Chapter 19
‘எதுக்குச் சிரிக்கிறா..?’
தனஞ்ஜெயனுக்குத் தெரியவில்லை.. ஆனாலும் அவள் சிரிப்பதைப் பார்க்க அவனுக்குப் பிடித்திருந்தது.. அவளை ஒரு மார்க்கமாக பார்த்தபடி படியிறங்கினான்.. அவனுடைய ஒரு மார்க்கப் பார்வையில் அவள் முகம் சிவந்தது.. சிரிப்பை அடக்க முடியாமல் நாணத்துடன் வேறு திக்கில் பார்த்தாள் சுமித்ரா..
‘சந்தோசமாத்தான் இருக்கா..’
தனஞ்ஜெயன் அவளைப் பார்த்வாறே சோபாவில் உட்கார்ந்தான்.. ஒருபக்கமாய் திரும்பி.. சோபாவின் முதுகுப் பகுதியில் ஒருகையை போட்டு.. சுமித்ராவைப் பார்க்க வாகாக உட்கார்ந்து கொண்டவன் தோரணையாய் கால்மேல் கால் போட்டுக் கொண்டான்..
அவன் எங்கே உட்கார்ந்தாலும் கால் மேல் கால் போட்டுத் தோரணையுடன்தான் உட்காருவான்.. சுமித்ராவுக்கு அது பிடிக்கும்.. அவளுக்கு அது மட்டுமா பிடித்திருந்தது..? அவனையே அவளுக்குப் பிடித்திருந்த தால் அவனது ஒவ்வொரு பழக்கவழக்கத்தையும் கூர்ந்து கவனித்து ரசிப்பதை அவள் வழக்கமாக வைத்திருந்தாள்.. அது தெரியாத தனஞ்ஜெயன் அவளுடைய சிரிப்பில் தெரிந்த சந்தோசத்தை உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தான்..
‘இங்கே இருக்கிறதில இவளுக்கு வருத்தமில்லை போல…’
அதில் அவனுக்குள் லேசான அமைதி வந்தது.. அவனை ஓரக்கண்ணால் பார்த்துப் பார்த்துச் சிரித்தவளை பருகுவதைப் போல பார்த்தபடி..
“என்னம்மா..?” என்று இந்திராதேவியிடம் கேட்டான்..
“என்னம்மான்னா..?” அவள் புரியாததைப் போல பதிலுக்கு கேட்டு வைத்தாள்..
அதற்கும் சுமித்ரா சிரித்து வைத்ததில் தனஞ்ஜெயனின் பார்வை அவளை ஊடுறுவியது.. அதில் அவளது கன்னச் சிகப்பு அதிகமாகியது..
“எதுக்கு இந்தச் சிரிப்பு..?”
“நானா சிரிக்கிறேன்..?”
இந்திராதேவி மடக்கியதில் சுமித்ராவின் சிரிப்பு அதிகரித்தது.. அவள் பொங்கிச் சிரித்ததை ஊன்றிப் பார்த்தான் தனஞ்ஜெயன்.. தளைகளற்ற சிரிப்பாக சுமித்ராவின் சிரிப்பு இருந்தது.. தனஞ்ஜெயன் திருமணத்தைத் தள்ளிப் போட்டதற்கான காரணம்
அவனது காதல் தோல்வியல்ல.. அவனுடைய நண்பனின் காதல் தோல்வி என்று அறிந்ததிலிருந்து அவளுக்குள் உற்சாகம் ஊற்றெடுத்தது.. அந்த நண்பனின் காதல் தோல்விக்கும் எந்தவகையில் தனஞ்ஜெயன் காரணமாக அமைந்தான் என்பதை அறிந்ததும் அவளால் சிரிக்காமலிருக்க முடியவில்லை..
“அத்தை.. நான் கூட இவர்தான் காதலித்து அது நிறைவேறாமல் தாடி வளர்க்காமலே கல்யாணத்தைத் தள்ளிப் போட்டாரோன்னு நினைச்சுட்டேன்.. இப்பப் பார்த்தா.. ஹா.. ஹா…”
சுமித்ராவின் மலர்ந்த முகத்தை ஆழமாகப் பார்த்த இந்திராதேவிக்கு மனதுக்கு நிறைவாக இருந்தது.. அவளால் மகனின் மீது மருமகள் கொண்டிருக்கும் காதலைப் புரிந்து கொள்ள முடிந்தது.. சுமித்ராவின் மனதில் தனஞ்ஜெயனின் மீது எந்த அளவுக்கு காதலிருந்தால்.. அவன் காதல் தோல்வியில் அமிழவில்லை.. அவனுடைய நண்பன்தான் காதலில் தோல்வியடைந்தான் என்பதில் இந்த அளவுக்கு குதூகலம் கொள்வாள்..?
“இவனா..? காதலிக்கிறதா..? காதலிக்கிற வயசில தான் அந்த அன்பழகனோட கருமாயக் கதயையெல்லாம் கேட்டுட்டானில்ல.. அப்புறம் எங்கிருந்து காதலிப்பான்..? எந்தப் பெண்ணையும் ஏறெடுத்துப் பார்க்க மாட்டான்.. இவன் ஏறெடுத்துப் பார்த்த ஒரே பொண்ணு நீதான்ம்மா..”
இந்திராதேவி சொன்னபோது சுமித்ராவின் முகத்தில் பரவிய வெளிச்சத்தில் அவளுக்குள் சந்தோசம் குமிழிட்டது..
‘என் மருமகளுக்குத்தான் என் மகன்மேல எம்புட்டு ஆசை..!’
அந்த ஆசையை உணராத முரட்டுத் தனஞ்ஜெயன் சுமித்ராவைப் பற்றுதல் இல்லாததைப் போல பார்த்து வைப்பதில் அவளுக்குப் பற்றிக் கொண்டு வந்தது.. அதைப் பற்றி மகனிடம் பேசவும் முடியாது.. நித்தியானந்தன் வந்து போன நாளிலிருந்து தனஞ்ஜெயன் இறுக்கமாகவே காணப்பட்டான்.. அந்தச் சூழலில் இந்திராதேவி எதைச் சொன்னாலும் அது தனஞ்ஜெயனை நிர்பந்தப் படுத்துவதாகவே இருக்கும்.. அப்படியிருக்கக் கூடாது என்று இந்திராதேவி விரும்பினாள்.. அன்போ.. பாசமோ.. காதலோ.. எதுவாக இருந்தாலும் அது தானாக வரவேண்டும்.. நிர்பந்தத்தில் வரக்கூடாது.. பிற்காலத்தில் தனஞ்ஜெயனே எனது அம்மாவுக்காகத்தான்.. அவர்களின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டுத்தான் உன்னுடன் வாழ்ந்தேன் என்று சுமித்ராவைப் பார்த்துச் சொல்லி விடலாம்.. அதுபோன்ற வார்த்தைகளைக் காதில் கேட்க நேர்ந்தால் சுமித்ரா துடித்துப் போய் விட மாட்டாளா..? ஏன் என் கணவரை நிர்பந்தப்படுத்தினீர்கள் என்று இந்திரா தேவியிடம் கேள்வி கேட்க மாட்டாளா..? நீங்கள் சொல்லித்தான்.. உங்களின் வார்த்தைகளுக்காகத்தான் என் கணவர் என்னுடன் வாழ்ந்தாரா என்று கோபம் கொள்ள மாட்டாளா..?
அதனால்தான் இந்திராதேவி அமைதிகாத்தாள்.. தனஞ்ஜெயனைத் தேடும் சுமித்ராவின் பார்வையை அறியாதவனாக நடமாடும் முரட்டு மகனைப் பெற்றவளுக்குத் துன்பமாக இருக்கும்..
‘எவனோ ஒரு வந்தட்டிப் பய வந்துட்டுப் போனான்னு இவன் தங்கம் பெத்த மருமக முகத்த ஏறெடுத்துப் பார்ப்பேனான்னு பிடிவாதமா இருக்கானே..இவனை என்னதான் செய்கிறது..?’
ஏதும் செய்ய இயலாதவளாக இந்திராதேவி தவித்துக் கொண்டிருக்கும் போதுதான் சுமித்ரா தனஞ்ஜெயனின் காதல் கதையைப் பற்றி இந்திராதேவியிடம் விசாரித்தாள்.. மருமகளின் மனதை கண்டு கொண்ட இந்திராதேவியும் விலாவாரியாய் அதை விவரித்தாள்.. கதை முடிவில் காதலில் தோற்றுப் போனது தனஞ்ஜெயனல்ல.. அவனுடைய நண்பன்தான் என்பதை அறிந்ததும் சுமித்ராவின் முகத்தில் தோன்றிய சந்தோசத்தைக் காணக் கண்கோடி வேண்டும் என்று இந்திராதேவிக்குத் தோன்றியது..
அதில் விளைந்த சிரிப்புடன் மருமகளிருக்க.. அந்தச் சிரிப்பை பருகு.. பருகென்று பார்த்தபடி மகன் வந்து உட்கார்ந்ததில் இந்திராதேவியின் மனதிலும் குதூகலம் பிறந்தது..
அந்தச் சிரிப்பைச் சாக்கிட்டாவது மகனும், மருமகளும் பேசிக் கொள்ள வேண்டும் என்று அவள் நினைத்தாள்.. தனஞ்ஜெயன் இந்திராதேவியை ஊடே வைத்து சுமித்ராவின் சிரிப்பைப் பற்றி விசாரித்ததும் ‘நானா சிரிக்கிறேன்..’ என்று அவனை மடக்கி விட்டாள்..
குலுங்கிச் சிரித்துக் கொண்டிருந்த சுமித்ராவைப் பார்க்கப் பார்க்க தனஞ்ஜெயனுக்குத் தெவிட்டவேயில்லை.. அவளுக்கு விருப்பப்பட்ட வாழ்க்கையை அமைத்துத் தருவதாக மனதைக் கல்லாக்கிக் கொண்டு சொன்னவனிடம் அவள் காட்டிய கோபத்தை எப்போது நினைத்தாலும் அவன் மனது இறகைவிட லேசானதாக மாறிவிடும்..
‘நீ கூடவா சுமித்ரா..?’
நித்தியானந்தனின் இந்தக் கேள்விதான் தனஞ்ஜெயனைப் புரட்டிப் போட்டு அடித்தது..
‘ஏன் அவன் அப்படிக் கேட்டான்..? ஒருவேளை சுமித்ராவுக்கு அவனைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளும் நினைவு இருந்ததோ..?’
தனஞ்ஜெயனுக்குள் சஞ்சலம் வந்தது.. சுமித்ராவை ஒன்றும் அவன் உலக வழக்கப்படி பெண் கேட்டுப் போய் அவளுடைய பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ளவில்லையே..
பஞ்சாயத்தில் சுமித்ரா தானாக முன் வந்து அவனை மணக்கச் சம்மதம் கொடுத்ததற்கு காரணம் என்ன..? அவள் என்ன தனஞ்ஜெயனைக் காதலித்தாளா..? இல்லையே.. அவளுடைய தாய், தந்தைக்கு வந்திருந்த இக்கட்டிலிருந்து அவர்களை விடுவிக்கத்தன்னைப் பணயமாக்கிக் கொண்டாள்..
‘என்னை மன்னிச்சிரு..’
மனமார இதைச் சொன்னான் தனஞ்ஜெயன்.. அவள் விரும்பினால் அவள் மனம் விரும்பிய வாழ்வை அவளுக்கு அமைத்துத் தருவதாகச் சொல்லி விட்டு வாங்கிக் கட்டிக் கொண்டான்..
‘நமக்குள் நடந்தது கட்டாயக் கல்யாணம்..’
‘எதுவா வேணும்னாலும் இருக்கட்டும்.. கல்யாணம் கல்யாணம் தானே..?’
சுமித்ராவின் கேள்வியில் தனஞ்ஜெயனின் மனதில் அடித்துக் கொண்டிருந்த ஆழிப் பேரலை சமனமானதை அவள் அறிவாளா..?
அவன் முகத்தில் அடித்ததைப் போல ஓங்கி அவள் கதவைச் சாத்தியதில் அவனுக்குக் கோபம் வரவில்லை.. சந்தோசம்தான் வந்தது..
அவனை அவள் தவிர்க்க ஆரம்பித்ததில் அவன் மனம் வலித்தது..
குற்ற உணர்வில் இருந்தவனால் வலியப் போய் அவளிடம் பேச முடியவில்லை.. அந்த வன்கொடுமை யினால் இந்திராதேவியை ஊடே புகுத்தி அவளிடம் பேச முயன்றால்.. அதற்கு இடம் தராமல் அவனைப் பெற்ற தாயே காலை வாருகிறாளே.. இது தகுமா..?
“அம்மா..?”
“என்னடா..?”
“சிரிச்சது நீங்க இல்லன்னு எனக்கும் தெரியும்..”
“தெரியுதில்ல.. சிரிக்கிறவங்ககிட்டப் போயி காரணம் கேளு.. அதைவிட்டு என்கிட்டக் கேட்டா எனக்கென்ன தெரியும்..?”
இந்திராதேவி கெட்டிக்காரத்தனமாக மகனையும்.. மருமகளையும் கோர்த்து விட்டாள்.. தனஞ்ஜெயன் சுமித்ராவைப் பார்த்தான்.. அவன் பார்வையைச் சந்திக்க முடியாமல் அவள் தடுமாறியதில் அவன் கண்களில் மின்னல் வந்தது..
அவன் தோளைக் குலுக்கிக் கொண்டு எழுந்தான்..
“கிளம்பிட்டியா தனா..”
“ஆமாம்மா.. பேக்டரியில ஹெவி வொர்க் இருக்கு..”
“அது எப்பவும்தான் இருக்கும்.. நீ சாயங்காலம் வெரசாவே வீட்டுக்கு வந்திரு..”
“எதுக்கு..?”
தனஞ்ஜெயன் சுமித்ராவை பார்வையிட்டபடி கேட்டான்.. கிடைக்கும் மணித்துளிகளையெல்லாம் மகன் தவற விடாமல் பயன் படுத்திக் கொள்வதை இந்திராதேவி மனதுக்குள் மெச்சிக் கொண்டாள்..
“இன்னும் நம்ம குலதெய்வ கோவிலுக்கு போயிட்டு வரலை தனா.. கல்யாணமானவுடனே முத வேலையா அங்கே போய் பொங்க வைச்சிருக்கனும்.. செய்யலையே.. சுமித்ராவுக்கு காய்ச்சல் வந்திருச்சு.. அவ குணமானவுடனே போகலாம்ன்னா முடியாமல் போச்சு..”
எதனால் முடியாமல் போனது என்ற நினைவு வந்ததில் சுமித்ராவின் சிரிப்பு நின்று விட்டது.. தனஞ்ஜெயன் குற்ற உணர்வுடன் பார்வையை விலக்கிக் கொண்டான்.. அதைக் கவனிக்காதவளைப் போல இந்திராதேவி கேட்டாள்..
“அப்ப பொழுது சாயறதுக்குள்ள நீ வந்துருவ இல்ல..?”
“ம்ம்ம்..”
தனஞ்ஜெயன் சம்மதமாக முணுமுணுத்துவிட்டு வெளியேறினான்.. அவனை சுமித்ராவின் அடிப்பார்வை தொடர்ந்தது.. அவன் கதவோரமாகப் போனபோது சட்டென்று திரும்பிப் பார்த்தான்.. திகைத்துப் பின்வாங்கிய அவளது அடிப் பார்வையில் அவன் முகத்தில் மந்தஹாசம் பரவியது.. அவளைப் பார்த்தபடியே..
“வரேன்ம்மா..” என்றான்..
அதில் சுமித்ரா உதட்டைக் கடித்துக் கொண்டாள்.. தனஞ்ஜெயனின் முகத்தில் திரும்பிய உல்லாசத்தில் இந்திராதேவியின் மனம் குளிர்ந்தது..
கோவிலில் கூட்டம் நிரம்பியிருந்தது.. ஜமீன் வீட்டு மருமகள் குலதெய்வத்துக்கு முதல் பொங்கலை வைக்கப் போகிறாள் என்ற செய்தி தண்டோரா இல்லாமலே சுற்றுப் பட்டு கிராமங்களுக்குப் பரவியிருந்ததில்.. தனஞ்ஜெயனின் குடும்பத்தார் போவதற்குள் மற்றவர்கள் அங்கே குழுமி விட்டார்கள்..
மணியக்காரர் தன் மனைவியுடன் வந்திருந்தார்.. மற்ற உறவுக்காரர்களும் குடும்பத்துடன் வந்திருந்ததில் எப்படிப் பொங்கல் வைக்கப் போகிறோமோ என்று சுமித்ராவுக்கு பயம் வந்து விட்டது..
அவள் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தவள்.. கொஞ்சமாக சமைக்கத் தெரிந்தவள்.. மற்ற வீட்டுக் காரியங்களை பாந்தமாக கவனித்தாலும் சமையல் என்று வரும்போது அவளுக்குள் ஒரு உதைப்பு ஏற்படத்தான் செய்தது..
என்னதான் சுசிலாவும், தேவகியும்.. அவள் கூடவே இருந்தாலும் பொங்கல் வைக்கப் போகிறவள் அவளல்லவா..?
மருமகளின் படபடப்பை உணர்ந்தவளாக இந்திராதேவி அவள் பக்கத்தில் வந்து புன்னகைத்தாள்.. பதிலுக்கு சிரிக்க முடியாமல் சிரித்து வைத்தாள் சுமித்ரா..
“இது குலதெய்வத்தோட கோவில் சுமித்ரா..”
இதை எதற்காக இந்திராதேவி சொல்கிறாள் என்று புரியாதவளாக தலையை ஆட்டி வைத்தாள் சுமித்ரா..
குலதெய்வத்தின் கோவிலுக்குள் நின்று கொண்டிருப் பவளிடம் இதுதான் குலதெய்வத்தின் கோவில் என்று இந்திராதேவி எதற்காக எடுத்துச் சொல்லுகிறாள்..
“பொம்பளைகளுக்கு பிறந்த வீட்டுக் குலதெய்வம் சாமி மட்டும்தான்.. புகுந்த வீட்டுக் குலதெய்வம்தான் அவங்க பரம்பரையைக் காக்க நிற்கும் குலதெய்வம்.. இனி இதுதான் உன் குலதெய்வம்.. அம்மனை வணங்கிக்க சுமித்ரா.. பொங்கல் வைக்கப் போகிறது அவள்தான்.. நீயில்லை..”
“அத்தை..”
சுமித்ராவுக்கு புல்லரித்தது.. கர்ப்பக் கிரகத்தில் குடி கொண்டிருந்த அம்மனின் மங்களகரமான முகத்தைப் பார்த்தாள்.. மனம் அமைதியானது…
“உனக்குத் தெரிஞ்சதை நீ செய்யி.. மத்ததை அவ பார்த்துக்குவா.. நீ வைக்கிற பொங்கலில பக்தியும், பாசமும், அர்ப்பணிப்பும் இருந்தாப் போதும்.. அதுதான் அவளுக்குச் சர்க்கரைப் பொங்கல்.. பயப்படாதே சுமித்ரா.. அம்மன் பால் பாயாசத்தை மட்டும் விரும்பிக் குடிக்கிறவளில்ல.. கூழைக் கரைச்சுக் கொடுத்தாலும் சந்தோசமா ஏத்துக்கிறவ…”
சுசிலா பொங்கல் வைப்பதற்கான அடுப்பைக் கூட்டுவதற்காக ஃ வடிவத்தில் கற்களைப் போடும்படி டிரைவர் பூபதியிடம் சொன்னாள்.. அவள் சொன்னால் அவன் எதையும் செய்வானென்று அவன் மார்தட்டினான்.. அப்படியெல்லாம் சுசிலா சொல்வதற்காக அவன் எந்த மலையையும் புரட்ட வேண்டாம் என்று சுசிலா சொல்லி விட்டாள்..
“அம்மா சொன்னாங்கன்னு வந்து சொல்றேன்.. செஞ்சா செய்யி.. செய்யாட்டிப் போ.. நீ எனக்காக ஒன்னும் எந்த ஆணியையும் புடுங்க வேணாம்.. அம்மா சொன்னதுக்குச் செஞ்சாப் போதும்.. இப்ப கல்லைப் புரட்டிப் போடறியா.. இல்ல.. அம்மாகிட்டப் போய் சொல்லவா..?”
“அது எதுக்கு புள்ள.. தோ.. ஒரு நிமிசத்தில கல்லப் புரட்டிப் போட நானாச்சு..”
“அஃது..”
பூபதி அவசரமாக வடிவமைத்துக் கொடுத்த அடுப்பில் தேவகியின் உதவியோடு பொங்கல் பானையை ஏற்றி வைத்தாள் சுமித்ரா.. பட்டுப் புடவையைத் தூக்கிச் சொருகிக் கொண்டு பாந்தமாக அவள் பொங்கல் வைத்த பேரழகில் சொக்கிப் போய் நின்றான் தனஞ்ஜெயன்..
“ஏம்மா.. அவளுக்குப் பொங்கல் வைக்க வருமா..?” அவன் கவலைப்பட..
“வேணும்னா உங்க பொண்டாட்டிக்குப் பதிலா நீங்க போயி பொங்க வையுங்களேன்..” என்று சிரிக்காமல் யோசனை சொல்லிக் கொடுத்தார் மணியக்காரர்..
“ஏற்கனெவே தனா அந்த யோசனையிலதான் இருக்கிறதைப் போல தெரியுதுங்க..” மரகதமும் கணவருடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு தனஞ்ஜெயனைக் கேலி பண்ணிச் சிரித்தாள்..
பொங்கல் அமோகமாகப் பொங்கியதில் பெண்கள் கூட்டம் குலவையிட்டு அம்மனுக்கு நன்றியைச் சொல்லியது.. இந்திராதேவி சொன்னதுதான் சரியானதாக இருந்தது.. சுமித்ரா வைத்திருந்த பொங்கல் தேவாமிர்தமாக இருந்தது..
“இது நான் வைத்த பொங்கலா..?” சுமித்ரா அதிசயப் பட்டாள்..
“இந்த அம்மன் வைத்த பொங்கல்..” இந்திராதேவி கை குவித்தாள்..
சுமித்ராதேவி சொந்தத்துடன் குலதெய்வமாய் அருள் பாலித்த அம்மனை கையெடுத்துக் கும்பிட்டு வணங்கினாள்.. மனமுருக அவள் வேண்டிக் கொண்டதற்கு செவி சாய்த்ததைப் போல மாங்கல்ய பலம் தரும் அம்மனின் ஆலய மணியோசை ஒலித்தது..
தனஞ்ஜெயனும் சுமித்ராவும் அருகருகே நின்று அம்மனின் தீபாதரனைக் காட்சியினைப் பார்த்தார்கள்.. குருக்கள் கொடுத்த குங்குமத்தை சுமித்ரா நெற்றியில் இட்டபடி தனஞ்ஜெயனை நிமிர்ந்து பார்த்தாள்..
‘இவன்தான் என் குங்குமத்திற்குச் சொந்தக்காரன்..!’
அவளின் பார்வையின் சொந்தத்தில் தனஞ்ஜெயனின் கண்கள் மின்னின..
Reviews – Kannathil Muthamittal / கன்னத்தில் முத்தமிட்டாள்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.