Chapter 17

0Shares

ஊர்பெரிய மனிதர்களிடம் பேசிக் கொண்டிருந்தான் தனஞ்ஜெயன்.. போர்டிகோவில் கார் வந்து நிற்கும் சப்தம் கேட்டது.. யாராக இருக்கும் என்ற கேள்வி மனதில் எழுந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் பேச்சைத் தொடர்ந்தான்..

“வாங்கண்ணா.. வாங்கண்ணி..”

இந்திராதேவியின் வரவேற்பைக் கேட்டவன் லேசாக பேச்சை நிறுத்தி விட்டுத் திரும்பிப் பார்த்தான்..

மணியக்காரர் தியாகராஜனும், மரகதமும் இந்திரா தேவியுடன் பேசியபடி வந்து கொண்டிருந்தார்கள்..

“நம்ம வீட்டுக்கு வர இப்பத்தான் வழி தெரிஞ்ச தாண்ணி..” இந்திராதேவி மனத்தாங்கள் பட்டாள்..

பதில் சொல்ல வாயெடுத்த மரகதம்.. ஊர் பெரிய மனிதர்களைக் கண்டதும் பேச்சை நிறுத்திக் கொண்டாள்..

வளமை தெரிந்த ஊர் பெரியவர்கள் எழுந்து தனஞ்ஜெயனிடம் விடை பெற்றுக் கிளம்பி விட்டார்கள்..

“வாங்க மாமா.. வாங்க அத்தை..” தனஞ்ஜெயன் எழுந்து நின்று கை கூப்பி வரவேற்றான்..

“அதான் வந்துட்டோமில்ல மாப்பிள்ளை..” வாஞ்சையுடன் தனஞ்ஜெயனின் தோள் மீது கை போட்டு அணைத்துக் கொண்டார் தியாகராஜன்..

“விருந்துக்கு அழைக்க வந்தோம் அண்ணி.. சுமித்ராவுக்கு உடம்பு சரியில்லாம இருந்ததில விருந்து தள்ளிப் போயிருச்சு.. புதுசா கல்யாணமான பிள்ளையை விருந்துக்கு அழைக்க வராம.. காய்ச்சலை விசாரிக்க வாரதில என் மனசுக்கு சம்மதமில்லை அண்ணி..”

அத்தனை தினங்களாக அங்கு வராததிற்கான காரணத்தைச் சொன்னாள் மரகதம்.. தலை அசைத்து அதை ஆமோதித்தார் தியாகராஜன்.. 

“நீங்க சொல்றதிலயும் ஒரு அர்த்தமிருக்குதுதான்..” இந்திராதேவி ஒப்புக் கொண்டாள்..

அவர்கள் ஹாலில் அமர்ந்து பொதுவாக பேசிக் கொண்டிருந்தார்கள்.. சுமித்ரா எங்கே என்று கேட்டாள் மரகதம்.. தேவகியை அழைத்து சுமித்ராவை கூப்பிட்டுக் கொண்டு வரச் சொன்னாள் இந்திராதேவி.. தேவகி போனபோது சுமித்ரா கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்து ஏதோ யோசனையாக காற்றில் விரலால் கோலம் வரைந்து கொண்டிருந்தாள்.. தேவகி விழித்தாள்..

‘அம்மா என்ன பண்ணுறாக..?’

அதே நினைவோடு அவள் சுமித்ராவின் முன்னால் போய் நெளிந்து வளைந்து நின்றாள்.. காற்றில் கோலம் போட்டுக் கொண்டிருந்த சுமித்ராவின் விரல் வட்டத்துக்குள் தெரிந்த தேவகியின் நெளிதலில் கோலம் போடுவதை நிறுத்தியவள் என்ன என்று கேட்கும் விதமாக புருவங்களை உயர்த்தினாள்..

“பெரியம்மா கூப்பிட்டாகம்மா..”

“இன்னைக்கு யாரு வந்திருக்கிறாங்க தேவகி..?”

“நம்ம மணியக்கார ஜயாவும், அம்மாவும் வந்திருக்காகம்மா..”

“ஓ…”

சுமித்ரா சோர்வுடன் எழுந்தாள்.. அந்த மட்டிலும் அவள் ஊரைச் சேர்ந்தவர்கள் யாரும் வரவில்லையே என்ற எண்ணம் அவளுக்கு.. வருகிறவர்கள் தான் அவள் வீட்டைச் சேர்ந்தவர்களாக இருக்காமல் ஊரிலுள்ள அனைத்து வீடுகளையும் சேர்ந்தவர்களாக இருந்து வைக்கிறார்களே.. ஒரு நித்தியானந்தன் வந்து போனதற்கே தனஞ்ஜெயன் உன் விருப்பப்படி வாழ்க்கையை அமைத்துத் தருகிறேன் என்று சொல்லி விட்டான்.. அந்தச் சொல்லடியிலிருந்தே அவள் இன்னும் மீண்டு வரவில்லை.. இதில் அடுத்த சொல்லடி கிளம்புமானால் அவளால் அதைத் தாங்கிக் கொள்ள முடியுமா..?

செழுத்தப்பட்ட பதுமை போல சுமித்ரா வெளியே நடந்தாள்.. கூட வந்த தேவகி..

“ஏம்மா..” என்று இழுத்தாள்..

அவள் எதையோ கேட்க விரும்புகிறாள் என்பதைப் புரிந்து கொண்ட சுமித்ரா..

“என்ன தேவகி..?” என்றாள்..

“அது வந்தும்மா..” அவள் தயங்கினாள்..

“என்ன கேட்கனும்னாலும் தயங்காமல் கேள் தேவகி..” சுமித்ரா ஊக்கப் படுத்தினாள்..

“வாசலிலதானம்மா கோலம் போடுவாக..?”

“ஆமாம்.. உனக்கு அதிலென்ன சந்தேகம்..?”

“நீங்க காத்திலே கோலம் போட்டுக்கிட்டு இருந்தீங்களே.. எப்படிம்மா அது..?”

ஆவலுடன் கேட்ட தேவகியின் கேள்வியில் அந்த வித்தையை பயின்று கொள்ளும் ஆர்வம் தெரிந்தது..

அவளை ஏற இறங்கப் பார்த்த சுமித்ரா..

“ம்ஹீம்.. தேவைதான் எனக்கு..” என்றாள்..

“என்னம்மா சொல்றீக..?”

“அதெல்லாம் மாயம், மந்திரம் தெரிஞ்சவங் களுக்குத்தான் வரும் தேவகி.. உனக்கெல்லாம் வராது..” என்றாள்..

“உங்களுக்கு மந்திரம், மாயம் தெரியுங்களா..?”

ஓரடி தள்ளி நின்ற தேவகியின் விழிகளில் பயம் வந்தது..

“இத்தனை நாளா அது உனக்குத் தெரியாதா..?”

“எப்பவுமே எனக்குத் தெரியாதும்மா..”

“நீ எதைச் சொல்கிற..?”

“மாயம் மந்திரத்தைச் சொல்றேன்ம்மா..”

“சரியாப் போச்சு போ.. நான் மந்திரம் போடத் தெரிஞ்சவங்கிற விசயம் இத்தனை நாளா உனக்குத் தெரியாதான்னுல்ல நான் கேட்டேன்..?”

“அது தெரியர்தும்மா..”

பயபக்தியுடன் பின்னடைந்த தேவகியைப் பார்க்கப் பார்க்க சுமித்ராவுக்கு சிரிப்பு வந்தது.. இவள்தான் எத்தனை வெகுளியாய் இருக்கிறாள் என்ற நினைவுடன் படியிறங்கியவள் அந்தப் புன்னகையுடன் ஹாலைப் பார்த்தாள்.. அங்கே மற்றவர்களுடன் அமர்ந்திருந்த தனஞ்ஜெயன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.. அவனைக் கண்டதும் சுமித்ராவின் புன்னகை மறைந்ததில் அவன் நெற்றி சுருங்கியது..

“அத்தை..”

சுமித்ராவின் அழைப்பில் திரும்பிய இந்திராதேவி கைநீட்டி மருமகளை தன்னருகில் அழைத்துக் கொண்டாள்.. அவள் முகத்தில் இவள் என் மருமகள் என்ற பெருமையும், வாத்சல்யமும் நிறைந்திருந்தன..

“அண்ணனும், அண்ணியும் வந்திருக்காங்க சுமித்ரா..”

அவள் சொன்னதும் வந்திருக்கும் அண்ணனும் அண்ணியும் யார் என்று தெரியாமலே கை குவித்தாள் சுமித்ரா..

மணியக்காரரின் வீட்டில்தான் அவளும், அவளுடைய குடும்பமும் திருமணத்திற்கு முதல்நாள் தங்கியிருந்தார்கள் என்றாலும்.. அது மணியக்காரரின் வீடு என்றோ.. அவர்கள் தான் தியாகராஜனும், மரகதமும் என்றோ சுமித்ராவுக்கு அடையாளம் தெரியாது.. அந்த நிலையில் அவள் இல்லையே.. எங்கே இருக்கிறோம் சுற்றிலும் யார் இருக்கிறார்கள் என்று தெரியாமல் பித்துப் பிடித்தவளைப் போல இருந்த நாளல்லவா அந்த நாள்..?

அவர்களும் அதை உணர்ந்தவர்களைப் போல இதமாக சிரித்தார்கள்..

“உட்காரும்மா..” பரிவுடன் சொன்னாள் மரகதம்..

சுமித்ரா இந்திராதேவியை ஒட்டிக் கொண்டதைப் போல உட்கார்ந்தாள்.. புதியவர்கள் வந்தால் தாயின் சேலை முந்தானையில் ஒளிந்து கொள்ள முயலும் குழந்தையின் செய்கையாக அது இருந்தது..

தனஞ்ஜெயனின் முகம் லேசாக மாறியது.. அவனருகில் உட்காருவதை அவள் தவிர்ப்பதாக அவன் நினைத்தான்.. இந்திராதேவியோ மரகதத்தின் முன்னால் மருமகள் காட்டிய சொந்தத்தில் மகிழ்ந்து போய் விட்டாள்..

“உங்க ரெண்டு பேரையும் பார்த்தா மாமியா, மருமக போலவே இல்ல அண்ணி.. தாயும், மகளும் போல இருக்கு.. என் கண்ணே பட்டிறப் போகுது..” மரகதம் கண்களைத் துடைத்துக் கொண்டாள்..

“சும்மாயிரு மரகதம்.. ஊர் கண்ணுக்கும் உன் கண்ணுக்கும் வித்தியாசம் இல்லையா..? நீ என்ன வேத்தாளா..?” இந்திராதேவி பெருமையுடன் சொன்னாள்..

தியாகராஜனுக்கு சந்தோசமாக இருந்தது.. ஹாலில் இருந்த ரகுநாதனின் புகைப்படத்தைப் பார்த்தார்.. நண்பனின் மகனுக்கு அவரால் ஆன உதவியைச் செய்து விட்ட மனநிறைவு அவருக்குள் வந்தது..

“அப்புறம் என்ன தங்கச்சி.. உன் மனம் போல மருமக கிடைச்சிருச்சு.. கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு பிடிவாதமா இருந்த மாப்பிள்ளைக்கும் கால்கட்டு போட்டாச்சு.. சந்தோசம்தானே..?”

தியாகராஜனின் கேள்வியில் பனித்த கண்களைத் துடைத்துக் கொண்டபடி ‘ஆமாம்’ என்ற பாவனையில் தலையை ஆட்டினாள் இந்திராதேவி..

‘இவன் கல்யாணம் வேணாம்ன்னு சொன்னானா..? எதுக்கு..? லவ் பெயிலியரா..?’

சுமித்ராவுக்கு அடுத்த உறுத்தல் ஆரம்பமாகி விட்டது.. தனஞ்ஜெயனின் வாழ்வில் அவளுக்கு முன்பே ஒரு பெண்ணுக்கு இடமிருந்திருக்கிறது என்ற நினைவை அவளால் ஜீரணிக்க முடியவில்லை..

‘இவனுக்குப் பிடிக்காத வாழ்வை வீம்புக்காக ஏத்துக்கிட்டானா..? அதனால்தான் எனக்குப் பிடிக்காத வாழ்வை என் மேலே திணிச்சுட்டேன்னு வசனம் பேசினானா..?’

சுமித்ரா மனம் கசந்தாள்.. தியாகராஜன் கேட்ட கேள்விகளுக்குப் பதிலைச் சொல்லியபடி ஊடும், பாடும் அவளையே பார்த்துக்கொண்டிருந்த தனஞ்ஜெயனை முறைத்தாள்.. அவன் புருவங்கள் சுருங்கின..

‘போடா..’ இவள் பல்லைக் கடித்தாள்..

“என்னைக்கு வர்றீங்க மாப்பிள்ளை..?”

சுமித்ராவையே பார்வையிட்டுக் கொண்டிருந்த தனஞ்ஜெயன் தியாகராஜனின் கேள்விக்கு..

“எங்கே மாமா..?” என்று கேட்டு வைத்தான்..

“சரியாப் போச்சு போங்க.. மாப்பிள்ளைக்கு நினைவு இங்கே இல்லை.. எங்கேயோ இருக்கு..”

மரகதத்திடம் கண் சமிக்ஞை செய்து சிரித்தார் தியாகராஜன்.. அவள் அர்த்த புஷ்டியுடன் சுமித்ராவைப் பார்த்தபடி கணவருடன் சேர்ந்து சிரித்தாள்.. சுமித்ராவின் முகம் சிவந்து விட்டது.. நடந்து கொண்டிருக்கும் கேலி பேசுதலை கண்டு கொள்ளாமல் தனஞ்ஜெயன் அவள் முகத்தை பருகு.. பருகென்று பார்க்க ஆரம்பிக்க.. மணியக்காரர் தம்பதிகளின் சிரிப்பு வலுத்தது.. இந்திராதேவி புன்னகைத்தாள்.. சுமித்ரா லஜ்ஜையுடன் தலை குனிந்து கொண்டாள்..

“மாப்பிள்ளை நாங்களும் இங்கே இருக்கிறோம்..” கிண்டல் செய்தார் தியாகராஜன்..

தனஞ்ஜெயன் சிரித்த லேசான சிரிப்பில் கம்பீரம் இருந்தது.. கொஞ்சம்கூட அசடு வழியாத அவனது சிரிப்பில் மனம் லயித்தாள் சுமித்ரா.. அவன் அவளுடையவன் என்பதில் அவள் மனம் இனித்தது..

‘இவன் வேற ஒருத்தியை காதலிச்சிருக்கானா..?’ அவளுக்குள் கோபம் கனன்றது..

மற்றவர்கள் அறியாமல் அவனை ரகசியமாக முறைத்தாள்.. மற்றவர்கள் அறியாமல் அவள் கோபத்தை ஏனென்று வினவும் பாவனையில் தனஞ்ஜெயன் புருவங்களை ஏற்றி இறக்கினான்..

‘இருக்குடா மச்சான் உனக்கு..’

சுமித்ரா ஒற்றை விரலை உயர்த்தி அவனுக்கு எச்சரிக்கை விடுத்தாள்..

‘இது எதுக்கு..?’

அவன் வலது கையை குவித்து உயர்த்திக் கேட்டான்..

இத்தனை நாடகத்தையும் அவர்கள் மற்றவர்களின் மத்தியில் நடத்தினார்கள்.. அதை கண்டும் காணாததைப் போல பெரியவர்கள் பூரித்துப் போனார்கள்..

“விருந்துக்கு வரனும் மாப்பிள்ளை.. அதுக்கு அழைக்கத்தான் நானும் உங்க அத்தையும் வந்திருக்கிறோம்..” சிரிப்புடன் சொன்னார் தியாகராஜன்..

“ஆமாம் தனா.. இதையே உன் மாமா எத்தனை தரம் சொல்வாரு..? பாவம்.. வயசான மனுசன்..” மரகதம் கணவரின் பக்கம் பேசுவதைப் போலச் சொன்னாள்..

“ஆமாம் மாப்பிள்ளை.. எனக்கு வயசாகிருச்சு.. உங்க அத்தைக்கு இளமை திரும்பிருச்சு..” கிண்டலடித்தார் தியாகராஜன்..

“நம்ம சீமையிலே ஆம்பளைகளுக்குத்தான் இளமை திரும்புது.. பொம்பளைகளைத்தான் ஒரு பிள்ளையைப் பெத்ததுமே நீ கிழவின்னு சொல்லி பட்டியிலே அடைச்சுடறோமே..” மரகதம் விட்டுக் கொடுக்கவில்லை..

அடுத்த சில மணித்துளிக்களுக்கு அவர்களில் யார் இளமையாய் இருக்கிறார்கள் என்பதைப் பற்றிய் பட்டி மன்றத்தை அவர்கள் நடத்தி முடித்தார்கள்.. அந்த கால இடைவெளியில் தனஞ்ஜெயன் சுமித்ராவை உற்று உற்றுப் பார்த்து வைத்தான்..

‘அடையாளம் பார்த்து வைச்சுக்கறானா..?’

சுமித்ராவுக்கு அந்தக் கேள்வியை அவனிடம் கேட்டே ஆக வேண்டும் போல இருந்தது..

விருந்துக்கு அழைக்க வந்த மணியக்காரர் தம்பதிகளுக்கு விருந்து பரிமாறப்பட்டது.. அவர்களுடன் தனஞ்ஜெயனையும் சுமித்ராவையும் அவர்கள் உட்காரச் சொன்னார்கள்.. சுமித்ரா மறுத்துவிட்டாள்..

“நான் அத்தைகூடச் சாப்பிட்டுக்குவேன் பெரியம்மா.. நீங்களும் பெரியப்பாவும் சாப்பிட உட்காருங்க..”

அவள் இயல்பாக அவர்களை உறவு முறையைச் சொல்லி அழைத்ததில் அவர்களின் முகம் மலர்ந்து விட்டது..

அவர்களின் பார்வையும், இந்திராதேவியின் பார்வையும் சந்தித்து மீண்டன.. அவர்கள் மூவரும் சேர்ந்து முடிவெடுத்து நடத்தி வைத்த கல்யாணம் எத்தகைய மருமகளை கொண்டு வந்து சேர்த்திருக்கிறது என்ற எண்ணப் பரிமாற்றம் அதில் எதிரொலித்தது..

தனஞ்ஜெயன் விருந்தினருடன் சாப்பிட உட்கார்ந்தான்.. சுசிலா கொண்டு வந்து கொடுத்த பதார்த்தங்களை சுமித்ரா பரிமாற ஆரம்பித்தாள்.. அதில் இந்திராதேவி சந்தோசப்பட்டுப் போனாள்..

சேலை முந்தானையை இழுத்துச் சொறுகிக் கொண்டு பாந்தமாக அவள் பரிமாறிய விதத்தில் அவள் மனம் குளிர்ந்தது.. தனஞ்ஜெயனின் தட்டைப் பார்த்துப் பார்த்து அவள் பரிமாறியதில் கணவனின் மீதான அவளது அபிமானத்தை இந்திராதேவி கண்டு கொண்டாள்..

‘நன்றி தெய்வமே..’ அவள் மனம் அமைதி யடைந்தது..

தனஞ்ஜெயன் அவன் அறையிலிருக்க.. சுமித்ரா தேவி காய்ச்சல் வந்ததினால் படுக்க வைக்கப்பட்டிருந்த அறையிலேயே ஒதுங்கி விட என்று மணமான தம்பதிகள் பிரிந்து நின்றதில் அவள் மனம் கணமாக இருந்தது.. சுமித்ராவின் செய்கை அந்த ரணத்தை ஆற்றி விட்டது..

‘இப்பப் பிரிஞ்சிருந்தா என்ன..? என்னைக்கு இருந்தாலும் என் மகன் மனசை என் மருமக திருப்பிக் காட்டிருவா..’ அவள் மனதில் நம்பிக்கை துளிர் விட்டது..

சுமித்ரா தனஞ்ஜெயனின் தட்டில் பரிமாறப் போனபோது அவன் போதும் என்ற பாவனையில் வலது கையை ஊடே நீட்டினான்.. அவள் வெகு இலகுவாக அவன் கையைப் பற்றி நகர்த்தி விட்டு பரிமாற வந்ததை பரிமாறி விட்டு நகர்ந்தாள்..

தனஞ்ஜெயனின் உடலில் மின்சாரம் பாய்ந்தது.. அவன் தியாகராஜனுடன் பேசிக் கொண்டே சாப்பிடுவதைப் போல காத்திருந்தான்.. அடுத்துப் பரிமாற சுமித்ரா வந்த போது அவன் கை நீட்டி மறுக்காமல் அவள்கையை இறுக்கிப் பிடித்து தடுத்தான்..

இப்போது அவள் உடலில் மின்சாரம் பாய்ந்தது..

0Shares

Reviews – Kannathil Muthamittal / கன்னத்தில் முத்தமிட்டாள்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link