Chapter 18

0Shares

வீட்டின் பின்பக்கத்திலிருந்த சிமிண்ட் போடப்பட்ட தளத்தில் மிளகாய் வற்றல், மல்லி, மஞ்சள் போன்ற பொருள்கள் பரப்பப் பட்டு காய்ந்து கொண்டிருந்தன.. சுசிலாவும், தேவகியும் அவற்றைக் கைகளால் பரப்பி விட்டு காய்வதற்கு வழி வகை செய்து கொண்டிருந்தார்கள்.. அந்த வேலையை மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்த இந்திராதேவியின் பக்கத்தில் போய் நின்றாள் சுமித்ரா..

“மிளகும், சீரகமும் சட்டியிலே வறுத்ததைப் போல மொறுமொறுன்னு காய்ஞ்சிருக்கனும்..”

உத்தரவிட்டபடி திரும்பிய இந்திராதேவி மருமகளைக் கண்டதும்.. 

“என்னம்மா..?” என்று அன்போடு வினவினாள்..

“சும்மாதான் அத்தை.. உங்ககூட பேசிக்கிட்டு இருக்கலாம்ன்னு வந்தேன்.. நீங்க இங்கே இருந்தீங்க..” சுமித்ரா விளக்கம் சொன்னாள்..

“அப்படியா..? உள்ளே வா.. உட்கார்ந்து பேசலாம்..”

மருமகளை அதிக நேரத்திற்கு அங்கே நிற்க விடாமல் வீட்டுக்குள் அழைத்துக் கொண்டு போய் விட்டாள் இந்திராதேவி.. அவர்கள் போவதையே பார்த்துக் கொண்டிருந்த சுசிலாவின் மனதில்..

‘எப்பேற்பட்ட மாமியா..’ என்ற எண்ணம் எழுந்தது.. 

தேவகி அவள் காதருகில்..

“ஸ்ஸ்.. ஸ்ஸ்..” என்றாள்..

“எதுக்குடி இஸ்ஸீ போடற..?”

“உனக்குத் தெரியுமா சுசி..?”

“என்ன..?”

“நம்ம சின்னம்மாவுக்கு மாயம், மந்திரம் தெரியுமாம்..”

ரகசியம் போலச் சொல்லிய தேவகியை விசித்திரமாக பார்த்தாள் சுசிலா..

“ரொம்ப நேரமா மண்டையைப் பிளக்கிற உச்சி வெயிலில உலாத்திக்கிட்டு இருக்கியா..?” என்று கேட்டாள்..

“அட..! ஆமாம் புள்ள.. எப்புடி கண்டு பிடிச்ச..? உனக்கும் மந்திர மாயம் தெரியுமா..?” தேவகி விழிவிரிக்க..

“நீ தேற மாட்டடி..” என்று சுசிலா தலையில் அடித்துக் கொண்டாள்..

வீட்டுக்குள் போன இந்திராதேவி.. ஹாலில் ஃபேனைப் போட்டு விட்டு உட்கார்ந்தாள்..

“ஸ்ஸ்.. அம்மாடி.. என்ன வெயில்..” என்றாள்..

பக்கத்தில் உட்கார்ந்த சுமித்ரா தலையசைத்து அதை ஆமோதித்தாள்..

அவர்கள் பேச ஆரம்பித்தார்கள்.. இந்திராதேவி மருமகளின் ஊரைப் பற்றியும், வீட்டைப் பற்றியும் விசாரித்தாள்.. படிப்பைப் பற்றிக் கேட்டாள்.. பொறுமையாக பதில் சொன்னாள் சுமித்ரா.. பேச்சின் ஊடே..

“இவர் எதுக்காக அத்தை கல்யாணத்தை தள்ளிப் போட்டாரு..?” என்று கேட்டு விட்டாள்..

“யாரைக் கேட்கிறம்மா.. தனாவையா..?” என்றாள் இந்திராதேவி..

“ம்ம்ம்..” முணுமுணுத்தாள் சுமித்ரா..

“அதையேன்ம்மா கேட்கிற.. அது பெரிய கதை..” இந்திராதேவி பெருமூச்சு விட்டாள்..

‘அவ்வளவு பெரிய கதையா..? எவ.. அவ..?’ சுமித்ராவுக்கு வெறி வெறியாக வந்தது..

“இவன் காலேஜில படிக்கிறப்ப.. சித்ரா.. சித்ரான்னு ஒரு பொண்ணு கூடப்படிச்சிருக்கு..”

‘ஓ.. அவ சித்ராங்கியா..? இருக்கட்டும்.. நானா.. இல்ல அந்த சித்ராங்கியா..?ன்னு ரெண்டில ஒன்னை முடிவு பண்ணிட்டு வேற வேலையைப் பார்க்கறேன்..’

சுமித்ராவின் மனதில் அப்போதே

‘நீயோ நானோ யார் நிலவே..?

அவர் நினைவைக்

  கவர்ந்தது யார் நிலவே..?’

என்ற பாடல் எழுந்து விட்டது..

“அந்தச் சித்ராவுக்கு நம்ம தனாமேல மதிப்பு..”

‘அந்த மதிப்பு காதலா மாறுச்சாக்கும்..? பாதகி..! படிக்க வந்தாளா..? இல்லை என் புருசனை ரூட் விட வந்தாளா..?’

“நம்ம தனாவும் அந்தப் பொண்ணுகிட்ட பாசமாப் பழகுவான்..”

‘காதலாப் பழகுவான்னு சொல்லுங்கத்தை.. ஏண்டா மச்சான்.. இங்கே கட்டின பெண்டாட்டியைப் பாத்தா ‘யார் நீ..’ன்னு பாத்து வைக்கிற..? படிக்கிற இடத்தில கூடப் படிச்சவகிட்ட பாசத்தைப் பொழிஞ்சிருக்கிற.. உனக்கெல்லாம் இவ்வளவு ஓரவஞ்சனை இருக்கக் கூடாதுடா..’

“நம்ம தனா எதைச் சொன்னாலும் அந்தப் பொண்ணு கேட்டுக்குமாம்..”

‘அப்படி இவன் என்ன சொன்னான்..? அவ எதை கேட்டுக்கிட்டா அத்தை..?’ சுமித்ராவுக்கு குளிரும் காய்ச்சலும் சேர்ந்து வரும் போல இருந்தது..

“இப்படி ஒன்னா மண்ணா பழகிக்கிட்டிருந்த காலத்தில ஒருநாளு.. அந்தப் பொண்ணு நம்ம தனாகிட்ட வந்துச்சாம்..”

‘ஓடிப்போயிரலாம் ‘வா’ன்னு கூப்பிட்டாளோ..?’

“நம்ம தனா மட்டும் தனியா மரத்தடியில உட்கார்ந்திருந்தானாம்..”

‘கூட ஆள் இருக்கிறப்ப அவ எப்படி வருவா அத்தை..?’

“அந்தச் சித்ரா ஒரு போட்டாவை நீட்டி இதில இருக்கிறது யாருன்னு கேட்டாளாம்..?”

‘ஓ..! கதை இப்படிப் போகுதா..? நம்ம காதல் மன்னன் சித்ராங்கிக்கு முன்னாலேயே வேற ஒரு ஃபிகரோட போட்டோவை வைச்சுக்கிட்டு சுத்திக்கிட்டு இருந்தாராமா..? அவ அதைக் கண்டு பிடிச்சு வந்து கேள்வி கேட்டுட்டா போல…’

“இவன் அதை வாங்கிப் பாக்காமலே.. நாலாம் கிளாஸில் ஆரம்பிச்சு.. பனிரெண்டாம் கிளாஸ் வரைக்கும் கூடப் படிச்ச பொண்ணுகளோட பெயரைச் சொல்லி.. அதுவா.. அதுவான்னு கேட்டு வைச்சிருக்கான்..”

‘என்னது..?’ சுமித்ராவால் அவள் காதுகளையே நம்ப முடியவில்லை..

ரிஷிய சிருங்கரைப் போல பெண்டாட்டியைக் கண்டால் தவம் கலைந்து விடுமென்று ஓரம் கட்டி ஒதுங்கிப் போகும் தனஞ்ஜெயன் நான்காம் வகுப்பிலே இருந்து காதலிக்க ஆரம்பித்து விட்டானா..?

‘என்கிட்ட மட்டும் இந்தப் பூனையும் ‘மியாவ்’ சொல்லுமாங்கிற ரேன்சில முகத்தை வைத்துக்கிட்டு விலகிப் போறானே.. பெண்டாட்டின்னா இவனுக்குப் பிடிக்காதா..? கூட படிக்கிற குமரிகளத்தான் பிடிக்குமா..?’

சுமித்ரா வயிறெந்தாள்.. அவள் ஆசையாசையாய் ஒளிந்து மறைந்து ரசிக்கும் கணவனின் கம்பீரமான அழகுக்கு அவனது நான்காம் வகுப்பிலிருந்தே பல்வேறு பெண்கள் உரிமை கொண்டாடியிருக்கிறார்கள் என்ற விவரத்தில் அவளுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது..

கண்களில் துளிர்த்த நீரை மாமியார் அறியாத வண்ணம் இமைகளைச் சிமிட்டி அவள் அடக்கிக் கொண்டிருக்க.. அந்த வழியாகப் போன தனஞ்ஜெயன்.. அவள் அவனைப் பார்த்து கண்ணடிக்கிறாள் என்ற நினைவில் கண்கள்மின்ன அவளைப் பார்த்து விட்டுப் போனான்..

‘பேசாம போயிரு… இல்லேன்னா… கையில கிடைக்கிறதை எடுத்து உன் மண்டையை உடைச் சிருவேன்..’ கருவினாள் சுமித்ரா..

ஒரு மனிதனாகப்பட்டவன் நான்காம் வகுப்பிலிருந்தே காதலிக்க ஆரம்பித்து விடுவானா..?

“என்ன கொடுமையோ.. இந்தப் பயல் அப்படிச் செஞ்சுத் தொலைச்சிருக்கிறான்.. எல்.கே.ஜி படிக்கிறப்பவே டீச்சருக்கு ரோஸ் கொண்டு போய் கொடுக்கிற பயலாச்சே..”

இந்திராதேவி சொல்லியதில் இந்த அத்தை மகனை நான்கு மொத்து மொத்தி வளர்த்திருந்தால்தான் என்ன என்ற கோபம் சுமித்ராவுக்குள் பொங்கியது..

“தனா சொல்லச் சொல்ல.. அந்தச் சித்ராவோட முகம் பேயறைஞ்சதைப் போல ஆகிருச்சாம்..”

‘பின்னே.. தேவதை வரம் கொடுத்ததைப் போலவா ஆகும்..?’

“அவ கோவிச்சுக்கிட்டு காதலை முறிச்சுக்கிட்டுப் போயிட்டாளாம்..”

‘ரோசக்காரி.. அப்படித்தான் செய்வா.. நான் ரோசம் கெட்டவ.. இப்பேற்பட்ட புருசனோட முகத்தை மறைஞ்சு நின்னு பாத்து ரசிச்சுக்கிட்டு இருக்கேன்..’

“தனா அதை மனசில வைச்சுக்கிட்டு கல்யாணமே வேணாம்ன்னு நின்னுட்டான்..”

‘ஓ..! ஐயாவுக்கு காதல் தோல்வி..? அதனால்தான் என்னை பாத்து விருப்பப்பட்ட வாழ்க்கையை அமைச்சுத் தரேன்னு சொன்னாரா..?’

“நானும் எவ்வளவோ சொல்லிப் பாத்துட்டேன்.. கெஞ்சிப் பாத்துட்டேன்.. மசியலையே.. கடைசியில பாத்தா உன் போட்டோவைப் பார்த்ததும்.. பொண்ணு அழகாயிருக்கான்னு சொல்லி வைச்சிருக்கான்.. அது உன் மாமா காதில விழுந்து வைச்சதில என்னென்னவோ நடந்து போச்சு..”

‘நடக்கும்.. நடக்கும்.. இப்பல்ல தெரியுது.. இந்த மனுசன் வீம்புக்காக இவருக்கு விருப்பமில்லாம தாலியக் கட்டியிருக்காருன்னு.. சித்ராங்கிதான் இந்த மனுசனுக்கு உயர்த்தியா..? சுமித்ரான்னா அவ்வளவு ஈஸியாப் போயிருச்சா..?’

“இதனாலதான் தனாகிட்ட நான் அடிக்கடி சொல்லுவேன்.. நண்பர்கள்ன்னா உயிரை விட்டுப் பழகாதேடான்னு..”

இந்திராதேவி மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டதில் நண்பர்களுடன் உயிருக்குயிராய் பழகுவதற்கும்.. தனஞ்ஜெயனின் காதல் தோல்விக்கும் என்ன சம்பந்தம் என்று சுமித்ரா குழம்பிப் போனாள்..

“கூடப் படிக்கிறவன் கூட நண்பனாப் பழகினா ஒரு அளவுக்குத்தான் பழகனும்மா.. அதை விட்டுட்டு அவன் பிறப்பு, வளர்ப்பு முழுசையும் ‘ஊம்’ கொட்டிக் கதை கேட்டா இந்தக் கதிதான்..”

இந்திரா தேவியைப் போன்ற புத்திசாலி எப்படி ஒன்றுக்கொன்று இணைந்து வராத செய்திகளைச் சொல்லிக் கொண்டிருக்கிறாள் என்று சுமித்ராவுக்கு பிடிபடவே இல்லை..

‘அத்தை இப்படியெல்லாம் சம்பந்தா சம்பந்தமில்லாம பேச மாட்டாங்களே…’

“அதிலயும் அவன் சொன்ன கதையெல்லாம் இதைப் போல வில்லங்கமான கதைகளாத்தான் இருந்து தொலைச்சிருக்கு..?”

‘எவன் சொன்ன கதை..?’

அந்த ‘அவன்’ நிச்சயமாக தனஞ்ஜெயனில்லை என்பது மட்டும் சுமித்ராவுக்கு உறுதியாகத் தெரிந்தது.. சித்ராங்கியின் கதையில் வந்த அந்த சித்ராந்தகன் யார் என்று தெரியாமல் அவள் தலைமுடியைப் பிய்த்துக் கொள்ள யத்தனித்தாள்..

“எவனோ ஒருத்தன் எல்.கே.ஜியில இருந்து காதல் பண்ணினா என் மகன் என்ன பண்ணுவான்..? நீயே சொல்லும்மா..”

‘நான் என்னத்தைச் சொல்ல..?’ சுமித்ரா திருதிருத்தாள்..

அதற்கு மேலும் மர்மம் வளர்ந்தால் அவள் உட்கார்ந்திருக்கும் சோபாவை பிறாண்ட ஆரம்பித்து விடுவாள் போல அவளுக்குள் படபடப்பு வந்து சேர்ந்ததில்..

“யாரைச் சொல்கிறிங்க அத்தை..” என்று திருவாயைத் திறந்து கேட்டு விட்டாள்..

“வேறு யார் அம்மா.. எல்லாம் அந்தக் கட்டையில போகிற அன்பழகன்தான்..” கையை நெறித்தாள் இந்திராதேவி..

அன்பழகன் எதற்காக கட்டையில் போக வேண்டும் என்று சுமித்ராவுக்குத் தெரியவில்லை.. அந்தக் கட்டையில் போகும் அன்பழகனுக்கும்… தனஞ்ஜெயனின் காதல் கதைக்கும் என்ன சம்பந்தம் என்றும் அவளுக்குத் தெரியவில்லை..

தெரியாத இந்த விவரங்களை அவளுடைய அருமை மாமியார் தெளிவு படுத்தி விட மாட்டாளா என்று சுமித்ரா வெகுவாக ஏங்கிப் போனாள்..

“அந்த அன்பழகன் என்ன செய்தான் அத்தை..?”

“அவன்தானம்மா எல்.கே.ஜியில இருந்து பன்னிரன்டாம் கிளாஸ் வரைக்கும் காதல் பண்ணிட்டு அந்தக் கருமாந்திரக் கதைகளையெல்லாம் என் மகன் காதில ஓதியிருக்கான்..”

“உங்க மகன் காதில ஓதினானா..? ஏன் அத்தை..?”

“காலக்கொடுமை அம்மா.. அந்தக் கட்டையில போகிறவன் நம்ம தனாவோட ரூம் மேட்டா இருந்திருக்கான்.. இருந்த மகராசன் வாயை வைச்சுக்கிட்டு சும்மாயிருக்காம அவன் காதலித்த வீர.. தீர பராக்கிரமக் கதைகளை அள்ளி விட்டிருக்கான்.. நம்ம தனாவும் ஊம் போட்டுக் கேட்டிருக்கான்.. கேட்டவன் இந்த மாதிரிக் கதைகளை எல்லாம் இந்தக் காதில வாங்கி அந்தக் காதில விட வேணாமோ..?”

‘அப்படியா விடனும்..?’ சுமித்ராவுக்குத் தெரியவில்லை..

“இவன் மனதுக்குள்ள வைச்சிருந்திருக்கான்.. அந்தச் சித்ரா வந்து கேட்டதும் பொட்டுன்னு போட்டு உடைச்சிட்டான்..”

‘என்னங்கடா இது… அன்பழகனின் காதல் லீலைகளைக் கேட்டா தனஞ்ஜெயனின் காதலி இவனை விட்டுட்டு ஓடிப் போனா..?’

சுமித்ராவுக்கு ஒரு மண்ணும் புரியவில்லை..

“அவ உடனே சீமையில் இல்லாத காதல் அழிஞ்சு போச்சுன்னு தனாகிட்டச் சொல்லிட்டுப் போயிட்டா.. இந்தக் கடன்காரன் உன்னாலதாண்டா என் காதல் 

கெட்டுப் போயிருச்சுன்னு தனா மேல பழியைப் போட்டுட்டான்..”

‘என்னது இது.. தனஞ்ஜெயனோட காதல் முறிஞ்சு போனா.. அன்பழகன் எதுக்காக தனஞ்ஜெயன் மேலே பழி போட்டான்..?’

அதற்கு மேலும் தாங்க மாட்டாமல் அவள் கேட்ட போது.. 

“அந்தக் கடன்காரன்தானே சித்ராவைக் காதலிச்சவன்..?” என்றாள் இந்திராதேவி..

“என்னது..?” சுமித்ராவுக்கு தலை சுற்றியது..

இன்னும் எத்தனை ‘என்னது’களைக் கேட்க வேண்டி வருமோ என்று அவள் மனம் ஆயாசப்பட்டது..

“ஆமாம்மா.. நம்ம தனாவோட ரூம் மேட்டா இருந்த அன்பழகன் சித்ராங்கிற பொண்ணக் காதலிச்சிருக்கான்.. அந்தப் பொண்ண அமெரிக்காவில இருந்து பொண்ணு கேட்டு வரவும் அவ இவனைக் கழட்டி விடத் திட்டம் போட்டு.. தனாகிட்ட வந்து ஏதோ ஒரு போட்டோவை கண் மறைவா வைச்சுக்கிட்டு இந்தப் போட்டோ உங்க நண்பர்கிட்ட இருந்தது.. இது யாருன்னு கேட்டிருக்கா.. நம்ம வீட்டு உண்மை விளம்பி.. அவன் பிரண்டோட நான்காம் வகுப்புக் காதலிலே இருந்து ஆரம்பிச்சு பனிரெண்டாம் வகுப்பு வரைக் கொட்டிக் கவிழ்த்து.. இதுவா.. இதுவான்னு கேட்டிருக்கான்.. அவ எதுவுமே இல்ல.. உங்க பிரண்டுக்கும் எனக்கும் காதலும் இல்லேன்னு சொல்லிட்டு ஓடிப்போய் அமெரிக்கா மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்டிட்டு பறந்து போயிட்டா.. அந்த அன்பழகன் தனாவாலேதான் அவன் காதல் முறிஞ்சிருச்சுன்னு பழி போட்டுட்டான்.. இந்த முரட்டு தனஞ்ஜெயன் இருக்கானே.. இவன் இளகின மனசுக்காரன்.. தன்னாலேதானே நண்பனோட காதல் முறிஞ்சு போச்சுன்னு இவன் கல்யாணமே வேண்டாம்ன்னு தள்ளிப் போட ஆரம்பிச்சிட்டான்.. இந்தக் கதையை எங்கேயாவது கேட்டிருக்கியா..?”

கேட்டதே இல்லை என்று தலையை ஆட்டிய சுமித்ரா பொங்கிச் சிரித்தாள்.. மாடியிலிருந்து இறங்கி வந்த தனஞ்ஜெயனைப் பார்த்தவளின் சிரிப்பு அதிகரித்தது..

‘கடைசியில் நம்மாளு காதலே பண்ணாம தாடி வளர்த்த கேஸா..?’

அவளால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை…

0Shares

Reviews – Kannathil Muthamittal / கன்னத்தில் முத்தமிட்டாள்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link