Chapter 23
“கொஞ்சமாவது அறிவு இருக்கா..?”
“என்னையேண்டி திட்டறே.. நான் என்ன பண்ணினேன்..?”
“ஒன்றும் தெரியாத ஆசாமிதான்..”
“நிஜமாகவே நான் அப்படித்தான் ஷாலினி..”
“ஏற்கெனவே கொலைவெறியில் இருக்கேன்.. நீங்க வேற கிளப்பி விடாதீங்க..”
“சொல்லிட்டு வரலாமுன்னு போனேன்.. அது ஒரு தப்பா ஷால்..?”
தப்பில்லைதான்…
அவர்கள் சொல்லி விட்டு வரப் போனபோது.. அந்தம்மா குளியலறையில் இருந்தாள்..
“அம்மா குளிச்சுட்டு இருக்கிறாங்க..” என்ற மகளிடம்.. சொல்லி விட்டு அவர்கள் திரும்பினார்கள் தான்..
அதற்குள் குளியலறையின் கதவு திறந்தது..
“யாரு உஷா..” என்ற குரல் கேட்டது..
“அரவிந்துதான்ம்மா.. சொல்லிக் கொண்டு போக வந்திருக்கிறார்..” உஷா குரல் கொடுத்தாள்..
“அரவிந்தை இருக்கச் சொல்லு.. நான் வந்திட்டேன்..” என்று குரல் கொடுத்தபடி அந்தம்மா ஸ்லோ மோஷனில் ஓடி வந்தாள்..
அவளின் அதீத அன்பைப் பற்றி அரவிந்தன் பெருமையாக ஷாலினியிடம் சொல்லிக் கொண்டிருந்த போது.. அவள் ஓடிவர.. திரும்பிப் பார்த்த மூவரும் திடுக்கிட்டுப் போனார்கள்..
“ஐய்யோ.. அம்மா.. என்ன இது..? இன்ஸ்கர்ட்டை மட்டும் இப்படிக் கட்டிக்கிட்டு ஓடி வரயே.. ஷேம் ஷேம்..” என்று முகம் சுளித்தாள் உஷா..
கிராமத்து கதைகளைச் சொல்லும் திரைப்படங்களில், தண்ணீரில் குளித்துக் கொண்டிருக்கும் கதாநாயகிகள்.. உள்பாவாடையை தோள் வரைக்கும் ஏற்றிக் கட்டியிருப்பார்கள்..
அதைப் போலக் கட்டிக் கொண்டு தண்ணீர் திவலைகள் வெற்றுத் தோளில் படிந்திருக்க.. ஈர உடலுடன் அந்தப் பெண்மணி வந்து நின்ற கோலத்தைக் கண்ட ஷாலினிக்கு மயக்கமே வந்துவிட்டது..
“ஏய்ய் இதுக்கு முன்னால அவங்க இப்படி ஓடி வந்ததில்லைடி..”
“எரிச்சலைக் கிளப்பறீங்க.. அந்தம்மா என்னவோ.. பாரதிராஜா படத்து ஹீரோயின் போல.. அரையும்.. குறையுமா ஸ்லோ மோஷனில் ஓடி வர்றாங்க.. நீங்க ‘ஆ’ன்னு பார்த்துக்கிட்டு நிற்கறீங்க.. உங்க டேஸ்ட் இத்தனை கீழே இறங்கி விட்டதா..?”
“கீழேயும் இறங்கலை.. மேலேயும் ஏறலை.. நாம.. நாளைக்கு சென்னைக்கு திரும்பறதா இருக்கோம்.. அதனால.. இப்ப விட்டா திருப்பி எப்பப் பார்ப்போமோன்னு ஓடி வந்திருப்பாங்க..”
“எல்லாத்துக்கும் ஒரு விளக்கத்தை கொடுத்துருங்க.”
“ஷால்.. நான் அப்பாவிடி..”
“இத்தனையை பார்த்த பின்னாடியும்.. இதை என்னை நம்பச் சொல்கிறீங்களா..?”
அரவிந்தனின் ‘கன்னிராசி’யைப் பற்றி ஷாலினிக்கு நன்கு தெரிந்திருந்தும் அவள் கோபப்பட்டாள்..
அரவிந்தனுடன் பேசக்கூட மறுத்தாள்.. வீட்டில் மற்றவர்களின் முன்னிலையில் ஒப்புக்குப் பேசினாள்.
சுற்றிலும் ஆள்கள் இருந்ததினால்.. அவர்களின் மௌனத்தை யாரும் கவனிக்கவில்லை..
கிளம்பும் நாள் வந்த போது..
“அரவிந்தா.. வேறு வீடு மாறிடுங்கப்பா..” என்றாள் விசாலாட்சி..
“ஏன்ம்மா.. அது பழகிய தெரு.. வசதியான வீடு.. கார்த்திக்கும் கூட இருக்கிறான்.. இந்த வாடகையில இவ்வளவு வசதியான வீடு, சென்னையில் அவ்வளவு சீக்கிரத்தில் கிடைக்காதும்மா…”
“உனக்கு சொன்னால் புரியாது அரவிந்தா.. அதே தெருவில் ஷாலினியின் வீடும் இருக்கு..”
“இருந்தா என்ன..?”
“பெத்தவங்களை எதுத்துட்டு வெளியே வந்த பொண்ணு.. இதுக்கும் அவங்களைப் பார்க்க சங்கடமா இருக்கும்.. அவங்களுக்கும்.. இதைப் பார்த்தா கோபம் வரும்..”
“கார்த்தி இருக்கானேம்மா..”
“ஏன்ப்பா.. கல்யாணம் ஆனபின்னாலேயும் கார்த்தி கூட இருக்க..? உனக்கு வசதியாயிருக்கும்… உன் பெண்டாட்டிக்கு வசதிப்படுமா..?”
ஷாலினியின் மௌனம்… ‘அவளுக்கு வசதிப்படாது’ என்பதை உணர்த்த – சென்னைக்கு போனதும் அரவிந்தன் வீடு தேடும் படலத்தை ஆரம்பித்தான்..
ஷாலினி அலுவலகம் போய் வர ஆரம்பித்தாள்..
அலுவலகம் முடிந்து.. அரவிந்தனுடன் வீடு பார்க்கப் போன ஷாலினி.. கோபத்துடன் திரும்பினாள்..
வாசலில் செருப்பைக் கழட்டி வீசிவிட்டு.. வீட்டுக்குள் வந்து ஹேண்ட் பேகை கழற்றி வீசியதிலிருந்தே ஷாலினியின் கோபத்தின் பரிமாணம் தெரிய…
“என்னடா ஆச்சு..?” என்றான் கார்த்திக்…
“வீடு பார்க்கப் போனோம்டா.. அந்த அபார்ட்மென்டில் வீடு காலியாய் இருக்குன்னு யாரோ சொன்னாங்கன்னு இவ வண்டியை விடச்சொன்னா.. எனக்கு அதில நம்பிக்கையில்ல.. அதனால ரோட்டுக்கு இந்தப் பக்கமா நின்னுக்கிட்டு அவளைமட்டும் போகச் சொன்னேன்..”
“ஏம்மா.. இதுக்கா இவ்வளவு கோபம்..?”
“வயித்தெரிச்சலைக் கிளப்பாதீங்கண்ணா.. கீழ் வீட்டில் காலிங்பெல்லை அடிச்சுட்டு நின்னேன்..”
“கதவை யாரும் திறக்கலையா..?”
“எல்லாம் திறந்தாங்க..”
“அப்புறம் என்னம்மா..?”
“திறந்தது ஒரு லேடின்னா.. அந்தம்மா காலிங்பெல்லை அடிச்ச என்னை விட்டுட்டு.. ரோட்டின் அந்தப் பக்கம் நிக்கிற இவரைப் பார்த்து வாங்கன்னு சொல்லுது..”
“இதப் பாருடா..”
“இதை விடக் கொடுமை எதுன்னா.. ரோட்டுக்கு அந்த பக்கம் நின்ன இந்த மனுஷன் நாலே எட்டுல வந்து.. எனக்கு முன்னால அந்த வீட்டுக்குள்ள நுழைஞ்சு சோபாவில் உட்கார்ந்துக்கிட்டார்.. அந்தம்மா என்னவோ.. காலம் காலமாய் பழகினதைப் போல இவருக்கு உடனே ஆப்பிள் ஜூஸ் கொண்டு வந்து கொடுக்குது..”
“உனக்குக் கொடுக்கலையா..?”
“போனாப் போகுதுன்னு ஒரு அரைகப் கொடுத்தது..”
Reviews – Kanni rasi / கன்னி ராசி
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.