Chapter 15

0Shares

பண்பாடும் மன்னவனின் – கண்

எனைத் தேடிவிடக் கனாக் கண்டேன்..

கோகுலின் மனம் ஒரு தெளிவிற்கு வந்திருந்தது.. அவன் மீராவைக் காதலித்தானா என்று கேட்டால் அவனால் பதில் சொல்ல முடியாது.. ஆனால் அவன் மீராவினால் காதலிக்கப்டுவதை மிகவும் விரும்பினான்.. அவளுடைய காதலைப் புறக்கணிக்க அவனால் முடியவில்லை..

மீராவின் அழகே.. அவளுடைய காதல் என்றாகிப் போனது.. கோகுல் அவள் வீசிய காதல் தளையில் மிக விருப்பத்துடன் தன்னைப் பிணைத்துக் கொண்டான்..

ஒருநாள் காலையில் மீராவிடம் ஒரு பேப்பரை நீட்டினான்.. அவள் திகைப்புடன் அதை வாங்கிக் கொண்டாள்.

“இது என்ன சார்…?”

“கவிதை..”

“கவிதையா…? யார் எழுதினது…?”

“நான்தான்…”

“நீங்களா…?”

“ஏன்.. என்னைப் பார்த்தால் கவிதை எழுதுபவன் போலத் தெரியவில்லையா…?”

“கம்ப்யூட்டர் கம்பெனி வைத்திருப்பவர் கவிதை எழுதுவது என்பது ஆச்சரியமான விசயம்தான்..”

“கம்ப்யூட்டரே இப்போது கவிதை சொல்கிறது.. கம்ப்யூட்டர் கம்பெனி வைத்திருப்பவன் சொல்ல மாட்டேனா.. படி…”

மீரா.. பேப்பரைப் பிரித்துப் படிக்க ஆரம்பித்தாள் படிக்க.. படிகக ஆனந்தத்தின் எல்லைக்கே போனாள்.. அவள் கண்களை.. அவளாலேயே நம்ப முடியவில்லை…

‘வரம் கொடுக்கும் சாமி..’ என்று கோகுலை அன்று சொன்னாள் அவள்.. அவன் உண்மையிலேயே அவளுக்காக.. அவளுடைய காதலுக்காக தன்னையே அர்ப்பணித்திருந்தான்.. அவள் கேட்ட வரத்தினைக் கொடுத்திருந்தான்..

‘என் காலடியில் நீ கைகுவித்து

என் காதலையே வேண்டி நின்றாய்…

என் மார்பினிலே உனைச் சேர்த்தேன்…

மழைத் துளிபோல் வரமளித்தேன்…

கோதி முடித்த கோதையே.. நீ

கொள்ளை கொண்டாய் என் மனதை…

குழலோசை தனiக் கேட்டு…

குழல்தன்னில் நீர் விட்டு…

மார்கழியில் நீராடி…

மனங் கனிந்த ஆண்டாளுக்காய்…

மாதங்களில் மார்கழியானான்…

அந்த மாயவன்…

எனைமணம் முடிக்கக் கனவு கண்டு…

புதிய திருப்பாவை சொன்னவளே!

நீ விரும்பியபடி எனை அடைய…

நான் வரம் கொடுத்தேன்..

நானும் மாயவன்தான் – என்

நண்பர்கள் முன் சேயானவன்தான்…

நானும் என் சொந்தங்களின்

மனதை ஆண்டவன்தான்…

என் மனதை ஆண்டவளே…

நீ விரும்பியபடி எனை அடைய

நான் வரம் கொடுத்தேன்….

    நாம் சேரும் நாள் தொலைவில் இல்லை.’

மீராவின் கண்கள் நிறைந்து விட்டன.. அவளது கண்ணீர் திரைக்கு அப்பால்… கோகுலின் கருணை முகம் தெரிந்தது.. அவன் அவள் கண்களுக்கு அவளை ஆட்கொண்ட ஆண்டவனாகத் தெரிந்தான்.

நாதஸ்வர ஓசை மண்டபத்தில் நிறைந்திருந்தது. திருமண மண்டபத்திற்கே உரிய ஒரு நறுமணம் எங்கும் கமழ்ந்தது.. வருகின்ற விருந்தினர்களை ராம்நாத்தும்.. சாரதாவும் வரவேற்று அமர வைத்துக கொண்டிருந்தர்கள்..

“என்ன சாரதா.. கடைசியில் இப்படி ஆகிவிட்டது..?”

திருமணத்திற்கு வந்திருந்த உறவுக்காரப் பெண்மணி ஒருத்தி விசாரித்தாள்.

“எப்படியாகிவிட்டது…?”

“கடைசியில்.. உன் எஸ்டேட்டில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் ஆளின் மகளைப் போய்… உன் மகனுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கப் போகிறாயே…”

“மீரா படித்திருக்கிறாள்.. அழகாக இருக்கிறாள்.. அன்பாக நடந்து கொள்கிறாள்.. எங்கள் கோகுலுக்கு எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் அவன் முடியாதுன்னு தலையை ஆட்டி மறுத்துக் கொண்டிருந்தான். அவனே மனது வந்து.. இவளைப் பிடித்திருக்குன்னு மீராவைக் கை காட்டியிருக்கிறான்.. நான் கவலை விட்டதுன்னு கடவுளைக் கும்பிட்டுக் கொண்டிருக்கிறேன்.. நீ வேறு தேவையில்லாமல் பேசிக் கொண்டிருக்கிறாயே…”

வம்பு பேசிய பெண்மணி வாய் மூடிக் கொள்ள.. சாரதா, வேறு ஒரு வேலையாக நகர்ந்தாள்..

நடப்பதைக் கவனித்துக் கொண்டிருந்த இந்திரா.. வாசவனிடம் நெகிழ்ச்சியாகக் கூறினாள்.

“இவங்களுக்குத் தான் எவ்வளவு பெரிய மனது.. நம் பெண்ணைப் பற்றிக் குறை சொல்ல இடம் தர மாட்டேன் என்கிறாங்களே…”

“நிஜம்தான் இந்து.. நான் மீராவின் எதிர்காலத்தை நினைத்துப் பயந்து கொண்டிருந்தேன்.. நல்ல வேளையாக இவங்க வீட்டிலேயே மீரா மருமகளாகப் போகிறாள்.. அவள் அதிர்ஷ்டத்தை என்னன்னு சொல்வது….?”

கோகுலின் கையால் தாலி வாங்கிக் கொண்ட மீராவும்.. அப்போது தன் அதிர்ஷ்டத்தை எண்ணித்தான் வியந்து கொண்டிருந்தாள்…

‘இது கனவா.. இல்லை நனவா…’ என்ற பிரமையுடன்.. மன மேடையில் அமர்ந்திருந்தவளிடம் கை நீட்டினான் கோகுல்..

அவன் கரம் பற்றும் உரிமை கிடைத்ததனால் மனம் சிலிர்க்க.. அவன் கரத்தில்.. தன் கரத்தை வைத்துப் பற்றிக் கொண்டாள் மீரா..

அக்கினியை வலம் வந்த போது.. அவளுக்கு கண்கலங்கி விட்டது. அழுதால் கோகுலுக்குப் பிடிக்காது என்பதனால்.. அதை அவள் அடக்கிக் கொண்டாள்..

“பார்த்தாயா சுபா… அந்த விண்ணுக்கும்.. மண்ணுக்கும் கல்யாணம் நடந்து விட்டது.. நம்ம கல்யாணம் எப்போது…?”

ரிஷி.. சுபாஷிணியின் அருகே சரிந்து கெஞ்சுதலாய் வினவினான்.

“இவ்வளவு நேரமும்.. இந்தக் கல்யாண மண்டபத்தில் இருக்கும் அத்தனை பெண்களையும் சைட் அடித்து முடித்து விட்டு.. கடைசியில் என்னிடம் வந்து இதைக் கேட்கிறாயா…?” சுபாஷிணி வெடித்தாள்..

“இதோ பார் சுபாஷிணி…”

“உன்னைத்தான் பார்க்க முடியாதுன்னு நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேனா.. இல்லையா…?”

“சரி விடு. நீ என்னைப் பார்க்காவிட்டால் என்ன.. நான் உன்னைப் பார்த்து விட்டுப் போகிறேன்…”

“என்னடா.. திடீர்ன்னு இப்படி ஆரம்பித்து விட்டாய்..”

“இது வெற்றிகரமான ஃபார்முலா சுபா.. மீரா இதை பாலோ பண்ணித்தானே.. கோகுலின் மனதை ஜெயித்தாள்.. நானும் இதையே ஃபாலோ பண்ணி.. உன் மனதை ஜெயிக்கப் போகிறேன்…”

சுபாஷிணி.. ரிஷியை அன்றுதான் புதிதாய் பார்ப்பது போல.. ஒரு பார்வை பார்த்து வைத்தாள்..

“என்ன சுபா.. இப்படிப் பார்க்கிறாய்…?”

“நீ மட்டும் கொஞ்சம் மற்ற பெண்களிடம் வழியாமல் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் தெரியுமா…?”

“கடலில் அலை ஓயுமாங்கிறது போல் நீ பேசுகிறாய்.. அது என் பிறவி குணம்.. கல்யாணம் பண்ணிக் கொண்டு என்னைத் திருத்தப் பார்ப்பாயா.. அதை விட்டுவிட்டு.. கல்யாணமே வேண்டாம் என்கிறாயே…”

“ஆமாண்டா.. உன்னைத் திருத்தத்தான் இந்த உலகத்தில் நான் பிறவியெடுத்திருக்கிறேன்…”

சுபாஷிணி.. கோபம் போல் கூறிக் கொண்டே.. தன் கரத்தை.. ரிஷியின் கரத்துடன் பிணைத்துக் கொண்டாள்.

தனியறையில் மனம் படபடக்க காத்திருந்தாள் மீரா.. அவன் வரவை எதிர்பார்த்து… அறை வாசலை ஆவலுடன் அவளது விழிகள் பார்த்துக் கொண்டிருந்தன..

அறைவாசலில் அவன் தென்பட்டான். மீராவின் விழிகள் பிரகாசித்தன. அவளது முகம் ஒளிர்வதைக் கவனித்தபடி… அறைக்குள் வந்து கதவைத் தாழிட்டான் கோகுல்.. அவனையே பார்த்தவாறு அவள் அசையாமல் நிற்க கட்டிலில் அமர்ந்தான்.

மீரா.. அவனை நெருங்கி.. அவன் முகத்தை தன் கைகளில் ஏந்தி ஆனந்தப் பிரமிப்புடன் பார்த்தாள்.. அவன் முகம் பூராவும் முத்த மழை பொழிந்தாள். அவனைத் தன்னோடு இறுக்கிக் கொண்டாள்..

அவளுடைய காதலின் வேகத்தில் கோகுல் கட்டுண்டு இருந்தான். கடலைச் சேரும் நதியிடம் தெரியும் வேகமும்.. துள்ளலும்.. துடிப்பும்.. தாபமும்.. அவளிடம் தென்பட்டன..

எத்தனையோ ஆண்டுகளாய் கண்டு வந்த கனவு பலித்து விட்ட பிரமிப்பில் அவள்.. அவனை அடைந்தாள்..

மிகப் பெரிய உயரத்தில் இருந்தவன்.. சாதாரணப் பெண்ணொருத்தி கொண்ட காதலுக்காக.. தன்னையே அர்ப்பணித்துக் கொண்டான்.. தன்னை அவளிடம் 

தந்தான்..

பரிசு என்பது எது…? ஒருவர் விரும்புவதை மற்றவர் அளிப்பது.. கோகுலும்.. மீராவும்.. ஒருவருக்காக மற்றொருவர்.. தங்களையே பரிசாக அளித்துக் கொண்டனர்..

கனவு காணலாம்.. காணும் கனவில் ஒரு வேகம் இருந்தால்.. ஏக்கம் இருந்தால்.. கனவு ஒரு நாள் கட்டாயம் மெய்ப்படும்.. வானமும் வசப்படும்…

…முற்றும்…

0Shares

Reviews – Kana Kanden / கனாக் கண்டேன்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link