Chapter 01

0Shares

கூட்டமாக இருந்த பஸ் ஸ்டாப்பில் நகத்தைக் கடித்துத் துப்பியபடி நின்று கொண்டிருந்தாள் மாளவிகா..

‘இன்னும் பஸ்ஸைக் காணோமே..’

அவளுக்குப் பதட்டமாக இருந்தது.. அருகிலிருந்-தவர்களில் வழக்கமாக அவளது பஸ்ஸீக்குள் ஏறிக்கொள் பவர்களை அளவெடுத்தாள்.. எண்ணிக்கை குறையாமல் அத்தனை பேரும் அங்கேயே இருந்து வைத்ததில் அவளுக்குள் டென்சன் கூடியது..

‘எல்லாமே போகலைன்னா.. எப்படி..? இத்தனை பேரும் தொற்றினா நான் படியில் கால் வைக்கக் கூட முடியாது போல இருக்கே…’

அவளுக்கு அழுகை வந்து விடும் போல இருந்தது..

‘இதுக்குத்தான் அப்பாகிட்ட தலைப்பாடாய் அடிச்சுக்கறேன்.. ஒரு டூவீலர் வாங்கிக் கொடுங்கன்னு.. கேட்டாத்தானே… எப்பப் பாரு.. பணமில்லைங்கிற பல்லவிதான்.. இதுவே அக்கா வந்து நின்னு கண்ணைக் கசக்கினா… அடிச்சுப் பிடிச்சுப் பணத்தை புரட்டிடுவாரு..’

திருமணமாகி புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்ட பெண் கண்ணைக் கசக்குவதற்கும்.. கல்லூரிக்குப் போகும் பெண் கண்ணைக் கசக்குவதற்கும் உள்ள வேற்றுமையைப் பற்றி அவளுக்கென்ன தெரியும்..? அவளுடைய அக்கா பூமிகா.. பெயருக்கேற்றார் போல பொறுமையானவள்தான்.. அன்பானவள்தான்.. அழகானவள்தான்.. ஆனால் அவளைத் திருமணம் செய்து கொண்ட கங்காதரனுக்கு அவையெதுவும் தேவை யில்லையே..

அவனுக்குத் தேவையான தெல்லாம் பணம்.. பணம்.. பணம்தான்.. ஆடுகிற மாட்டை ஆடிக் கறக்கனும்.. அடிக்கிற மாட்டை அடித்துக் கறக்கனும் என்கிற வித்தை தெரிந்தவன் அவன்..

எந்தத் தகப்பனாவது பணத்துக்காக பெற்ற பெண்… கட்டின கணவனிடமிருந்து அடியையும்.. உதையையும் வாங்கிக் கொள்வதை பொறுத்துக் கொள்வானா..? கடன் பட்டாவது.. அந்தக் கொடுமையிலிருந்து மகளை மீட்கத் தானே அவன் நினைப்பான்..?

அதை நாடி பிடித்து வைத்திருந்த கங்காதரன்.. பணத்தேவை ஏற்படும் போதெல்லாம் பூமிகாவை நாலு மொத்து மொத்துவான்.. அவள் கணவன் முன்னால் கண்ணீர் விடாமல் பெற்றவர்கள் முன்னால் வந்து மௌனக் கண்ணீரை விடுவாள்.. தாங்க மாட்டாத சிதம்பரம் அடித்துப் பிடித்து.. யார் கையிலோ.. காலிலோ விழுந்தாவது அவள் கேட்கும் பணத்தை வாங்கிக் கொடுத்து விடுவார்..

“உங்க மருமகனைக் கெடுக்கிறதெல்லாம் நீங்கதான்..”

பூமிகாவுக்கும்.. மாளவிகாவிற்கும் தம்பியாக பிறந்து விட்ட அஸ்வின் சீறுவான்..

“ஒரு தடவையாவது அந்த ஆள் கேட்கிற பணத்தைக் கொடுக்காம இருந்து பாருங்க.. அதுக்கப்புறமா எவ்வளவுதான் அக்காவைப் போட்டு அடிச்சாலும் இங்கேயிருந்து பணத்தைப் பிடுங்க முடியாதுன்னு அந்த ஆளுக்கே தெரிஞ்சு போயிடும்.. இது தேறாத கேஸ்ன்னு வாலைச் சுருட்டிக்கிட்டு இருப்பாரு..”

அஸ்வின் இப்படிச் சொல்லும் போது.. பூமிகா குற்ற உணர்வுடன் தலை கவிழ்ந்து கொள்வாள்.. தன்னால்தானே தனது பிறந்த வீடு கஷ்டப்படுகிறது என்ற எண்ணம் அவளுக்கு…

‘ஏண் பெண்ணாகப் பிறந்தேன்..?’ மனதுக்குள் மறுகுவாள்…

“ஏன் அஸ்வின்..? என்னால்தானே அப்பா கையில பணம் தங்க மாட்டேங்குது..? அதனாலதான நீயும் என்னைக் கண்டுக்காம இருக்கச் சொல்கிற..?”

ஒரு தடவை பொறுக்க முடியாமல் பூமிகா தம்பியிடம் கேட்டபோது அவன் துடித்துப் போய் விட்டான்…

“என்னக்கா பேசற..? உன்னைவிட பணம் உயர்த்தியா..? நான் அதுக்காக சொல்லலைக்கா.. அந்த ஆள் உன்னை அடிச்சே கொல்கிறாரே.. அதுக்காகத்தான் சொல்றேன்க்கா.. அப்பா பணத்தைக் கொடுத்தா மட்டும்.. உனக்கு விழுகிற அடியும்.. உதையும் நின்று போயிருமா..? அந்தப் பணம் தீருகிற வரைக்கும் அது நிற்கும்.. அடுத்த பணத்தேவை ஏற்படறப்போ அது ஆரம்பிச்சிராதா..?”

வயதில் சிறியவனாக இருந்தாலும்.. எவ்வளவு தெளிவாக மனிதர்களை இவன் எடை போட்டு வைத்திருக்கிறான் என்ற ஆச்சரியம் பூமிகாவுக்குள் எழுந்து நிற்கும்.. இருந்தும் என்ன பயன்..? அவளால் கணவனைப் பிரிந்து இருக்க முடியும்.. அவன் மூலம் பெற்ற பிள்ளைகளைப் பிரிந்து இருக்க முடிந்ததில்லை..

“அவன் கெட்டிக்காரண்டி.. பசுவையும்.. கன்று களையும் பிரிச்சு வைச்சா.. பசு எப்படியும் கன்றுகளைத் தேடி ஓடிவந்துதானே ஆகனும்ங்கிற கணக்கைப் போட்டு வைச்சிருக்கான்..”

சிதம்பரம் மனைவியிடம் புலம்புவார்.. அவள் எதுவும் போசாமல் மௌனம் சாதிப்பாள்.. அதைத் தவிர மதுராவினால் வேறு எதையும் செய்ய முடியாது.. காலம்.. காலமாக பெண்கள் எல்லோரும் அதைத்தானே செய்து வருகிறார்கள்..? அவர்கள் பேச நினைப்பதை பேசி விட்டால் இந்த பூமி தாங்குமா..?

இப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்த மாளவிகாவுக்கு.. கல்லூரிக்குச் செல்ல ஒரு இருசக்கர வாகனம் கிடைக்க வில்லை..

“ஆம்பளைப் பையனே வாயைத் திறக்காம பஸ்ஸிலே காலேஜீக்குப் போயிட்டு வர்றான்.. நீ பொம்பளப் புள்ள.. உனக்கென்னடி டூவீலர் வேண்டிக் கிடக்கு..?” மதுரா அதட்டிய போது…

“அதென்னம்மா.. ஆம்பளைப் பையன்னா உயர்த்தி.. பொம்பளைப் புள்ளைன்னா மட்டமா..? இரண்டு பேரையும் பத்து மாதம் சுமந்துதானே பெத்தீங்க..?” என்று சண்டைக்குப் போனாள் மாளவிகா..

“அடியாத்தி.. உன்கூடப் பேசி மாளாதும்மா.. நானென்ன சொல்றேன்.. நீயென்ன சொல்ல வர்ற..? அவன் கூடப் படிக்கிற பசங்களெல்லாம் பைக்கில் போறப்போ.. அவன் மட்டும் மூச்சுவிடாம பஸ்ஸிலே போறானே.. அதைப் பத்தி நீ யோசிச்சு பார்த்தியா..? அதைச் சொல்ல வந்தா.. நீ எதையோ பேசிக்கிட்டு வர்ற.. அவன் மட்டும் போட்டிக்கு வந்தா.. உன் அக்காவுக்கு படியளக்க முடியாது.. அதை நினைப்பில வைச்சுக்கிட்டு பேசு..” மகளைக் கடிந்து கொண்டாள் மதுரா..

தாயுடன் வழக்கு வைத்து விட்டு முகத்தைத் தூக்கிக் கொண்டு வந்திருந்த மாளவிகாவிற்கு கால் கடுத்தது.. கடந்து போன பஸ்களில் படிகளில் தொங்கிக் கொண்டு போன இளைஞர்களின் மீது பார்வை பதிந்தது..

‘ம்ஹீம்.. ஆம்பளைப் பையன் ஏன் டூவீலரைக் கேட்கப் போறான்..? அவனுக்குத்தான் எப்படியும் பஸ்ஸில இடம் கிடைச்சுருமே.. புட் போர்டில் தொங்கிக்கிட்டாவது காலேஜீக்குப் போய் சேர்ந்துருவான்… எனக்கு அப்படியா..?’

விட்டால் அழுது விடுபவளைப் போல மாளவிகா முகத்தை வைத்துக் கொண்டிருந்த போது.. அந்த டாடா சுமோ பஸ் ஸ்டாப்பில் வந்து நின்றது.. சளசளவென்று பேசிக் கொண்டிருந்த மக்கள் கூட்டம் அமைதியாகி விட.. மாளவிகா திரும்பிப் பார்த்தாள்…

அவளையே பார்த்தபடி டாடா சுமோவிலிருந்து இறங்கினான் ரமணன்..

“அண்ணன் வர்றாரு தள்ளி நில்லுங்கடா..”

அவன்கூட வந்திருந்த ரௌடிகளின் பட்டாளம் எச்சரித்ததில் அந்த பஸ் ஸ்டாப் ஒரு நொடியில் காலி மைதானமானது…

பஸ் பிடிக்காவிட்டாலும் பரவாயில்லையென்று ஒன்று சொன்னதைப் போல எல்லோரும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இடத்தைக் காலி செய்திருந்தனர்..

மாளவிகா போகவில்லை.. அவளுக்குத் தெரியும்.. அவள் போனாலும் அவன் அவளைத்தான் பின் தொடர்ந்து வருவானென்று.. அவன் வராத ஒரே இடம் அவளுடைய வீடு மட்டும்தான்.. அதற்காக அவனுக்குப் பயந்து அவள் கல்லூரிக்குப் போகாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்க முடியுமா..? அதோடு அவனால் அவளுக்கு எந்த விதமான தீங்கும் ஏற்படாது என்று அவளின் ஆழ்மனது அனுமானித்து சொல்லியிருந்ததால்.. வழக்கப்படி அவள் அசையாமல் அங்கேயே நின்றாள்..

கல் விழுந்த பறவைகள் கூட்டமாய் கலைந்து போய் விட்ட மக்களின் மத்தியில் அசையாமல் நின்ற அவளின் அந்த திடத்தை மெச்சும் புன்முறுவல் அவன் இதழ்களில் தோன்றியது…

அவளுக்கு மிக அருகில் நெருக்கமாக வந்து நின்றவன்..

“காலேஜீக்கா..?” என்று கேட்டான்..

‘இல்லை.. சினிமாத் தியேட்டருக்கு..’ என்று பதில் சொல்லத் தோன்றியது அவளுக்கு.. ஆனால் அவள் சொல்லவில்லை…

அவளுக்குத்தான் தெரியுமே.. அவள் ஒற்றை வார்த்தையைச் சொல்லிவிட்டால்.. அவன் அதையே பிடித்துக் கொண்டு ஓராயிரம் வார்த்தைகளை கொட்டி விடுவானே..

அதனால் அவள் மௌனம் சாதித்தாள்..

‘அழகான மௌனம்..!’ ரமணன் அதை ரசித்தான்..

“காலைநேரம்.. கூட்டமாக இருக்கும்.. நீ எதுக்காக அடிச்சுப் பிடிச்சுக்கிட்டு பஸ்ஸீல் போகனும்..?”

அவனின் அக்கறையில் அவளுக்கு பற்றிக் கொண்டு வந்தது.. அவளையறியாமல்..

“பேசாம வீட்டுக்குப் போயிருன்னு சொல்ல வர்றீங்களா..?” என்று கேட்டுவிட்டாள்..

அவளின் மௌனம் கலைந்ததிலும்.. வெடுக்கென்ற அந்த பதிலிலும்.. அவன் கண்களில் மின்னல் வந்தது…

“அப்படிச் சொல்வேனா மாலு.. வீட்டுக்குப் போனா காலேஜ் வீட்டுக்கு வருமா..?” அவன் பரிவுடன் பேசினான்..

‘மாலுவாமில்ல.. மாலு.. இவன் எனக்குச் செல்லப் பெயர் வைக்கிறானா..?’ அவளுக்குள் கோபம் கிளர்ந்தது..

“இங்கே பாருங்க.. இந்த மாலு.. கீலுவெல்லாம் எனக்குப் பிடிக்காது.. நீங்க எதுக்காக இதையெல்லாம் என்கிட்ட வந்து கேட்கறிங்க..?” அவள் படபடத்தாள்..

“உனக்குத் தெரியாதா மாலு..?” அவள் விழிகளுக்குள் ஊன்றிப் பார்த்தான் ரமணன்..

அந்தப் பார்வையில் அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.. இந்த பஸ் சீக்கிரம் வந்தால் தேவலை என்றிருந்தது அவளுக்கு.. பஸ் வந்தாலும் தப்பிக்க மார்க்கமில்லை என்பது அவளுக்குத் தெரியும்.. அவனிடமிருந்து தப்பித்து விடவும் முடியாது..

அவள் திரும்பிய பக்கம் அவன் வந்து நின்றான்.. மீண்டும் முகத்தைத் திருப்ப முடியாமல் அசையாமல் அப்படியே நின்றாள் மாளவிகா.. திரும்பிய பக்கமெல்லாம் அவன் வந்து நிற்பான் என்பது அவளுக்குத் தெரியுமே..

‘ஏன் என்னை இந்த பாடு படுத்தறான்.. ஊரில்.. உலகத்தில் வேற பெண்களே இல்லையா..?’ மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்..

யதார்த்தமான அவள் பார்வையில்.. ஆறடி உயரத்தில்.. கம்பீரமான முகத்துடன் நின்று கொண்டிருந்த ரமணன் தென்பட்டான்.. அவனின் முகத்திலிருந்த தாடி.. அவனுடைய முரட்டுத்தனத்தைச் சொல்லாமல் சொல்லியது.. உணர்வுகளைப் பிரதிபலிக்காத இறுக்கமான அந்த முகத்தில் அவளைக் கண்டதும் குடி கொள்கிற மென்மையில் அவள் சங்கடப்பட்டுப் போனாள்..

‘ம்த்சு.. அமரக் காதலனைப் போல உருகி.. உருகி பார்த்து வைக்கிறானே.. இது நிறைவேறுமா.. நிறைவேறா தான்னு கூட இவன் யோசிக்க மாட்டானா..?’

அவன் நினைத்ததை முடிக்கும் பராக்கிரமசாலிதான்.. அதில் அவனுக்கும் சரி.. அவனுடைய கூட்டத்திற்கும் சரி.. கொஞ்சம் கூட ஐயமில்லை.. அவனின் தலையைக் கண்டு விட்டால்.. எப்படிப்பட்ட ரௌடிகளின் கூட்டமும் பயந்து பின்வாங்கி விடும்..

“டேய்ய்.. வந்திருக்கிறது ரமணாடா…”

அவனின் நிழலைத் தொடக்கூட யாரும் பயப் படுவார்கள்.. அதிகார வர்க்கத்தினால் அவனை நெருங்க முடியாது.. அரசியலில் உள்ள அனைத்துக் கட்சிகளிலும் அவனுக்கு வேண்டியவர்கள் உயர் பதவிகளில் இருந்தார்கள் என்பது மட்டுமில்லை.. அவனுக்கு எதிரான எந்தவொரு ஆதாரத்தையும் இதுவரை அவர்கள் கண்டு பிடித்ததில்லை..

“இதை ரமணா செய்திருக்கனும்..”

இப்படித்தான் அவர்களால் சொல்ல முடிந்தது.. அவன் தான் செய்தானென்று உறுதியாக அவர்களால் சொல்ல முடியவில்லை.. ரமணனுக்கு எதிராக சிறு துரும்பு கூட அசையாது…

அப்படிப்பட்ட பராக்கிரமசாலிதான்.. ஒரு பெண்ணுக்காக.. பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தான்..

“என் கூட வண்டியில் வாயேன்..” ரமணன் சொல்ல..

“என்னது..? !..” என்று அதிர்ச்சியுடன் நிமிர்ந்தாள் மாளவிகா…

“மெல்ல.. எதுக்காக இத்தனை அதிர்ச்சி மாலு..? உன்னை காலேஜில் டிராப் பண்றேன்..” அவளையே பார்த்தபடி சொன்னான் ரமணன்..

“தேவையில்லை.. நான் பஸ்ஸில் போய்க்குவேன்.. நீங்க உங்க வேலையைப் பார்த்துக்கிட்டுப் போங்க..” மாளவிகா வெடித்தாள்..

“இப்போதைக்கு இதுதான் என் வேலை மாலு..” அவன் அசையவில்லை..

அவன் அசையமாட்டான் என்பது தெரிந்திருந்தால் பஸ் வரும் வழியைப் பார்த்தாள் மாளவிகா..

“மாலு..”

மாளவிகா என்னவென்று கேட்கவில்லை..

‘இவனுக்கும் எனக்கும் என்ன உறவிருக்கு..? என்னவோ சொந்த பந்தம் கூப்பிறதைப் போல கூப்பிட்டு வைக்கிறானே..’

“என் கூட வர பயமா..?”

இப்படிக் கேட்பவன் ஊரறிந்த தாதா..! இருந்தும் இந்தக் கேள்வியை இருபத்தியொரு வயதான மாளவிகாவைப் பார்த்து அவன் கேட்டான்..

‘பயமா..? இவனிடமா..?.. ஹ…!’ என்று அவள் நினைத்தாள்..

இந்தக் காதல்தான் எப்படிப்பட்ட வல்லமை படைத்தாக இருக்கிறது..! சிங்கத்தை.. சின்னஞ்சிறு மானின் பின்னாலே சுற்றிவரச் செய்கிறது.. அந்தச் சிறுமானும் சிங்கத்தை அச்சமின்றி முறைத்திட வைக்கிறது.. காட்டுக்கு ராஜா சிங்கம்தான்.. ஆனால்.. காதலுக்கு ராணி புள்ளி மானல்லவா…

ஊரே நடுங்கும் ரமணனைக் கண்டு ஒருநாள்கூட மாளவிகா நடுங்கியதில்லை.. மாறாக.. அலட்சியப் பார்வையைத்தான் அவனை நோக்கி வீசியிருக்கிறாள்..

0Shares

Reviews — Kaithotta Kalvane / கைத்தொட்ட கள்வனே

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link