Chapter 15
புயலடித்து ஓய்ந்த அமைதி வீட்டில் நிலவ… சோபாவில் சரிந்தான் அரவிந்தன். அவனுக்கு எதிரே… குத்துக்காலிட்டு அமர்ந்து சப்பாத்திக்கு மாவு பிசைய ஆரம்பித்தான் கார்த்திக்…
“ம்ஹூம்… இரண்டும் நாள்களா.. சமையல் கட்டில் இருந்து எனக்கு விடுதலை கிடைச்சிருந்தது… அம்மாவின் கைப்பக்குவத்தில் வயிறார சாப்பிட்டேன்.. அவங்களையும் விரட்டிவிட்டு நிம்மதியா கட்டையை சாய்ச்சிருக்க…”
“ஏண்டா புலம்புற…?”
“புலம்பாம என்னடா செய்யச் சொல்ற…? ஹவுஸ் மேட்ன்னு தான் பேரு… ஒரு நாளாவது இங்கேயிருக்கிற சாமானை எடுத்து அந்தப் பக்கம் வச்சிருப்பியா…? வீட்டைப் பெருக்கி… சமைச்சு… பாத்திரம் கழுவின்னு… உனக்கும் சேர்த்து வேலை செஞ்சு… என் கால் முட்டியே தேய்ஞ்சு போச்சு… உனக்கு நண்பனா வாழ்க்கைப் பட்டு நான் என்னத்தடா… கண்டேன்…?”
படுத்தவாக்கில் அரவிந்தன் அனல் பறக்கும் பார்வையொன்றை கார்த்திக்கின் பக்கம் வீசினான்..
“நேரம் காலம் தெரியாம காமெடி பண்ணின.. நான் மனுசனா இருக்க மாட்டேன்…”
கார்த்திக் எழுந்து-பிசைந்து கொண்டிருந்த மாவை சமையல் கட்டில் வைத்து விட்டு… கை கழுவினான்… ஈரக்கையை டவலால் துடைத்தபடி அரவிந்தனின் எதிரே வந்து அமர்ந்தான்…
“உன்னை யாருடா காதல் பண்ற வேலையை-யெல்லாம் பண்ணச் சொன்னது… உனக்கும் அதுக்கும்தான் சரிப்பட்டு வராதே… அப்புறமும் எதுக்கு ரிஸ்க் எடுத்த…?”
“டேய்… கார்த்தி… இப்ப நீ அடிதான் வாங்கப் போற…”
“உள்ளத்தைச் சொன்னா உடம்பு எரியுதாக்கும்…? உனக்கெல்லாம் கடலைதாண்டா லாயக்கு… காதல் லாயக்கில்லை…”
“என் கண் முன்னால் நிற்காம வெளியே போய்த் தொலைடா…”
“ம்ஹூம்… நீயுண்டு உன் கடலையுண்டுன்னு இருந்த மகராசன் நீ… மகராசி வந்தா… ‘தில்’லிருக்கான்னு கேட்டு உசுப்பேத்தி விட்டா… இப்ப மந்திரிச்சு விட்ட கோழியாட்டம் மாறிப் போயிட்டயேடா மச்சான்…”
“உன் கிட்ட இதையெல்லாம் சொல்லச் சொல்லி நான் கேட்டேனாடா…?”
“நீ கேட்டாத்தான் சொல்லணுமா..? என் மனசு கேட்கலையேடா மச்சான்…?”
“உன் மனசைப்பத்தி எனக்குத் தெரியாதா…?”
“என்னடா மச்சான் இப்படிக் கேட்டுட்ட..? என் மனசு பூ மாதிரிடா… உன் நிலைமையைப் பாத்து என் பூ மனசுக்கு தாங்கலையேடா… நான் என்ன பண்ணுவேன்…? நான் என்ன பண்ணுவேன்… க்கும்… க்கும்…”
நடிகர் திலகத்தைப் போல உணர்ச்சிப் பிழம்பாய் வசனம் பேசிவிட்டு கார்த்திக் இருமி வைக்க… அரவிந்தனுக்கு கோபம் தலைக்கு ஏறிவிட்டது.
சோபாவில் கிடந்த தலையணையை எடுத்து நண்பனை நோக்கி வீசினான்… அவன் விலகிக் கொள்ள… அப்போதுதான் வீட்டுக்குள்ளே நுழைந்து கொண்டிருந்த ஷாலினியின் மீது போய் அது விழுந்தது…
தலையணையால் அடி வாங்கியது யாராக இருக்கும் என்று எட்டிப் பார்த்த கார்த்திக்… அவசரமாக மடித்துக் கட்டியிருந்த லுங்கியை இறக்கி விட்டபடி சட்டையைத் தேடினான்…
இவன் எதற்காக சட்டையைத் தேடுகிறான் என்று புரியாதவனாக அரவிந்தன் எழுந்து கொள்ளாமல்… லேசாக திரும்பிப் பார்க்கும்போது… சட்டையைத் தேடியெடுத்துப் போட்டுக் கொண்ட கார்த்திக்… சட்டை பொத்தான்களைப் போட்டபடி…
“வாம்மா…” என்றான்…
ஊருக்குப் போன அம்மாதான் வந்து விட்டாங்களோ என்று அரவிந்தன் எழுந்து அமர… தலையணையைக் கையில் பிடித்தபடி ஷாலினி உள்ளே வந்தாள்…
“என்ன இது….?”
தலையணையைத் தூக்கிக் காட்டி அரவிந்தனிடம் வினவினாள்… அவன் ஒரு மார்க்கமாக அவளைப் பார்த்தபடி…
“இதுகூடத் தெரியாதா…? உன் வீட்டில் எல்லாம் தலைக்கு மரப்பலகையைத்தான் வைத்துப் படுப்பீங்களா…?” என்று கிண்டலாகக் கேட்டான்.
“எங்க வீட்டில் எதை தலைக்கு வைத்துப் படுத்தால் உங்களுக்கென்ன…? முதலில் நான் கேட்டதுக்கு பதிலைச் சொல்லுங்க…”
“தலையணை…”
“இது எதுக்கு வாசலுக்கு பறந்து வந்தது…?”
“இறக்கை முளைச்சு… பறந்து வந்திருக்கும்… இதைக் கேட்கத்தான் வேலை மெனக்கெட்டு இந்த வீட்டின் வாசல்படியை மிதித்தயா…?”
“ஏன்… இந்த வீட்டின் வாசல்படியை நான் மிதிக்கக் கூடாதா…?”
“இங்கே இருக்கிற ரெண்டு ஆம்பளைகளும் என்ஜினியர்கள் இல்லைம்மா…”
“உங்களைப் பத்தி மட்டும் பேசுங்க.. தேவையில்லாம அண்ணனைப் பத்தியெல்லாம் பேசாதீங்க…”
“உன் அண்ணனைப் பத்தி நான் எதுக்குப் பேசப் போறேன்…? அவன்தான்… அமெரிக்காவில பெரிய்ய்ய்ய… என்ஜினீயரா இருக்கானே…”
“நான் அவனைச் சொல்லலை…”
“வேற எவனைச் சொன்ன…?”
“இந்த அண்ணனைச் சொன்னேன்…”
ஷாலினி கார்த்திகை கை காட்ட.. அவன் உடனே மெய்சிலிர்த்துப் போய்…
“காபி சாப்பிடறியம்மா…” என்று பரிவாக விசாரித்தான்.
“அதெல்லாம் வேணாம்ண்ணா…” ஷாலினியின் பார்வை அரவிந்தனின் மேலேயே பதிந்திருந்தது.
“வேறு எதுதான் உன் தங்கைக்கு வேண்டுமாம்..? இதுவே… இன்ஜினீயரா இல்லாதப் பட்டவங்க வீடு… இங்கே அவளுக்கு கொடுக்க… காபியை விட்டா வேறு கதியில்லையேடா மச்சான்…” அரவிந்தன் இடக்காகப் பேசினான்…
‘கொழுப்பு…?’ ஷாலினியின் விழிகள் சொன்னது.
‘ஆமாண்டி… அதுக்கு இப்ப என்னங்கிற…?’ பதிலுக்கு அரவிந்தனின் விழிகள் மின்னின…
“இந்த இடக்குப் பேச்சிலெல்லாம் குறைச்சலில்லை…”
“வேற எதில குறைச்சல்ன்னு கேட்டுச் சொல்லுடா மச்சான்…”
“உங்க ஃபிரண்டுக்கு உண்மையிலேயே ‘தில்’லிருக்கா அண்ணா…?”
‘உசுப்பேத்திவிட… வந்துட்டாடா… வந்துட்டா…’ கார்த்திக் சுவாரஸ்யமாக வேடிக்கை பார்க்கத் தயாரானான்…
ஷாலினியை ஒரு மார்க்கமாகப் பார்க்க ஆரம்பித்த அரவிந்தனின் கண்களில் மின்னல் வந்திருந்தது…
“‘தில்’லை புரூவ் பண்ண.. இப்ப என்னத்தை செய்யச் சொல்றா மச்சான்..?”
“‘தில்’லிருந்தா.. இப்பவே என்னைக் கல்யாணம் பண்ணிக்கணும்… கட்டின புடவையோடு வீட்டைவிட்டு வந்திருக்கேன்… உங்க ஃபிரண்டால.. கடைசி வரைக்கும் என்னை வைத்துக்காப்பாத்த ‘தில்’ இருக்காண்ணா…?”
அரவிந்தன் சோபாவை விட்டு சட்டென்று எழுந்தான்.. இரண்டே எட்டில் ஷாலினியை நெருங்கி.. அவள் தோளில் கைவைத்து விழிகளுக்குள் உற்றுப் பார்த்தான்.
அவனது ஆண்மையை கௌரவப்படுத்திவிட்ட அவளின் மீது அவனுக்கு… என்றையும்விட அன்று அதிகமான காதல் பொங்கி எழுந்தது…
Reviews – Kanni rasi / கன்னி ராசி
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.