Chapter 01

0Shares

தொடுவானாய் உனைக் கண்ட போதும்- உனைத்

தொட்டுவிடக் கனாக் கண்டேன்…

தொலைதூர தொடுவானைப் பார்த்தபடி மீரா உற்சாகமாய் தோழிகளுடன் பேசியபடியே அந்த மலைச் சரிவுப் பாதையில் இறங்கி நடந்தாள்.. ஊட்டியின் மாலை நேரக் குளிர் காற்று ஊசியாய் அவள் உடம்பைத் துளைக்க.. ஸ்வெட்டரின் மேல் முன் கைகளை மடித்துக் கட்டியவாறு தோழி சொன்ன நகைச்சுவையை ரசித்துக் கலகலவென்று சிரித்தாள்.

“அது என்னவோ மீரா.. மேத்ஸ் டீச்சர் கணக்கு சொல்லிக் கொடுப்பது அப்படியே சங்கீதம் போலவே இருக்கு…” ரூபிணி கண்களை சிமிட்டினாள்.

“இது என்னடி புதிதாய் இருக்கு..? கணக்குக்கும்.. சங்கீதத்திற்கும் என்ன சம்பந்தம்..?” மீரா புரியாமல் கேட்டாள்..

“ம்ம்.. அதை நம்ம சுகந்திகிட்டக் கேளு..” ரூபிணி விஷமமாய் சுகந்தியைப் பார்த்துச் சிரித்தாள்.

“என்னடி சுகந்தி.. இவ புதிர் போடுகிறாளே.. என்ன விசயம்…?” மீரா ஆவலாய் சுகந்தியைப் பார்த்தாள்.

“அதுவா.. நம்ம மேத்ஸ் டீச்சர் கணக்கு சொல்லிக் கொடுத்தால்.. அது அப்படியே அவங்க நீலாம்பரி ராகத்தைப் பாடுவது போலவே இருக்கும். என்னமாய் தூக்கம் வரும் தெரியுமா..? இந்த டி.வி. புரோக்ராம் ஒன்றில் வரும் டைட்டில் போல.. ‘சொக்குதே கண்ணு’ன்னு பாட வேண்டும் போல இருக்குடி.. அப்படி ஒரு தூக்கம் வந்தது.. என் கண் சொக்குது.. இவளானால் என்னைப் பார்த்து சிரிக்கிறா…” சுகந்தி புத்தகப்பையை வலது தோளுக்கு மாற்றியபடி கூறினாள்.

“அடிப்பாவி.. கடைசியில் கணக்குக்கும்.. சங்கீதத்திற்கும் உள்ள சம்பந்தம் இதுதானா..?”

“அது என்னவோ மீரா.. என் அம்மா தாலாட்டுப் பாடினால் கூட எனக்கு இவ்வளவு தூக்கம் வந்திருக்குமா என்பது சந்தேகம்தான்.. ஆனால் மேத்ஸ் மேடம் அங்கே வாயைத் திறந்தால் இங்கே எனக்கு கொட்டாவி வந்துவிடுகிறது..”

“விளங்கி விடும் போ.. இதுதான் நீ கிளாஸைக் கவனிக்கும் லட்சணமா..?”

“அவளைத் தூங்க வைக்கிற மேத்ஸ் மேடத்தை விட்டுவிடு.. பாவம்.. தாலாட்டுத் தாங்காமல் தூங்குகிற இவளைப் போட்டுக் கேள்வி கேளு..”

“விசயமே வேறு ரூபிணி…”

“என்னத்தை கண்டுபிடித்து விட்டாய்…?”

“மதியம் லஞ்சு பிரேக் முடித்ததும் மேத்ஸ் கிளாஸ்.. சாப்பிட்டவுடன் தூக்கம் வராமல் என்ன செய்யும்..? அதற்குப் போய் மேத்ஸ் மேடத்திடம் சங்கீதம் வந்திருக்குன்னு பழி போடுகிறீங்களே.. இருந்தாலும் உங்க இரண்டு பேருக்கும் இவ்வளவு கொழுப்பு ஆகாதுடி..”

அவர்கள் இப்போது சரிவான பாதையை விட்டுச் சற்று சமமான பாதைக்கு வந்து விட்டிருந்தார்கள்.. அவர்களுக்கு முன்னால் போன சைக்கிளின் பின்கேரியரில் பேப்பர் கடடு இருந்தது. அதிலிருந்து ஒரு பேப்பர் நழுவி விழ மீரா அதைக் குனிந்து எடுத்தாள்.

“அடடா.. இதைக் கவனிக்காமல் போகிறானே..”

“பேப்பர் போடுகிறவன் போல.. இப்படி அலட்சியமாய் போனால்.. எப்படி ஒழுங்காய் பேப்பர் போடுவான்..?”

“கூப்பிட்டுக் குடுக்கலாமா..?”

“எங்கே..? அவன் போய் விட்டான் அங்கே. நீ லவுட்ஸ்பீக்கர் போலக் கத்தினாலும், அவன் காதுக்கு கேட்காது..”

“பாவம்…”

“ரொம்பவும் பரிதாபப்படாதே.. நாம் பரிதாபப் படவேண்டிய விசயங்கள் உலகத்தில் நிறைய இருக்கு. உன் பரிதாபத்தை வேஸ்ட் பண்ணாமல் இறுக்கிப் பிடித்துக் கொண்டு நடையை எட்டிப் போடு.. வீடு போய் சேரலாம்..”

ரூபிணி கிண்டலாகக் கூறிக் கொண்டிருக்கும் போது மீரா தன் கையிலிருந்த பேப்பரின் முன் பக்கத்தில் பெரிய அளவில் கையில் கோப்பையைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்த அந்த இளைஞனின் புகைப்படத்தைப் பார்த்தாள். பார்த்தவள்.. தன் பார்வையை விலக்கிக் கொள்ள முடியாமல் அந்தப் புகைப்படத்iயே ஊன்றிப் பார்த்தவாறு நின்று விட்டாள்.

அந்தப் புகைப்படத்தில் இருந்த இளைஞனிடம் தெரிந்த ஒரு வசீகரம் அவளைக் கவர்ந்திருந்தது. அவனையே மீண்டும் பார்க்க வேண்டும் போல.. மனதில் ஒரு அவா தோன்ற அவள் மனம் படபடக்க அந்தப் படத்தைத் திரும்பவும் பார்த்தாள்.

“என்னடி.. இவ.. இப்படி மந்திரித்து விட்ட கோழி போல ஒரு மார்க்கமாய் விழித்துக் கொண்டு நிற்கிறாள்..?” ரூபிணி புரியாமல் சுகந்தியைப் பார்த்து வினவினாள்.

“எனக்கும் தெரியலையே..” சுகந்தி மீராவின் அருகே வந்து அவள் கையிலிருந்த பேப்பரை எட்டிப் பார்த்தாள்.

“இது யார் மீரா..? உனக்குத் தெரிந்தவரா…?”

சுகந்தி கேட்ட கேள்விக்கு ‘இல்லை..’யெனும் விதமாக இடம் வலமாய் தலையை ஆட்டினாள் மீரா.

“பின்னே.. ஏன் அந்தப் பேப்பரை அப்படிப் பார்த்த..? எங்கே கொடு.. நானும் பார்க்கிறேன்…”

சுகந்தி பேப்பரைப் பிடுங்க முயல.. மீரா கோபத்தோடு அதை நான்காக மடித்து.. தன் புத்தகப்பையினுள் செருகிக் கொண்டாள்.

ரூபிணிக்கு மீராவின் அந்தச் செய்கையைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது.

“ஏண்டி.. என்னவோ.. உன் வுட்பியின் போட்டோவை உரிமை கொண்டாடுவது போல அந்தப் பேப்பரில் வந்திருக்கிற போட்டோவை உரிமை கொண்டாடு கிறாயே..?” என்று மீராவைப் பார்த்து அவள் கேட்டு வைக்கவும், மீராவுக்கு கோபம் வந்து விட்டது..

“ச்சீ.. டென்த் படித்துக் கொண்டு.. என்ன பேச்சுப் பேசுகிற…? சகிக்கவில்லை ரூபிணி…”

“தோடா.. டென்த் படித்துக் கொண்டு வழியில் கிடைத்த பேப்பரில் இருக்கற போட்டோவை மட்டும் உத்து உத்துப் பார்க்கலாம்மாக்கும். போடி இவளே..”

அவர்களின் வீடுகள் வரிசையாகத் தெரிய.. அவர்கள் பிரிந்து அவரவரின் வீட்டுக்குள் சென்றார்கள்..

“அம்மா…” மீரா குரல் கொடுத்தபடி புத்தகப் பையைக் கழற்றி வைத்தாள்.

“இந்தா.. சூடாய் டீ சாப்பிடு..” என்றபடி சமையலறையில் இருந்து வெளிப்பட்டாள் இந்திரா.

“அப்பா வந்துவிட்டாராம்மா…?” சூடான டீயின் சுவையை ரசித்துப் பருகியபடி வினவினாள் மீரா..

“ஊஹூம்.. இன்னும் வரவில்லை.. ‘பேரு பெத்த பேரு.. தாகத்துக்கு நீலுலேது’ன்னு சொல்கிறாப்போல.. எஸ்டேட்டில் கணக்குப் பிள்ளை உத்தியோகம். ஆனால் வீடு திரும்பறது இருட்டினதுக்கு அப்புறம்தான். வருகிற சம்பளம் கைக்கும் வாய்க்கும் பத்த மாட்டேங்குது. அந்த மேனேஜர் எல்லா வேலைகளையும் இவர் தலையில் கட்டிவிட்டு ஹாயாய் ஊர் சுற்றுகிறான். எஸ்டேட் கணக்கு வழக்கையெல்லாம் இவர் விரல் நுனியில் வைத்துக் கணக்கை சரி பண்ணுவார். முதலாளி வந்தவுடன் என்னமோ அவன்தான் எல்லா கணக்கையும் போட்டு வைத்திருப்பது போல பாவலா காட்டுகிறான். உன் அப்பா வாயைத் திறக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு கை கட்டி நிற்கிறார். என்ன பிழைப்படி இது…”

இந்திரா மனக்குமுறலைக் கொட்டி விட்டு மீண்டும் சமையலறைக்குள் போய் விட்டாள். மீரா உடை மாற்றி விட்டு முன்னறைக்கு வந்து அமர்ந்தாள்.

“அக்கா.. இந்தக் கணக்கை எப்படிப் போட…?” ஆறாம் வகுப்பில் படிக்கும் மீராவின் தம்பி சிவா சந்தேகம் கேட்டான்.

மீரா தம்பிக்கு கணக்கை சொல்லிக் கொடுத்துவிட்டு தன் புத்தகப் பையை எடுத்துத் திறந்தாள். மேலாக இருந்த அந்த பேப்பர் கீழே விழுந்தது. எடுத்து ஆவலாகப் படித்துப் பார்த்தாள்.

கார் ரேஸில் கலந்து கொண்டு முதல் பரிசை வாங்கிய கோகுல் என்பவனின் புகைப்படத்தைப் போட்டு குறிப்பு எழுதியிருந்தார்கள்.

அவனைப் பற்றிய விவரங்களை ஒரு ஈர்ப்புடன் படித்தவள் அந்தப் புகைப்படத்தைத் திரும்பவும் பார்த்தாள்.. பின் எழுந்து சென்று அலமாரியைத் திறந்து தன் துணிகளுக்கு இடையில் அதைப் பத்திரப்படுத்தினாள்.

ஏன் அதைச் செய்தாள் என்பது மீராவிற்கே விளங்காத ஒன்றாக இருந்தது.

ஏன் அவனைப் பற்றிய செய்தியை ஆவலோடு படித்தாள்..? ஏன் அவனது புகைப்படத்தை விழி விரியப் பார்த்தாள்..? ஏன் அந்தப் பேப்பரை ஒரு பொக்கிஷம் போல் பத்திரப்படுத்தினாள்..?

விடையில்லாத கேள்விகளைக் கொண்ட வாழ்க்கையில், இந்த ஏன் என்ற கேள்விகளுக்கு மீராவினால் விடையைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை..

‘இனம் விளங்க வில்லை – எவனோ

என் அகம் தொட்டு விட்டான்….’

பாரதி பாடினானே.. இனம் விளங்காத பருவத்தில் மீராவின் அகம் தொட்டு விட்டதோ.. அந்த புகைப்படத்தில் இருந்த உருவம்…?

அதையும் இனம் பிரித்துப் பார்க்க முடியாத பதினைந்து வயதுப் பிராயத்தில் மீரா இருந்தாள். எதனால் அவள் ஈர்க்கப்பட்டாள் என்ற விவரம் புரியாமலே அவள் ஈர்க்கப்பட்டு விட்டாள்.

அவள் ஈர்க்கப்பட்டு விட்டாள் என்பதையும் புரிந்து கொள்ளாமலே.. மீரா.. அந்த ஈர்ப்பு விசையின் பக்கம் மனம் சாய்ந்தாள்.

“இந்திரா.. இந்திரா…” கதவு தட்டப்பட்டது..

மீரா எழுந்து சென்று கதவைத் திறந்தாள். வாசவன் மகளைக் கண்டதும் பாசத்துடன் புன்னகைத்தவாறு உள்ளே நுழைந்தார்.

“ஏனப்பா இவ்வளவு நேரம்…?” வாசல் கதவை அடைத்தபடியே மீரா கேட்டாள்.

“எஸ்டேட் முதலாளியின் மகன் வந்திருக்கிறார்ம்மா.. வேலை அதிகமாக இருந்தது. வரமுடியலை.. நீங்கள்லாம் சாப்பிட்டீங்களா..?”

“ஊஹூம்…”

“ஏன்.. நான் வந்தாலும் வராவிட்டாலும் நேரத்துக்கு சாப்பிட்டு விட்டுப் படுத்துவிட வேண்டும்ன்னு சொல்லியிருக்கேனா.. இல்லையா..?”

“நானும்.. தம்பியும் படித்துக் கொண்டிருந்தோம்ப்பா..”

வாசவன் உடைமாற்றி கைகால் கழுவிக் கொண்டு வந்து சாப்பிட அமர்ந்தார். அவரின் இரண்டு பக்கமும் மீராவும், சிவாவும் அமர்ந்து கொள்ள, இந்திரா தட்டுகளை வைத்து பரிமாற ஆரம்பித்தாள். அவர்கள் பேசிக் கொண்டே சாப்பிட்டதில் மீரா மெல்ல அந்த பேப்பரில் இருந்த புகைப்படத்தை மறந்தாள்.

0Shares

Reviews – Kana Kanden / கனாக் கண்டேன்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link