Chapter 02

0Shares

உன் பாதம்பட்ட மண்ணைக் கையிலெடுத்து-என்

 நெற்றியில் இட்டுக்கொள்ள கனாக்கண்டேன்…

“ஊப்…” என்று வாய் குவித்து கைகளிரண்டையும் சூடு பறக்கத் தேய்த்து அந்த சூட்டை கன்னத்தில் வைத்து அந்தக் குளிரை அனுபவித்து ரசித்தான் கோகுல்…

“கிரேட் கோகுல்.. உனக்கு ஊட்டியில் இவ்வளவு பெரிய எஸ்டேட் இருப்பதே எனக்குத் தெரியாது. எங்கே பார்த்தாலும் பச்சைப் பசேலென்று தேயிலைத் தோட்டம். நீ கொடுத்து வைத்தவன்” பொறாமையுடன் கூறினான் ரிஷி.

“ஆக்சுவலாய் நான் இங்கே அதிகம் வந்ததில்லை ரிஷி.. அப்பாவின் கோபத்திற்குப் பயந்து இந்த முறை வந்திருக்கிறேன். எனக்கு இந்த இயற்கையின் மீது ஈடுபாடு உண்டு. ஆனால் இதை ஒரு நாள் ரசிக்கலாம். இரண்டு நாள் ரசிக்கலாம். இங்கேயே இருந்தால் இந்த இயற்கையே போரடித்து விடும்..”

“உனக்கு என்னப்பா.. இது இல்லாவிட்டால் சென்னையில் கம்ப்யூட்டர் கம்பெனி இருக்கிறது. எதைத் தொட்டாலும் பணம் கொட்ட வைக்கும் வித்தையை நீ கற்றிருக்கிறாய். என்னை சொல்லு. நான் உன் கூடப் படித்துவிட்டு உன் கம்பெனியிலேயே வேலை பார்க்கிறேன்..”

“ஏண்டா.. அதில் உனக்கு வருத்தமிருந்தால் சொல்லு.. வேறு கம்பெனியில் சேர்த்து விடுகிறேன்..”

“ஐயையோ.. வேண்டாம்டா வேண்டாம்..”

“பின்னே.. அலுத்துக் கொள்கிறாயே…!”

“ஏதோ புலம்பிவிட்டேன்.. அதற்காக வேலையை விட்டுத் தூக்கி விடாதே கோகுல் ப்ளீஸ்…”

“அஃது.. அந்த பயம் இருக்கட்டும்..”

கோகுல் அலட்சியமாக தன் ஜீன்ஸ் பேண்ட்டின் பாக்கெட்டில் கைவிட்டபடி.. எஸ்டேட் பங்களாவின் படிகளில் தாவி ஏறினான்.

அதே சமயம் மேல்படியிலிருந்து இறங்கிக் கொண்டிருந்த மீரா.. அவனை நிமிர்ந்து பார்க்காமல் இறங்கிச் சென்றாள்.

“யாருடா அது…?” ரிஷி திரும்பிப் பார்க்க..

“என் மகள் மீராங்க..” என்று வாசவன் சொன்னார்.

கோகுல் அதற்குள் பங்களாவிற்குள் போய் விட்டான். அவன் மீராவைத் திரும்பியும் பார்க்கவில்லை.

“என்ன வாசவன் சார்.. நான் கேட்ட டீடெயில்ஸ் எல்லாம் ரெடியாய் இருக்கிறதா…?”

“இதோ இருக்கு தம்பி…”

“ம்ம்.. இப்படிப் பக்கத்தில் உட்காருங்க.. இதைக் கம்ப்யூட்டரில் நான் ஃபீட் பண்ண வாசித்துக் காட்டுங்க..”

அவர்கள் வேலையில் ஆழ்ந்தார்கள். ரிஷி சற்று நேரம் அவர்களுக்கு அருகில் உட்கார்ந்து இருந்து விட்டு சலிப்புத் தட்டியவனாக எழுந்து வெளியே சென்றான்.

வாசல் கேட்டைக் கடந்து மீரா உள்ளே வந்து கொண்டிருப்பதைக் கண்டவன் முகம் வியப்பைக் காட்டியது.

“என்ன ஒரு குழந்தைதனமான முகம்..” என்று நினைத்துக் கொண்டவன்.

“நீ வாசவன் சாருடைய பெண்ணாம்மா…?” என்று வினவினான்.

அவள் கூச்சத்துடன் ‘ஆமாம்’ என்று தலை யசைத்தாள்.

“என்ன விஷயம்…?”

“அப்பாவுக்கு சாப்பாடு கொண்டு வந்தேன்…”

“ஓ.. மதியமாகி விட்டதா. ஆமாம்.. நீ படிக்கிறாயா.. இல்லை..”

ரிஷி கேள்வியை முடிக்கும் முன்னால் அவசரமாய் குறுக்கிட்டு 

“டென்த் படிக்கிறேன்…” என்றாள் மீரா ரோசமாக…

“இன்றைக்கு ஸ்கூல் போகவில்லையா…?”

“எங்கள் ஸ்கூலில் ஞாயிறு அன்றைக்கு கிளாஸ் நடத்தமாட்டார்கள்…”

“ஓ.. இன்றைக்கு சன்டேயா…?”

ரிஷியின் மூக்கை உடைத்து விட்ட உணர்வில்லாமல் மீராவின் விழிகள் வாசவனைக் தேடின..

குட்டுப்பட்ட உணர்வுடன், ‘போயும்.. போயும்.. இந்த சின்னப் பெண்ணிடம் வாய் கொடுத்தேனே…’ என்று தன்னைத்தானே நொந்து கொண்டான் ரிஷி.

மீரா வாசவனைக் கண்டு கொண்டவளாய் அலுவலக அறைக்குள் பிரவேசிக்கப் போனபோது.. கம்ப்யூட்டர் திரையிலிருந்து கோகுல் தலையை நிமிர்த்தினான். அவனைக் கண்டதும் அதிர்ச்சியுடன் மீரா பின் வாங்கினாள்.

பேப்பரில் பத்திரப்படுத்தியிருந்த புகைப்படத்தில் இருந்தவனை.. என்றாவது ஒருநாள் நேரில் சந்திக்கக் கூடுமென்று அவள் நினைத்துக் கூடப் பார்த்ததில்லை..

கண்முன் தெரிந்த அவனது முகத்தைக் கலவரத்துடன் பார்த்தபடி மீரா பின் வாங்கினாள். ரிஷி அவளைப் புரியாமல் பார்த்தான்.

“என்னம்மா.. ஏன் வந்து விட்டாய்..? உன் அப்பாவிடம் சாப்பாட்டைக் கொடுக்கவில்லையா…?”

“கூட வேறு யாரோ இருக்கிறாங்களே…”

“அட.. அவனைத் தெரியாதா உனக்கு..? குட் ஜோக்.. அவன்தான் இந்த எஸ்டேட்டின் முதலாளி.. உன் அப்பா அவனிடம்தான் வேலை பார்க்கிறார்.”

“எஸ்டேட்டின் முதலாளியா…” மீரா வாயடைத்துப் போனாள்.

‘இவன் படத்தையா நான் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்.. கடவுளே.. இவன் என் அப்பாவிற்கு சம்பளம் கொடுக்கும் முதலாளி…’

ஏனோ மீராவிற்கு அழ வேண்டும் போல் இருந்தது. அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த ரிஷிக்கு ஒன்றும் புரியவில்லை.

“இந்தப் பெண் ஏன் கண் கலங்குது…?”

அவன் அவள் முகத்தையே ஊன்றிப் பார்க்க.. மீரா சட்டென்று சுதாரித்துக் கொண்டாள்.

“ஏம்மா.. உனக்கு கோகுலைத் தெரியாதா…?”

“கோகுலா..? யார் அது..?”

“சரியாப் போச்சு போ.. விடிய விடிய ராமாயணம் கேட்டுவிட்டு விடிந்தபின் சீதைக்கு ராமன் என்ன ரிலேசன்னு கேட்டு வைக்கிறாயே.. இது உனக்கே நல்லாயிருக்கா..? இல்லை.. உனக்கு என்னைப் பார்த்தால் இப்படிக் கேட்கணும்னு தோணுதா…?”

“அப்படியெல்லாம் ஒன்றுமில்லை…”

“அதுதானே பார்த்தேன்..”

“நிஜமாகவே கோகுல்ன்னா யார்ன்னு எனக்குத் தெரியாது..”

மீராவின் முகத்தில் இருந்த அறியாமையை ரசித்த வண்ணம் ரிஷி பதில் சொன்னான்.

“கோகுல்தான் – நீ இப்போ அது யாருன்னு கேட்டாயே.. அந்த உங்களின் எஸ்டேட் முதலாளி..”

‘ஓ.. அவன் பெயர் கோகுலா..’ மீரா மனதிற்குள் சொல்லிப் பார்த்துக் கொண்டாள்.. மனம் இனித்தது.

 ‘அன்றொரு நாள் அவனுடைய பேரைக் கேட்டேன்.

  அடுத்த நாள் அவனுடைய ஊரைக் கேட்டேன்.

  இன்றுவரை அவன் முகத்தை நானும் பாரேன்..’

தோட்டக்காரன் வைத்திருந்த ரேடியோவில் இருந்த பழைய திரைப்படப் பாடல் ஒலித்தது.. மீரா தன் உதட்டைக் கடித்துக் கொண்டாள்.

மீண்டும் ஒரு முறை கோகுலைப் பார்க்க வேண்டும் போல் தோன்ற.. குறுகுறுத்த மனதுடன் அறையினுள் தன் பார்வையைச் செலுத்தினாள்.. அவன் வாசவனிடம் எதையோ சொல்லிவிட்டு.. தன் பல் வரிசை தெரிய சிரித்துக் கொண்டிருந்தான்.

‘எவ்வளவு அழகாக சிரிக்கிறான்..’

என்னவோ.. அவனுக்கும் தனக்கும் ஏழேழு ஜென்மமாய் சொந்தம் இருப்பது போல.. மீரா அவனது சிரிப்பை ரசித்துக் கொண்டிருந்தாள். அதற்குள் வாசவன் மகளைப் பார்த்து விட்டு எழுந்து அவசரமாக வந்தார்.

“என்ன மீரா…?”

“நேரமாகிருச்சுன்னு அம்மா சாப்பாட்டைக் கொடுத்து விட்டாங்கப்பா..”

“சரி.. கொடு…”

சாப்பாட்டுக் கூடையைக் கொடுத்து விட்டு.. அவள் நகர.. “பத்திரமாய் போகணும் மீரா…” என்றவாறு வாசவன் உள்ளே போய்விட்டார்.

மீரா போகும் முன்னால் திரும்பவும் ஒருமுறை கோகுலைப் பார்த்து தன் மனதிற்குள் பதிவு செய்து கொண்டாள்.. பின் உற்சாகமாய் படிகளில் இறங்கி வீட்டை நோக்கி ஓடினாள்.

“யாரைப் பார்த்துக்கிட்டு நிற்கிற ரிஷி…?” பின்புறமிருந்து கோகுலின் குரல் கேட்டு ரிஷி திரும்பினான்.

“வாசவன் சாருடைய பெண்ணைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்…”

“ஊட்டியிலும் உன் திருவிளையாடலை ஆரம்பித்து விட்டாயா…?”

“சேச்சே.. அது சின்னப் பொண்ணுடா…”

“இதை என்னை நம்பச் சொல்கிறாயா…?”

“நம்பாவிட்டால் நீயே பார்…”

ரிஷி கை காட்டிய திசையில் மீரா தென்படவில்லை.. அவள் சரிவில் இறங்கி ஓடி மறைந்து விட்டிருந்தாள். அங்கே பனி மூட்டம்தான் தென்பட்டது.

“அங்கே யாரும் இல்லையேடா…”

“நீ மிஸ் பண்ணி விட்டாய்..”

ரிஷி இயல்பாகக் கூறியபடி பங்களாவிற்குள் சென்றான்..

“ஓகே வாசவன் சார்.. நாங்கள் சாப்பிடப் போகிறோம். நீங்களும் சாப்பிட்டு விட்டு வந்து விடுங்கள். நான் ஈவினிங்கே கிளம்ப வேண்டியிருக்கும்..”

“சரிங்க சார்…”

அன்று இரவு வாசவன் வந்தபோது மீரா டி.வி.யில் கவனமாக இருந்தாள். இந்திரா கொடுத்த தூண்டில் முகம் துடைத்துக் கொண்டே வாசவன் பேசினார்..

“ஒருவழியாய் எஸ்டேட் முதலாளி கிளம்பிப் போய் விட்டார்.. இனிமேல் கொஞ்சம் சீக்கிரம் வரலாம் இந்து…”

‘என்னது.. அவன் போய் விட்டானா..’ மீரா அதிர்ந்து போய் தகப்பனாரைப் பார்த்தார்.

மகளின் பிஞ்சு மனதில் எழுந்த போராட்டத்தை உணராமல் வாசவன் தன் போக்கில் பேசிக் கொண்டிருக்க.. மீரா டி.வி. யைமறந்து.. உயிரற்ற உடலைச் சுமந்து கொண்டு உள்ளே சென்றாள்..

“யார் மனதில் யாரிருப்பார்….

யாரறிவார் உலகிலே…”

டி.வி.யில் திரைப்படப் பாடல் ஒலித்துக் கொண்டிருக்க மீரா வேதனையுடன் கண்களை மூடிக் கெண்டாள்…

0Shares

Reviews – Kana Kanden / கனாக் கண்டேன்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link