Chapter 07

0Shares

உனக்காக உருகுகின்ற என் மனதை நீ

ஒரு நாள் உணர்ந்துவிடக் கனாக் கண்டேன்…

சென்னையில் இறங்கியதும்.. மீராவை முதலில் தாக்கியது.. புகைபடிந்த.. மாசுநிறைந்த காற்று.. அடுத்து அவளைப் பாதித்தது அதன் ஜன நெருக்கடியும்.. பரபரப்பும்! எங்கும் இரைச்சல் கேட்டுக் கொண்டே இருந்தது.

சப்தங்களின் மத்தியில் இருந்த பிரிந்து கோகுலின் வீடு இருந்த பகுதிக்குள் ஆட்டோ சென்றதும், மீண்டும் ஊட்டியில் இருக்கும் மனநிலையை அடைந்தாள் மீரா..

“இதென்ன இந்த ஊர் இப்படியிருக்கு. ஊட்டிபோல அமைதியான கண்ணுக்கு பசுமையான சூழலும்.. சுத்தமான மாசில்லாத மலைக்காற்று இங்கு தேடினால் கூடக் கிடைக்காது போல..”

மீராவின் மனம் சிணுங்கியபோது.. அவளுடைய ஆழ்மனம் அவளைப் பார்த்து நகைத்தது…

‘அப்படியானால்.. இப்படியே ஊட்டிக்குத் திரும்பிப் போய் விடுகிறாயா…?’

மீராவின் மனம் சட்டென்று விறைத்துக் கொண்டது..

‘அது எப்படி என்னால் முடியும்…?’

ஆழ்மனம் அமரிக்கையாய் கூறியது..

‘தெரியுதில்லையா.. உன்னால் இனி சென்னையை விட்டு நகர முடியாதென்று தெரிகிறதில்லையா..? அப்படியிருக்கையில் ஊட்டியை நினைத்து இனி ஏங்காதே.. உன் உயிர் இங்கு இருக்கும்போது.. மற்றவை உன்னை பாதிக்கக் கூடாது…’

ஆட்டோ.. கோகுலின் வீட்டின் முன்னால் நிற்க.. வாசவன் பெட்டியோடு இறங்கினார்.

“இறங்கும்மா.. இதுதான் என் முதலாளியின் வீடு…”

அழகான மாளிகை அது… ஆடம்பரமாய் தெரிந்த அந்த பங்களாவை விழிவிரியப் பார்த்தவண்ணம், பெட்டிகளோடு கீழே இறங்கினாள் மீரா.

‘அவன் இவ்வளவு பெரிய பணக்காரனா..?’ மனம் அஞ்சியது.. அதே சமயம் அழ்மனம் அதட்டியது…

‘இருந்து விட்டுப் போகட்டுமே.. நீ அவனை.. அவனுக்காக மட்டுமே காதலிக்கிறாய்.. அவனது பின்புலம் தெரியாத வயதிலிருந்து நேசிக்கிறாய்.. அவன் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தால் என்ன..? நீ நேசிப்பது அவனை மட்டும்தான்.. பயப்படாதே…’

மீரா மனத்தெளிவோடு வாசவனைப் பின் தொடர்ந்தாள்.

“வாங்க வாசவன்.. வாம்மா மீரா.. பிரயாணம் சௌகர்யமாக இருந்ததா..?” சாரதா வரவேற்றாள்.

“அது குறைவில்லாமல் இருந்ததும்மா.. மீராவை இன்றைக்கு வேலையில் சேர்த்து விட்ட கையுடன்.. ஒரு நல்ல லேடீஸ் ஹாஸ்டலாகப் பார்த்து சேர்த்து விட்டேனென்றால் நான் இன்றைக்கு நைட்டே ஊட்டிக்கு கிளம்பி விடுவேன்…”

“அதைப் பற்றி யோசிக்கலாம் வாசவன்.. நீங்களும் மீராவும்.. முதலில் குளித்து விட்டு வாங்க.. சாப்பிடலாம்..”

முதலாளியின் வீடு என்ற சங்கோஜத்தில் வாசவன் இருக்க.. அவர்கள் வீட்டின் விருந்தாளிகள் என்ற முறையில் சாரதா இயல்பாக உபசரித்தாள்.

அவர்கள் குளித்து.. உடைமாற்றி வந்த போது ஹாலில் ராம்நாத் அமர்ந்திருந்தார்.

“வணக்கம் முதலாளி…”

“ம்ம்.. வாசவன்.. வாங்க மீரா.. என்னம்மா சென்னையை பிடித்திருக்கிறதா…?”

ராம்நாத் கேட்ட கேள்விக்கு மீரா வெட்கத்துடன் தலை அசைத்தாள். ஊட்டிக்கு ராம்நாத்தும்.. சாரதாவும் வந்திருக்கும் போது மீரா சாரதாவிடம் மட்டும்தான் பேசுவாள். ராம்நாத்திடம் அவள் பேசியதில்லை. இன்றைக்கு அவர் முன்னால் பேச வேண்டியிருக்கிறதே என்ற வெட்கம் அவளைச் சூழ்ந்து கொண்டது.

“சாரதா.. இவங்களுக்கு டிபன் ரெடியாக இருக்கிறதா…?”

“அப்பவே ரெடி…”

வாசவனுக்கு முதலாளியின் வீட்டில் கிடைத்த வரவேற்வு மனதிற்கு இதமாக இருந்தது. மீராவை சென்னையில் தனியே விட்டுப் போக வேண்டியிருக்கிறதே என்ற மனக்கிலேசம் அவரை விட்டுப் பறந்தது. சாரதா மீராவை கவனித்துக் கொள்வாள் என்ற நம்பிக்கை அவர் மனதில் துளிர் விட்டிருந்தது.

அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது.. ரிஷி வந்து விட்டான்.

“அம்மா…”

“வா ரிஷி.. மீரா ஊட்டியிலிருந்து வந்து விட்டாள்…”

“ஹாய் மீரா…”

“குட்மார்னிங் அண்ணா…”

எதையோ சொல்லப்போன ரிஷி.. மீராவின் பக்கத்திலிருந்த வாசவனைப் பார்த்ததும்.. வாய் மூடிக் கொண்டான்.

“ரிஷி.. மீராவை ஆபீஸிற்கு கூப்பிட்டுக் கொண்டு போய் அவளுடைய வேலை எது என்று சொல்லிக் கொடு..”

“செய்துவிட்டால் போகிறது.. வாம்மா…”

வாசவனும்.. அலுவலகம் வரைக்கும் கூட வந்தார்.. அந்த பிரம்மாண்டமான கம்ப்யூட்டர் கம்பெனியின் உற்புறம் நுழைந்ததும்.. அவருக்குள் பிரமிப்பு தட்டியது.

“இங்கேயா.. என் மகள் வேலை பார்க்கப் போகிறாள்..?”

மகளின் எதிர்காலம் வளமாக அமையும் என்ற நம்பிக்கை அவருக்கு வந்து விட்டிருந்தது.

“இனி மீரா வேலை செய்ய ஆரம்பிக்கட்டும்.. நீங்கள் பயப்படாமல் வீட்டுக்குப் போங்க சார்..”

“இதுவரை என் பெண் தனியாக எங்கேயும் போனதில்லை…”

“காலேஜிற்கு தனியாத் தானே போவாள்..? அதைப்போல இதையும் நினைத்துக் கொள்ளுங்க…”

“இருந்தாலும் தம்பி…”

“இருந்தாலும் இல்லாவிட்டாலும் என் பதில் ஒன்றுதான்.. மீராவை தன் காலில் நிற்க விடுங்க.. நான் இங்குதானே இருக்கிறேன். நான் பார்த்துக் கொள்ள மாட்டேனா..? அதுவும் உங்கள் பெண் என்னை அண்ணான்னு கூப்பிட்டு வைத்திருக்கிறாள். அருமை பெருமையாய் பார்த்துக் கொள்வேன். கவலைப்படாமல் போய் விட்டு வாங்க…”

“இவளை லேடீஸ் ஹாஸ்டலில் சேர்த்து விடணுமே தம்பி…”

“ம்ம்.. அம்மா சொன்னாங்க.. ஈவினிங் மீராவைக் கூப்பிட்டுக் கொண்டு வரும்போது விவரத்தோடு வருகிறேன்..”

வாசவன் போக மனமில்லாமல் போனார். மீரா.. சுவாதீனமாக ரிஸப்சனிஸ்ட் சீட்டில் அமர்ந்து தன் முன்னால் இருந்த கம்ப்யூட்டரை உயிர்ப்பித்தாள்.

“உனக்கு பாஸ்வேர்ட் கிரியேட் பண்ணனும். அதுவரை பொறுமையாய் அதை நோண்டாமல் இரு..”

“சரிங்க அண்ணா…”

“அம்மா.. தாயே.. பரதேவதை.. இந்த அண்ணன்.. தங்கை உறவையெல்லாம் ஆபீஸிற்கு வெளியில் சொல்லும்மா.. இந்த ஆபீஸிற்குள் அண்ணான்னு கூப்பிட்டு வைக்காதே..”

“ஏன் அண்ணா…?”

“திரும்பவும் அண்ணாவா..? இதோ பார்.. உன் அப்பா உன்னை விட்டுவிட்டுப் போய்விட்டார். இந்த ஆபீஸில் வேறு யாரையும் உனக்குத் தெரியாது. என் ஹெல்ப் இருந்தால்தான் உன்னால் இங்கே வண்டியை ஓட்ட முடியும். என் ஹெல்ப் வேண்டுமா.. வேண்டாமா…?”

“வேண்டும்.. வேண்டும்…”

“அஃது அந்த பயம் நெஞ்சில் இருக்கட்டும். இப்போதுதான்.. கொஞ்சம் கொஞ்சமாய் கடலை போடுவதில் தேறிக் கொண்டு வருகிறேன்.. கொஞ்ச நஞ்சம் என்னைத் திரும்பிப் பார்க்கிற ஃபிகரையும் நீ கெடுத்து விடாதே.. நீ அண்ணான்னு கூப்பிட்டால் என் இமேஜ் என்னாவது..? அதனால் அடக்கி வாசிம்மா கண்ணு. சாயந்தரம் வீட்டிற்குப் போன பின்னால்.. நாம் பாசமலர் வளர்க்கலாம்.. அதுவரை பொறுத்திரு…”

இப்போது இவன் அலறும்படி அப்படி என்ன சொல்லி விட்டோம் என்று குழம்பிப் போனாள் மீரா.

‘அண்ணான்னு கூப்பிடுவது அவ்வளவு பெரிய தவறா…?’

“இப்போது ஏன் என்னை இப்படிப் பார்க்கிற…?”

“இல்லை.. உங்களை வேறு எப்படித்தான் நான் கூப்பிடுவது…?”

“ஏன்.. ரிஷின்னு கூப்பிடு..”

“சேச்சே.. அது நல்லாயிருக்காது…”

“ஏம்மா நல்லாயிருக்காது..? என் பெயர் நல்லாயில்லைன்னு சொன்ன முதல் ஆள் நீதான். ரிஷிங்கிற பெயரை விட.. மீராங்கிற பெயர் நல்லா இருக்கா…?”

“ஐயோ.. நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை..”

“வேறு எந்த அர்த்தத்தில் சொன்னாய்…?”

“நீங்கள் வயதில் பெரியவர்..”

“ஆமாமாம்.. குச்சியை ஊன்றி நடக்கிற தொண்டுக் கிழவன்தான் நான்…”

“நான் அப்படியா சொன்னேன்…?”

“இதோ பார் மீரா.. உனக்கும் எனக்கும் பேச்சு வார்த்தை நடந்தாலே.. அது இப்படித்தான் வந்து முடியும்.. நீ வாயைத் திறந்தாலே எனக்கு வில்லங்கம் தான்..”

“பேசாமல் எப்படி நான் வேலையைப் பார்ப்பது…?”

“இப்படிப் பேசாமல் ஒழுங்காய் பேசு.. என்னைப் பெயர் சொல்லிக் கூப்பிட முடியாவிட்டால் சார்.. மோர்ன் எதையாவது சொல்லிக் கூப்பிடு அண்ணான்னு மட்டும் கூப்பிட்டு வைக்காதே..”

“ஏ..ன்…?”

“ஏன்னா.. உன்னைப் பார்த்து… மத்த பெண்களும் இதைப் பழகித் தொலைத்து விட்டால் என்ன செய்வது..? ஊட்டியிலே நீ பாட்டுக்கு.. புல்லையும்.. மரத்தையும் பார்த்துக்கிட்டு இருந்தாய்.. நான்தான் வாயை வைத்துக் கொண்டு சும்மாயிருக்காமல் வம்பைக் கட்டி இழுத்தேன். உன்னைப்போய் ‘சென்னைக்கு வா’ என்பேனா..? என் புத்தியைச் சொல்ல வேண்டும்…”

“போதும்.. ஓவராய் திட்டாதீங்க.. இனிமேல் ஆபீஸிற்குள் அண்ணான்னு கூப்பிடலை…”

“வெரிகுட்…”

“ஆனால் மனதிற்குள் நீங்கள் என் அண்ணன்தான்..”

“தாராளமாய் நீ இந்த அண்ணனுக்கு உன் மனதில் ஒரு கோயில் கட்டு. நானும் மனதிற்குள் தங்கைக்கொரு கீதம் பாடுகிறேன். வெளியில் அடக்கி வாசி..”

“என்னவோ போங்க.. எனக்கு ஒன்றும் புரியவில்லை..”

“வேலையைத் தானே சொல்கிறாய்…?”

“அதைத்தான் நீங்கள் சொல்லிக் கொடுக்கவே ஆரம்பிக்கவில்லையே.. அதைத் தவிர மற்ற எல்லாவற்றையும் சொல்லி விட்டீர்கள்…”

“இங்கே நீ சீனியரா.. இல்லை நான் சீனியரா…?”

“நீங்கள் தான் சீனியர்..”

“அதை நினைவில் வைத்துக் கொண்டு.. இங்கே கவனி..”

அடுத்து கழிந்த மணித்துளிகளில் ரிஷி.. அவளுக்கு வேலையை சிறப்பாகக் கற்றுத் தந்தான். மீரா நிறைய சந்தேகம் கேட்டாள். மனதிற்குள் அவளைப் பாராட்டியபடி, அவளுடைய சந்தேகங்களுக்கு விளக்கம் சொன்னான் ரிஷி. அன்று மாலைக்குள் மீரா, வேலையைக் கற்றுக் கொண்டு விட்டாள்.

0Shares

Reviews – Kana Kanden / கனாக் கண்டேன்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link