Chapter 13

0Shares

தயாநிதி ஊர்மிளாவுக்காக கார் வாங்கிக் கொடுத்ததை மட்டும் அந்த நபர் கேள்வி கேட்கவில்லை.. அதை ஓட்டிக் கொண்டு ஊர்மிளாவுக்குத் துணையாக போய் வரும் நடேசனைப் பற்றித்தான் முக்கியமாய் கேள்வி கேட்டார்..

“ஏம்ப்பா தெரியாமல்தான் கேட்கிறேன்.. ஊரில் இல்லாத வழக்கமா உன் மருமகளுக்கு கார் வாங்கிக் கொடுத்திருக்கிற… சரி.. அதை ஓட்டவும் சொல்லிக் கொடுக்க வேண்டியதுதானே.. அதை விட்டுவிட்டு ஏன் உன் தங்கச்சியோட நாத்தனார் மகன் நடேசனை ஓட்டச் சொல்லியிருக்கிற…?”

“நடேசனும் மதுரையில் ஊர்மிளா வேலை பார்க்கிற அதே கலெக்டர் ஆபிசில்தான் வேலை பார்க்கிறான்.. ஊர்மிளா கூட துணையாவும் போய் வரட்டும்ன்னு தான் அவனை வண்டி ஓட்டச் சொன்னேன்…”

“அதுக்காக பஞ்சையும், நெருப்பையும் பக்கத்தில் வைக்கலாமா..?”

“யோவ்… உனக்கு புத்தி போகிற போக்கு சரியில்லை.. இரண்டு பேரும் இதே ஊரில் இருந்து ஒரே ஆபிசிற்கு வேலைக்குப் போய் வர்றாங்க.. அவன் என் சொந்தக்காரன்.. லட்சுமணனுக்கு நெருங்கின சிநேகிதன்.. ஊர்மிளாவுக்கு பாதுகாப்பா இவனைத் தவிர யார் இருக்க முடியும்ன்னு தான் கார் வாங்கிக் கொடுத்து ஓட்டச் சொன்னே.. அவங்க வீட்டில் என் மகன் என்ன உன் மருமகளுக்கு டிரைவர் வேலை பார்க்கனுமான்னு சண்டைக்கு வந்து விடாமலிருக் கனும்ன்னு நான் பயந்துக்கிட்டு இருந்தேன்.. அவங்களே நம்ம வீட்டுப் பெண்ணுக்கு நாமதானே துணைக்குப் போகணும்ன்னு முதல் ஆளாச் சொல்லிட்டாங்க.. எனக்கு வேறு என்ன வேணும்.. நீ உன் வேலையை பார்த்துக்கிட்டுப் போ…”

நடேசன் ஊர்மிளாவிற்குத் துணையாக அலுவலகம் போய் வர ஆரம்பித்தது இப்படித்தான்.. காரின் பின் சீட்டில் ஊர்மிளா அமர்ந்திருக்க நடேசன் டிரைவர் சீட்டில் அமர்ந்து ஓட்டுவான்.. முதல் நாள் அலுவலகத்தில் அவளது சீட்டில் அமர வைத்து வேலைகளைக் கற்றுக் கொடுத்ததில் இருந்து அலுவலகத்தில் இருப்பவர்களின் குணாதி சயங்களைக் கூறி யார் யாரிடம் எப்படிப் பழகுவது என்று சொல்லிக் கொடுத்தது வரை ஊர்மிளாவிற்கு ஓர் ஆசானாக அவன் இருந்தான்..

காரில் வரும்போதும், போகும்போதும் அரசியலில் ஆரம்பித்து சினிமா, விளையாட்டு, கதை பாட்டு என்று அவளுடன் பேசிச் சிரிக்கும்போது ஓர் தோழனாக அவன் ஆனான்..

ஊர்மிளா வெளியுலகில் கால் பதித்தாள்.. அலுவலகத்தில் வேலையில் திறமைசாலி என்று பெயர் வாங்கினாள்.. அதற்கு நடேசன் உறுதுணையாக இருந்தான்..

வயல் சூழ்ந்த அந்தக் கிராமத்தின் பசுமைபோல நடேசனின் மனதிலும் வறட்சி இல்லாத பாசத்தின் பசுமை இருந்தது.. அது ஊர்மிளாவைத் தொடர்ந்து சென்று அவளைக் காவல் காத்தது..

“நடேசா சாயந்திரம் வரும்போது ஊர்மிளாவை டாக்டர் கிட்ட செக்கப்புக்கு கூட்டிக்கிட்டுப் போய் வந்திருப்பா…” ஈஸ்வரி கூறுவாள்..

நடேசன் பொறுமையாய் அதைச் செய்து முடிப்பான்..

“அந்த பொம்மைக் கடையில் டெடி பியர் பொம்மை பார்க்க அழகாக இருக்கு..” என்று ஊர்மிளா சாதாரணமாய் கூறுவாள்..

உடனே காரை நிறுத்தி அந்தப் பொம்மையை வாங்கிக் கொடுத்து விடுவான்.. ஊர்மிளா நெகிழ்ந்து போவாள்..

மருத்துவர்கள் கூறிய நாளுக்கு முன்னரே ஊர்மிளாவுக்குப் பிரசவ வலி வந்தபோது அவள் அலுவலகத்தில் இருந்தாள்.. வேலை செய்து கொண்டி ருந்தவள் இடுப்பு வலியில் அலற நடேசன்தான் தாங்கிக் கொண்டான்.. அவளை உடனடியாய் மருத்துவ மனையில் சேர்த்து விட்டு அலுவலகத் தோழிகளை துணைக்கு வைத்து விட்டு மேலக்காலுக்கு காருடன் வந்து தயாநிதி குடும்பத்தாரை அழைத்துப் போனான்..

அழகாய் பூப்போல் சிரித்தபடி லட்சுமணனின் மகன் பிறந்தான்… குழந்தையைக் கொண்டு வந்து தயாநிதி யிடமும், ஈஸ்வரியிடமும் நர்ஸ் காண்பித்தபோது ஈஸ்வரி, “லட்சுமணா…” என்று அழைத்து அழுதாள்..

“அம்மாடி.. ஊர்மிளா.. என் தெய்வமே… என் பேரனை என் கண்ணில் காண்பித்திட்டியேம்மா.. உனக்கு எப்படி நன்றி சொல்லப் போறேன்…”

ஊர்மிளா மயக்கத்தில் இருக்க தயாநிதி அதட்டினார்..

“இப்ப எதுக்கு கண் கலங்குற.. அதான் நம்ம பேரப் புள்ளைய கண்ணில பார்த்திட்டோம்ல்ல… மருமகள் முழிச்சிட்டா மகனை நினைச்சு மறுக மாட்டாளா.. உன் ஆத்தாமையை அடக்கிக்க..”

ஊர்மிளாவிடம் அசைவு தெரிந்ததும் குழந்தையைக் காண்பித்தார்கள்.. லட்சுமணனின் பிம்பமாய் அதே மூக்கு, வாய், கண்கள் என்று அவனது குழந்தை இருப்பதாகச் செவ்வந்தி கூறினாள்..

“அப்படியே என் அண்ணன் மகனின் மூக்கு முழி இருக்கு பாரு.. அண்ணா உன் பேரன் சிரிப்பைப் பார்க்கிறப்போ லட்சுமணன் சிரிக்கிறது மாதிரியே இருக்குண்ணே..”

ஊர்மிளா குழந்தையைப் பார்த்தாள்.. லட்சுமணனின் வடிவாய் அது அவளைப் பார்த்துச் சிரித்தது.. கண்கள் பனிக்க குழந்தையை வாங்கிக் கொண்டாள்.. இனி இவன்தான் அவள் வாழ்வின் ஆதாரம்.. இனி இவனே அவள் வாழ்வின் அர்த்தம்…

“அத்தை காபி சாப்பிடுங்க.. ஊர்மிளாவுக்கும் கொடுங்க..” நடேசன் பிளாஸ்க்கோடு உள்ளே வந்து கூறினான்..

ஊர்மிளா அவனை நன்றியோடு நிமிர்ந்து பார்த்தாள்.. எதிர்பார்ப்பு இல்லாமல் மழை தரும் மேகம் போல இவனால் எப்படி இருக்க முடிகின்றது.. காற்றைப் போல் எப்படி மனம் வருட முடிகின்றது..? இவன் மட்டும் இல்லா விட்டால் இன்று என்ன ஆகியிருந்திருக்கும்..? இவன் யார்..? இவ்வளவு கருணையைப் பொழிய இவனால் எப்படி இயல்கிறது..?

செவ்வந்தி பிளாஸ்கிலிருந்த காபியை தம்ளர்களில் ஊற்றியபடி, “பார்த்தியா மதினி.. என் நாத்தனார் மகனுக்குக் கூட என் பிறந்த வீட்டு மேல எவ்வளவு அக்கறை இருக்குன்னு இப்பவாவது தெரிஞ்சுக்க.. புள்ளை பெத்த பச்சை உடம்புக்காரிக்கு சூடா காபி கொடுக்கணும்னு இங்க யாருக்காவது நினைப்பிருந்துச்சா..” என்று சாந்தாவை ஜாடையாய் பார்த்துக் கொண்டு கூறினாள்..

“அப்படியில்லை செவ்வந்தி.. அதிலயும் உன் கொடி பறக்கட்டுமேன்னுதான் நாங்க ஒதுங்கி நிற்கிறோம்..” என்று இடக்காகப் பதில் கூறினாள் சாந்தா..

ஜனார்த்தனமும், சத்தியவதியும் பலராமனுடன் ஓட்டமும் நடையுமாய் ஓடி வந்தனர்.. பெற்றுப் பிழைத்த மகளைப் பார்த்ததும் சத்தியவதி கண்ணீர் விட்டாள்..

“உன்னைக் கண்ணுக்குள்ள வைச்சு பொத்திப் பொத்தி வளர்த்தோமே.. இப்படிப் பிரசவத்துக்குக் கூட பிறந்த வீட்டுக்கு வராமல் ஒதுங்கி நிற்கிறாயே.. உனக்கும் எங்களுக்கும் சண்டையா, பகையா..?”

மனைவி மகளை அணைத்தபடி புலம்புவதைக் காணச் சகிக்காத ஜனார்த்தனம் முகம் திருப்பிக் கொண்டார்.. நிலைமையை சீராக்க விரும்பிய ஈஸ்வரி குழந்தையைத் தூக்கி பலராமனின் கையில் கொடுத்தாள்..

“பலராமா.. இதுதான் உன் அக்காவின் குழந்தை.. உன்னை தாய் மாமனாக்கியிருக்கும் உன் மருமகனைப் பாரு.. உன்னைப் பார்த்துச் சிரிக்கிறதைப் பார்த்தியா..?”

பலராமன் தன் கையிலிருந்த சிசுவைப் பாசத்துடன் தூக்கிக் கொண்டான்.. ஜனார்த்தனமும், சத்தியவதியும் போட்டி போட்டுக் கொண்டு குழந்தையை வாங்கிக் கொள்ள முயல அவன் குடுக்க மறுத்தான்.. ஊர்மிளா ஈஸ்வரியை வாத்சல்யத்துடன் பார்த்தாள்..

“எவ்வளவு கெட்டிக்காரத்தனமாக மனிதர்களின் மன நிலையைப் புரிந்து கொண்டு செயல்பட்டு விட்டாள்..?”

ஊர்மிளா மருத்துவமனையில் மூன்று நாள்கள் இருந்தாள்.. அவளது நிழலாக இருந்து சத்தியவதி பாதுகாத்தாள்.. மேலக்காலுக்கு மகனைக் கூட்டிக் கொண்டு போன பின்பும் ஒரு மாதம் சம்பந்தி வீடு என்று பேதம் பாராட்டாமல் மகளின் கூட இருந்து கவனித்துக் கொண்டாள்.. ஈஸ்வரியும், தயாநிதியும் போட்டி போட்டுக் கொண்டு சத்தியவதியை உபசரித்ததில் அவளுக்கு மகளின் மாமியார் வீடு என்பது மறந்து விட்டது..

மகன் பிறந்து ஆறு மாதங்களானபோது ஊர்மிளா வேலைக்குத் திரும்பினாள்…

0Shares

Reviews – Kathirudhen Katriniyle / காத்திருந்தேன்… காற்றினிலே…

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link