Chapter 11
மனதினையே ஜெயிப்பவனே! – உன்
மனதை ஜெயித்துவிடக் கனாக் கண்டேன்…
அந்த சூழலே கோகுலுக்குப் பிடிக்கவில்லை. கால் மேல் கால் போட்டுக் கொண்டு ஸ்லீவ்லெஸ் டாப்ஸும்.. ஜுன்ஸுமாக தலையை விரித்துப் போட்டுக் கொண்டு.. பெண் பார்க்கும் படலத்தில் ஒரு பெண் வந்து உட்காருவாள் என்று அவன் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை.
“ஹாய்.. ஐ ஆம் நிஷா…”
அவள் ஹாலுக்கு வந்தவுடன் முதலில் கோகுலுடன் கை குலுக்க கை நீட்டியபடி இந்த வார்த்தைகளைச் சொன்னாள். ‘அருகில் அமர்ந்திருந்த என் பெற்றோருக்கு கை குவித்து வணக்கம் போட வேண்டாம். ஒரு ‘ஹலோ’ சொல்லலாமே..’ என்ற ஆற்றாமையுடன் கோகுல் வேறு வழியின்றி தன் கரத்தை நீட்டினான். நீட்டிய அவனது கரத்தை இறுகப் பிடித்து அவள் குலுக்கிய தினுசில் கோகுலுக்கு வெறுத்துப் போய்விட்டது. அடுத்து தன் பெற்றோருக்கு நடுவில் அமர்ந்து கொண்டு.. மிதப்பாய் அவர்களை ஒரு பார்வை பார்த்து வைத்தாள்…
“ஏண்டா.. இது பெண் பார்க்கும் ஃபங்ஷனா…? இல்லை மாப்பிள்ளை பார்க்க என்னை வரச் சொன்னாங்களா…?”
கோகுல் ரிஷியின் பக்கம் சரிந்து அவன் காதோரமாய் வினவினான்.
“இது கம்ப்யூட்டர் காலம்டா.. அப்படியும் கூட இருக்கலாம்…”
“இருந்தாலும் தப்பில்லை.. ஆனால் இது கொஞ்சம் அதிகப் படி ரிஷி…”
கோகுல் அந்த இடத்தை மறுத்து விட்டான்.. அடுத்து சென்ற இடங்களிலும்.. பெண் அவனது எதிர்பார்ப்பிற்கு ஏற்றது போல அமையவில்லை..
“உனக்குப் பெண் தேடியே ஓய்ந்து விடுவேன் போல இருக்குடா.. உனக்கு எந்த மாதிரிப் பெண் பிடிக்கும்ன்னு சொன்னாலாவது.. அதைப் போல பெண் பார்ப்பேன்..” சாரதா அலுத்துக் கொண்டாள்.
“இவனுக்கு கம்ப்யூட்டர்கள் பிடிக்கும். அதற்காக ரோபோவை பெண் பார்க்க முடியுமா…?” ரிஷி சிரித்தான்.
கோகுல் அவர்கள் பேசுவதைப் பற்றியே கண்டுகொள்ளாமல்.. செல்ஃபோனில் வியாபாரம் பேசிக் கொண்டிருக்க.. சாரதா அலுப்புடன் தோளைக் குலுக்கி விட்டு எழுந்து வீட்டிற்குள் சென்று விட்டாள்.. ரிஷிக்கு அவளது தளர் நடையைப் பார்க்கையில் பாவமாக இருந்தது.
“கோகுல்…”
“ம்ம்ம்…”
“உன் மனதில், வரப்போகும் மனைவியைப் பற்றிய எதிர்பார்ப்பு ஏதும் வைத்திருக்கிறாயா…?”
“நீ சொல்வது எனக்குப் புரியவில்லையே…”
“இல்லை.. முதல் பார்வையிலேயே நெஞ்சத்தைக் கிள்ள வேண்டும்.. மனதை அள்ள வேண்டும்.. அப்படி.. இப்படின்னு கனவு எதுவும் இருக்கிறதா…?”
ரிஷி வினவிய விதத்தில் கோகுல் சிரித்து விட்டான்.. “போடா நீ வேறு.. இருக்கிற வொர்க் லோடில் இதைப் போல நினைக்க எனக்கு நேரம் இருக்கிறதா…?”
“உனக்கு நேரமில்லை என்பதற்காக நடக்க வேண்டியதைக் காலா காலத்தில் நடத்திக் கொள்ளாமல் தள்ளிப் போடுவது சரியில்லை…”
“அதற்காக யாராவது ஒருத்தி கழுத்தில் தாலியைக் கட்டிவிட முடியுமா ரிஷி..? இது வாழ்க்கை…?”
“நானும் அதைத்தான் சொல்கிறேன்.. இது வாழ்க்கை.. வாழ வேண்டிய வயதில் வாழ்க்கையை வாழ்ந்து விடு…”
“இப்போது வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறேன்..”
“ஒரு பெண்ணோடு வாழ்ந்து விடு…”
“மனதிற்குப் பிடித்த பெண்ணோடு தான் என்னால் வாழ முடியும்…”
ரிஷி எதையோ சொல்லப் போனான்.. பின் தலையை ஆட்டிக் கொண்டு மௌனமானான். அவனுடைய செய்கையை விசித்திரமாய் பார்த்த கோகுல்..
“என்னடா…?” என்று வினவினான்.
“நத்திங்…”
“நீ நத்திங் என்றால்தான் சம்திங் இருக்கிறது என்று அர்த்தம்.. சொல்லிவிடு…”
“வேண்டாம் கோகுல்.. எனக்கே அதைப் பற்றிக் குழப்பமாக இருக்கிறது…”
“எதைப் பற்றி…?”
“விட்டு விடு…”
“நான் கேட்காமல் விட்டு விடுவேன்.. ஆனால் நீ சொல்லாமல் விட்டு விட்டால் உன் தலை வெடித்து விடாதா..?”
சாதாரணமாக.. கோகுல் இப்படிப் பேசும்போது.. ரிஷி சிரித்து விடுவான்.. அன்று எதுவும் பேசாமல் இருந்தது கோகுலுக்கு வியப்பைத் தந்தது..
“என்ன விசயம் ரிஷி.. டெல் மீ…”
“இந்தப் பெண் மீரா இருக்கிறாளே…”
“யாரைச் சொல்கிறாய்…? என்.பி.ஏ. வையா…?”
“ம்ம்…”
“ஷி இஸ் இன் லவ் வித் யு…”
“வாட்…..?”
“அவள் உன்னைக் காதலிக்கிறாள்டா…”
கோகுல் நம்ப முடியாமல் ரிஷியைப் பார்த்தான்..
“என்னடா சொல்கிற….?”
“நிஜத்தைத்தான் சொல்கிறேண்டா.. இந்தப் பெண் ஊட்டியிலேயே.. உன்னைப் பற்றி மட்டும்தான் விசாரிப்பாள். நான் சென்னையில் வேலைக்கு வரச் சொல்லிச் சொன்னவுடனேயே அது உன் கம்பெனியான்னு தான் முதலில் கேட்டாள். அதற்குப் பின்னால் உன்னைப் பற்றி நான் என்ன பேசினாலும் இன்ட்ரெஸ்டாக் கேட்பாள்..”
“இதெல்லாம் இயல்பாக நடந்த விசயங்களாய் இருக்கலாம் இல்லையா…?”
“இயல்பாக நடப்பதாக இருந்தால்.. ஏன் அவள் தினமும் உன்னைப் பற்றி.. டைரியில் எழுதுகிறாள்…?”
“அது என்னைப் பற்றித்தான் என்று உனக்கு எப்படி நிச்சயமாகத் தெரியும் ரிஷி…?”
“மீராவின் கண்களில் உன்னைப் பார்த்தால் காதல் தெரிகின்றது…”
“போடா…”
“நான் அவளிடம் அதிகப்படியாக பேசியபோது ‘அண்ணா’ என்று அழைத்து வைத்தாளே.. உன்னை ஒரு தடவையாவது அப்படி அழைத்து வைத்தாளா…?”
“நான் முதலாளி என்பதால் இருக்கலாம்..”
“அப்படி எளிதாக இதை ஒதுக்கிவிட முடியாது கோகுல்…”
“நீ சொல்வது போல் அவள் என்னைக் காதலித்திருந்தாலும் அது எனக்காக என்று எப்படிச் சொல்ல முடியும்..? என் பணத்திற்காகவும் இருக்கலாமில்லையா..?”
“நீயா இப்படிப் பேசுகிறாய் கோகுல்…?”
“நான்கையும் யோசித்துப் பார்க்க வேண்டும் ரிஷி.. அவளுடைய அப்பா.. எங்கள் எஸ்டேட்டில் சாதாரண கணக்குப் பிள்ளையாக வேலை பார்ப்பவர்.. அவளுக்கு எஸ்டேட் முதலாளியை கல்யாணம் பண்ணிக் கொள்ள ஆசை வந்திருக்கலாமில்லையா..? அதற்கும் சாத்தியம் இருக்கிறதா.. இல்லையா…?”
“உன் அடையாளங்களை நீ மறக்கவே மாட்டாயா..?”
“அந்த அடையாளங்களுக்காவே அவள் என்னை விரும்பியிருந்தால் என்ன செய்வது…?”
“ஸோ…?”
“நான் இந்த விசயத்தில் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை…”
“உன்னை ஒன்று கேட்கலாமா கோகுல்…?”
“கேள்…”
“அவள் சாதாரணமான உன் எஸ்டேட்டில் சம்பளம் வாங்கும் கணக்குப் பிள்ளையின் மகள் என்பதற்காக அவளின் காதலை நீ மறுக்கிறாயா…?”
“நிச்சயமாக இல்லை.. அதே சமயம்.. இந்த தெய்வீகக் காதலில் எல்லாம் எனக்கு நம்பிக்கையும் இல்லை.. அவளை நான் ஊட்டியில் பார்த்ததே இல்லை.. இப்போதுதான் ஆறு மாதங்களாக என்னிடம் பி.ஏ.வாக வேலை செய்கிறாள்.. ஆறு மாதங்களாக அறிமுகம் ஆனவள்.. காலம் காலமாய் என்னைக் காதலிப்பதாய் கதை சொல்வது உனக்கே கொஞ்சம் ஓவராகத் தெரிய வில்லையா…?”
இவனிடம் எப்படிப் பேசி மீராவின் மனதைப் புரிய வைப்பது.. ரிஷி பெருமூச்சுடன் எழுந்து கொண்டான்..
“ஓ.கே.. கோகுல்.. நாளை ஆபீஸில் பார்க்கலாம்…”
“பை…”
“பை…”
அலுவலத்தில் நுழைந்த போது… எதிர்பட்ட வர்களும்.. அங்கே அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்தவர்களும் ‘குட்மார்னிங்’ சொல்ல.. தலையசைவில் அதை ஏற்றுக் கொண்டே.. தன் கேபினுக்குள் சென்ற கோகுல் அவனைக் கண்டதும்.. மீராவின் கண்கள் ஒளிர்வதைக் கவனித்தான்.
முகமெல்லாம் பரவசமாக அவள்.. அவனைப் பார்த்து..
“குட்மார்னிங் சார்…” என்று சொன்னாள்.
“குட் மார்னிங்…” அவன் இறுக்கமான முகத்துடன் தன் சுழல் நாற்காலியில் அமர்ந்தான்.
“யெஸ் மிஸ்டர் சர்மா.. ஒன் வீக் நான் சென்னையில் இல்லை.. நம்ம கம்பெனி பிராஞ்சுகளில் சர்ப்பரைஸ் விசிட் கொடுக்கப் போயிருந்தேன்.. டிரைவரா..? நோ.. நோ.. டிரைவரைக் கூப்பிட்டுக் கொண்டு போகவில்லை.. செல்ஃப் டிரைவிங்தான்..”
கோகுல் பேசிக் கொண்டேயிருக்க.. மீரா அவனைப் பற்றி நினைத்துக் கொண்டே இருந்தாள்.
‘எப்படி இவனால் மட்டும் இப்படி தேனி போல் சுறுசுறுப்பாக வேலை செய்ய முடிகிறது..? நான்கு நாள்களாக தானே காரை ஓட்டிக் கொண்டு ஊர்.. ஊராக போய் வந்திருக்கிறானே.. உடம்பு எப்படித் தாங்கும்..? அயர்வாக இல்லையா…?’
“சொல்லுங்கள் பரதன்.. ஹா.. ஹா.. உங்களுக்கில்லாத உதவியா…? நிச்சயம் செய்கிறேன்…”
‘ஹூம்.. ஊருக்கெல்லாம் நண்பனாக இருப்பாய்.. எனக்கு மட்டும் எட்டாக் கனியாக இருப்பாய்.. யார் கேட்டாலும் ஓடிப் போய் கை கொடுக்கிறாயே.. நான் உன்னிடம் ஒரு உதவி கேட்கிறேன்.. கொடுப்பாயா.. உன் உள்ளத்தின் ஒரு மூலையில் எனக்கு சிறிதளவு இடம் கொடு…’
மீராவின் கண்கள் கோகுலைப் பார்க்க.. கைகள் கம்ப்யூட்டரின் கீ போர்ட்டில் விளையாட என்று வேலை செய்வதை வேலையின் ஊடே கவனித்துக் கொண்டிருந்த கோகுலுக்கு மனம் குறுகுறுத்தது…
‘இவள் என்னை சைட் அடிப்பது போல் இருக்கிறதே..’
“மீரா…”
“யெஸ் சார்…”
அவன் அழைக்கவும் கம்ப்யூட்டரின் கீ போர்டை அம்போவென்று விட்டு விட்டு, அவன் முன்னால் சிறு நோட்டும் பேனாவுமாக அவள் அவசரமாக வந்து நின்றாள்.
ஏனோ வள்ளுவர் அழைத்ததும்.. வாசுகி, கிணற்றில் நீர் இறைத்துக் கொண்டிருந்த வாளியை பாதியிலேயே விட்டு விட்டு வந்தது கோகுலுக்கு நினைவிற்கு வந்தது.
Reviews – Kana Kanden / கனாக் கண்டேன்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.