Chapter 25

0Shares

ஒருபக்கம் அகன்ற பள்ளத்தாக்கு.. அதன் ஓரமாக உயரமாக விளிம்பு கட்டியிருந்த இரும்பு கைப்பிடி வளைவு.. மலையைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த நீண்ட நடைபாதை.. கொடைக்கானலின் பிரசித்திபெற்ற ‘கோக்கர்ஸ் வால்க்..’

தனஞ்ஜெயனின் விரல்களோடு விரல்களைப் பிணைத்து நடந்து கொண்டிருந்தாள் சுமித்ரா.. தனஞ்ஜெயனின் கை உயர்ந்து அவள் தோளை வளைக்க முனையும் போதெல்லாம் அவள் விரல்கள் அவன் விரல்களை அழுத்திப் பிடித்து அவன் கையை தடுத்தன..

தனஞ்ஜெயன் அவளை முறைத்தான்.. அவள் தோள் தொட்டு இறுக்கி அணைத்தபடி நடக்க முடியாத கோபம் அவன் விழிகளில் தெரிந்தது.. சுமித்ரா ஏதும் அறியாதவளைப் போல..

“என்ன..?” என்றாள்..

“இப்ப என்ன அலுவலுக்கு என் கையைத் தடுக்கிற..?” அவன் கனன்றான்..

“இல்லையே..” அவள் விழிவிரித்தாள்..

“இல்லைல்ல…?” உறுதி செய்து கொள்ள முனைபவனைப் போல அவன் வினவினான்..

“இல்லவே இல்ல..” உறுதி போல அவள் சொன்னாள்..

“ஓஹோ..”

ஒரு தினுசான குரலில் சொல்லியவன் என்ன செய்யப் போகிறான் என்பதை சுமித்ரா யூகிப்பதற்குள் அவள் விரல்களிலிருந்து தன் விரல்களை உறுவிக் கொண்டவன் புயல் வேகத்தில் அவள் தோளைச் சுற்றிக் கையைப் போட்டுத் தன்னுடன் இறுக்கிக் கொண்டான்..

“விடுங்க.. யாராவது பார்த்துரப் போறாங்க..” சுமித்ரா கெஞ்சினாள்..

“இது அன்னவாசல் இல்லைடி.. கொடைக்கானல்.. இங்கே உன்னையும்.. என்னையும் வேவு பார்க்கத்தான் ஆளுக வந்திருக்காங்களா..? கொடைக்கானலைச் சுற்றிப் பார்க்க வந்திருக்காங்கடி..”

அவர்களைச் சுற்றியிருந்த கூட்டத்தில் இதைவிட நெருக்கமாக பிணைந்தபடி பல ஜோடிகள் கடந்து சென்றதை சுட்டிக் காட்டினான் தனஞ்ஜெயன்..

“இதுக்கெல்லாம் சார் உடனுக்குடனா எவிடன்ஸை காட்டிருவீங்களே..” செல்லமாக முறைத்தாள் சுமித்ரா..

பிடிக்காததைப் போல காட்டிக் கொண்டாலும் அவளுக்கு தனஞ்ஜெயனின் முரட்டுத்தனமான அணைப்பை மிகவும் பிடித்திருந்தது.. பொது இடத்தில் அவள் விரல்களையாவது தொட்டுக் கொண்டிருக்க வேண்டு மென்று அவன் துடித்தான்.. அவன் காட்டிய அதீத நெருக்கத்தில் சுமித்ராவுக்கு விலகி நின்ற காலமெல்லாம் மறந்தே போய் விட்டது..

தனஞ்ஜெயன் சுமித்ராவின் தோளை அழுத்தினான்..

“வலிக்குது..” சிணுங்கினாள் சுமித்ரா..

அப்படியா என்று அவன் கையை விலக்கிக் கொள்ளவில்லை.. மாறாக அவளைத் தின்று விடுவதைப் போல பார்த்து வைத்தான்..

“போட்டிங் போகலாமா..?”

“ம்ம்ம்..”

சுமித்ரா சம்மதமாக தலை அசைத்தாள்.. அவர்கள் தேனிலவுக்காக அங்கே வந்து ஒரு வாரம் ஓடியிருந்தது.. தினமும் ஒர் இடமாக பார்த்தாலும் போட்டிங் போவதை மட்டும் தினப்படி வேலையாக வைத்திருந்தார்கள்.. எங்கே சுற்றினாலும் தனஞ்ஜெயன் மறக்காமல் அவளை ஏரிக்கு அழைத்தக் கொண்டு வந்து விடுவான்..

சுமித்ராவுக்கு போட்டிங் போக மிகவும் பிடிக்கும்.. அதை அவள் வாய் விட்டுச் சொல்லாமலே அவன் 

புரிந்து கொண்டதில் அவன்மீதான சுமித்ராவின் காதல் அதிகரித்தது..

படகுத் துறையில் கூட்டம் அதிகமில்லை.. ஒருவர் மட்டும் துடுப்பு போடும் படகில் ஏறிய தனஞ்ஜெயன் துடுப்பை எடுத்துக் கொண்டான்.. அவனுக்கு எதிர் புறமாக அமர்ந்திருந்த சுமித்ராவை காதல் பொங்கப் பார்த்தபடி துடுப்பை போட ஆரம்பித்தான்..

அந்தி வெயிலின் கதிர்கள் பட்டு சுமித்ரா பொன்னிற தேவதைபோல மிளிர்ந்தாள்.. அவளைப் பார்க்கப் பார்க்க அவனுக்கு ஆசை மேலிட்டது.. அவன் பார்வையில் முகம் சிவந்து தண்ணீரை அள்ளி அவன்மீது வாரியடித்தவளைப் பார்த்துக் கண் சிமிட்டினான்..

“என்ன அழகு..! எத்தனை அழகு..!

கோடிமலர் கொட்டிய அழகு..!

பெண்ணென்று உருவானதோ..”

அவன் பாடலில் உதட்டைச் சுழித்து அழகு காட்டினாள் சுமித்ரா.. காற்றில் கலைந்து பறந்து அவனது முன் நெற்றியில் படிந்த முடியில் விரல் விட்டுக் கோதும் ஆசை அவளுக்குள் வந்தது..

அதை உணர்ந்தவனின் கண்களில் மின்னல் வந்ததில் வெட்கச் சிரிப்போடு கரையைப் பார்த்தாள்..

“சுமி…”

“ம்ம்ம்..”

“என்னைப் பிடிச்சிருக்காடி..?”

சுமித்ரா சிரித்து விட்டாள்.. அவன் மீதான அவளது காதலை உணர்ந்த பின்னாலும் அவன் தினமும் கேட்கும் இந்தக் கேள்வியில் அவளுக்குச் சிரிப்புத்தான் வந்தது..

“பிடிக்கலைன்னு சொன்னா என்ன செய்வீங்க..? என் பிறந்த வீட்டுக்கு அனுப்பி வைத்து விடுவீங்களா..?”

விளையாட்டாய் கேட்டவள் மௌனமாகி விட்டாள்.. தனஞ்ஜெயனின் புருவங்கள் சுருங்கின..

“ஏய்ய்.. சுமித்ரா..! என்னடி ஆச்சு..?” என்று கேட்டான்..

“ஒன்னுமில்லை..” சுமித்ராவின் முகத்தில் மெலிதான சோகம் வந்திருந்தது..

அவளுடைய பிறந்த வீட்டில் அவளை நினைத்துக் கொண்டிருக்கிறார்களா.. இல்லை.. மறந்து விட்டார்களா..?

அதற்குள் கரை வந்து விட்டிருந்ததால்.. தனஞ்ஜெயன் காட்டேஜீக்குப் போனபின்னால் என்னவென்று கேட்டுக் கொள்ளலாம் என்று பேசாமல் கரையேறினான்.. சுமித்ராவுக்கு கை கொடுத்து கரைக்கு இழுத்துக் கொண்டான்.. அவள் தோள் மீது கை போட்டவனை அவள் ஆட்சேபிக்கவில்லை.. மௌனமாக அவனுடன் நடந்தாள்..

சுமித்ராவின் மனம் வேறு எங்கோ இருக்கிறது என்பதை புரிந்து கொண்டான் தனஞ்ஜெயன்.. இல்லா விட்டால் அவள் தோள்மீது அவனது கை விழுந்திப்பதைக் கூட உணராதவளாக அவனுடன் நடப்பாளா..? உடனடியாக செல்லச் சண்டையொன்றை போட்டிருப்பாளே..

ஏதோ யோசனையுடன் நடந்த சுமித்ராவின் கண்கள் சற்றுத் தள்ளி நின்று அவளையே பார்த்துக் கொண்டிருந்த இளைஞனைக் கண்டதும் மின்னின..

“சுந்தர்..” பரபரத்தாள்..

“அக்கா..” அவளைவிட வேகமாக அவளருகே வந்தான் சுந்தர்..

“எப்படிடா இருக்க..?”

சுமித்ராவின் கண்களில் குளம் வந்தது.. தம்பியை அவள் கட்டிக் கொண்டாள்.. அவனோ தனஞ்ஜெயனை விரோதியைப் பார்ப்பதைப் போல முறைத்துப் பார்த்து வைத்தான்..

‘என்னங்கடா இது..’

தனஞ்ஜெயன் தாடையைத் தடவியபடி தள்ளி நின்று அந்த அக்காள், தம்பியின் அன்புப் பிணைப்பை பார்த்துக் கொண்டிருந்தான்.. அவனுடைய அன்பு மைத்துனனோ.. அக்காள் கணவனைப் பார்க்கப் பிடிக்காதவனாக முகத்தை திருப்பிக் கொண்டு சுமித்ராவிடம் மட்டும் பாசப்பறவையை பறக்க விட்டுக் கொண்டிருந்தான்..

“என்க்கா இளைச்சுட்ட..? துரும்பா இருக்கறயே..”

மைத்துனனின் உருகலில்..

‘ஆமாண்டா மச்சான்.. உங்க அக்காவுக்கு எங்க வீட்டில சோறே போடறதில்ல பாரு.. அதனாலதான் இவ துரும்பா இளைச்சிருக்கா..’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டான் தனஞ்ஜெயன்..

“உன் முகமே வாடியிருக்கேக்கா..”

‘நீ வந்து தண்ணி பாச்சுடா மச்சான்.. வாடிப்போன உன் அக்கா முகம் மலர்ந்துரும்..’

“உன்னோட சிரிப்பு எங்ககேக்கா போச்சு..?”

‘எந்தக் குருவி தூக்கிட்டுப் போச்சோ.. தெரியலைடா மச்சான்.. ஏழுகடல், ஏழுமலை தாண்டி ஒரு மலையுச்சியிலே பதுக்கி வைச்சிருக்காம்.. நொண்டிக் குதிரையிலே ஏறி.. அட்டைக் கத்தியோட போய் குருவிகூட சண்டை போட்டு மீட்டுட்டு வாப்பா..’

“ஆளே அடையாம் தெரியாம மாறிப் போயிட்டியேக்கா..”

‘இதெல்லாம் ஓவர்டா மச்சான்.. அடையாளம் தெரியாமலா நீ அக்கான்னு ஓடி வந்த..?’

“வாக்கா.. நம்ம வீட்டுக்குப் போயிடலாம்..”

‘ஆமாண்டா மச்சான்.. நீ அழைச்சவுடனே உன்கூட அவளை அனுப்பி வைச்சுட்டுத்தான் வேற வேலை பார்ப்பேன்..’

அதுவரை மைத்துனன் கேட்ட கேள்விகளுக்கு மனதுக்குள் பதிலைச் சொல்லிக் கொண்டிருந்த தனஞ்ஜெயன் பல்லைக் கடித்தான்..

“தம்பி கூப்பிடறாப்புலயே சுமித்ரா.. எப்படி..? கிளம்பி ‘உன்’ வீட்டுக்குப் போயிடறயா..?” கடினமான முகத்துடன் கேட்டான்..

சுமித்ரா துணுக்குற்றாள்.. அத்தனை தினங்களாக பார்க்காமல் இருந்த தம்பியை பார்த்து விட்ட மகிழ்வில் இருந்தவளுக்கு அப்போதுதான் சுந்தரின் பேச்சிலிருந்த விபரீதம் உறைத்தது..

‘என் தம்பி கலாட்டாக் கல்யாணத்திலே அரண்டு போய் கேள்வி கேட்கிறான்.. பஞ்சாயத்திலே தானா முன் வந்து கல்யாணத்துக்கு ஒப்புக்கிட்ட அக்கா எப்படி வாழ்கிறாளோங்கிற கவலையிலே பேசறான்.. அவனுக்கு என் மனதைப் பற்றி என்ன தெரியும்..? தாலி கட்டிய இவனே உன் விருப்பம்போல வாழ்க்கையை அமைத்துத்தரேன்னு வசனம் பேசினப்ப.. என்கூடப் பிறந்த தம்பி, விருப்ப மில்லாத வாழ்வை அக்கா வாழ்கிறான்னு நினைச்சிருக்க மாட்டானா..? அந்தப் பதட்டத்தில் அவன் பேசினா இவன் உடனே கிளம்பிப் போய் விடச் சொல்வானா..?’

சுமித்ராவின் முகம் கடுமையானது..

“‘உன்’ வீடா..?”

தனஞ்ஜெயன் கொடுத்த அதே அழுத்தத்துடன் உன் வீட்டை உச்சரித்து வினவினாள்.. தனஞ்ஜெயனின் கண்கள் இடுங்கின.. 

“அப்படித்தானே உன் தம்பி சொன்னாப்புல..?” என்று புருவங்களை உயர்த்தினான்..

“அவன் சொல்வான்.. அவனுக்கு என்ன தெரியும்..? சின்னப் பையன்.. இப்பத்தான் ப்ளஸ்டூவை முடிச்சிருக்கான்.. காலேஜில் காலெடுத்து வைக்கப் போகிறான்.. நீங்க அப்படியா..?”

“இங்கே பார்.. பேசுகிற பேச்சையெல்லாம் அக்காளும் தம்பியும் பேசிட்டு என்மேல் பழி போடக் கூடாது..”

“ஒற்றை வார்த்தையிலே உன் வீட்டுக்குக் கிளம்பிப் போன்னு நீங்க சொல்வீங்க.. அதை ஏன்னு கேட்டா பழிபோடறதா அர்த்தமாகுமா..? நல்லாயிருக்குங்க.. அன்னவாசல் ஜமீனின் நியாயம்…”

“ஏய்ய்.. எங்க ஊரு நியாயமெல்லாம் நல்லாத்தாண்டி இருக்கு.. உங்க ஊர் நியாயம்தான் எகனைக்கு மொகனையா இருக்கு..”

“வேணாங்க.. திரும்பவும் வார்த்தை தப்புது.. சொல்லிட்டேன்.. முதல்ல ‘உன் வீடு’ன்னீங்க.. இப்ப ‘உங்க ஊர்’ன்னு சொல்கிறீங்க.. எனக்கு இப்பவே ஓர் உண்மை தெரிஞ்சாகனும்..”

“என்ன உண்மை..? வீரம் விளைஞ்ச மண்ணு அன்னவாசலா..? இல்லை லட்சுமிபுரமான்னா..?”

தனஞ்ஜெயனின் கோபாவேசத்தில் சுந்தர் கண் சிவந்தான்.. அவனுடைய அருமை அக்காவை அவள் கழுத்தில் கட்டாயத்தாலி கட்டிய தனஞ்ஜெயன் கொடுமைப் படுத்துகிறான் என்று கணக்குப் போட்டு விட்டான்.. அந்தக் கோபத்தில் அக்காளைக் காக்கும் தம்பியாக.. சட்டைக் காலரை உயர்த்தியபடி தனஞ்ஜெயனிடம் சண்டைக்கு கிளம்பி விட்டான்..

“லட்சுமிபுரத்து மண்ணு ஒன்னு வீரத்திலே குறைஞ்சது இல்லைங்க.. அன்னவாசல் ஜமீன்தார் அப்படிங்கிறதுக்காக யாரும் இங்கே பயந்து ஒதுங்க மாட்டோம்..”

“ஓ…”

“கூடப் பிறந்தவளுக்காக எதையும் தாங்குவோம்..”

“அட.. எதையும் தாங்கும் இதயம்ன்னு உன்னைப் பார்த்துத்தான் சொல்லி வைச்சாங்களா..?”

“என் அக்காவுக்கு ஒன்னுன்னா தட்டிக் கேட்க நானிருக்கேன்..”

“சபாஷ்..”

“இவர்கூட என்ன பேச்சு.. வேண்டிக்கிடக்கு..? நீ வாக்கா.. நம்ம வீட்டுக்குப் போயிரலாம்..”

தனஞ்ஜெயனின் முகம் பயங்கரமாக மாறிவிட்டது.. சுமித்ரா உதட்டைக் கடித்தாள்.. சுந்தர் பேசப்பேச.. கூடப் பேசிய தனஞ்ஜெயனின் கிண்டல் அவள் மனதை பாதித்திருந்தது.. அவளுடைய தம்பியை தனஞ்ஜெயன் அவமதிப்பதாக அவள் மனதுக்குள் பொங்கினாள்.. அதற்கேற்ப தனஞ்ஜெயன் ஒட்டாத பார்வையுடன் பேசினான்..

“போம்மா.. அதான் உன் உடன்பிறப்பு.. பாசக்காரத் தம்பி.. வீச்சருவாள் வீராச்சாமி.. உன்னை வெற்றிலை பாக்கு வைச்சு அழைக்கிறாப்புலயில்ல.. கிளம்பு.. கிளம்பு.. உன் தம்பி கூட உன் ஊரைப் பார்த்து நடையைக் கட்டு..”

தனஞ்ஜெயனின் எகத்தாளமான தொனியில் மனதில் அடிவாங்கினாள் சுமித்ரா.. அதை சும்மா விடக் கூடாது என்ற வீம்பும் பிடிவாதமும் அவள் மனதில் 

தோன்றி விட்டன..

‘கல்யாணமான நாளில இருந்து என் அப்பா வீட்டில இருந்து ஒரு ஈ, குருவி வந்திருக்குமா..? இந்த மனுசனுக்கு கழுத்தை நீட்டினா நான் என் அப்பாம்மா வீட்டை மறந்துரனுமா..? வெளியூருக்கு வந்த இடத்திலே கூடப் பிறந்தவனைப் பார்த்தா அவன் கூட நின்று பேசக் கூடக் கூடாதா..? அக்காங்கிற பாசத்திலே அவன் வாக்கா 

நம்ம வீட்டுக்குப் போகலாம்ன்னு கூப்பிட்டா இந்த மனுசன் அதில குற்றம் பார்ப்பானா..? நான் என்ன செய்திருக்கனும்னு இவன் நினைக்கிறான்..? என் தம்பியைப் பார்த்தும் பார்க்காததைப் போல பிரிஞ்சு போயிருக்கனுமா..? இவன் மட்டும் இவங்கம்மாவைப் பிரியாம இவன் வீட்டில இருக்கலாம்.. நான் மட்டும் என் கூடப் பிறந்தவன்கிட்ட பாசம் காட்டிப் பேசக்கூடாது.. எவ்வளவு வினயமா இருக்கிறான்..?’

சுமித்ரா செல்போனை கையில் எடுத்தாள்.. நம்பர்களை அழுத்தப் போனாள்..

“யாருக்குப் போன் போடற..?” தனஞ்ஜெயன் கேட்டான்..

“உங்க அம்மாவுக்குத்தான்..” நிதானமாக சொன்னாள் சுமித்ரா..

“என் அம்மா உனக்கு யாருடி..?” தனஞ்ஜெயன் சீறினான்..

“என் தம்பி மட்டும் உங்களுக்கு யார்..? வேண்டா தவனா..? மச்சினன்னு நினைச்சுப் பார்த்திங்களா..?” சுமித்ராவும் பதிலுக்குச் சீறினாள்..

“மச்சான்னு உன் தம்பி நினைச்சுப் பார்த்தாப்புலயா..? அதை முதலிலே கேளு.. என்னவோ வில்லனைப் பார்க்கிறதைப் போல பார்த்து வைக்கிறாப்புல.. என்ன..? உனக்கு அதெல்லாம் கண்ணுக்குத் தெரியாதா..? மனச்சாட்சியே இல்லையாடி..? நீயென்ன இளைத்துக் கருத்து.. எழும்பும் தோலுமா ஆளே அடையாளம் தெரியாத மாதிரி 

உருக் குலைஞ்சா போயிருக்க..? உன் சிரிப்பு எங்கே போச்சுன்னு கேக்றாப்புல..? 

நானும் எங்கம்மாவும் உன்னை கொடுமை படுத்தி இந்தக் கோலத்துக்கு ஆளாக்கியிருக்கிறோமா..?” தனஞ்ஜெயன் கொதித்தான்..

பதிலுக்குப் பதில் சீறிக் கொண்டிருந்த சுமித்ராவால் இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியவில்லை.. அதே சமயத்தில் அவளுடைய தம்பி பேசியதை தவறு என்று ஒப்புக் கொள்ளவும் தயங்கினாள்..

சுந்தர் என்ன வேண்டுமென்றேவா அப்படிப் பேசினான்..?

அவன் கண்ணுக்கு அப்படித் தெரிந்ததோ என்னவோ.. பிறந்த வீட்டின் ஞாபகத்தில் சுமித்ரா முகம் வாட நடந்து வந்து கொண்டிருந்தது உண்மைதானே.. அவன் பார்வையில் படும் நேரத்தில் அவள் சோகமாகத் தானே இருந்தாள்.. சிரித்துக் கொண்டிருக்கவில்லையே.. முகம்வாட சிந்தனையுடன் வந்தவளைப் பார்த்த சுந்தருக்கு அக்கா துன்பப்படுகிறாள் என்று தோன்றி விட்டதோ என்னவோ..

“அவன் சின்னப் பையன்..” முணுமுணுத்தாள்..

“பேச்சு சின்னதா இல்லையே..”

“இருக்கட்டும்.. அதுக்கு இப்ப என்ன செய்யனும்ங் கறிங்க.. என் தம்பி கூடக் கிளம்பிப் போய் விடச் சொல்கிறீங்களா..? சொல்லுங்க.. போய் விடுகிறேன்.. போகிறதுக்கு முன்னால உங்கம்மாவுக்கு.. அதாவது என் அத்தைக்கு போன் போட்டு விளக்கம் கேட்டுட்டு கிளம்பி விடுகிறேன்..”

“எங்க அம்மாகிட்ட விளக்கம் கேட்கப் போகிறயா..? எதைப் பத்திக் கேட்கப் போகிற.. கழுத்தில கட்டற தாலிக்குப் போடற மூன்று முடிச்சுக்கு என்ன அர்த்தம்ன்னு கேட்கப் போறியா..?”

“ஊஹீம்.. உங்க மகன்.. உங்க ஊருக்கு.. உன் வீட்டுக்குப் போன்னு என்னைச் சொல்கிறார் அத்தை.. எது என் வீடு..? எது என் ஊர்ன்னு கேட்கப் போகிறேன்..”

சுமித்ராவின் கிடுக்கிப் பிடியில் அவளையே உறுத்துப் பார்த்தான் தனஞ்ஜெயன்.. இந்தக் கேள்விகளை சுமித்ரா இந்திராதேவியிடம் கேட்டு வைத்தால் ஏற்படப் போகும் பின் விளைவுகளை எண்ணிப் பார்த்தது அவன் மனம்..

‘அவ்வளவுதான்.. அம்மா என்கிட்ட முகம் கொடுத்தேப் பேசமாட்டாங்க..’ தனஞ்ஜெயன் சுமித்ராவை முறைத்தான்..

“மிரட்டறயாடி..?”

“என்ன தேவைக்கு..?”

“உன் தம்பியைக் கண்டதும்.. உன் புருசன் உனக்குத் தேவையில்ல..?”

“குட்.. இதுதான் என் கூடப்பிறந்தவனுக்கு நீங்க கொடுக்கிற இம்பார்டன்ஸ்.. ரொம்ப சந்தோசமா இருக்கு..”

“பேச்சை மாத்தாதே..”

“மாத்தி என்ன செய்யப் போறேன்..?”

“முதல்ல போனை ஆஃப் பண்ணு..”

“அத்தையிடம் பேசனும்..”

“உன் பல்லைக் கழட்டிருவேன்.. அடங்குடி.. என்ன..? மாமியாரைக் கைக்குள்ள போட்டிருக்கிற மமதையிலே ஆடிப் பாக்கறியா..?”

“ம்ஹீம்.. புருசனைக் கைக்குள்ள போடத் தெரியாதவ மாமியாரைக் கைக்குள்ள போட்டு எதைச் சாதிக்கப் போறேன்..?”

கணவனும் மனைவியும் சண்டைக் கோழிகளாக ஒருவரையொருவர் உறுத்துப் பார்த்துக் கொண்டனர்.. சுந்தரோ கொடுமைக்கார கணவனிடமிருந்து தமக்கையைக் காப்பாற்றும் மும்முரத்தில் இருந்தான்.. கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் புகுந்தான்..

“இதோ பாருங்க.. நீங்க அன்னவாசல் ஜமீன்தாரா இருக்கலாம்..”

“கூடவே உன் அக்காவுக்கும் புருசனா இருக்கிறேன்ப்பா..”

“கொடுமைக்கார புருசன்னு சொல்லுங்க..”

“அப்படி என்ன கொடுமையை நான் செய்துட்டேன்னு உன் அக்காகிட்டக் கேட்டுச் சொல்லுப்பா..”

“கேட்டால்தானா..? அதான் என் கண் எதிரிலேயே பார்த்துட்டேனே…”

“பார்த்துட்டேல்ல..? நான் இப்படித்தான்.. அதுக்கு இப்ப என்னங்கிற..?”

“உங்ககிட்ட எனக்கென்ன பேச்சு..?”

“வேற யார்கிட்டப் பேசப் போறே..?”

“அக்காகிட்டப் பேசிக்கறேன்..”

“பேசுப்பா.. தாராளமா பேசு.. நானென்ன உன் வாயைப் பொத்தியா வைச்சிருக்கேன்..?”

தனஞ்ஜெயன் கைகளை மார்போடு மடித்துக் கட்டியபடி அமைதியாக நின்றுவிட.. சுந்தர் சுமித்ராவிடம் வற்புறுத்தினான்..

“வாக்கா.. நம்ம வீட்டுக்குப் போயிரலாம்..”

சுமித்ரா சங்கடமடைந்தாள்.. எதைச் சொல்லி சுந்தருக்குப் புரிய வைப்பது என்றே அவளுக்குத் தெரியவில்லை..

“நீ எப்படிடா கொடைக்கானலில் வந்து நிற்கிற..?” என்று பேச்சை மாற்றினாள்..

“பிரண்ட்ஸோட டூர் வந்தேன்க்கா.. வந்த இடத்தில உன்னைப் பார்த்துட்டேன்.. வாக்கா போகலாம்…”

கீறல்விழுந்த ரிகார்டைப் போல சுந்தர் திரும்பத் திரும்ப அனத்திக் கொண்டிருந்தான்.. அவனை காட்டேஜீக்கு அழைத்துப் பேசலாம் என்றால் அழைக்க வேண்டிய தனஞ்ஜெயன் கைகளைக் கட்டிக் கொண்டு எனக்கென்ன என்று நின்று கொண்டிருந்தான்.. அழைப்பை ஏற்றுக்கொண்டு வர வேண்டிய சுந்தரோ தனஞ்ஜெயனை எதிரிக்காரனைப் போல பார்த்துக் கொண்டிருந்தான்..

இருந்திருந்து அவள் தம்பியை கொடைக்கானலில் பார்த்தாளே.. அந்தச் சந்திப்பு இப்படியா அமைய வேண்டும்..?

“சுந்தர்.. நீ கிளம்பு..” சுமித்ரா ஒரு முடிவோடு சொன்னாள்..

“நீ..?”

“நான் என் வீட்டுக்குப் போகிறேன்டா.. உனக்குப் பிடித்தாலும்.. பிடிக்கலைன்னாலும் இதை நீ ஏற்றுக்கிட்டுத் தான் ஆகனும் சுந்தர்.. எனக்குக் கல்யாணமாகிருச்சு.. இனி என் ஊர் அன்னவாசல்தான்.. உன் மாமா எங்கேயிருக் கிறாரோ அதுதான் என் வீடு.. புரிஞ்சுக்கடா..”

சுமித்ராவின் கையை உதறிவிட்டு சுந்தர் வேகமாக போய் விட்டான்.. மருகி நின்ற சுமித்ராவை விட்டு விலகி நடந்தான் தனஞ்ஜெயன்..

சுமித்ராவின் கண்களில் நீர் தளும்பியது.. அவள் கொடைக்கானலின் ஏரியைப் பார்த்தாள்.. தண்ணீர் நிரம்பியிருந்த ஏரி அவளைக் கேள்வியுடன் பார்த்தது..

‘இது எந்தப் பெண்களின் கண்ணீர் துளிகளோ..’

கண்ணீரைத் துடைத்துக் கொண்டு தனஞ்ஜெயனின் பின்னால் அவள் நடந்தாள்.. திரும்பிப் பார்க்காமல் நடந்தவளின் பின்னால் ஏன் நடக்க வேண்டும் என்று அவளது தன்மானம் முரண்டியது..

‘பேசாம சுந்தருடன் லட்சுமிபுரத்துக்கு போய் விடலாமா..?’

கேள்வி கேட்ட மனதை அவளது மார்பில் புரண்ட தாலி தடுத்து நிறுத்தியது.. கட்டிய கணவனுடன் போவதுதான் அவளது பிறந்த வீட்டிற்கு அவள் வாங்கித் தரும் மரியாதை என்று சொன்னது.. அப்படியில்லாமல் சுந்தருடன் அவள் தனியாக போய் நின்றால் அவள் பிறந்து வளர்ந்த ஊர் என்ன சொல்லும்..? சுந்தர் சொன்னதுதான் உண்மை என்று சொல்லி விடாதா..?

‘பார்.. பெத்தவங்களுக்காக அந்த பொண்ணு தியாகம் பண்ணுச்சு.. தானா முன்னாடி போய் நின்னு அன்னவாசல் ஜமீன்தாரரைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லுச்சு.. இப்ப என்ன ஆச்சோ.. ஏது ஆச்சோ.. புருசன்காரர்கூட வராம.. தம்பிகூட தனியா வந்து நிற்குது.. பெத்தவங்களாலே அவங்க பொண்ணுக்கு இப்படியாப் பட்ட கஷ்டம் வந்துருச்சே…’

இப்படித்தான் அவள் ஊர் சொல்லும்.. அவளைப் பெற்றவர்களைக் குற்றவாளியாக்கி விரல் நீட்டும்.. அதற்காகவா சுமித்ரா அப்படியொரு முடிவிற்கு வந்து.. தன் திருமணத்திற்கு.. தானே ஒப்புதலைச் சொன்னாள்..?

இது எல்லாவற்றிற்கும் மேலாக அவளால் தனஞ்ஜெயனைப் பிரிந்து ஒரு அடி எடுத்து வைக்க முடியுமா..?

முன்னால் சென்று கொண்டிருந்த தனஞ்ஜெயனின் பரந்த முதுகை ஏக்கத்துடன் பார்த்தாள் சுமித்ரா.. எத்தனை முறை அந்த முதுகில் அவள் சவாரி செய்திருப்பாள்..?

“உப்பு மூட்டை தூக்கவா..?”

“என்னையா..?”

“உன்னைத் தூக்காம.. அதோ ரோட்டில போறாளே.. மஞ்சப் புடவைக்காரி.. அவளைத் தூக்கச் சொல்கிறியா..?”

“அதானே பார்த்தேன்.. அந்த மஞ்சள் புடவை மஞ்சரி உங்களுக்கு பத்து விட்ட அத்த பொண்ணுதானே..”

“நூறுவிட்ட அத்த பொண்ணுன்னு சொல்லு.. அதுக்கென்ன இப்ப..?”

“அவளத் தூக்கனுமுன்னு மனசுக்குள்ள நோக்க மிருக்கப் போய்த்தானே அவள கை காட்டறிங்க..? போங்க.. போய் அவளையே தூக்குங்க…”

“என்ன அலுவலுக்கு அவளைத் தூக்கச் சொல்கிற..? நான் துக்க எனக்குப் பொண்டாட்டியில்லையா.. என்ன..?”

தனஞ்ஜெயன் முரட்டுத்தனமாக அவளைத் தூக்கி முதுகில் சரித்துக் கொண்டபோது அவள் என்னவோ சப்ர மஞ்சத்தில் படுத்திருப்பதைப் போல ஒய்யாரமாக உணர்ந்தாள்..

அவனுடைய பின்னக் கழுத்தை வளைத்து அவளின் கைகள் மலர் வளையம் போல இருக்க.. அவள் கைகளில் அழுந்த முத்தம் பதித்தபடி.. அவன் அவளை இறுக்கிக் கொள்ளும்பது சொர்க்கத்தில் அவள் இருப்பாள்..

ஆண்மையான அவளது கணவனின் நிமிர்வு.. அவனது பின்னங் கழுத்தின் மீது அவள் முகத்தைப் பதித்துப் புரட்டும்போது அவன் கொள்ளும் கிளர்ச்சி.. அவள் கொள்ளும் கிறக்கம்..

வார்த்தைகளில் வடிக்க முடியாத அந்த ஸ்பரிசங்களின் உணர்வுகளை அப்போது நினைத்தவளுக்குள் அலை புரண்டது..

அது அவனை அணைக்கத் துடித்த அலை..! அவனுடன் பிணையத் துடித்த அலை..! ஒன்றாகக் கலக்கத் துடித்த அலை..!

அலையடிக்கும் உணர்வுகளோடு அவனை நெருங்கியவளை சொந்தமில்லாத பார்வை பார்த்தான் தனஞ்ஜெயன்.. சுமித்ரா விக்கித்துப் போனாள்.. அவள் மனம் வலித்தது..

காட்டேஜீக்குத் திரும்பியதும்.. அவன் கழுத்தைக் கட்டிக் கொள்ளப் போனாள்.. விலக்கி நிறுத்தியவன்.. பெட்டிகளை எடுத்துத் துணிகளை சேகரித்து அதில் அடைக்க ஆரம்பித்தான்..

“ஏன்..?” சுமித்ராவுக்குப் புரியவில்லை..

“ஊருக்குக் கிளம்பனும்..” வறண்ட குரலில் சொன்னான் தனஞ்ஜெயன்..

“இந்த மாதம் முழுதும் இங்கே இருக்கலாம்ன்னீங்களே..” அவள் தொண்டை அடைக்கக் கேட்டாள்..

அவன் நிமிர்ந்து அவளைத் தீர்க்கமாக ஓர் பார்வை பார்த்தான்.. அதில் வாயடைத்துப் போனாள் சுமித்ரா..

“நினைத்ததை எல்லாம் நடத்தி விட முடியுதா என்ன..? அப்படியிருக்கிறப்ப சொல்லியதை எல்லாம் எப்படிச் செய்ய முடியும்..?”

“புரியலை…”

“உன் தம்பியுடன் உன் ஊருக்குப் போக நீ நினைத்தாலும் அதை நடத்த முடியாம போச்சில்ல.. 

அதைச் சொன்னேன்..”

தனஞ்ஜெயன் உக்கிரத்துடன் ஊருக்குக் கிளம்பி விட்டான்.. அந்த உக்கிரம் பாதித்தாலும் பற்றிக் கொண்டது.. அவளுக்கு மட்டும் கோபம் வராதா..

0Shares

Reviews – Kannathil Muthamittal / கன்னத்தில் முத்தமிட்டாள்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link