Chapter 26

0Shares

சிரிப்பும்.. சில்மிசப் பார்வையுமாக தேநிலவுக்கு கிளம்பிப் போன மகனும், மருமகளும்.. எதிரும் புதிருமாக முறைத்தபடி திரும்பி வந்து சேர்ந்ததும் இந்திராதேவிக்கு எதுவும் புரியவில்லை..

‘என்ன ஆகியிருக்கும்..?’

அவள் தனஞ்ஜெயனிடம் கேட்டாள்.. அவன் ஒன்றுமில்லையென்று சொல்லி விட்டு பேக்டரிக்குப் போய் விட்டான்.. சுமித்ராவிடம் கேட்டாள்.. அவள் ஒன்று விடாமல் எல்லாவற்றையும் சொல்லிவிட்டாள்..

“அவன் சின்னப்பையன் அத்தை.. என்னை விட ஆறு வயது இளையவன்.. அவனுக்கு என்ன தெரியும்ன்னு அவன் பேசின பேச்சிலே இவர் சுளுவெடுத்தாரு அத்தை..?”

“இந்த ஆம்பளைக புத்தியே இப்படித்தான்ம்மா.. மாமனார் வீட்டுக் கன்றுக்குட்டியைக் கூட ஜல்லிக்கட்டுக் காளையா நினைச்சுக்கிட்டு முறைச்சுக்குவாங்க.. தனா மட்டும் அதுக்கு விதிவிலக்காவா இருந்து வைக்கப் போகிறான்..? விடும்மா..”

சுமித்ரா விட்டு விட்டாள்.. எதுவும் நடக்காததைப் போல இயல்பாக இருக்க முயன்றாள்.. தனஞ்ஜெயன் விடவில்லை.. நடந்த சம்பவத்தை இறுக்கிப் பிடித்துக் கொண்டு அவளுடன் பேசுவதை தவிர்த்தான்.. காலையில் பேக்டரிக்குப் போனால் நள்ளிரவில்தான் வீடு திரும்புவான்.. அவனுக்கான மதிய உணவை டிரைவர் பூபதி வந்து வாங்கிப்போவான்..

‘இப்பத்தான் பெண்டாட்டின்னு வாழ ஆரம்பிச்சான்.. அதுக்குள்ளே இப்படியா..?’ இந்திராதேவிக்கு ஆற்றாமையாக இருந்தது..

நடந்ததெல்லாம் போதாதென்று.. அந்த வாரத்தின் முதல்நாளில் அன்னவாசல் ஜமீன் வீட்டின் முன்னால் ஆறு லாரிகள் வரிசைகட்டிக் கொண்டு வந்து நின்றன.. கூடவே வந்த காரிலிருந்து மணிவாசகம் திலகவதியுடன் இறங்கி வந்தார்..

அது காலை நேரம் என்பதால் தனஞ்ஜெயன் பேக்டரிக்குக் கிளம்பிக் கொண்டிருந்தான்.. வரிசை கட்டிய லாரிகளை பால்கனியிலிருந்து பார்த்தவனின் புருவங்கள் சுருங்கின.. மடமடவென்று மாடியிலிருந்து இறங்கி வந்தான்..

“அப்பா.. அம்மா…”

அவனை முந்திக் கொண்டு ஓடிய சுமித்ரா திலகவதியின் கைகளுக்குள் பாய்ந்தாள்.. மகளைக் கட்டிக் கொண்ட திலகவதியின் கண்கள் குளமாகின.. மணிவாசகம் பாசத்துடன் மகளின் தலையை வருடிக்கொடுத்தார்..

தனஞ்ஜெயன் முறைத்துக் கொண்டிருக்க… இந்திராதேவி..

“வாங்க சம்பந்தி..” என்று அவர்களை வரவேற்றாள்..

“ம்ம்ம்..” என்ற மணிவாசகத்திற்கு அவள் முகத்தைப் பார்த்துப் பேச சங்கடமாக இருந்தது..

உங்களுக்கு மருமகளாக அனுப்பி வைப்பதற்காகத் தான் என் பெண்ணை பெற்று வளர்த்து வைத்திருக் கிறேனா என்று கேட்டுவிட்டு இந்திராதேவிக்கே மருமகளாக மகளை அனுப்பி வைத்து விட்ட பின்பு அவள் முகத்தைப் பார்த்துப் பேச அவரால் எப்படி முடியும்..?

இந்திராதேவி மனதில் தைத்திருக்கும் முள்ளை எடுத்துவிடும் வித்தை தெரிந்தவளாக இருந்தாள்..

“பாருங்க சம்பந்தி.. நான் ஒற்றை மகனைப் பெற்றவ.. எனக்கு என் சம்பந்தகாரரின் வீடுதான் ஆதரவா நிற்கனும்.. நீங்களும், நானும் பழசையே மனதில் வைத்துக்கிட்டு இருந்தா வாழ வேண்டிய நம்ம பிள்ளைக வாழ்க்கையை அது பாதிக்காதா..?”

“இல்லைங்கம்மா..” மணிவாசகம் பதறிவிட்டார்..

“எங்க மனசில எதுவும் இல்லைண்ணி.. பெண்ணைக் கொடுத்தோமோ.. உயிரைக் கொடுத்தோமோங்கிறது 

தான் பெண்ணைப் பெத்தவங்க மனசு… உங்களுக்குத் தெரியாதது இல்லை… எங்களுக்கு சுமித்ராவோட வாழ்க்கைதான் முக்கியம்..”

“அவளுக்கு என்ன திலகா.. எனக்கு மருமகளா இல்லாம மகளா இருக்கா..”

“இது போதும் அண்ணி..” திலகவதி கண் கலங்கினாள்..

“தனா.. உன் மாமனார், மாமியார் வந்திருக்காங்க பாரு.. வந்தவங்களை வாங்கன்னு கேட்கிறதுதான் உன்னைப் பெத்த அப்பாவுக்கு நீ வாங்கிக் கொடுக்கும் மரியாதை.. இந்திராதேவி மகனை நல்ல முறையில் வளர்த்திருக்கான்னு இந்த ஊர் சொல்லனும் தனா..” கண்டித்தாள் இந்திராதேவி..

“வாங்க..” பொதுவாக அழைத்தான் தனஞ்ஜெயன்..

“சுமித்ராவுக்கு செய்ய வேண்டிய சீர்வரிசை சாமான்களை லாரியில் ஏற்றிக் கொண்டு வந்திருக்கேன்.. இன்னும் என்ன செய்யனும்னு சொன்னீங்கன்னா அதையும் செய்துடறேன்..” மணிவாசகம் தன்மையாகச் சொன்னார்..

“அன்னவாசல் ஜமீனுக்கு சீர் செய்ய உங்களால் முடியாது.. அதனால கொண்டு வந்ததை திருப்பிக் கொண்டு போங்க…” தனஞ்ஜெயன் கடுமையாகப் பேசினான்..

“தனா..” இந்திராதேவி அதட்டினாள்..

“அவர் அன்னவாசல் ஜமீனுக்கு சீர் செய்ய வரலை.. அவரோட பெண்ணக் கட்டிக்கிட்ட மருமகனுக்கு சீர் செய்ய வந்திருக்கிறார்.. உன் அந்தஸ்தையும், பணப் பெருமையையும் தள்ளி வைச்சிட்டு அவரோட மருமகனா பேசு..”

தனஞ்ஜெயன் பதில் பேசவில்லை.. இந்திரா தேவியின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு மௌனமாக இருந்தாலும்.. அவன் மனதுக்குள் புயல் அடித்துக் கொண்டிருப்பதை மற்றவர்களால் உணர முடிந்தது..

“நீங்க எதைச் செய்தாலும் அது போதும் சம்பந்தி..” இந்திராதேவி இதமாகச் சொன்னாள்..

“கல்யாணம் முடிந்துட்டா மட்டும் போதாது.. மறுவீட்டு விருந்து.. தலைதீபாவளி அது.. இதுன்னு ஆயிரம் இருக்கு.. அதுக்கெல்லாம் எங்க பொண்ணும், மாப்பிள்ளையும் எங்க வீட்டுக்கு வந்து போகலைன்னா சுத்துப்பட்டி கிராமத்திலே நான் கௌரவமா தலை 

நிமிர்ந்து நிற்க முடியாது..” மணிவாசகத்தின் குரல் இறைஞ்சுதலோடு வெளிவந்தது..

சுமித்ராவிற்கு வேதனையாக இருந்தது… அவளுடைய அப்பா இப்படித் தழைந்து பேசுகிறவரல்ல.. திடிரென்று சீரோடு வந்து இறங்கி இப்படித் தழைந்து பேசுகிறார் என்றால்.. சுந்தர் எதையாவது சொல்லியிருக்க வேண்டும்.. பெற்ற மகளுக்கு பிறந்த வீட்டின் அன்பும் ஆதரவும் குறையாமல் இருக்கிறது என்பதை அவளின் புகுந்த வீட்டில் வெளிப்படுத்த அவளைப் பெற்றவர்கள் கிளம்பி வந்திருக்க வேண்டும்..

‘எல்லாம் இவனாலே..’

தனஞ்ஜெயனின் மீது அவளுக்கு கோபம், கோபமாக வந்தது..

“அதுக்கென்ன சம்பந்தி.. இன்னும் இரண்டு நாளில தனாவும்.. சுமித்ராவும் லட்சுமிபுரத்துக்கு மறுவீட்டு விருந்துக்கு வருவாங்க..” இந்திராதேவி வாக்களித்தாள்..

“அம்மா..” தனஞ்ஜெயன் ஆட்சேபித்தான்..

“உனக்குப் பிடிக்குதோ.. பிடிக்கலையோ.. நீ போய்த்தான் ஆகனும் தனா.. சில பாரம்பரிய பழக்க வழக்கங்களுக்கு நாம கட்டுப்பட்டுத்தான் ஆகனும்.. இப்ப சுமித்ரா நம்ம வீட்டிலே வாழ வரலையா..?”

இந்திராதேவியின் கேள்வியில் தனஞ்ஜெயனின் மறுப்பு காணாமல் போய் விட்டது.. அன்று மதிய விருந்தை உண்டு விட்டு மணிவாசகமும், திலகவதியும் கிளம்பினார்கள்.. தனிமையில் மகளிடம் சுந்தர் சொன்னது உண்மையா என்று விசாரித்தாள் திலகவதி..

“கொடைக்கானலுக்கு நாங்க எதுக்காக வந்திருந் தோம்ன்னு நினைக்கறிங்கம்மா..? தேநிலவுக்காக வந்திருந்தோம்..” முகம் சிவக்கச் சொன்னாள் சுமித்ரா..

திலகவதி வாழ்க்கையை வாழ்ந்து பார்த்தவள்.. பெண்களுக்கே உரிய சூட்சுமமான அறிவு அவள் மகள் இல்லற வாழ்வில் இன்பமாக இருக்கிறாள் என்பதை திலகவதிக்கு உணர்த்தி விட்டது..

“சுந்தர் வேற மாதிரி சொன்னானேம்மா..?” விசாரித்தாள்..

“அதையேன்ம்மா கேட்கறிங்க..”

அலுப்புடன் ஆரம்பித்த சுமித்ரா.. ஆதியோடு அந்தமாய் கொடைக்கானலில் நடந்த மாமன், மைத்துனன் மோதலைப் பற்றி விலாவாரியாக சொல்லி முடித்தாள்..

“இன்னும் மாப்பிள்ளை உன்கூட கோபமாத்தான் இருக்காரா..?”

“ம்ம்ம்.. இந்த கோபம் எத்தனை நாளைக்கு இருக்கப் போகுதும்மா..? போகப் போக சரியாகிரும்..”

நம்பிக்கையுடன் சொன்னாள் சுமித்ரா.. திலகவதி யினால் அந்த நம்பிக்கையுடன் இருக்க முடிய வில்லை.. ஆண்களின் ஈகோ மோதலைப்பற்றி அந்தத் தாய்க்குத் தெரியாதா என்ன..?

இருந்தாலும் அவள் மகளின் நம்பிக்கையை குலைக்கும் வண்ணம் பேசாமல் கிளம்பிப் போய் விட்டாள்.. இந்திராதேவி வாக்குத் தவறாமல் தனஞ்ஜெயனை அதட்டி.. உருட்டி லட்சுமிபுரத்திற்கு மறுவீட்டு விருந்துக்கு அனுப்பி வைத்தாள்.. சுமித்ராவிடமும் சொல்லி வைத்தாள்..

“உன் வீட்டோடு உன் புருசனை பழக வைக்கிறது உன் கையிலதான் இருக்கு சுமித்ரா.. சிறிசா விரிசல் வருகிறப்பவே அதை சரி பண்ணிரனும்.. விட்டுட்டா விரிசல் பெரிசாகிரும்.. உனக்கிருக்கிறது ஒரே தம்பி.. அவனுடன் தனா கோபமாய் இருக்கிறது நம்ம இரண்டு குடும்பத்துக்கும் நல்லதில்லைம்மா..”

“நான் பார்த்துக்கறேன் அத்தை..” சுமித்ரா உறுதி கொடுத்து விட்டுக் கணவனுடன் கிளம்பிப் போனாள்..

தனஞ்ஜெயன் பாராமுகமாய்த்தான் இருந்தான்.. ஒருநாள் மட்டும்தான் மறுவீட்டு விருந்துக்கு தங்குவேன் என்ற நிபந்தனையையும் வைத்தான்.. பெரும்பாண்மை நேரங்களில் சுமித்ராவுடன் பேசாமல் உம்மணாம் மூஞ்சியாக இருந்து சோதித்தான்..

‘இருபத்தி நான்கு மணி நேரத்தில் எந்த கோந்தை வைத்து இவனையும் என் தம்பியையும் ஒட்டி வைக்கிறதாம்..?’

சுமித்ராவுக்கு மலைப்பாக இருந்தது.. அவர்கள் போய் இறங்கியதும் மல்லிகா வந்து ஆரத்தி எடுத்து வரவேற்று உள்ளே அழைத்துப் போனாள்.. திருக்குமரனுக்கு வேலை இருக்கிறதென்று பக்கத்து ஊருக்குப் போய் விட்டதாகவும் திரும்பி வர இரண்டு நாளாகும் என்றும் தெரிவித்தாள்..

தனஞ்ஜெயன் விருந்துக்கு வருகிற செய்தியை அறிந்ததும் ஊரை விட்டு ஓடியிருப்பான் என்ற நினைவில் சுமித்ராவின் இதழ்களில் புன்னகை தெரிந்தது..

வழக்கமான பால், பழ உபசரிப்புகளுக்குப் பின்னால் அவர்களைப் பார்க்க வந்திருந்த ஊர் சனங்களிடம் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தான் தனஞ்ஜெயன்.. 

ஒரு அளவிற்கு மேல் அவனால் அங்கே உட்கார முடியவில்லை.. அவன் முகத்தில் சலிப்பைக் கண்ட மணிவாசகம்..

“சுந்தர்..! மாமாவை மாடி ரூமுக்கு கூப்பிட்டுக்கிட்டுப் போ..” என்று கட்டளையிட்டார்..

‘ஏன்..? இவ எங்கே போனா..?’

தனஞ்ஜெயனின் விழிகள் சுமித்ராவைத் துழாவின.. அவளைக் காணோம்.. வேறு வழியில்லாமல் வேண்டா வெறுப்பாக சுந்தரை முறைத்தபடி அவன் வழிகாட்ட மாடிக்குப் போனான்..

“இதுதான் உங்க ரூம்..”

சுந்தர் மாடியறையைத் திறந்து விட்டான்.. ஏஸி வசதியுடன் இருந்த அந்த அறை அழகாக அலங்கரிக்கப் பட்டிருந்தது.. அறையின் சுவரில் எல்.ஈ.டி டிவி பொருத்தப் பட்டிருந்தது.. ரிமோட்டை எடுத்து தனஞ்ஜெயனின் கையில் கொடுத்தவன்..

“உங்களுக்கு பிடிச்ச புரோக்ராமை பார்த்துக்கங்க..” என்றான்..

தனஞ்ஜெயன் எதுவும் பேசாமல் அவர்கள் கொண்டு வந்த பெட்டி எங்கே என்று தேடினான்.. அவனுக்கு உடை மாற்றியாக வேண்டும்.. லேசாக முகம் கழுவினால் தேவலை என்றிருந்ததில் பாத்ரூம் எங்கேயிருக்கிறது என்று யோசித்தான்..

“இது அட்டாச்சுடு பாத்ரூம்..” சுந்தர் கை நீட்டிக் காட்டிய இடத்தில் கதவு இருந்தது..

இப்போது தனஞ்ஜெயன் அவனையுமறியாமல் தலையை அசைத்தான்.. 

“வேற எதுவும் வேணுமா மாமா..?” சுந்தர் தனஞ்ஜெயனை மாமா என்று அழைத்து விட்டான்..

அதை மனதில் குறித்துக் கொண்ட தனஞ்ஜெயன்..

“நாங்க கொண்டு வந்த பெட்டி எங்கே..?” என்று கேட்டான்..

“அதை அப்பவே ஷெல்பில் கொண்டு வந்து வைத்துட்டேன் மாமா…” சுந்தர் சுவரலமாரியைத் 

திறந்து காட்டினான்.. அங்கே தனஞ்ஜெயனின் பெட்டி இருந்தது..

“தேங்க்யூ” தனஞ்ஜெயன் முறுவலித்தான்..

அதில் சுந்தரின் முகம் மலர்ந்து விட்டது..

“அறிவிருக்காடா உனக்கு.. வாழ வேண்டிய உன் அக்கா வாழ்க்கையிலே குழப்பத்தை உண்டு பண்ணிட்டு வந்திருக்கயே.. அவர் உன் அக்கா புருசண்டா.. கொடைக் கானலிலே அவங்களைப் பார்த்தா முதலில் நீ உன் அக்கா புருசனையில்ல நலம் விசாரிச்சிருக்கனும்..? எப்படியிருக் கீங்க மாமா.. எப்ப நம்ம வீட்டுக்கு விருந்துக்கு வரப் போறிங்கன்னு கேட்டிருந்தா நீ கெட்டிக்காரன்.. உன் கூடப் பிறந்த அக்காவின் வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொடுக்கிற புத்திசாலி.. அதை விட்டுட்டு அக்கான்னு ஆரம்பிச்சு அவர் முன்னாலேயே அவரைக் குறை சொல்லி அவங்களுக்குள்ளே சண்டை மூட்டி விட்டுட்டு வந்திருக்கயே.. இதுதான் ஒரு அக்காவுக்கு தம்பி செய்கிற உதவியாடா..? உன் பேச்சைக் கேட்டு பயந்து போய் அன்னவாசலுக்குப் போன பின்னாலில்ல தெரியுது.. உன் அக்கா அங்கே அருமை.. பெருமையா வாழ்ந்துக்கிட்டு இருக்கா.. நீதான் விவரமில்லாம குட்டையைக் குழப்பிட்டு வந்திருக்க.. அதை எப்படி சரி செய்கிறதுன்னு பாரு..”

அன்னவாசலுக்குப் போய் விட்டு வந்த திலகவதி திட்டியதிட்டில் சுந்தர் ஆடிப் போயிருந்தான்.. அவனுடைய அன்பு அக்காவின் ஆசைக் கணவன் அவனுக்கு எதிரியாவதா..?

“ஸாரி மாமா..” தனஞ்ஜெயனிடம் மன்னிப்புக் கேட்டான்..

“எதுக்கு..?” புரியாததைப் போலக் கேட்டான் தனஞ்ஜெயன்..

“அக்காவைப் பிரிஞ்சு இருந்திருக்கேன்.. அப்போல்லாம் அக்கா ஹாஸ்டலில் படிச்சுக்கிட்டு இருக்கும்.. லீவுக்கு வந்திரும்.. இப்ப அப்படியில்லாம அன்னவாசலில் விட்டு விட்டு வந்தோமா..? அக்காவை நீங்க அழைச்சுக்கிட்டு வருவீங்களோ.. மாட்டிங்களோங்கிற பதட்டத்தில என்ன பேசறேன்னு யோசிக்காம பேசிட்டேன் மாமா..”

“நானென்ன வில்லனா..? உன் அக்காவை கடத்திக் கிட்டு போய் சிறை வைத்திருக்கேனா..? இல்லைப்பா.. அவ என் பெண்டாட்டி.. என் வீட்டின் மகாராணி.. நீ 

எப்ப வேணும்னாலும் நம்ம வீட்டுக்கு வந்து உன் அக்காவை பார்க்கலாம்.. எத்தனை நாள் வேண்டுமானாலும் தங்கலாம்.. அதைப்போல நானும் அடிக்கடி உன் அக்காவை இங்கே அழைச்சுக்கிட்டு வர்றேன்..”

“இது போதும் மாமா..”

சுந்தரின் மலர்ந்த முகத்தில் இவன் அறியாச் சிறுவன் என்ற கருணை தனஞ்ஜெயனுக்குள் வந்தது.. சுமித்ராவின் மீதான சுந்தரின் பாசத்தை தனஞ்ஜெயனால் புரிந்து கொள்ள முடிந்தது.. அவனுக்குத்தான் அக்கா, தங்கையென்று யாருமில்லை.. அவன் மனைவிக்கு தம்பி என்ற உறவு கிடைத்திருக்கும் போது அந்த பாசத்திற்கு அவன் ஏன் தடை சொல்லப் போகிறான்..?

தனஞ்ஜெயன் சுந்தரின் தோள்மீது கை போட்டு பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டான்.. அவனுடைய படிப்பு சம்பந்தமான கேள்விகளைக் கேட்டான்.. ரசனைகள் பற்றி விசாரித்தான்.. தனஞ்ஜெயனுக்காக சுமித்ரா ஜீஸ் கொண்டு வந்த போது.. மாமனும், மைத்துனனும் பிய்த்தாலும் பிய்க்க முடியாதபடி பசையில்லாமல் ஒட்டியிருந்தார்கள்..

“உன் அக்கான்னு ஒருத்தி இங்கேயிருக்கேண்டா.. மறந்திராதே..”

சுமித்ரா பொறாமையுடன் ஊடே புகும் அளவிற்கு அவர்கள் இழைந்து பிணைந்தார்கள்..

சுந்தர் கீழே போய் விட்டான்.. சுமித்ரா சந்தோசத்துடன் அவனைப் பற்றிப் பேச வாயெடுத்தாள்.. தனஞ்ஜெயன் இறுக்கமான முகத்துடன் குளியலறைக்குள் புகுந்து விட்டான்..

‘பிடிவாதக்காரன்..’ சுமித்ராவிற்கு அழுகை வந்தது..

சோர்வுடன் படியிறங்கியவள் கடைசிப் படியில் காலை வைத்த போது தலை சுற்றி விழப் போனாள்.. மல்லிகா வந்து தாங்கிக் கொண்டாள்.. கீழே இருந்த அறையில் அவளைப் படுக்க வைத்து விட்டு பக்கத்து டவுனில் இருந்த டாக்டரை அழைத்துக் கொண்டு வர மணிவாசகம் ஓடினார்.. தனஞ்ஜெயனுக்குத் தகவல் போனது.. அவன் அவசரமாக மாடியை விட்டு கீழே வந்தான்.. அதற்குள் மணிவாசகம் லேடி டாக்டருடன் வந்து விட்டார்..

“ஒன்றுமில்லைங்க.. மார்னிங் சிக்னெஸ்தான்.. சுமித்ரா கன்சீவ் ஆகியிருக்கா..”

லேடி டாக்டர் நல்ல செய்தியை சொல்லி விட்டுக் கிளம்பினாள்.. சோர்வுடன் படுத்திருந்த சுமித்ராவை தூக்கிக் கொண்டான் தனஞ்ஜெயன்.. பிறந்த வீட்டிலிருக்கும் நினைவில்..

“ஸ்ஸ்ஸ்.. அப்பா.. அம்மா.. சுந்தர்..” என்று எச்சரிக்க முயன்றபடி மீண்டும் மயங்கிப் போனாள் சுமித்ரா..

மாடியறையில் அவளை படுக்க வைத்த தனஞ்ஜெயன் இந்திராதேவிக்குப் போன் பண்ணி விவரத்தைச் சொன்னான்.. அவள் மகிழ்ந்து போனாள்..

“அதுக்காக உடனே கிளம்பி வந்துராதே தனா.. ரெண்டு நாள் அங்கே தங்கிட்டு வா..”

தனஞ்ஜெயன் தங்கினான்.. ஒருநாள் மட்டும் தான் இருப்பேன் என்று நிபந்தனை போட்டவன்.. மூன்று நாள்களுக்கும் மேலாக லட்சுமி புரத்தில் தங்கினான்.. சுமித்ராவின் வாய்க்கு ஏற்றபடி உரைப்பும், புளிப்புமாக சமைத்து அவளை சாப்பிடவைத்தாள் திலகவதி.. பக்கத்தில் இருந்து கவனித்துக் கொண்டான் தனஞ்ஜெயன்.. அதைக் கவனித்த சுந்தருக்கு அக்காளின் மீது அக்காளின் கணவன் கொண்ட பாசம் புரிந்தது..

“கோபம் போயிருச்சா..?” கண்ணீருடன் சுமித்ரா கேட்டபோது..

“போடி பைத்தியம்..” என்று அவளது கலைந்திருந்த முடியைக் கோதிவிட்டு சரிசெய்தபடி செல்லமாக கடிந்து கொண்டான் தனஞ்ஜெயன்..

“மன்னிச்சிருங்க..”

“அடி வாங்கப் போற..”

“தப்பா ஏதாவது பேசியிருந்தா மனசில வைச்சுக்குக்காதீங்க..”

“புருசன் பெண்டாட்டி சண்டையெல்லாம் ஒரு சண்டையாடி..?”

தனஞ்ஜெயன் கனிவுடன் மனைவியை தழுவிக் கொண்டான்.. மூன்று நாள்கள் கழித்து திரும்பி வந்த மருமகளை ஆரத்தி எடுத்து வீட்டுக்குள் அழைத்துக் கொண்டாள் இந்திராதேவி..

சுமித்ராவின் வயிறு வளர்ந்தது.. தனஞ்ஜெயன் வேலைகளைப் பிரித்துக் கொடுத்து மற்றவர்களை கவனிக்க வைத்து விட்டு.. வீட்டுக்கு நேரத்தோடு வந்தான்.. சுமித்ராவுடன் பெரும்பான்மையான பொழுதைக் கழித்தான்..

ஏழாம் மாதம் வளைகாப்பு செய்து லட்சுமிபுரத்திற்கு சுமித்ராவை அழைத்துக் கொண்டு போனார்கள்.. மறுநாளே தனஞ்ஜெயன் போய் அவளை பத்தாம் மாதம் அனுப்பி வைப்பதாகச் சொல்லி கையோடு அழைத்துக் கொண்டு வந்து விட்டான்..

சொன்னபடி அவன் பத்தாம் மாதம் லட்சுமி புரத்தில் சுமித்ராவை கொண்டு போய் விடுவதற்கும்.. சுமித்ராவுக்கு பிரசவ வலி வருவதற்கும் சரியாக இருந்தது..

தனஞ்ஜெயனுக்கு மகன் பிறந்தான்.. அன்னவாசல் ஜமீன்வீடு விழாக் கோலம் பூண்டது.. மூன்று மாதக் கணக்கு முடிந்து சுமித்ராவையும், குழந்தையையும் தடபுடலாக அவர்கள் அன்னவாசலுக்கு அழைத்து வந்தார்கள்.. ஊரை அழைத்து பெயர் சூட்டும் வைபவத்தை நடத்தினார்கள்..

“ரகுவரன்..”

தனஞ்ஜெயன் மகனுக்கு பெயர் வைத்தான்.. இந்திராதேவியின் பனித்த கண்கள் ரகுநாதனின் படத்தைப் பார்த்தன..

‘நம்ம பேரன்ங்க..’

அவள் மனதுக்குள் கணவனிடம் சொன்னாள்.. திலகவதி இந்திராதேவியின் கையை புரிதலுடன் பிடித்துக் கொண்டாள்.. விருந்து நடந்த இடத்தில் மணிவாசகம் மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தார்.. சுந்தர் ஓடியாடி வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தான்..

“ரெண்டு வீடும் ஒன்னாகிட்டாங்க மரகதம்..” மணியக்காரர் தியாகராஜன் மனநிறைவுடன் சொன்னார்..

“ஆமாங்க.. அண்ணிக்கு சம்பந்தகாரங்களின் சொந்தமும் ஆதரவும் வந்தாச்சு..” மரகதம் தலையை ஆட்டினாள்..

ரகுவரனின் முதல் வருட பிறந்த நாளை விமரிசையாக கொண்டாடினார்கள்.. லட்சுமிபுரத்தில் இருந்து அவனுக்கு தாய்மாமன் சீர் கொண்டு வந்தான் சுந்தர்.. குலதெய்வம் கோவிலில் சுந்தரின் மடியில் குழந்தையை உட்கார வைத்து மொட்டையெடுத்து காது குத்தினார்கள்.. லட்சுமிபுரத்தில் இருந்து நீண்ட ஊர்வலமாக சீர்வரிசை தட்டுக்கள் வந்து அன்னவாசல் ஜமீன் வீட்டை நிறைத்தன.. இரு வீட்டாரும் இசைந்து நின்ற விசேச தினங்கள் வந்து போயின..

சுந்தர் தனஞ்ஜெயனுக்குப் பிரியமான மைத்துனனான்.. அவனுக்கு சிக்கலாக தோன்றுவதற் கெல்லாம் தனஞ்ஜெயனிடம் தான் தேடி வந்து யோசனை கேட்பான்.. தனஞ்ஜெயனும் மைத்துனனின் தோள்மீது கை போட்டு சிக்கலைத் தீர்க்கும் வழிமுறைகளைச் செய்வான்..

“டேய்.. நான் உன் கூடப்பிறந்த அக்காடா.. என்னையும் கொஞ்சம் ஞாபகத்தில் வைச்சுக்க..”

விளையாட்டாய் சொல்வாள் சுமித்ரா..

இந்திராதேவி பேரனைத் தரையில் விடாமல் தாங்கினாள்.. அவனைக் கூடவே வைத்துக் கொண்டாள்.. பகல் பொழுதில் மகனுக்கு உணவூட்ட சுமித்ரா கெஞ்சிக் கூத்தாடி அனுமதி வாங்க வேண்டியிருந்தது..

இரவுகளில் தடையற்ற சுதந்திரத்துடன் தனஞ்ஜெயன் சுமித்ராவை அணுகினான்.. அவளுடன் செல்லமாக வம்பிழுத்தான்..

“நான் உன்னை சிறையெடுத்தவண்டி..”

“நினைச்சுக்கிட்டே இருங்க.. நானாய்த்தான் சிறையில் வந்து மாட்டினேன்..”

“ஓஹோ.. அப்படின்னா என்வீடு உனக்குச் சிறைங்கிற..?”

“உங்க வீடா..? அது அப்போ சாரே..”

“பாருடா.. இப்ப நிலவரம் என்னடி..?”

“இப்ப இது என்னோட வீடாக்கும்..”

“அடேங்கப்பா.. அதிகாரம் தூள் பறக்குது..? இது யார் கொடுத்த அதிகாரம்..”

“ஊம்..? எனக்குக் கட்டாயத் தாலி கட்டினவர் கொடுத்த அதிகாரம்..”

“இதை மறந்திட்டேனில்ல.. நீ கட்டாயத்தாலி வாங்கிக்கிட்டு கடமைக்காக என்கூட குடும்பம் நடத்தறவள்ல..?”

இல்லையா பின்னே என்று சொல்ல வாயெடுத்த சுமித்ராவால் விளையாட்டுக்குக் கூட அதைச் சொல்ல முடியவில்லை..

ஆண்மை ததும்பிய அவன் மார்பில் முகம் புதைத்து அவனுடன் ஒன்றினாள்.. அந்த சரணாகதியில் தனஞ்ஜெயன் அவளிடம் சரணடைந்தான்.. அவள் முகத்தை நிமிர்த்தி அவள் கண்களுக்குள் உற்றுப் பார்த்தான்.. அதில் கரை கடந்த காதல் தெரிந்தது.. அவள் முகம் பார்த்த அவன் முகத்தை அருகில் இழுத்த சுமித்ரா.. ஆசையுடன் அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்..

– முற்றும் –

0Shares

Reviews – Kannathil Muthamittal / கன்னத்தில் முத்தமிட்டாள்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link