Chapter 24
ஷாலினி சமைக்காமல் உட்கார்ந்து விட.. கார்த்திக் லுங்கியை மடித்துக் கட்டிக் கொண்டு சமையலறைக்குள் புகுந்தான்..
பூரி கிழங்கை தட்டில் போட்டு.. அவள் கையில் கொடுத்துவிட்டு அறிவுரையும் சொல்ல ஆரம்பித்தான்..
“இவனைப் பார்த்து பொண்ணுக பேசக்கூடாதுன்னு நீ நினைச்சா.. அது இந்த யுகத்தில் நடக்காது.. இவன் ராசி அப்படி, அதனால் கிடைச்ச வீட்டுக்கு குடி போம்மா..”
“ஏண்ணா.. எனக்கும் சேர்த்து சமைக்க கஷ்டமாயிருக்கா..?”
“உனக்கு அவனே தேவலாம் போல இருக்கே.. ஏம்மா.. இந்த உலகத்தில பெண்கள் இல்லாத தீவாப் பார்த்து குடி போகலாமுன்னு உனக்கு ஐடியா ஏதாவது இருக்கா..? இருந்தா சொல்லு.. நான் வாயே திறக்கலை..”
கீழ் வீட்டில் இருந்த பெண்மணியை விரோதிபோல பார்த்துக் கொண்டே-முதல் மாடியிலிருந்த அபார்ட் மென்டிற்கு குடிபோனாள்.. ஷாலினி..
ஷாலினியின் பெற்றோர் அமெரிக்காவிலிருந்து திரும்பி விட்டனர்.. கூடவே ஷாலினியின் அண்ணனும் வந்திருந்தான்..
பெற்றவர்களை அதட்டி இழுத்துக் கொண்டு ஷாலினியைப் பார்க்க வந்தான்..
“அண்ணா..” ஷாலினி அழுதாள்..
“லீவ் இட்.. மாப்பிள்ளைக்கு ஒரு குறைச்சலும் இல்லை.. எனக்குப் பிடிச்சிருக்கு.. உனக்கும் பிடிச்சிருக்கு.. இனி நம்ம அப்பாம்மாவுக்கு பிடிக்கும்…”
அரவிந்தன் ஷாலினியின் பெற்றோர் வீட்டுக்கு விருந்துக்குப் போக மறுக்க.. ஷாலினி மாமனார் மாமியாரிடம் பஞ்சாயத்து வைத்தாள்..
“டேய்.. பழசையே பிடிச்சுக்கிட்டுத் தொங்காதே.. உன் அக்கா பேசின பேச்சுக்கு.. ஷாலினி அவகூடப் பேசாமல் இருக்கிறாளா..? நீரடிச்சு.. நீர் விலகாது.. பேசாமல் உன் மாமனார் வீட்டோடு சமாதானமாகப் போ..”
ஷாலினி வேறு, வாயும் வயிறுமாக.. வாந்தியும் அரைமயக்கமுமாக இருந்து வைக்க.. வேறு வழியில்லை.. வேதாச்சலத்தைப் பார்த்து.. ‘மாமா’ என்று அழைத்து வைத்தான் அரவிந்தன்..
ஷாலினி அவளுடைய தாய் வீட்டில் மசக்கை கொண்டாடியதில்.. அரவிந்தனுக்கு ஒரு பிரச்னையுமில்லை.. ஆனால் வினோத் இன்னமும் வேதாச்சலத்தின் வீட்டின் மாடி போர்ஷனில் குடியிருப்பதில் அவனுக்கு கொஞ்சம்கூட உடன்பாடில்லை..
“அவனுக்கு வேறு வீடு கிடைக்கலியா..?” என்று ஷாலினியிடம் கேட்டபோது…
“எனக்கு மட்டும் வேற வீடு கிடைச்சதா..?” என்று பதிலுக்கு அவள் கேட்டாள்..
மசக்கை குறைந்து.. அவள் சற்றுத் தேறியபோது.. தன் வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டான் அரவிந்தன்.. ஆனால் ஒரு சுபயோக சுபதினத்தில் கட்டுச்சோற்றைக் கட்டிக்கொண்டு வந்து.. சொந்த பந்தங்களை அழைத்து விருந்து கொடுத்துவிட்டு.. கையோடு ஷாலினியையும்.. அழைத்துக் கொண்டு போய் விட்டார்கள் அவள் பெற்றோர்..
“அறிவில்லாமல் பேசாதே.. ஒன்பதாம் மாதம் வளைகாப்பு முடிந்தவுடன் பிரசவத்துக்கு தாய் வீட்டில் அழைட்துக்கிட்டுப் போய் விடுவாங்க.. இதுதான் வழக்கம்..” என்று மகனைக் கடிந்து கொண்டாள் விசாலாட்சி…
‘என்ன வழக்கமோ..?’
அரவிந்தன்.. ஷாலினி இல்லாத தனிமையில் எரிச்சல் பட்டான்.. தினமும் ஷாலினியைப் பார்க்கவந்தான்.. அப்படி அவன் வந்தபோது கூடிய பெண்களின் கூட்டம் கண்டு ஷாலினி எரிச்சல் கொண்டாள்..
“உங்களுக்கு அரவிந்தன்னு பெயர் வைச்சதே தப்பு..”
“இதை உன் மாமியாரிடம் சொல்லு..”
வினோத் படியிறங்கிப் போக.. அவனைப் பார்த்தபடி அரவிந்தன் எரிச்சல் பட்டான்..
எரிச்சல் முற்றி.. ஷாலினி இனிமேல் அரவிந்தனிடம் திரும்பவே கூடாது என்று முடிவெடுட்த ஒரு நிகழ்வும் நடந்தது..
அரவிந்தன் இயக்கிய டெலிபிலிமிற்கு.. அவார்டு கிடைத்து விட்டது.. அதைக் கொண்டாடிய பெண் ரசிகை ஒருத்தி ஷாலினியின் கண்முன்னாலேயே.. அரவிந்தனுக்கு முத்தம் கொடுத்து விட்டாள்..
“நான் இங்கேயே இருக்கிறேன்..”
மூன்று மாதங்களாகிய மகனைக் கையில் வைத்துக் கொண்டு ஷாலினி தீர்மானமாகக் கூறிவிட்டாள்..
“நான் அப்போதே சொன்னேன்.. கேட்டியா..” கோமளத்தின் குரலில் வெற்றிக் கொடி பறந்தது..
“என் பையனைக் கொடுடி..” அரவிந்தன் உஷ்ணமாக ஷாலினியின் கையிலிருந்த குழந்தையை பிடுங்கிக் கொண்டு போய் விட்டான்..
அடுத்த ஆறு நிமிடத்தில் குழந்தையைத் தேடி ஷாலினி அங்கே வந்து விட்டாள்..
“எங்கே.. வந்தே..?”
“என் குழந்தை எங்கே..?”
“அவன் என் குழந்தை..”
“பெற்றவள் நான்..”
“வில்லங்கமாய் நான் எதையாவது சொல்லி விடுவேன்.. பேசாமல் போய் விடு..”
“உங்ககிட்ட என் பிள்ளை வளரக்கூடாது..!”
“ஏன்..? நான் என்ன பொறுக்கியா..? ரௌடியா..? குடிகாரனா..? இல்லை கொலைகாரனா..?”
அவனது கேள்விகளைக் கேட்ட ஷாலினி திகைட்து நின்றாள்.. ‘இல்லையே.. அவன் இது போலெல்லாம் இல்லையே…’
“எந்தப் பெண் பின்னாலேயாவது நான் சுற்றினேனா..? இல்லை.. எந்தப் பெண் கூடவாவது எனக்குத் தவறான தொடர்பு இருக்கா..?”
‘இல்லையே.. அதுவும் இல்லையே..’
“இவ்வளவு ஏண்டி.. உன்மேல் உயிரை வைச்சிருக்கேன். ஆனா.. உன பின்னால நானாக வந்தேனா..?”
அவள் மௌனமாக இருந்தாள்…
“‘தில்’லைப் பத்திப் பேசி.. உசுப்பேத்தி விட்டது நீதானேடி.. உன்னைத் தொட்டேன்.. இது வரை விடலை.. கடைசிவரைக்கும் விடவும் மாட்டேன்..”
அவன் சொல்வதெல்லாம் உண்மை என்பதை அவளும் உணர்வாளே..! மௌனமான யோசனையுடன் நின்றாள்..
“என் பின்னால் மட்டுமா பெண்கள் சுற்றினாங்க..? உன் பின்னாலும்தான்.. வினோத்தும், ரமேஷும் சுற்றினாங்க..”
“நீங்க சந்தேகப்பட்டு கேள்வி கேட்கலையா..?”
“பொறாமைப்பட்டுக் கேட்டேன்.. ஆனால்.. அதைக் காரணமாகச் சொல்லி விலகிப் போனேனா..?”
ஷாலினி குழந்தையுடன் அசையாமல் நிற்க.. அவளருகே வந்து பேசியவனின் குரல் கம்மியிருந்தது..
“நான் விளையாட்டுத்தனமானவன்தான்டி.. ஆனா.. உன்னுடன் வாழ்கிற இந்த வாழ்க்கையை நான் விளையாட்டாய் நினைக்கவில்லை.. இது உனக்கும் தெரியும்.. நீதாண்டி என் உலகம்.. இதை நீ என்னைக்கு புரிஞ்சுக்கறியோ.. அன்னைக்கு உன்னை நான் தொடுகிறேன்.. அதுவரைக்கும்.. உன்னைத் தொடமாட்டேன்.. அதே சமயம் என் நிழலை விட்டு நீ போகவும் விடமாட்டேன்..”
அரவிந்தன் வாசல்பக்கம் நகர்ந்தபோது.. சொடக்குப் போட்டு.. அவனை.. “ஹலோ..” என்று அழைத்தாள் ஷாலினி.. நின்று திரும்பிப் பார்த்தான்..
“‘தில்’லிருந்தா இன்னைக்கு என்னைத் தொட்டு காட்டணும்.. அதைவிட்டுட்டு.. வெட்டியா வசனம் பேசினா ஆச்சா..?”
அரவிந்தன் விழிகள் மின்ன.. அவளை நெருங்கி.. தனது ‘தில்’லை நிரூபித்தான்.. அவன் கைகளில் விருப்பத்துடன் புகுந்து கொண்டாள் ஷாலினி..
– முற்றும் –
Reviews – Kanni rasi / கன்னி ராசி
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.