Chapter 14
உன்னோடு வாழும் அந்நொடியில் – என்
உயிர் கரைந்துவிடக் கனாக் கண்டேன்…
கோகுல் தான் காதலிக்கப்படுவதை உணர்ந்தான்.. காதலிக்கப்படுவதில் உள்ள சுகத்தை அனுபவித்தான். தினமும் தன்னைக் காண என்று ஒருத்தி ஓடி வருவதால்.. வெளியூர் பிரயாணங்களைக் குறைத்துக் கொண்டான்.
அந்த மாத இறுதியில் அவர்களுடைய கம்பெனியின் தொடக்க நாளைக் கொண்டாடும் விழா நாள் வந்தது… வேலையை மறந்து எல்லோரும் கலகலப்பாய் உலா வந்தனர்.. மேடையில் மைக் பிடித்து ரிஷி செய்த மிமிக்ரியில் இளம் பெண்கள் கவரப்பட்டனர்.. பாடத் தெரிந்தவர்கள் பாடினார்கள்.. சுபாஷிணி அன்று பரத நாட்டியம் ஆடினாள்.. மீரா.. மைக்கின் முன் வந்து நின்று பாடத் துவங்கினாள். அவளது கண்கள் கோகுலைத் தேடின..
“கங்கைக் கரைத் தோட்டம்…
கன்னிப் பெண்கள் கூட்டம்…
கண்ணன் நடுவினிலே…
காலையிளங் காற்று…
பாடிவரும் பாட்டு….
எதிலும் அவன் குரலே….”
கோகுல் அருகே பேசிக் கொண்டிருந்தவரின் பேச்சைக் கவனிப்பது போல் பாவணை செய்து கொண்டு.. மேடையில் விழி பதித்தான்.. கூட்டத்தில் அவன் முகத்தைத் தேடியலைந்த மீராவின் விழிகள் அவன் முகத்தில் நிலை பெற்றன…
“கண்ணன் முகத் தோற்றம் கண்டேன்…
கண்டவனுடன் மாற்றம் கொண்டேன்…
கண்மயங்கி ஏங்கி நின்றேன்….
கன்னி சிலையாகி நின்றேன்..
என்ன நினைத்தேனோ.. தன்னை மறந்தேனோ..
கண்ணீர் பெருகியதே….”
மீராவின் குரலில் பக்தியும்.. காதலும் சேர்ந்து தளும்பின.. தன் மனதிலிருப்பதைக் கொட்டிவிடும் தாபத்துடன் அவள் உருகிப் பாடிக் கொண்டிருந்தாள். கோகுலை விட்டு அவள் விழி அசையவே இல்லை….
“கண்ணன் முகம் கண்ட கண்கள்…
மன்னர் முகம் காண்பதில்லை…
கண்ணனுக்குத் தந்த உள்ளம்…
இன்னொருவர் கொள்வதில்லை…
கண்ணன் வரும் நாளில்.. கன்னி இருப்பேனோ..
காற்றில் மறைவேனோ…”
மீராவின் குரலில் இருந்த துக்கம் கோகுலின் மனதை உலுக்கியது.. ‘ஏன் இப்படி வேதனைப்படுகிறாள்…’ என்று நினைத்துக் கொண்டான்.. அவளுடைய துக்கத்தைப் புறக்கணிக்க அவனால் முடியவில்லை.
“மீரா பாட்டு நல்லா இருந்தது…”
எல்லோரும் பாராட்டினார்கள்.. அவள் அருகில் வந்து கை கொடுத்தார்கள்.. கோகுல், மற்றவர் கவனத்தைக் கவராமல் அவள் அருகில் வந்து நின்று முணுமுணுத்தான்.
“இவ்வளவு சோகம் தேவையில்லை மீரா.. கண்ணனுக்கு மனம் இருக்கிறது.. தனக்காக உருகும் மீராவைத் தேடி ஓர் நாள் கட்டாயம் வருவான்.. வராமல் போகமாட்டான்..”
மீரா நிமிர்ந்து பார்க்கும் முன்னர்.. ஏதோ வேலையிருப்பது போல் அவன் நகர்ந்து விட்டான்.. அன்றைய பொழுது முழுவதும் அவனுடைய வார்த்தைகள் மீராவின் காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தன..
‘எப்படி… எப்படி அவன் என்னைத் தேடி வருவான்..? அவனோ நான் எட்ட முடியாத உயரத்தில் இருப்பவன்.. எட்டிப் பிடிக்க சக்தியில்லாதவள் நான்.. இதில் என் காதல் எப்படி நிறைவேறப் போகிறது..’
மீராவிற்காக அவளின் காதலுக்காக.. கோகுல் தன்னை அர்ப்பணிப்பான் என்று மீராவினால் நம்ப முடியவில்லை..
‘வாரணமாயிரம் சூல வலம் வந்து
நாரணனை நம்பி நடக்கிறேன்… எழில்
பூரணமாய் பொற்குடமும் வைத்து…
தோரணமாடிடக் கனாக் கண்டேன்…’
சூடிக் கொடுத்த சுடர் கொடியாள்.. கோதை நாச்சியார்… ஆண்டாள்.. அன்று கனவு கண்டாள்.. திருப்பாவை சொன்னாள்.. மார்கழியில் நீராடி.. மாயவனை அடைய வேண்டி விரதமிருந்து தவமிருந்தாள்.. ஆண்டவன் தன்னில் அவளைச் சேர்த்துக் கொண்டான்.. அவளை ஏற்றுக் கொண்டான்…
ஆனால் மீரா…? சாதாரண மானிடப் பெண்.. அவள் ஆண்டாள் இல்லை. மனஷி.. அவளை எப்படி கோகுல் ஏற்றுக் கொள்வான்…?
மீரா.. கோகுலின் கைப்பிடித்து விடுவோம் என்று நம்பிவிடவில்லை.. அவளது காதலை மதித்து.. சில வார்த்தைகளை கோகுல் கூறியதே அவளுக்குப் போதுமானதாக இருந்தது. அதைத் தாண்டி அவள் யோசிக்கவில்லை…
அன்று கோகுல் உற்சாகமான மனநிலையில் இருந்தான்.. ரிஷியுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தவன்.. அந்த அறையில் இருந்த மீராவை மறந்து விட்டவனாக.. அவனுடைய அமெரிக்க வாழ்வைப் பற்றிக் கூறிக் கொண்டிருந்தான்.
“கேத்தரின்ங்கிறதுதான் அவளுடைய பெயர் ரிஷி.. வெள்ளை வெளேர் என்று இருப்பாள்…”
“வெள்ளைக்காரி.. வெள்ளையாய்தானேடா இருப்பாள்…?”
“ஆனால் அவளுடைய கண்களும்.. தலைமுடியும் கறுப்பாய் இருக்கும் ரிஷி.. அப்படியென்றால் எவ்வளவு அழகாய் இருப்பாள்ன்னு நீயே பார்த்துக் கொள்ளேன்…”
“நானெங்கே பார்க்கிறது..? இதெல்லாம் உனக்குத் தானே வாய்க்கிறது.. நான் சென்னையில் பார்ப்பதற்கே சுபா.. என்னிடம் முகம் கொடுத்து பேச மாட்டேன் என்கிறாள்..
நீ கொடுத்து வைத்தவன்.. அனுபவி.. ராஜா.. அனுபவி…”
“அதுவும் ஒருநாள் நிகழ்ந்தது…”
“எது..? அனுபவமா…?”
“ம்ம்.. ஆனால்.. நீ நினைப்பது போன்ற அனுபவமில்லை.. அவள் ஒருநாள்.. என்னைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து விட்டாள்…”
“வாவ்… அப்புறம்..”
“அப்புறம்.. அவள்.. அவள் வழியில் போய் விட்டாள்.. நான் என் வழியில் போய் விட்டேன்..”
“போடா.. சப்பென்று போய்விட்டது…”
அடுத்து கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு ரிஷி எழுந்து போய் விட்டான்.
“மீரா.. இந்த ஈமெயிலுக்கு பதில் அனுப்பு…”
“மீரா.. இந்த ஸ்டேட்மென்ட்டை பிரிண்ட் அவுட் பண்ணு…”
அவன் சொல்லிக் கொண்டேயிருக்க.. மீரா.. பதில் பேசாமல் அவன் சொன்ன வேலைகளை செய்து கொண்டிருந்தாள்..
அவள் மௌனமாக வேலை செய்வதைக் கொஞ்ச நேரம் கழித்துத்தான் கோகுல் உணர்ந்தான்.. நிமிர்ந்து மீராவைப் பார்த்தான்.. அவள் முகம் இறுகியிருந்தது..
‘ஏன் இப்படி இருக்கிறாள்…?’ அவனுடைய புருவங்கள் முடிச்சிட்டன…
‘இப்படி இருக்க மாட்டாளே.. என்னை நிமிர்ந்து பார்க்காமல்.. அவளால் இருக்க முடியாதே.. ஏன் நிமிர்ந்து பார்க்க மறுக்கிறாள்…’ அவனுக்கு விளங்கவில்லை..
“வாட் இஸ் தி மேட்டர் மீரா…?”
அவள் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.. அவள் விழிகளில் தெரிந்த கோபம் அவனுக்குப் புதிதாக இருந்தது.
“இனிமேல் என் முன்னால் இப்படிப் பேசாதீங்க…”
“நீ எதைச் சொல்கிறாய்…?”
“கேத்தரினைப் பற்றிச் சொல்கிறேன்..”
“ஓ.. இட் வாஸ் எ ஃபைன் மீரா..”
“உங்களுக்கு அது வேடிக்கையாக இருக்கலாம். எனக்கு இல்லை…”
‘இவள் என்னைக் கட்டுப்படுத்தப் பார்க்கிறாள்…’
கோகுலுக்குள் கோபம் முளைத்தருது…
“நீ என்ன சொல்ல வருகிறாய்..? என் சுதந்திரத்தைப் பறிக்க நினைக்கிறாயா…?”
மீராவின் பார்வையில் வலி தெரிந்தது.
‘இவன் என்னைப் புரிந்து கொள்ளவே மாட்டானா..? இவனை ஒரு பெண் முத்தமிட்டதை என்னால் எப்படிக் கேட்க முடியும்..? என் மனம் படும் பாட்டை இவன் புரிந்து கொள்ளமாட்டானா…’
அவள் நிராசையுடன் எழுந்து கொண்டாள்…
“பேசிக் கொண்டிருக்கும் போதே.. பாதிப் பேச்சில் எழுந்து போனால் என்ன அர்த்தம்..? இங்கே பேசிக் கொண்டிருப்பவன் பைத்தியக்காரனா…? உட்கார்…”
“பேசிப் பிரயோஜனமில்லை சார்.. விட்டு விடுங்கள்..”
“எதை விட்டுவிடச் சொல்கிறாய்..? உன்னையா…?”
“அதற்காகத்தானே காத்துக் கொண்டிருக்கிறீங்க.. உங்களுக்கு என்னைத் துரத்தக் காரணம் தேவை.. இன்றைக்குப் புதிதாக ஒரு காரணத்தைக் கண்டு பிடித்து விட்டீங்க..”
“உளறாதே.. என்னைக் கண்ட்ரோல் பண்ணினால் எனக்குப் பிடிக்காது.. புரிந்துக் கொள்..”
மீரா அடிப்பட்ட பறவையின் பார்வையைப் பார்த்தாள். கோகுல் பேச்சிழந்தான்…
‘இவள் வேறு.. அடிக்கடி இப்படிப் பார்த்துக் தொலைப்பாள்.. இப்படிப் பார்த்தால் எப்படி இவளிடம் பேசுவது…!’ கோகுலுக்கு சலிப்பு வந்தது.
“சொன்னால் புரிந்து கொள் மீரா.. இப்படி குற்றவாளியைப் பார்ப்பது போல் பார்க்காதே…”
“நான் உங்களைக் காதலிக்கிறேன் தான்.. ஆனால் என் காதல் எந்த விதத்திலும் உங்களைக் கட்டுப் படுத்தாது.. நான் கட்டுப்படுத்த நினைக்கவும் மாட்டேன்..”
“பின்… ஏன் இப்படி பிஹேவ் பண்ணுகிறாய்..?”
“நான் உங்களிடம் என்ன கேட்டேன்..? உங்களுக்கு நடந்த இப்படிப்பட்ட நிகழ்வுகளை என் காது கேட்கப் பேசாதீங்கன்னு தானே கேட்டேன்..”
“இரண்டுக்கும் என்ன வித்தியாசம்….?”
“நிறைய இருக்கிறது சார்.. நான் உணர்ச்சியுள்ள மனுஷி.. ஜடம் இல்லை.. என் மனதில் உங்கள் மீது காதல் இருக்கிறது.. என்னால் உங்களை.. இன்னொரு பெண் தொட்டு முத்தமிட்டாள் என்பதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை…”
“அவள்தானே என்னை முத்தமிட்டாள்…? நான் ஒன்றும் அவளை முத்தமிடவில்லையே..”
“நீங்களே முத்தமிட்டிருந்தாலும்.. அது எனக்குத் தெரியாதவரை நான் நிம்மதியாக இருப்பேனில்லையா..? அதை ஏன் தெரியப்படுத்த வேண்டும்..?”
“ஸோ.. நான் நினைத்தபடி வாழலாம்.. நீ ஏன் என்று கேட்க மாட்டாய்…?”
கோகுலுக்கு அவளைப் பார்க்கையில் சிரிப்புத்தான் வந்தது. அவன் கடகடவென்று சிரித்தான். மீரா ஆற்றாமையுடன் அவனைப் பார்த்தாள்.
‘இவன் என்னைப் புரிந்து கொள்ள மாட்டான்.. என் காதல் இவனுக்கு பூ விலங்காவதை நான் ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன்.. இவனை.. இவனுக்காகவே
நான் காதலிக்கிறேன். இவனுடைய குண இயல்புகளை அப்படியே ஏற்றுக் கொள்வேன்.. ஆனால்.. எனக்கு அவை தெரிந்தால்.. என்னையும் மீறி.. என் மனம் வலிக்கிறதே.. நான் என்ன செய்யட்டும்..’ மீரா பெருமூச்சு விட்டாள்..
“எதற்கு இப்படி ஏக்கப் பெருமூச்சு விடுகிறாய்…?” கோகுல் அதற்கும் சிரித்தான்.
அவனின் சிரிப்பு.. மீராவையும் தொற்றிக் கொண்டது.. அவள் லேசாகப் புன்னகைத்தாள்.
“ம்ம்.. இப்போது உன்னைப் பார்க்க எவ்வளவு நன்றாக இருக்கிறது.. இதை விட்டு விட்டு.. முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு இருந்தாயே…” அவன் கேலி செய்தான்.
“என் முகமே அப்படித்தான்…” மீரா வெட்கத்துடன் சொன்னாள்.
“அதை நீ சொல்லக் கூடாது.. நான் சொல்ல வேண்டும்… சிரித்த முகமாய் இருக்க வேண்டாமா…? ஆக்சுவலா மீரா.. நீ சிரித்தால்தால் எனக்குப் பிடிக்கும். உம்மணாம் மூஞ்சிகளை எனக்குப் பிடிக்காது.. அதனால் சிரி.. வாய்விட்டுச் சிரி.. மனம் விட்டுச் சிரி.. இனிமேல் இப்படி அழுமூஞ்சியாய் இருக்கக் கூடாது சரியா…?”
“நீங்களும் இனிமேல் இதுபோல் பேசக்கூடாது சரியா..?”
“பிடித்தால் ஒரே பிடிதானா…? விடமாட்டாயா…” கோகுல் அவளது வேண்டுகோளுக்கு பதில் சொல்லாமல் சிரித்தான்.
Reviews – Kana Kanden / கனாக் கண்டேன்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.