Chapter 08
உன்னோடு ஓர்நாளில் – நான்
உறவாகிவிடக் கனாக் கண்டேன்…
“ரெடியா மீரா…?”
“ஐஸ்ட் ஃபைவ் மினிட்ஸ் சுபா…”
“நேரமாகிவிட்டது. சீக்கிரம் வா…”
“இதோ.. வந்துவிட்டேன்..”
மீரா அவசரமாய் அறையிலிருந்து வெளிப்பட்டாள். மெரூன் கலரில் காட்டன் சுடிதார். தலைமுடியை விரிய விட்டு.. லேசாக முடியெடுத்து கிளிப் போட்டிருந்தாள்.. சுபாஷிணியைப் பார்த்து லேசாக சிரித்தாள்.
“ஊம்.. சென்னைவாசியாகவே ஆகிவிட்டாய். இந்த நான்கு மாதங்களில் சென்னை உனக்குப் பழகி விட்டது..” என்றான் சுபாஷிணி.
“என்ன பழகி என்ன செய்ய..? இன்னும் இந்த பஸ்ஸைப் பிடித்து ஆபீஸ் போகப் பழகவில்லையே.. தினமும் உன் ஸ்கூட்டியில் தொற்றிக் கொண்டு உன்னைத் தொந்தரவு பண்ணிக்கிட்டு இருக்கேன்…” மீரா சிரித்தாள்.
“இது ஒரு தொந்தரவா..? தனியாய் இந்த அபார்ட்மெண்ட்டில் இருந்தேன். துணைக்கு கூப்பிட்டுக் கொண்ட யாரும் என் குணத்திற்கு தோதாய் அமைய வில்லை. அவர்களை சகித்துக் கொண்டு இருப்பதைவிட தனியாக வாடகை கொடுத்து இருப்பதே பெட்டர்ன்னு முடிவுக்கு வந்திருந்தபோது.. நல்லவேளையாக நீ என்னுடன் தங்க வந்தாய்.. வாடகை.. வீட்டுச் செலவை ஷேர் பண்ணிக் கொள்வது ஒரு புறமிருக்கட்டும். என் குணத்தோடு நீ ஒன்றிப் போகிறாயே.. அதுவே எனக்கு எவ்வளவு பெரிய ரிலீஃப் தெரியுமா…?” சுபாஷிணி உண்மையான நன்றி.. குரலில் தொனிக்கக் கூறினாள்.
இதுவும் ரிஷியின் ஏற்பாடு தான். மீரா வேலைக்குச் சேர்ந்த அன்றைக்கு மாலையில்.. மீராவோடு கோகுலின் வீட்டிற்குப் போனபோது…
“என்ன ரிஷி.. மீராவின் ஹாஸ்டல் விசயம் என்ன ஆனது..?” என்று விசாரித்தாள் சாரதா..
“அம்மா.. சென்னையில் இருக்கும் தண்ணீர் பஞ்சத்தில் ஹாஸ்டல் எல்லாம் இந்தப் பெண்ணிற்கு சரிப்பட்டு வருமா..? இதுவே.. ஊட்டியில் கரைச்சலில்லாமல் வளர்ந்த பொண்ணு..”
“அதுக்காக.. என்ன செய்யலாம்ன்னு நீ நினைக்கிற..”
“நம் ஆபீஸில் சுபாஷிணி.. சுபாஷிணின்னு ஒரு பொண்ணு வேலை செய்யுது..”
“ஒரு பொண்ணுக்கு இரண்டு பெயரா…?”
“தப்புத்தான்ம்மா.. தெரியாமல் சொல்லி விட்டேன்..”
“ம்ம்.. போகுது போ.. மேலே சொல்லு…”
“அந்தப் பொண்ணுக்கு சொந்த ஊர் புதுக்கோட்டை..”
“அவ எந்த ஊராய் இருந்தால் நமக்கென்னடா…?”
“பொறுங்கம்மா.. அந்தப் பெண் தனியாய் ஒரு அபார்ட்மென்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருக்கு.. நம்ம மீராவை அவள் கூடத் தங்க வைத்து விட்டால் என்ன…?”
“அவள் குணம் எப்படி…?”
“பத்தரை மாத்துத் தங்கம்…”
“வாடகை.. மத்த செலவு பற்றிப் பேசினாயா…?”
“ம்ம்.. பேசினேன்.. ஹாஸ்டலுக்கு மாதாமாதம் கொடுக்கும் பணத்தின் அளவுதான் இங்கேயும்
வருகிறது.”
“அந்தப் பெண், மீராவை கூடத் தங்க வைத்துக் கொள்ள ஒப்புக்கொள்ளுமா…?”
“அதெல்லாம் சந்தோஷமாய் சரியென்று சொல்லிவிட்டாள்.. வாடகையையும் வீட்டுச் செலவையும் ஷேர் பண்ணிக் கொள்ள ஆள் கிடைத்தால் விடுவாளா…?”
சாரதாவும்.. வாசவனும் ரிஷியுடன் போய்.. நேராகவே சுபாஷிணியின் குடியிருப்பை பார்த்துவிட்டு வந்தார்கள். சுபாஷிணியின் பேச்சும்.. பழகும் விதமும் அவர்களுக்குத் திருப்தியாக இருந்துவிட.. மீரா.. சுபாஷிணியுடன் குடியேறினாள்.
இரண்டு மாதங்களில் தேர்வு முடிவுகள் வெளியாகின. மீரா.. பல்கலைக்கழகத்தில் தங்கப் பதக்கம் வாங்கி யிருந்தாள். அவளுடைய மனதிற்குள் மகிழ்ச்சிப் புயல் அடித்தது. இனி கோகுல் அவளை வேலையிலிருந்து நீக்க மாட்டான் என்ற நினைவே அவளது மனதை நிறைத்தது.
ரிஷியின் உதவியுடன் சென்னைப் பல்கலைக் கழகத்தில் எம்.ஸி.ஏ. மாலை நேர வகுப்பில் சேர்ந்தாள்.
“கோகுல் வந்த பின்னால் உனக்கு சீட் மாறும். புரோகிராமர் வேலையில் ஜாயின் பண்ணும் நாள் வந்து விட்டது…” என்று ரிஷி சொல்லியிருந்தான்.
சென்னை பஸ்களில் ஏறத்தெரியாமல் மீரா திணறுவதைப் பார்த்த சுபாஷிணி தன் வண்டியிலேயே அவளை அலுவலகத்திற்கு அழைத்துக் கொண்டு போவதை வழக்கமாக்கிக் கொண்டாள்.
“இன்னும் கொஞ்சநாளில்.. நானே சொந்தமாக வண்டி வாங்கிக் கொள்வேன் சுபாஷிணி..” மீரா தயக்கத்துடன் கூறியபோது…
“அதைப் பற்றி அப்போது பார்த்துக் கொள்ளலாம். இப்போதே ஏன் நினைத்துக் கவலைப்படுகிறாய்..?” என்று அவளது வாயை அடைத்து விட்டாள் சுபாஷிணி.
அவர்கள் அலுவலகத்திற்கு பிரவேசித்தபோது.. அலுவலகம் பரபரப்பாக இருந்தது.
“கோகுல் வந்துவிட்டான் மீரா.. எந்த நேரமும் உன்னைக் கூப்பிடுவான். தயாராய் இருந்து கொள்..” ரிஷி வந்து எச்சரித்தான்.
மீராவின் தலையில் ரத்தம் பாய்ந்தது. ‘ஜிவ்’ வென்ற உணர்வு அவளுடைய தலைக்குள் ஏற.. அவள் அப்படியே உட்கார்ந்து விட்டாள்.
வந்து விட்டானா..? கடைசியில் அவள்.. அவனுடைய முகத்தைப் பார்த்து விடப் போகிறாளா..? இது கனவா.. இல்லை நிஜமா..?
அவளுடைய டேபிளின் மேலிருந்த இண்ட்டர்காம் ஒலித்தது. எடுத்துப் பேசினாள்.
“மீரா…?”
“யெஸ் சார்…”
“என் கேபினுக்கு வாங்க…”
முதன் முதலாய் அவளது செவிகளில் அவனது குரல் ஒலித்தது. அவளிடம் அவன் பேசிவிட்டானா…? அவளை பெயர் சொல்லி அழைத்தது அவன்தானா…?
பதில் சொல்லத் தெரியாமல்.. தடுமாறி.. ஸ்தம்பித்துப் போய் அமர்ந்து விட்டாள் மீரா.. அவன் பேசியபோது ஏன் சரியாகப் பதில் சொல்ல முடியவில்லை என்பது அவளுக்கே தெரியவில்லை.
தன் அறையில் இண்ட்டர்காமை வைத்த கோகுல்.. மறுமுனையில் ஒலித்த குரலின் இனிமையில் கவரப்பட்டான்.
“ஸ்வீட் வாய்ஸ்…” என்று நினைத்துக் கொண்டவன் அறைக் கதவு லேசாக தட்டப்படும் ஒலியைக் கேட்டதும்.
“யெஸ்.. கமின்…” என்று குரல் கொடுத்தான்.
மீரா நடுக்கத்துடன் உள்ளே வந்து நின்றாள்.
“டேக் யுவர் சீட்..”
“தேங்க்ஸ்…”
“உங்க ரிஸல்ட் பார்த்தேன்.. நிறைய மார்க் வாங்கியிருக்கீங்க.. பட் உங்களால் இப்போதே புரோக்ராமர் வேலை பார்க்க முடியாது. அதற்கு டிரெயினிங் வேண்டும்.”
“நான் ஏற்கெனவே இங்கிருக்கும் வேலைகளைப் பார்த்துக் கொஞ்சம் கற்றுக் கொண்டிருக்கிறேன் சார்…”
“எனக்கு கொஞ்சமெல்லாம் போதாது.. நிறைய எக்ஸ்பீரியன்ஸ் வேண்டும்..”
‘வேலை இல்லையென்று சொல்லி விடுவானோ…’ மீரா நடுக்கத்துடன் அவனது முகம் பார்த்தாள். அவனுடைய முகத்தில் ஓர் இறுக்கமும்.. கடுமையும் நிலவின.
அவனுடைய கடுமையான முகத்தையே மீரா கவலையுடன் கவனித்துக் கொண்டு அசைவற்று அமர்ந்திருந்தாள்.
‘என்னைப் போகச் சொல்லி விடாதே.. உன் நிழலில் இருக்க வேண்டுமென்று கனாக் கண்டு வந்தவள் நான்.. உன் நிழலுக்காக.. என் தாய் தந்தையின் சிறகுக்கடியில் இருந்த பாதுகாப்பைத் துறந்து வந்திருக்கிறேன். என் கூடப் பிறந்தவனின் தோழமையை மறந்து வந்திருக்கிறேன். என்னைப் புறக்கணித்து விடாதே…’
அவளுடைய இறைஞ்சும் பார்வையைக் கண்டவனின் புருவம் உயர்ந்தது..
‘ஏன் இப்படிப் பயப்படுகிறாள்..? வேலை போய் விடுமென்றா..? பாவம்.. பணத்தேவை இருக்கும் போல..’
“மீரா.. புரோக்ராமர் வேலையை நீங்கள் மெதுவாகக் கற்றுக் கொள்ளுங்கள் அதுவரை எனக்கு பி.ஏ.வாக இருங்கள்…”
மீராவினால் தன் காதுகளையே நம்ப முடியவில்லை. பசித்திருந்தவளுக்கு பழைய சோறு கிடைத்தாலே அதை தேவாமிர்த்மாக நினைப்பாள். உண்மையிலேயே தேவாமிர்தம் கிடைத்து விட்டால்.. அவளது நிலையை வாய் விட்டுச் சொல்ல முடியுமா..? வர்ணனையில் உணர்த்தத்தான் முடியுமா…?
அவன் நிழல் கிடைத்தால் போதுமென்ற நினைவில் இருந்தவளுக்கு.. அவனது முகதரிசனமே கிடைத்தது.. அதைவிட அதிசயமாய்.. நாள் முழுவதும் அவன் அருகிலிருக்கும் பெர்ஸனல் செகரட்டரியாக வேலையும் கிடைத்தவுடன்.. தன் அதிர்ஷ்டத்தை நினைத்து அவள் மகிழ்ந்து போனாள்.
“தேங்க் யு சார்.. தேங்க் யு வெரிமச்..” மீரா பேச முடியாமல் தவிக்க…
‘பாவம் வேலைகிடைக்காது என்று நினைத்திருப்பாள்.. வேலை கிடைத்ததும் அவளால் ஆனந்தத்தில் பேசக் கூட முடியவில்லை போல…’ என்று அவன் நினைத்தான்.
“ஓ.கே.. என் பி.ஏ.வாக முதலில் இருந்த லேடி இப்போது புரோக்ராமராக இருக்கிறாங்க.. பெயர் ஷர்மிளா.. அவங்ககிட்ட வேலையைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்க.. மற்றபடி எனக்கு.. எள் என்றால் எண்ணெயாக நிற்க வேண்டும்.. அண்டர்ஸ்டாண்ட்…?”
“ஓ.கே. சார்!…”
மீரா இறக்கையில்லாமல் பறந்தாள். அன்று வீடு திரும்பியதும் சாப்பிடும் நினைவு கூட இல்லாமல் விட்டதைப் பார்த்தவாறு படுத்து விட்டவளைக் கண்ட சுபாஷிணி கவலையுடன் அவளருகே வந்து நெற்றியில் கை வைத்துப் பார்த்தாள்.
“மீரா.. ஆர் யு ஆல்ரைட்…?”
“ம்ம்…”
“எனிதிங் ராங்க்…?”
மீராவிற்கு சிரிப்பு வந்தது.. புரண்டு படுத்து சுபாஷிணியைப் பார்த்துக் கண் சிமிட்டிச் சிரித்தாள்.
“ஏய்ய்.. உனக்கு இது கூடத் தெரியுமா…?”
“இன்னும் எவ்வளவோ தெரியும்…”
“நான் உன்னை பேபியென்று நினைத்துக் கொண்டிருந்தேன்..”
“அது உன் தப்பு…”
மீரா எழுந்து சமையலறைக்குச் சென்று.. சப்பாதிக்கு மாவு பிசைய ஆரம்பித்தாள். சுபாஷிணி குருமாவிற்கு காய் நறுக்கிக் கொண்டே மீராவைப் பார்த்தாள்.
“என் மனதில் ஒன்றைப் பற்றி…
நான் நினைத்ததெல்லாம் வெற்றி…
நான் இனிப் பறிக்கும்.. மலர் அனைத்தும்..
மணம் பரப்பும் சுற்றி…”
பி.சுசிலா பாடிய இனிமையான திரைப்படப் பாடலை.. தன்னை மறந்து பாடிக் கொண்டிருந்த மீரா.. சுபாஷிணியின் கண்களுக்குப் புதியவளாகத் தெரிந்தாள்..
Reviews – Kana Kanden / கனாக் கண்டேன்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.