Chapter 10

0Shares

தயாநிதியும், ஈஸ்வரியும் ஊர்மிளாவும் பெற்றோரை வரவேற்று குறையின்றி உபசரித்தனர்..

“நாங்க ஊர்மிளாவை எங்களுடன் கூட்டிப் போய் கொஞ்ச நாள் கூட வைத்திருந்து அனுப்புகிறோமே..” ஜனார்த்தனம் கூறினார்..

“மாப்பிள்ளை மிலிடிரியில் இருக்கிறார்.. எங்களுக்கும் பெண்ணைக் கட்டிக் கொடுத்ததிலிருந்து வீடே வெறிச் சென்று இருக்கு.. இந்தா இருக்கிற தாடிக் கொம்புதானே.. நீங்க மருமகளைப் பார்க்கணும்னா ஒரு எட்டு வந்து பார்த்திட்டுப் போகலாமே…” என்று தன்மையாய் கூறினாள் சத்தியவதி..

“ஆமம்மா… மேலக்காலில் இருந்து தாடிக் கொம்பு ரொம்பக் கிட்டத்தான்.. தாடிக் கொம்பிலிருந்து மேலக்கால் ரொம்பத்தூரம் தான்.. நல்லா நியாயம் பேசுறீங்க.. காலக் கொடுமை…” என்றாள் செவ்வந்தி…

“அதுக்கில்லைங்க… நான் என்ன சொல்ல வரேன்னா..”

“நீங்க ஒன்னும் சொல்ல வேண்டாம்மா.. எங்க அண்ணன் எதுக்கு அவர் மருமகளைப் பார்க்க உங்க வீட்டுக்கு எட்டு வைத்து வரணும்..? அந்த எட்டை நீங்க வைத்து வந்தால் ஆகாதா..? காலக் கொடுமை…”

சண்டைக் கோழியாய் செவ்வந்தி முறைக்க சத்தியவதி தவித்தாள்.. புதிதாய் திருமணமான பெண்.. கணவனை விட்டுப் பிரிந்திருக்கிறாள்.. தாய் வீட்டில் இருந்தால் அவள் மனம் ஆறும்.. ஆனால் இவர்கள் விட மாட்டேன் என்கிறார்களே… மகளிடம் அவள் விழிகள் இறைஞ்சின.. ஊர்மிளா பேசினாள்…

“அம்மா… நான் இங்கேயே இருக்கிறேன்.. நீங்களும், அப்பாவும் தம்பியைக் கூட்டிக்கிட்டு அடிக்கடி வந்து விட்டுப் போங்க..”

“என்னம்மா இது..?” ஜனார்த்தனம் வினவினார்…

“இல்லைப்பா.. அவர் மிலிடிரிக்குப் போகும்போது சொன்னார்.. ‘ஊர்மி… இது உன் வீடு.. நான் வரும் வரை நீ இங்கேதான் இருக்க வேண்டும்’ன்னு அவர் பேச்சை மீறி நான் வரலாமா…?”

“என்னடா கண்ணு இப்படிச் சொல்கிறாய்..?” சத்தியவதி பதைத்தாள்..

“அம்மா.. நான் நம்ம வீட்டிற்குக் கட்டாயம் வருவேன்.. ஆனால் அவர் வந்த பின் அவரோடு வருவேன்.. அதுதான் எனக்கு மரியாதை…”

தயாநிதியும் ஈஸ்வரியும் மனம் நிறைந்து போனார்கள்.. அழகான மருமகளின் அறிவான சொற்கள் அவர்களைப் பெருமை கொள்ளச் செய்தது.. மனம் கூம்பிய ஜனார்த்தனத்தையும், சத்தியவதியையும் ஊர்மிளா செல்லம் கொஞ்சி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தாள்..

“என்ன செவ்வந்தி சம்பந்தி சண்டை வரும்ன்னு பார்த்தால் புஸ்வானமாப் போச்சு…” என்று செவ்வந்தியின் காதைக் கடித்தாள் சாந்தா…

“அது சரி.. எல்லோருமே பிறந்த வீடுதான் உசத்தின்னு அலைவாங்களா..? புருசன் வீடு பெரிசுன்னு நினைக்க மாட்டாங்களா.. காலக் கொடுமை..” என்றாள் செவ்வந்தி..

ராணுவ ஜீப்பிலிருந்து குதித்து இறங்கினான் லட்சுமணன்.. நேராகத் தன் மேலதிகாரியின் அறைக்குச் சென்று விறைப்பாக நின்று சல்யூட் அடித்தான்.. கர்னல் மௌலி நிமிர்ந்து பார்த்தார்..

“சார்.. நான் டியூட்டியில் ஜாயின் பண்ணுகிறேன்…”

“லஷ்மண்.. உங்களது முகாமிற்குப் போங்க… உங்களுக்கான உத்தரவு வரும்..” அவர் குனிந்து மும்முரமாய் பைலை படிக்க ஆரம்பித்தார்..

லட்சுமணன் வெளியே வந்து அவனது அறையை நோக்கிச் செல்ல ஆரம்பித்தான்.. ராணுவ டேங்குகள் தயார் நிலையில் இருந்தன.. அங்கும் இங்கும் பரபரப்பாய் ராணுவ வீரர்கள் சென்று கொண்டிருந்தார்கள்.. போர் மேகம் சூழ்ந்திருப்பதை அந்தப் பதற்ற நிலை தெளிவு படுத்தியது..

லேசான மலைச் சரிவில் அந்த ராணுவ முகாம் அமைந்திருந்தது.. எதிர்பட்ட ஜோகிந்தர் சிங் சிநேகிதமாகச் சிரித்தான்..

“ஹாய் லஷ்மண்.. கல்யாண மாப்பிள்ளை… வொய்ப் கூடச் சண்டை போட்டது போதும்ன்னு பாகிஸ்தான் கூட சண்டை போட வந்திட்டியா..?” என்று இந்தியில் கேட்டுச் சிரித்தவன் அவன் காதருகில் குனிந்து…

“ஹவ் இஸ் மேரிட் லைப்..?” என்று கேட்டு கண்களைச் சிமிட்டினான்..

“உன் மேரிட் லைப் போலத்தான் இருந்தது.. வித்தியாசமில்லை..”

“வாவ்.. இன்டலிஜென்ட் ஆன்ஸர்…” அவன் சிலாகித்தபடி விலகினான்…

அறைக்குள் லட்சுமணன் நுழைந்த போது ரஹீம் தன் ஷூ முடிச்சைப் போட்டுக் கொண்டிருந்தான்.. நிழல் பார்த்து நிமிர்ந்தவன் முகம் மலர்ந்தான்..

“லட்சுமணன் வந்துவிட்டாயா..?” அவன் பேச்சில் கேரள வாடை அடித்தது.. மலையாளத்தில் பேசினான்.. அவன் பிறந்த ஊர் கேரளாவில் உள்ள திருச்சூர்…

“வந்து விட்டேன்.. வந்துதானே ஆக வேண்டும்…”

“பார் இந்தக் கொடுமையை.. நாம் சும்மா இருந்தாலும் அவர்கள் நம்மை வம்புக்கு இழுக்கிறார்கள்.. ஒரே நாள் இரவு.. விடிந்து பார்த்தால் கார்கில் பகுதியில் அவர்கள் கொடி பறக்கிறது…”

“திட்டம் போட்டுச் செய்திருக்கிறார்கள்…”

“திட்டம்தான்.. பாகிஸ்தான் முதலில் அது தீவிரவாதி களின் செயல் என்றது.. ஆனால் அவர்கள்தான் அதைச் செய்திருக்கிறார்கள்.. நிரூபணம் ஆகிவிட்டது…”

“அவரவர் நிலப் பரப்பில் அவரவர் வாழ்ந்து விட்டால் என்ன..? வாழ விட்டால் தான் என்ன..?”

“அமைதியாக இருந்தால் பாகிஸ்தானில் ஆட்சி செய்ய முடியாது.. இதை எல்லா அதிபர்களும் நன்றாகப் புரிந்து கொண்டு இருக்கிறார்கள்.. இந்தியாவுடன் மோதா விட்டால் எந்த அதிபரும் அங்கே நிலைத்து ஆட்சி செய்ய முடியாது…”

“இதற்கு முடிவே இல்லையா…?”

“அதைக் காலம் தான் முடிவு செய்ய வேண்டும்..” என்றான் ரஹீம்..

லட்சுமணன் கட்டிலில் அமர்ந்து பெட்டியைத் திறந்தான்.. ரஹீம் வெளியே சென்று விட்டான்.. ஒரு இன்லன்ட் லெட்டரை எடுத்து எழுத ஆரம்பித்தான் லட்சுமணன்.. முதலில் ஒரு கடிதம் பெற்றோருக்கும் தங்கைக்கும் எழுதினான்.. மற்றொரு கடிதத்தை எடுத்து விரித்தான்.. அதில் ஊர்மிளாவின் முகம் தெரிந்தது.. அகன்ற விழிகளில் கண்ணீர் நிரம்பிய காதல் முகம்.. லட்சுமணன் எழுத ஆரம்பித்தான்.. எழுதி முடித்து அதில் இதழ் பதித்து கவரை ஒட்டியவன் இரண்டு கவர்களையும் தபாலில் சேர்த்தான்..

மேலக்கால் கிராமத்தில் காலை பதினோரு மணிக்குத் தான் போஸ்ட் மேன் வருவார்.. அவர் வந்தவுடன் சைக்கிளின் மணியை அடித்து,

“சார் போஸ்ட்..” என்று குரல் கொடுப்பார்.. அந்த ஒலியைக் கேட்டதும் ஊர்மிளாவின் முகம் மலரும்.. காற்றாகப் பறந்து வருவாள்.. கடிதங்களைப் பெற்றுக் கொள்வாள்.. மாமனார் பெயரிலிருக்கும் கடிதத்தை மாமியாரிடம் கொடுத்து விட்டு தன் பெயருக்கான கடிதத்துடன் மாடியில் இருக்கும் தங்கள் அறைக்கு ஓடிக் கதவைத் தாழிட்டுக் கொள்வாள்.. மூச்சு இறைக்க கடிதத்தை முப்பது முறையாவது படித்து விடுவாள்.. லட்சுமணன் இரண்டு நாள்களுக்கு ஒரு முறை கடிதம் எழுதிக் கொண்டிருந்தான்.. ஊர்மிளா உடனுக்குடன் பதில் எழுதிக் கொண்டிருந்தாள்..

அன்றும் லட்சுமணன் கடிதம் வந்ததும் தனிமையில் அமர்ந்து படிக்க ஆரம்பித்தாள்..

‘அன்புள்ள ஊர்மி

குண்டுச் சத்தத்தின் மத்தியில் இக்கடிதத்தை எழுது கிறேன்.. தாய் மண்ணைக் காக்க நானும் எண்ணற்ற ராணுவ வீரர்களும் போராடிக் கொண்டு இருக்கிறோம்.. பாகிஸ்தானியர் பின் வாங்க மறுக்கிறார்கள்.. குளிர் மிகுந்த மலைப்பகுதி அவர்களுக்கு சாதகமாகவும், நமக்கு பாதகமாகவும் இருக்கிறது அன்பே! இப்போர் மேகத்தின் ஊடே உன் நினைவு என் நெஞ்சை வாட்டாமல் இல்லை.. கடமையாற்றிக் கொண்டிருக்கிறேன்.. இந்தக் கடுமையான சூழ்நிலை மத்தியில் உன் கடிதம் ஒன்றே என் ஆறுதல்.. நாளை நாங்கள் எங்கு செல்ல வேண்டும்.. என்ன ஆவோம் என்று தெரியவில்லை.. இனம், மொழி, மதம் இவை எல்லாவற்றையும் மறந்து ‘இந்தியர்’ என்ற உணர்வுடன் யுத்தம் புரிந்து கொண்டிருக்கிறோம்….

வென்று திரும்பி வருகிறேன்.. அதுவரைக் காத்திரு..

உன் அன்புக் கணவன்

லட்சுமணன்…’

கடிதத்தைப் படித்த ஊர்மிளாவின் கண்கள் கலங்கின.. அவனது அவசரம் அவனது எழுத்தில் தெரிந்தது.. செல்போனில் பேச முடியாத நிலைமையில் கிடைத்த பேப்பரில் கிடைக்கும் நேரத்தில் அவசரமாய் எழுத வேண்டிய பதற்றமான போர்முனையில் கணவன் இருக்கிறான் என்பது அவள் மனத்தை பாரமாக்கியது.. போர் புரியும் கணவனுக்கு அவளால் எவ்வாறு சேவை செய்ய முடியும்..? தன் கடிதம் ஒன்றே அவனுக்கு புத்துணர்ச்சி தரும் என்பதை உணர்ந்திருந்த ஊர்மிளா பதில் கடிதம் எழுத ஆரம்பித்தாள்..

‘அன்பானவரே!

நீங்கள் வாழ்ந்த வீடு என்பதாலேயே இந்த வீடு எனக்குப் பிடித்திருக்கிறது.. நீங்கள் பிறந்து வளர்ந்த ஊர் என்பதாலேயே இந்த ஊர் எனக்குப் பிடித்து இருக்கிறது.. உங்களைப் பெற்றவர்கள் என்பதால் அத்தை மாமாவையும் உங்கள் தங்கை என்பதால் சுபத்ராவையும் மிக மிகப் பிடித்திருக்கிறது..

போர் முனையில் தாங்கள் இருக்க நானோ உங்களைப் பெற்றவர்களின் பாதுகாப்பில் பத்திரமாய் இருக்கிறேன்.. ராணுவ வீரன் என்றால் இப்படி ஒரு நாளை எதிர் கொள்ளவேண்டும்தான்.. ஆனால் வள்ளுவர் சொன்னது போல் சொல்லுவது யார்க்கும் எளிது.. அனுபவித்துப் பார்க்கும்போது தான் தெரியும் அந்தத் தனிமையின் கொடுமை..

என்னடா.. ஊர் முழுவதும் நம் சொந்தங்கள், வீட்டில் பெற்றவர்களை விட மேலாகப் பார்த்துக் கொள்ளும் மாமனார், மாமியார்.. இவர்கள் மத்தியில் இருந்து கொண்டு ‘தனிமை’ என்கிறாளே என்று நினைக்கிறீர்களா…?

ஆயிரம் ஜனங்கள் இருந்தாலும் நீங்கள் இருந்தால் தான் எனக்குத் துணை.. நீங்கள் இல்லாவிடில் நான் தனிதான்.. அந்த வாழ்க்கை ‘தனிமையான வாழ்க்கை’ தான்..

தினமும் தபால்காரரின் வரவுக்காக காத்திருக்கிறேன்.. நீங்கள் போர் முனையில் வென்று திரும்பி வரும் நாளை எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன்.. உங்கள் முகத்தை என்று பார்ப்போமோ என்ற ஏக்கத்திலிருந்து விடுபடும் நாளுக்காக காத்திருக்கிறேன்.. உங்கள் முகம் பார்க்கக் காத்திருக்கிறேன்..

                  உங்கள் வரவுக்காக காத்திருக்கிறேன்..

                                 உங்களுக்காக காத்திருக்கும்

                                               உங்கள் ஊர்மிளா ‘

மேலே நகர்ந்து செல்ல உத்தரவு வந்த நேரத்தில் லட்சுமணனின் கையில் ஊர்மிளாவின் கடிதம் கிடைத்தது.. அவசரமாய் பிரித்துப் படித்தான்.. மீண்டும் ஓர் முறை படித்து விட்டு சட்டைப் பையில் பத்திரப்படுத்திக் கொண்டான்…

தடதடவென்ற சத்தத்துடன் ஜோகிந்தர்சிங் ஓடி வந்தான்..

“லட்சுமணன் நாம் முன்னேற வேண்டும்.. கமான்..”

அவர்கள் நான்கு பேர் சேர்ந்த குழுவிற்கு லட்சுமணன் தான் தலைமை.. அவன், ஜோகிந்தர்சிங், ரஹீம், ஜோசப் நால்வரும் மலைச் சரிவில் சரிந்து இறங்கி ஓட ஆரம்பித்தார்கள்.. மேலே மேலே அவர்கள் முன்னேறும் போது, திடீரென்று குண்டு மழை பொழிந்தது..

“தரையோடு படுத்துக் கொள்ளுங்கள்…” லட்சுமணன் கூவினான்.. அவர்கள் நால்வரும் தரையோடு படுத்து ஊர்ந்து மறைவிடத்தில் பதுங்கினார்கள்.. லட்சுமணனின் வயர்லெஸ் ஒலித்தது.. எடுத்தான்..

“எங்கேயிருக்கிறீர்கள்…” கர்னல் மௌலி வயர் லெஸ்ஸில் கேட்டார்..

“நாங்கள் பாகிஸ்தானியரின் சமீபத்தில் இருக்கிறோம்..”

“நிலைமை எப்படியிருக்கிறது…?”

“கர்னல் அவர்கள் குண்டு வீசிக் கொண்டிருக் கிறார்கள்..”

“என்ன செய்யப் போகிறீர்கள்..?”

“கர்னல்.. நாங்கள் முன்னேறப் போகிறோம்…”

“குட்.. பெஸ்ட் ஆப் லக்…”

லட்சுமணன் வயர்லெஸ்ஸை அணைத்தான்.. மெஷின் கன்னை தயார்நிலையில் வைத்துக் கொண்டான்.. மற்ற மூவரும் அவனைப் பின் பற்றினர்.. பாகிஸ்தானியர் ஓய்ந்த வேளையில்..

“மூவ்…” என்று கத்தியபடி லட்சுமணன் பாய்ந்து முன்னே ஓடினான்.. மற்ற மூவரும் பின் தொடர்ந்து ஓடினர்.. தூரத்தில் பாகிஸ்தானியரின் முகாம் தெரிந்தது.. லட்சுமணன் கை எறி குண்டை எடுத்தான்… வீசினான்.. முகாம் தீப்பற்றி எரிந்து வெடித்தது..

அன்று இரவு கர்னல் அவனது வீரச் செயலைப் பாராட்டினார்.. மறுநாள் அவர்கள் முன்னேறும்போது பாகிஸ்தானியரால் சுற்றி வளைக்கப்பட்டனர்.. லட்சுமணன் மெஷின்கன்னை எடுக்க முயல..

“தொடாதே…” என்று அவனைக் குறி பார்த்தான் எதிரி.. திடீரென்று அவர்கள் பின்னால் குண்டு வெடித்தது.. லட்சுமணனும் ஜோகிந்தர் சிங்கும், ஜோசப்பும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு மெஷின் கன்னை இயக்க அப்போரில் அன்றும் அவர்கள் வெற்றி பெற்றனர்..

“வேர் இஸ் ரஹீம்..?” என்று ஜோகிந்தர் கேட்க ஜோசப் தேட ஆரம்பித்தான்.. லட்சுமணனின் பின்னாலிருந்த புதரில் இருந்து முனகல் சத்தம் கேட்டது.. லட்சுமணன் அவசரமாய் அங்கே ஓடிப்போய் புதரை விலக்கிப் பார்த்தான்.. குண்டடி பட்டு ரத்த வெள்ளத்தில் ரஹீம் கிடந்தான்..

“ரஹீம்… நீ எப்படி இங்கே வந்தாய்..? எங்களுடன் அல்லவா இருந்தாய்..? பாகிஸ்தானியரின் பின்னே எப்படிப் போனாய்..? அப்போது.. அவர்களைப் பின்னாலிருந்து தாக்கியது நீதானா..?” லட்சுமணன் பரபரப்பாய் கேட்டான்..

“ஆமாம்.. லஷ்மண்.. இப்படி ஒரு நாளுக்காகத்தான் நான் காத்திருந்தேன்.. எல்லா முஸ்ஸீமும் பாகிஸ்தானியர் அல்ல என்று நிரூபிப்பதற்காக ஒரு சந்தர்ப்பத்தை எதிர் நோக்கியிருந்தேன்.. இன்று அது எனக்கு கிடைத்து விட்டது.. நான் இந்தியன் என்பதை உணர்த்தி விட்டேன்..”

ரஹீம் மரண வலியுடன் பேசினான்.. லட்சுமணன் அவனது வீரத்திற்கும் நாட்டுப் பற்றிற்கும் தலை வணங்கினான்..

தனி ஒரு ஆளாக பாகிஸ்தானியரின் பின்னே உயிரைத் துச்சமாக மதித்து ரஹீம் ஊடுறுவி இருக்கா விட்டால் அன்று பாகிஸ்தானியரின் கைகளில் அவர்கள் அனைவரும் சிக்கியிருப்பார்கள்..

லட்சுமணன் ரஹீமைத் தோளில் தூக்கிக் கொண்டு முகாமுக்குத் திரும்பினான்.. ரஹீம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான்..

0Shares

Reviews – Kathirudhen Katriniyle / காத்திருந்தேன்… காற்றினிலே…

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link