Chapter 27

0Shares

மாளவிகா வேலைக்குப் போக ஆரம்பித்து.. ஆறுமாதங்கள் ஓடிவிட்டன.. அவளின் சம்பளம் எவ்வளவு என்ற விவரத்தை கார்த்திக் அறிந்து வைத்திருந்தான்.. அவன் எதிர்பார்த்ததை விட அதிகமான தொகையில் சம்பளம் இருந்ததில் அவனின் முடிவு வலுவானது.. மாளவிகாவின் கம்பெனியில் அவளை வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்கும் சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும்.. அப்படி அவள் போகும் பட்சத்தில் அவளின் சம்பளம் இரண்டு லட்சமாக உயரக்கூடும் என்று அவனுக்கு தகவல்கள் கிடைத்தன..

கோதாவரி கொக்கி போட்ட ஓய்வு பெற்ற நீதிபதியின் மகளுக்கு வேறு இடத்தில் திருமணமாகி விட்டது.. திருமணத்திற்குப் போய் வந்த கோதாவரி.. மணப் பெண்ணிற்கு ஒன்றரைக் கண் என்ற தனது புதிய கண்டுபிடிப்பை அறிவித்தாள்.. அப்படிப்பட்ட மனநிலையில் அவள் இருக்கும் போது மாளவிகாவைப் பற்றிய பேச்சை ஆரம்பிப்பது உசிதம் என்று கணக்கிட்ட கார்த்திக்.. அந்த சுபயோக.. சுபதினத்தில் மாளவிகாவைப் பற்றிய பேச்சை கோதாவரியின் காதில் போட்டு விட்டான்..

“அந்த சிதம்பரம் அப்பிராணியாச்சேடா..” என்றாள் கோதாவரி…

“அப்படியிருந்தாத்தானேம்மா உங்களுக்கு பிடிக்கும்..” என்று வினயமாக எடுத்துச் சொன்னான் கார்த்திக்…

“அந்த அப்பிராணித்தனத்தைச் சொல்லலைடா.. அதெல்லாம் அந்த ஆளுக்கு ஏழைக்குசும்பு ஜாஸ்தி.. வியாக்கினம் பேசவிட்டா விடிய விடிய பேசுவாரு.. 

பணம் காசு அவ்வளவா இல்லாத அப்பிராணின்னு சொன்னேண்டா கார்த்திக்…”

“ஓ.. நீங்க இந்த அப்பிராணித்தனத்தை சொன்னீங்களா..? நான் அந்த அப்பிராணித்தனத்தை சொல்றீங்களோன்னு நினைச்சிட்டேன்…” 

“அந்த ஆளுகிட்ட என்ன இருக்கப் போகுது..? நீ சாதாரண உத்தியோகத்தில இருந்தப்பவே அவரோட மூத்த பொண்ணை வேண்டாம்ன்னு சொன்னவங்க நாம.. இப்ப நீ ஐ பி எஸ் ஆபிசர்.. உன் தகுதி என்ன? தரம் என்ன? நீ போய் அந்த ஆளோட ரெண்டாவது மகளைக் கட்டறேன் கறியே..?”

“அம்மா.. அந்த பூமிகா வெத்து வேட்டு…”

“இவ சரவெடியாக்கும்..?”

நீ சொன்னாலும்.. சொல்லாவிட்டாலும் அவள் அப்படித்தான் என்று நினைத்துக் கொண்டான் கார்த்திக்…

“இவ படிச்சிருக்காம்மா.. என்ஜினியர்…”

மகன் சொல்வதிலும் ஒர் அர்த்தம் இருப்பதை அப்போதுதான் புரிந்து கொண்டாள் கோதாவரி…

“ஓ.. நீ அப்படி வர்றியா..?”

“ஆமாம்மா.. ஆமாம்.. அவ படிப்பை முடிச்சவுடனே வேலை அவளுக்காக கார்த்திருந்துச்சுன்னா அவ எவ்வளவு பெரிய கெட்டிக்காரின்னு நினைச்சுப் பாருங்களேன்..”

“வேலையும் பார்க்கிறாளா..?”

“மல்ட்டி இன்டர் நேசனல் கம்பெனியில வேலை.. சம்பளம் எவ்வளவு தெரியுமா..?”

கார்த்திக் சொன்ன தொகையைக் கேட்ட கோதாவரி ஆச்சரியப்பட்டுப் போனாள்..

“நிஜமாவாடா கார்த்தி சொல்ற..?”

“ஆமாம்மா.. ஆமாம்.. அவ வெளிநாட்டுக்குப் போனா.. சம்பளம் லட்சக் கணக்கில கிடைக்குமாம்.. யோசிங்கம்மா.. இவ தங்க முட்டை போடற வாத்து.. சீர்வரிசை.. சீதனம்ன்னு நாம பேரம் பேசினா ஒரே ஒரு தடவைதான் அது கிடைக்கும்.. இது.. காலமெல்லாம் நமக்கு கிடைச்சுக்கிட்டே இருக்கும்..”

கார்த்திக் சொன்னதை யோசித்துப் பார்த்த கோதாவரிக்கு.. அவன் சொல்வது சரியென்று பட்டு விட்டது.. அவள் மகனுக்காக மாளவிகாவைப் பெண் கேட்கும் முடிவை எடுத்து விட்டாள்.. அதை கணவரிடம் அறிவித்தும் விட்டாள்.. மனைவி கிழித்த கோட்டை தாண்டியறியாத தண்டபாணியும் அதற்கு தலையைத் தலையை ஆட்டி சம்மதித்து விட்டார்…

சிதம்பரத்திற்கு தகவல் போன போது.. அவரால் அதை நம்ப முடியவில்லை..

“கேட்டியா மதுரா.. நம்ம மாளவிகாவுக்கு ஐ பி எஸ் மாப்பிள்ளை கிடைச்சிருக்கார்..” என்று மகிழ்ந்து போனாள்..

“ஆமாங்க.. கொஞ்ச நாளா நம்ம வீட்டிலே நல்லதாவே நடக்குது…”

“கோதாவரி வீட்டிலே சம்பந்தம்ன்னு சொன்னா நம்ம உறவு ஜனமெல்லாம் அசந்து போயிருவாங்க…”

“அதைத்தான் நானும் நினைச்சேன்…”

அஸ்வினிடம் விவரம் போனபோது அவன்..

“சாப்ட்வேர் என்ஜினியரா இருந்தால் தேவலைன்னு தோணுதுப்பா.. இருந்தாலும்.. பரவாயில்லை..” என்று சொன்னான்..

கடைசியாக மாளவிகாவின் செவிகளை விவரம் எட்டியபோது அவள் துடித்துப் போய்விட்டாள்..

இப்படி ஒரு நாளை சந்திக்க நேரிடும் என்பதை அவள் அறிவாள் தான்.. இத்தனை சீக்கிரமாக சந்திக்க நேரிடும் என்பதை அறியவில்லை..

அவளும் ரமணனும் தினமும் போனில் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருந்தார்கள்.. வார இறுதி நாள்களில் தவறாமல் சந்தித்துக் கொண்டிருந்தார்கள்.. ரமணன் அவளிடம் தன் காதலைக் கூறிக் கொண்டேயிருந்தான்.. மாளவிகா அதை ஏற்கவில்லை யென்றாலும்.. மறுக்கவும் இல்லை.. அவளின் மனநிலையை அறிந்திருந்ததைப் போல ரமணனும் அவளை  வற்புறுத்தவில்லை…

அவனுக்கும்.. அவளுக்குமான பேச்சுக்களில் ஒரு நாள் கூட அவன் திருமணத்திற்கு வற்புறுத்தியதில்லை…

தனிப்பட்ட ஒர் உலகை சிருஷ்டித்துக் கொண்டு அதில் ரமணனுடன் இனிமையாக பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தவளின் முன்னால் நிஜம் வந்து நின்று அச்சுறுத்தியது…

“அப்பா.. நான் கல்யாணத்தைப் பத்தி யோசிக்கவே இல்ல..” பதட்டத்துடுன் சொன்னாள் மாளவிகா..

“இனிமே யோசிம்மா…”

“எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம்ப்பா…”

“ஏன்..?”

அந்தக் கேள்விக்கு என்ன பதிலைச் சொல்வது என்று தெரியாதவளாகத் திணறிப் போனாள் மாளவிகா..

நான் ஒருவனைக் காதலிக்கிறேன்.. அவன் ஊரறிந்த ரௌடி.. என்று அவளால் எப்படி அந்த அப்பாவி தந்தையிடம் சொல்ல முடியும்…?

‘கடவுளே..’ மாளவிகா பரிதவித்தாள்.. எதையாவது சொல்ல வேண்டுமே என்பதற்காக…

“அஸ்வினின் படிப்பு முடியட்டும்ப்பா..” என்று சொல்லி விட்டாள்..

ஆனால்.. அதற்கான எதிரொலிதான் அவளுக்கு கிடைக்கவில்லை…

“த்ச்சு.. த்ச்சு..” என்று பல்லியைக் கூப்பிட்டான் அஸ்வின்…

“ஏண்டா..?” பரிதாபமாகக் கேட்டாள் மாளவிகா…

“நீ தியாகச் செம்மலாக்கும்..? சும்மா கருப்பு வெள்ளை சினிமா ஹீரோயினைப் போலப் பேசி கடுப்படிக்காம காகாலகாலத்திலே கல்யாணம் பண்ணிக் கிட்டுப் போய் சேரு.. எனக்கு ஒருவருசப் படிப்புதான் பாக்கியிருக்கு.. அதை அப்பா பார்த்துக்குவார்.. என்னவோ ஆறுமாசம் சம்பளம் வாங்கினதுக்கே இந்த அலட்டு அலட்டறயே… அதுக்கு முதலில் உன்னையும் சேர்த்து அப்பாதான் படிக்க வைச்சார்.. ஞாபகத்தில் வைச்சுக்க..”

அவளின் காரணத்தை பொடிப் பொடியாக்கி விட்டுப் போய் விட்டான் அஸ்வின்.. வேறு எந்தக் காரணத்தைச் சொல்லித் தப்பிப்பது என்ற யோசனையில் ஆழ்ந்தாள் மாளவிகா…

0Shares

Reviews — Kaithotta Kalvane / கைத்தொட்ட கள்வனே

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link