு முடித்தார்கள்.. அதன்பின் சமாதானமாகி மேனகாவின் காரில் கிளம்பி துரைசிங்கத்திடம் நியாயம் கேட்க வந்தார்கள்.. அவர்கள் வண்டியிலிருந்து இறங்கிய நேரம் நந்தகுமாரனும், மைதிலியும் மாலையும் கழுத்துமாய் மணமக்களாய் ஆரத்தி சுற்றுவதற்கு நின்று கொண்டிருந்தார்கள். மைதிலியின் கழுத்தில் புது மஞ்சள் கயிறு மின்னியது..

“நாம் மோசம் போய்விட்டோம் கிருஷ்ணன்..”

“நாம் என்று ஏன் கூட்டுச் சேர்கிறீர்கள் மேனகா.. நான்தான் மோசம் போய்விட்டேன்.. இனி எப்படி என் அப்பாவின் முகத்தில் விழிப்பேன்..”

“நானும் வருகிறேன் கிருஷ்ணன்.. நடந்ததைக் கூறி இனி என்ன செய்வது என்ன கேட்கலாம்..” என்றாள் மேனகா..

மணமக்கள் உணவு உண்ட பின்னர் மாடியறைக்குச் சென்றனர்.. அப்படியே கட்டிலில் சரிந்த மைதிலி மயக்க மருந்தின் வேகம் சிறிது இருந்ததால் அயர்ந்து உறங்கி விட்டாள்.. இரவு கண் விழித்தாள்.. நடந்தவை கனவுபோல் தோன்ற பதறி எழுந்தாள்.. அருகில் நாற்காலியில் அமர்ந்திருந்த நந்தகுமாரன் அவசரமாய் எழுந்து அருகில் வந்தான்.. மேஜையிலிருந்த பிளாஸ்கில் இருந்து சூடான காபியை கோப்பையில் ஊற்றிக் கொடுத்து, “குடி” என்றான்.. அவள் மறுத்தாள்.. பிடிவாதமாய் அவளைத் தோளில் சாய்த்துக் கொண்டு குடிக்க வைத்தான்.. கோப்பையை வைத்து விட்டு திரும்பி வந்து அவளருகில் கட்டிலில் அமர அவள் விலகி அமர்ந்தாள்.. அவன் புருவம் சுருக்கினான்..

“ஏண்டி.. என்னைப் பிடிக்கலையா.. என் முகத்தைப் பார்த்துச் சொல்லு..”

“நீங்க செய்ததுதான் பிடிக்கலை.. இது உங்களுக்கே நியாயமா இருக்கா..?”

“எனக்கு நான் செய்தது தாண்டி நியாயம்..”

“எது.. ஒரு பெண்ணைத் துப்பாக்கி முனையில் கடத்தி மயக்க மருந்து கொடுத்து தாலிகட்டுவதா..? உங்களிடம் நான் இதை எதிர்பார்க்கவில்லை..”

“ம்ம்.. ஏன் சொல்லமாட்டாய்.. நீ இதுவும் சொல்வாய்.. இதற்கு மேலும் சொல்வாய்.. ஏண்டி நான் என்ன ரோட்டில் போகிற பெண்ணையா துப்பாக்கி முனையில் கடத்தினேன்..? என்னை விரும்பாத பெண்ணுக்கா மயக்க மருந்து கொடுத்து தாலிகட்டினேன்..?”

“ஆனாலும்.. நீங்கள் செய்தது சரியாகாது..”

“வேறு எது செய்திருந்தால் சரி.. நீ வீட்டிற்கு அடங்கிய பெண்ணாய் அந்த வினய்யை கல்யாணம் பண்ணிக்கொள்ள நான், ‘எங்கிருந்தாலும் வாழ்க’ன்னு வாழ்த்தணுமா..? பொம்பளை நீ.. நான் வேறு பெண்ணைக் கல்யாணம் பண்ணினால் கொன்னுடுவேன்னு மிரட்டலாம்.. அதையே நான் செய்தால் தப்பா.. எனக்கு வேற வழி தெரியலைடி.. நீ உன் வீட்டை எதிர்த்து வெளியே வரமாட்டே.. நான் என்ன செய்ய முடியும்.. தூக்கி வந்து தாலிகட்டத்தான் முடியும்..”

மைதிலி தணிந்தாள்.. கழுத்தில் தொங்கிய மாங்கல்யத்தை தொட்டுப் பார்த்துக் கொண்டாள்.. வினய்யின் கையில் அவளால் தாலி வாங்கியிருக்க முடியுமா..? தற்கொலை செய்து கொள்ளத்தானே முடிவு செய்திருந்தாள்.. அவளது நந்தகுமாரன் வில்லன் வேலை செய்து அவளை அவனுடன் வாழ வைத்து விட்டானே.. இப்போது அவள் நந்தகுமாரனின் மனைவி.. துரைசிங்கம், சோலையம்மாளின் மருமகள்.. மனம் இனிக்க தன் காதலனை தன் கணவனை நிமிர்ந்து பார்த்தாள்..

“என்னடி அப்படிப் பார்க்கிற.. இது பார்க்கிற நேரமில்லை..”

அவனது சூடான இதழ்கள் அவள் இதழ் தேடிக்குனிய அவள் கண்களை மூடித் தொய்ந்தாள்.. கரை உடைந்த வெள்ளம் சீறிப் பாய்ந்தது.. வாடிக் கிடந்த பயிர் செழித்து நிமிர்ந்தது.. மைதிலி தான் உணராத, அறியாத புது உலகத்தில் பிரவேசித்தாள்.. நந்தகுமாரன் அவளை அடைந்தான்.. ஆண்டான்.. அந்த யுத்தகளத்தில் ஆன்மிகமாக, நாத்திகமா என்ற விவாதம் இன்றி இரு உயிர்களும் ஒரு உயிராய் ஒன்றின..

0Shares

Reviews — Kadalin Pon Vethiyle / காதலின் பொன் வீதியிலே

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link