Chapter 12

0Shares

“ஒன்னு என்ன.. ஓராயிரம் சொல்லு.. நான் கேட்டுக்கிறேன்..” கண்கள் பிரகாசிக்கப் பேசினான் ரமணன்…

இவன் இப்படித்தான் சொல்வான் என்ற நினைவில் மாளவிகாவின் முகத்தில் புன்னகை படர்ந்தது..

சற்றுத் தள்ளி நின்றிருந்த அவனுடைய ஆள்கள் “டேய்.. அண்ணனைப் பார்த்து அண்ணி சிரிக்கிறாங்கடா..” என்று பேசிக் கொண்டார்கள்…

“சொல்லு மாலு.. நான் என்ன செய்யனும்..?”

“நீங்க யார்கிட்டயும் ஸாரி கேட்கக்கூடாது…”

அவளின் வார்த்தையில் ரமணனின் முகத்தில் வெளிச்சம் படர்ந்தது.. அவளையே ஊன்றிப் பார்த்தவன்..

“நானும் யார்கிட்டயும் மன்னிப்புக் கேட்கிறவனில்லை.. என் மனசுக்கு சரின்னு படறதைச் செய்யறவன்.. அதைப் பத்தி திரும்பவும் யோசிச்சுப் பார்க்காதவன்..” என்றான்..

“அப்புறம் எதுக்காக என்கிட்ட மன்னிப்புக் கேட்டிங்க..?”

“நீயும்.. மத்தவங்களும் ஒன்னா..?” ஆழ்ந்த குரலில் அவன் கேட்டான்..

அந்த வார்த்தைகள் மனதில் இறங்க சட்டென்று அவன் முகம் பார்த்தாள் மாளவிகா.. அவனின் கண்களை அவளது கண்கள் சந்தித்தபோது அவளுக்குள் ஒர் 

அதிர்வு ஏற்பட்டது.. அவள் விழிகளுக்குள் ஊடுறிவிப் பார்த்தவனின் பார்வையில் இருந்த தீவிரத்தில் அவள் மிரண்டு போனாள்..

அவன் கால்களை லேசாக அகற்றி.. இரண்டு கைகளையும் அவன் அணிந்திருந்த முரட்டு ஜீன்ஸின் பாக்கெட்டிற்குள் விட்டபடி நின்றிருந்தான்.. இயல்பாக போடப் பட்டிருந்த சட்டை அவனது கம்பீரத்தை அதிகப் படுத்திக் காட்டியது.. எப்போதும் போல கலைந்திருந்த தலைமுடி அவள் மனதைக் கலைத்தது.. அவனிடம் தென்பட்ட செயற்கையில்லாத இயல்பு அவளை வசீகரித்தது…

அவன் மட்டும் சமூகத்தில் சாதாரணமான அடையாளத்துடன் இருந்திருந்தால் அவனின் காதலில் மாளவிகா மகிழ்ந்து போயிருப்பாள் என்ற நிதரிசனமான உண்மையை அவள்மனம் அறிவுறுத்தியது…

‘ஏண்டா பாதை மாறிப் போன..?’ மாளவிகா மனம் வருந்தினாள்..

“என்ன மாலு பேச மாட்டேங்கிற..?” அதே ஊடுறுவும் பார்வையுடன் அவன் கேட்டான்..

“என்கிட்டக்கூட நீங்க ஸாரி கேட்கக் கூடாது..” அவள் குரல் தழதழத்தது…

“ஏன்..?” அவன் பார்வை கூர்மையானது..

“ஏன்னா.. ஏன்னா..” அவள் பதில் சொல்லத் தெரியாமல் தவித்தாள்…

“மெல்ல.. மெல்ல.. ஏன் இப்படிப் பதட்டப்படற..?” பரிவுடன் அவன் கேட்டான்..

“தெரியல.. நீங்க மன்னிப்புக் கேட்டா என் மனசு கஷ்டப்படுது..” அவள் சொல்லி விட்டாள்…

அவளின் வார்த்தையில் அவன் கண்கள் ஒளிர்ந்தன..

“ஏன்..?” அதே கூர்மையான பார்வையுடன் அவன் கேட்டான்..

“அதான் தெரியலைன்னு சொன்னேனே..”, அவள் குழந்தையாகத் தவித்தாள்…

அவளின் தவிப்பை இனம் கண்டு கொண்டவனின் முகத்தில் வெளிச்சம் அதிகரித்தது.. பரிவுடன் அவளையே பார்த்தவன் லேசாகச் சிரித்தான்…

“ஏன் சிரிக்கறிங்க..?” அதே குழந்தைத் தனத்துடன் அவள் கேட்டாள்..

“இல்ல.. எனக்குள்ள நானே பலதடவ கேட்டுக்கிட்டு இருக்கேன்.. ஏண்டா ரமணா.. நீ பொண்ணுக பின்னால சுத்தமாட்டியே.. அப்புறம் ஏண்டா இந்தப் பொண்ணு பின்னால பித்துப்பிடிச்சவனப் போலச் சுத்துறேன்னு.. அதுக்கான பதில் இப்பத்தான் தெளிவா தெரியுது..”

“என்னவாம்..?” மாளவிகாவிற்கு அவன் பதிலைக் கேட்கும் ஆர்வம் அதிகரித்தது…

அவன் ஒரு நொடி அவனது வழக்கமான துளைக்கும் பார்வையுடன் அவளை ஆழ்ந்து பார்த்தான்.. அந்தப் பார்வையின் வேகம் தாளாமல் அவள் தலை குனிந்தாள்.. இந்தமுறை அவளால் அவள் முகத்தின் நாணச் சிகப்பை மறைக்க முடியவில்லை…

அதைக் கண்டவனின் முகம் மேலும் மிருதுவாக ஆனது…

“நீ குழந்தை மாலு..” பிரியத்துடன் அவன் சொன்னான்…

“குழந்தையா..?” ரோசத்துடன் நிமிர்ந்தாள் மாளவிகா…

கடைசியில் அவளைக் குழந்தையாக்கி விட்டானே என்றிருந்தது அவளுக்கு.. அவளின் ரோசத்தைக் கண்டவனின் சிரிப்பு அதிகரித்தது…

“ம்ம்ம்.. நீ குழந்தைதான்.. மத்தவங்கள்ல இருந்து பல வகையில நீ வித்தியாசப் படற..”

“எனக்கொன்னும் அப்படித் தெரியல…”

“உனக்குத் தெரியாது.. உன்னையே பார்த்துக்கிட்டு இருக்கிற எனக்குத்தான் அது தெரியும்..”

“என்னவோ போங்க.. நீங்க பேசறது எனக்குப் புரியலை…”

“புரியாமலே இருக்கட்டும்.. எனக்கு உன்னைப் புரியுது…”

“புரிஞ்சா அதையே பிடிச்சுக்கங்க…”

விளையாட்டாகத்தான் கூறினாள் மாளவிகா.. ஆனால் அவன் தீவிரத்துடன் தலையை அசைத்தான்..

“விடமாட்டேன்.. பிடிச்சுத்தான் வைச்சிருக்கேன்..”

அழுத்தமான அந்த வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் என்று மாளவிகாவிற்கு பிடிபடவில்லை..

“அப்படின்னா..?” அப்பாவியாகக் கேட்டாள்..

அவன் திரும்பவும் மெல்லச் சிரித்தான்..

“விட்டுரு.. அர்த்தம் தெரியலைன்னு குழம்பிக்காதே.. எனக்குத் தெரியுதில்ல.. உனக்கு அது போதும்..” என்றான்..

“ஓகே.. லீவ் இட்.. ஆனா.. நான் சொன்னா.. சொன்னதுதான்..”

“எதைச் சொல்ற..?”

அவன் புருவங்களை உயர்த்திய விதம் அவளை வசீகரித்தது..

“உங்க மன்னிப்பைத்தான் சொல்றேன்.. என்கிட்டக் கூட நீங்க மன்னிப்புக் கேட்கக் கூடாது…” கண்டிப்புடன் சொன்னாள் மாளவிகா…

“அடேங்கப்பா.. இந்த ரமணனையே மிரட்டறியே..” விளையாட்டாகச் சிரித்தான் ரமணன்…

சிரித்து முடித்தவனின் முகத்தில் தீவிரம் படர்ந்தது.. மாளவிகாவிற்குப் புரியாத வகையில் அழுத்தமான பார்வையொன்றைப் பார்த்தவன்.. அதே அழுத்தத்துடன் சொன்னான்…

“கேட்க மாட்டேன் மாளவிகா.. இனி உன்கிட்டக்கூட நான் எதுக்காகவும் மன்னிப்புக் கேட்கமாட்டேன்…”

அவன் எதற்காக அப்படிச் சொன்னான் என்று மாளவிகாவிற்கு பிடிபடவில்லை.. ஆனாலும் அவனது நிமிர்வை அவன் விட மாட்டான் என்பதே அவளுக்கு நிறைவாக இருந்தது…

“இன்னிக்கான பேச்சு வார்த்தை முடிஞ்சிருச்சு.. இனியாவது கிளம்பறிங்களா..?” அவள் தலையைச் சாய்த்து அவனைப் பார்த்துச் சிரித்தாள்..

இன்றைய விடியல் இனிதான ஒர் விடியல் என்று ரமணனுக்குத் தோன்றியது…

மாளவிகாவின் வாய்மொழி இத்தனை வார்த்தைகளைப் பூமாரியாய் பொழியுமென்று அவன் எதிர் பார்த்திருக்கவில்லை.. எங்கே அவனின் முரட்டுத்தனமான கோபத்தில் அவள் பயந்து போய் அவனை வெறுக்க ஆரம்பித்து விடுவானோ என்று அவன் சங்கடப் பட்டுப் போயிருந்தான்…

அப்படியில்லாமல் அவனிடம் அவள் இயல்பாக பேசியதோடு நிற்காமல்.. அவளையுமறியாமல் அவள் மனதின் கதவை திறந்து காட்டி விட்டதில் அவன் மகிழ்ந்து போயிருந்தான்…

“கட்டாயம் கிளம்பித்தான் ஆகனுமா..?”

போக மனமில்லாமல் அவன் கேட்டதில் ஒரு பிடிவாதக்கார முரட்டுத்தனத்தைக் கண்டு ரசித்தாள் மாளவிகா…

“கட்டாயம் கிளம்பித்தான் ஆகனும்…”

“இன்னும் கொஞ்சநேரம் இருக்கேனே.. ப்ளீஸ்…”

அவன் கெஞ்சுதலில் அவள் மனதுக்குள் தென்றலடித்தது.. அவனைப் போன்ற ஒருவன் அவளைப் போன்ற ஒரு சிறு பெண்ணிடம் கெஞ்சுகிறானே..

“அந்தக் கதையே இங்கே வேணாம்.. கிளம்புங்க.. க்விக்.. நீங்க போனால்தான் ஒளிஞ்சிருக்கிற மக்கள் பஸ் ஸ்டாப்புக்கு வந்து நிற்பாங்க…”

அவள் செல்லமாக விரட்டியதில் அவன் கண்களில் மீண்டும் மின்னலடித்தது…

0Shares

Reviews — Kaithotta Kalvane / கைத்தொட்ட கள்வனே

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link