Chapter 11
தூக்கம் வராமல் புரண்டு படுத்த மாளவிகா அருகிலிருந்த செல் போனை எடுத்து மணி பார்த்தாள்.. ‘மூன்று’ என்று அது சொன்னது..
‘விடியப் போகுதா..?’ மாளவிகாவிற்கு அதிர்ச்சியாக இருந்தது..
அதுவரை அவள் தூங்கவில்லையா..?
‘கடவுளே..’ கண்களை மூடித் தூங்க முயன்றாள்.. தூக்கம் வரவில்லை.. மனதில் ரமணன்தான் வந்து நின்றான்..
‘என்ன இது..?’ மாளவிகா எழுந்து உட்கார்ந்து விட்டாள்.. அவள் கண்களில் நீர் வழிந்தது.. இது என்ன துடிப்பு என்று சொல்லத் தெரியாமல் அவள் துயர் கொண்டாள்..
‘தூண்டிற் புழுவினைப் போல் – சிறு
சுடர் விளக்கினைப் போல்..
நீண்ட பொழுதாக – எனது
நெஞ்சம் துடிக்குதடி..’
பாரதியின் கவிதை வரிகள் அவள் நெஞ்சத்தில் ஓடின.. பாரதியென்ன பெண்ணா..? பெண்ணின் மன உணர்வை துல்லியமாக அவன் எப்படி பிரதிபலித்தான்..?
‘பாரதி..’ அவள் நெஞ்சம் விம்மியது…
‘அவன் கள்வன்..! அவனை நினைத்து என் நெஞ்சம் துடிக்கலாமா..? இனம் புரியாத உணர்வு என் நெஞ்சை நிரப்பலாமா..? தூண்டிற்புழுவினைப் போல் நான் துடித்து நிற்கலாமா..? அவனைக் காதலிப்பது தூண்டிற்புழுவின் நிலையைத்தான் எனக்கு உண்டாக்கும்…’
சிதம்பரமும்.. மதுராவும் இதை அறிந்தால் என்னவெல்லாம் சொல்வார்கள் என்ற நினைப்பில் அவள் பதைத்துப் போனாள்..
மறுநாள் காலையில் தூக்கம் கெட்டதால் வீங்கிய இமைகளுடனும்.. சிவந்த விழிகளோடும் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தவளைப் பார்க்க வந்து இறங்கினான் ரமணன்..
‘இன்னைக்கும் வந்துட்டானா..?’ என்று நினைத்த போதும் அவன் வரவில் மனதுக்குள் சொல்லத் தெரியாத சுகமொன்று பரவுவதை மாளவிகாவினால் தடுக்க முடியவில்லை…
“ஏன் முகம் வீங்கியிருக்கு..? நைட்டெல்லாம் தூங்காம கண் விழிச்சிருந்தியா..?” அக்கறையுடன் அவன் கேட்டபோது.. அந்த பாசத்தில் நெக்குருகி அவள் கண்கள் கலங்கிவிட்டன…
“த்ச்ச.. அழக் கூடாது.. நேத்து நான் அப்படிப் பேசியிருக்கக் கூடாது.. கோபத்தில பேசிட்டேன்.. அப்புறமா ரொம்பவும் வருத்தப்பட்டேன்.. உனக்கு பூப்போல மனசு.. நான் பேசின கடுமையான வார்த்தைகளை உன்னால தாங்கிக்க முடியாதுன்னு தோணிச்சு.. நைட்டெல்லாம் தூக்கமில்லாம அதையே நினைச்சுக்கிட்டு இருந்திருப்பன்னு கவலைப்பட்டேன் நான் நினைச்சதுதான் நடந்திருக்கு.. நீ அதையே
நினைச்சு.. மனசைப் போட்டு உழட்டிக்கிட்டு தூங்காம இருந்திருக்க..” வருத்தத்துடன் அவன் பேசினான்..
அவன் வருத்தத்தைக் கண்ட மாளவிகாவிற்கு வருத்தமாக இருந்தது.. இத்தனை பாசமாய் இவன் இருக்க வேண்டாமே என்று அவள் மனம் தவித்தாள்.. திரும்பி வர முடியாத ஒர்வழிப் பாதையில் போய் விட்டவனின் காதலை ஏற்க முடியாத நிலையில் அவளைப் படைத்துவிட்ட கடவுளை நினைத்து மனதுக்குள் புலம்பினாள்..
“நான் கோபக்காரன்தான் மாலு.. ஆனா பாசக்காரன்.. உன்மேல அதிகமான பாசத்தையும்.. காதலையும் வைச்சிருக்கேன்.. நீ என்னுடையவ.. அந்த நினைப்பில் தான் திட்டிட்டேன்.. அதையே மனசில வைச்சுக்கிட்டு கஷ்டப்படாதே.. ஐ ஆம் ஸாரி..” அவன் மன்னிப்புக் கேட்டான்…
“என்னது…!”
மாளவிகா அதிர்ந்து போனவளாக அவனை நிமிர்ந்து பார்த்தாள்.. ரமணன் அவளிடம் மன்னிப்புக் கேட்கிறானா..? எவன் பெயரைக் கேட்டால் எல்லோரும் அஞ்சி நடுங்கு கிறார்களோ.. அந்த ரமணன் அவளிடம் மன்னிப்புக் கேட்கிறானா..?
“நீங்க எதுக்காக ஸாரி கேட்கனும்..?”
அதுவரை போட்டு வைத்திருந்த மனத் தடையை உடைத்துக் கொண்டு படபடத்தாள் மாளவிகா…
“உன் மனசை புண் படுத்திட்டேனில்ல.. அதுக்காகத் தான் ஸாரி கேட்கிறேன்.. ஸாரி கண்ணம்மா…”
“ப்ளீஸ்.. ஸ்டாப் திஸ் நான்ஸென்ஸ்.. யார் கிட்ட.. யார் ஸாரி கேட்கிறது..?”
“உன்னிடம்.. நான் கேட்கிறேன்.. ஏன் கண்ணம்மா..?”
“ம்ப்ச்சு… நான் கேட்டேனா..? உங்ககிட்ட ஸாரி சொல்லுங்கன்னு நான் கேட்டேனா..?” மாளவிகா கோபமாக கேட்டாள்..
“ஏன் கண்ணம்மா..? இன்னும் உனக்கு என்மேல இருக்கிற கோபம் போகலியா..?” அவன் தன்மையாகப் பேசினான்..
“ஏன் என்னைப் புரிஞ்சுக்கவே மாட்டேங்கறிங்க..? எனக்கொன்னும் உங்க மேல கோபமில்லை…”
விட்டால் விடிய.. விடிய அவன் மன்னிப்புக் கேட்பான் என்று தோன்றியதால் அதைப் பொறுக்க முடியாதவளாக மாளவிகா சொல்லி விட்டாள்..
“கோபமில்லையா..? உண்மையாகவா..?” அவன் விழிகள் பளபளத்தன…
“உண்மையாத்தான்..” மாளவிகா வேறு திக்கில் பார்த்தாள்.. இல்லாவிட்டால் அவளின் முகச் சிகப்பை அவன் கண்டு கொள்வானே..
“அப்புறம் எதுக்காக முகம் வீங்கியிருக்கு..?”
“கண் முழிச்சு படிச்சேன்…”
“அவ்வளவு தானா..” அவன் நிம்மதியானான்…
“அவ்வளவு தான்.. இனி மேலாவது இடத்தைக் காலி பண்றீங்களா..?”
“நான் வந்தது உனக்குப் பிடிக்கலையா..?”
ஏக்கத்துடன் கேட்டவனின் முகத்தை அவளையு மறியாமல் பார்த்து வைத்தாள் மாளவிகா.. கலைந்த முடியும்.. சிவந்த கண்களும் முரட்டுத்தனமான முகமுமாக நின்றவனிடமிருந்த ஆண்மை நிரம்பிய அழகு அவளை வசீகரித்தது…
‘இவனையா எனக்குப் பிடிக்காது..?’
அவள் இதழ்களில் மெல்லிய புன்னகையின் கீற்று தோன்றி மறைந்தது…
“நீங்க வந்தது எனக்குப் பிடித்தமா.. இல்லையாங்கிறது வேற விசயம்.. ஆனா.. என்னைப் போல காலையில கரெக்டா அட்டெண்டன்ஸ் கொடுக்க வேண்டிய வேலையில எத்தனை மனுசங்க இருக்காங்கன்னு உங்களுக்குத் தெரியுமா..? உங்களைக் கண்டதும் அவங்கள்லாம்.. ஓடியே போயிடறாங்க.. பாவம்.. எப்படித்தான் ஸ்கூல்.. காலேஜ்.. ஆபிஸீக்குப் போய் சேர்றாங்களோ.. அவங்களுக்காகவாவது.. நீங்க அடிக்கடி வராம இருங்களேன்…”
மாளவிகாவின் பேச்சில் ரமணன் உரக்கச் சிரித்தான்.. அவன்மேல் அவளுக்குக் கோபமில்லை என்ற விவரத்தில் அவன் உற்சாகம் கரை புரண்டு பொங்கிக் கொண்டிருந்தது.. இப்போது அவளின் பேச்சும் சேர்ந்து கொண்டதில் அவன் மனம் விட்டுப் பலமாக சிரித்தான்..
அவன் சிரிப்புச் சத்தம் கேட்டு.. தள்ளி நின்ற அவனின் ஆள்கள் திரும்பிப் பார்ப்பதைக் கண்டாள் மாளவிகா.. அவர்களுடைய தலைவனின் சிரிப்பில் அவர்கள் முகத்திலும் உற்சாகம் பரவுவதைக் கண்டாள்..
அவன் துக்கத்திலே துக்கம் கொண்டு அவன் சந்தோசத்திலே சந்தோசம் கொள்ளும் அற்புதமான உறவுப் பிணைப்பை அவர்களிடத்தில் அவன் ஏற்படுத்தியிருக் கிறான் என்று நினைக்கும் போது அவளுக்குள் நெகிழ்வும்.. அவனின் அந்த ஆளுமை குறித்தான பெருமிதமும் எழுந்தன..
“நான் வராம இருக்கனும்னா அது முடியாது.. வேணும்னா அடிக்கடி உன் கண்ணில் படாம தள்ளி நின்னு பார்த்துட்டுப் போயிடறேன்..”
“நானும் அதைத்தான் சொல்றேன்.. நேத்து ஈவினிங் தான் என்னைப் பார்த்தீங்க…”
“சும்மா பார்க்கலை.. மிரட்டிட்டுப் போனேன்..”
“எனக்கொன்னும் அது மிரட்டலா தெரியலை..”
“ஏய்ய்..” அவன் கண்களில் மின்னல் வந்தது.. அதை கண்டு கொள்ளாதவளைப் போல மாளவிகா பேச்சைத் தொடர்ந்தாள்..
“திரும்பவும் இன்னைக்குக் காலையிலே வந்து நின்னா என்ன அர்த்தம்..?”
“ஸாரி சொல்ல வந்தேன் மாலு…”
“நான் ஒன்னு சொல்வேன்.. கேட்பீங்களா..?”
மாளவிகாவின் கேள்வியில் ரமணனின் மனதிற்குள் நீருற்று பொங்கி எழும்பியது…
Reviews — Kaithotta Kalvane / கைத்தொட்ட கள்வனே
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.