Chapter 14

0Shares

ஆற்றங்கரையிலிருந்து ஊருக்குள் செல்லும் பாதையில் நடந்து கொண்டு இருந்தான் நடேசன்.. அன்று ஞாயிறு விடுமுறை.. வயலுக்குச் சென்று தண்ணீர் பாய்ச்சி விட்டு குளித்து முடித்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தான்..

“என்ன மாப்பிள்ளை.. பராக்கு பார்த்துக்கிட்டே நடக்குற.. எங்க இருக்கு உன் நினைப்பு..?” எதிரே வந்த பாலையா கேட்டான்.. அவன் நடேசனுக்கு மாமன் மகன் உறவு முறையாக வேண்டும்..

“என் நினைப்பு என் கிட்டத்தான் இருக்கு.. நீ எங்கே கிழக்குப் பக்கமா போய்க்கிட்டு இருக்க..?”

“வேற எங்கே.. பொண்ணு பார்க்கத்தான்..”

“யாருக்கு…?”

“இந்த இடக்குத்தானே வேணாம்கிறது.. எனக்குத் தான்..”

“உனக்கா…? ஏண்டா தனியாவா பெண் பார்க்கப் போற..?”

“தனியாவா..? நம்ம ஊரில் அதுக்கு விட்டு விடுவார்களா..? பத்து வண்டி கட்டி கூட்டமெல்லாம் முன்னால் போகுது..”

“உனக்கு தனியா வண்டி வருதா..?”

அது வேறயா..? நீ ஏண்டா மாப்பிள்ளை வயித்தெரிச்சலைக் கிளப்பற.. எனக்கு வண்டியில் இடமில்லைடா.. அதான் நடந்தே போறேன்..”

“என்னடா இது… என் செவ்வந்தி அத்தை சொல்வது மாதிரி பெரியக் காலக் கொடுமையாயிருக்கு.. பத்து வண்டியில் ஒத்தை வண்டியில் கூடவா உனக்கு இடமில்லை..? ச்சு.. ச்சு.. ஆமாம்.. பொண்ணு எந்த ஊரு..?”

“மேலத் தெருதான்..”

“என்னது நம்ம ஊரு மேலத்தெருவிலயா..?”

“ஆமடா.. உன் சின்னம்மா மகள் அன்னக்கிளியைத் தான் பெண் கேட்டுப் போகிறோம்..”

“அடப் பாவி.. அதுக்கு ஏண்டா வண்டியைக் கட்டின..?”

“வன்கொடுமைடா.. மாப்பிள்ளை நடந்து போனால் நல்லாயிருக்காதுன்னு என் அப்பன் சொல்லவும் வீட்டிலிருந்த வண்டியைக் கட்டினோம்..”

“சரி… அப்புறம் என்ன ஆச்சு..?”

“முதல் வண்டியில் இடமில்லை.. ரெண்டாவது வண்டியா பக்கத்து வீட்டு வண்டியைக் கட்டினோம்.. அதிலும் எனக்கு இடமில்லை.. அப்படியே பத்து வண்டியைக் கட்டியாச்சு…”

“பத்து வண்டியிலயும் உனக்கு இடமில்லை.. ஹாஹ்ஹா…”

“ஏண்டா மாப்பிள்ளை சிரிக்க மாட்டே..? உனக்குப் பெண் பார்க்க ஊரே கூடும்போது நீ என்ன செய்யப் போகிறேன்னு பார்க்கத்தானே போகிறேன்.. ஆமாம் நீ எப்படா கல்யாணம் பண்ணிக்கப் போற..?”

“அந்தக் கவலை உனக்கு எதுக்கு..? இப்ப உன் கல்யாணத்தைப் பத்தி மட்டும் கவலைப்படு.. சீக்கிரமா போய் பொண்ணு பார்க்க உட்காரு.. இல்லைன்னா பத்து வண்டியில் ஏதாவது ஒரு வண்டியில் போனவன் கூட உன் அன்னக்கிளி பறந்து போயிறப் போகுது.. ஹாஹ்ஹா…”

பாலையா உண்மையிலேயே பயந்து போனவனாக ஓட்டமும் நடையுமாய் மேலத் தெரு பக்கம் போனான்.. அதை ரசித்து மனம் விட்டுச் சிரித்தபடி தயாநிதியின் வீட்டுக்குச் சென்றான் நடேசன்.. வாசலில் நின்றிருந்த ஹீரோ ஹோண்டா வண்டியைப் பார்த்ததும் ‘பலராமன் வந்திருக்கிறானா..?’ என்று தனக்குள் நினைத்தபடி வீட்டுக்குள் சென்றான்..

பாலமுரளியைக் கையில் வைத்துக் கொஞ்சிக் கொண்டிருந்த பலராமன் நடேசனைக் கண்டதும் மரியாதை நிமித்தம் சிரித்தான்.. பாலமுரளி அவன் கையில் இருந்து திமிறிக் கொண்டு இறங்கினான்.. நடேசனைப் பார்த்து தளர் நடை நடந்து, “தித்தப்பா…” என்று அழைத்தான்..

இரண்டு வயதாகப் போகும் பால முரளியை வாரி அணைத்துக் கொண்ட நடேசன், “+2 பரிட்சையெல்லாம் முடிந்து விட்டதா..?” என்று பலராமனைப் பார்த்துக் கேட்டான்..

“நேற்றே முடிந்து விட்டது மாமா..”

“ஊரில் அத்தை… மாமா சௌக்கியமா..?”

“சௌக்கியமா இருக்காங்க மாமா…”

“ரிசல்ட் இன்னும் இரண்டு மாதத்தில் வந்துவிடும்.. மேலே என்ன படிக்கப் போகிறாய்..? அம்பிஷன் எதுவும் இருக்கா..?”

“அவனுக்கு கம்ப்யூட்டர் பிடிக்கும்.. அதனால் கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஆகப் போவதாகச் சின்ன வயதிலிருந்தே சொல்லிக் கொண்டிருப்பான்..” என்றாள் காபித் தம்ளர்களுடன் அங்கே வந்த ஊர்மிளா..

தம்பிக்கு ஒரு தம்ளரையும் நடேசனிடம் மற்றொன்றை கொடுத்து விட்டு மகனை வாங்கிக் கொள்ள யத்தனித்தாள்.. ஆனால் அவனோ நீட்டிக் கொண்டிருந்த அவள் கரங்களைப் புறக்கணித்து நடேசனின் கழுத்தை இறுகக் கட்டிக் கொண்டான்.. வாசல் பக்கமிருந்து துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு வந்த தயாநிதி சிரித்தார்..

“என்னம்மா நடேசனைக் கண்டதும் உன்கிட்டக் கூட வரமாட்டேன் என்கிறானா பேரப்பிள்ளை…?”

“ஆமாம் மாமா..” என்று சிரித்தாள் ஊர்மிளா..

மருமகள் சிரிப்பதைக் கண்டு மனம் குளிர்ந்தவர் பலராமனைக் கண்டதும்,

“அடடே… என் மருமகன் வந்திருக்காப்புல போல.. எப்பய்யா வந்தீங்க.. பரிட்சை முடிஞ்சிருச்சா…” என்று ஆர்ப்பரித்து அவனருகில் போய் அமர்ந்து கொண்டு பலராமனின் முடி கோதினார்..

அவரின் அன்பான செய்கையில் பலராமன் மனம் நெகிழ ஈஸ்வரி சிரித்தாள்..

“வாய்க்கு வாய் மருமகனேங்கறீங்க.. சுபத்ராவையா கட்டிக் கொடுக்கப் போறீங்க..?”

அங்கு அமர்ந்து வாய் பார்த்துக் கொண்டிருந்த இருபது வயது சுபத்ரா வெட்கமடைந்தாள்…

“போம்மா.. என்னை விட நாலு வயசு சின்னவன் பலராமன்.. அது கூடவப் போய் என்னை இணைச்சுப் பேசுறயே…”

“ஹாஹ்ஹா…” என்று சிரித்த தயாநிதி..

“மகாத்மா காந்தியை விட கஸ்தூரிபாய் வயதில் மூப்புத்தான்.. அவங்க கல்யாணம் பண்ணிக்கிட்டு நல்லா வாழலையா..?” என்று நியாயம் பேசினார்.. நடேசன் ரசித்தபடி, “அதுதானே…” என்று ஒத்துப் பாடினான்..

பலராமன் முகம் வெட்கத்தால் சிவந்து விட்டது.. தலையைக் குனிந்து கொண்டு கால் விரல்களால் தரையில் கோலம் போட்டான்..

“ஆ.. ஆ.. என் மச்சினனுக்கு வெட்கம் வந்து விட்டது.. நான் பார்த்தாலும் பார்த்தேன்.. ஒரு ஆண் பிள்ளை வெட்கப்படுவதை இப்போதுதான் பார்க்கிறேன்..” நடேசன் சிரிக்க ஆரம்பித்து விட்டான்…

பலராமன், “அக்கா…” என்று தமக்கையை துணைக்கு அழைத்தான்.. சுபத்ரா உள்ளே ஓடிவிட்டாள்.. கேலியை ஆரம்பித்து வைத்த ஈஸ்வரியே அதை முடிவுக்கு கொண்டு வந்தாள்..

“சாப்பிடாம பிள்ளை ஓடிப்போய் விடப் போகுதுடா நடேசா.. கேலியை நிப்பாட்டி விட்டு சாப்பிடக் கூப்பிட்டுக்கிட்டு வா.. சூடா இட்லி அவிச்சு வைத்திருக்கிறோம்.. ஆறி விடறதுக்குள்ள சாப்பிட்டு விடுங்க..”

நடேசன் குழந்தையைத் தூக்கிக் கொண்டே பலராமனைக் கூப்பிட்டுக் கொண்டு பின்பக்கம் கை கழுவ அழைத்துப் போனான்.. சமையலறையை அடுத்த அறையில் ஜமுக்காளம் விரிக்கப்பட்டு தட்டுக்கள் வைக்கப்பட்டு இருந்தன.. தான் அமராவிட்டால் பலராமன் அமரமாட்டான் என்பதால் அவனுடன் சாப்பிட அமர்ந்தான்.. அவன் மடியில் லட்சுமணனின் மகன் அமர்ந்திருந்தான்.. பரிமாற வந்த ஈஸ்வரி..

“புள்ளையக் கொடுத்திட்டு சாப்பிடுடா…” என்றாள்..

“அவன் வந்தால் தூக்கிக்கங்க.. நான் கொடுக்க மாட்டேன்..”

ஊர்மிளா, ஈஸ்வரி, தயாநிதி, சுபத்ரா என்று அனைவரும் ஆள் மாற்றி ஆள் அழைத்தும் குழந்தை வர மறுத்து நடேசனிடம் ஒட்டிக் கொண்டான்.. குழந்தைக்கு ஊட்டி விட்டுக் கொண்டே தானும் சாப்பிட்ட நடேசனை வியப்பாகப் பார்த்தபடி சாப்பிட்டான் பலராமன்..

“இன்னும் ரெண்டு இட்லி வைச்சுக்கடா…” ஊர்மிளா உபசரிக்க,

“போதும்க்கா.. இதுவே கழுத்து வரைக்கும் இருக்கும், இனிச் சாப்பிட்டேன் வாயில் முட்டிக் கொண்டு வந்து விடும்..”

“ஹாஹ்ஹா.. என் மருமகன் சோக்காப் பேசுறாரு..” என்று தயாநிதி சிரிக்க ஆரம்பிக்க, எங்கே மீண்டும் மூன்று முடிச்சுப் பந்தத்தைப் பேச ஆரம்பித்து விடுவார்களோ என்று பயந்து கொண்டு பலராமன் பின் பக்கம் கைகழுவ ஓடினான்.. சுபத்ரா சமையல் கட்டுக்குள் மறைந்து கொண்டாள்…

0Shares

Reviews – Kathirudhen Katriniyle / காத்திருந்தேன்… காற்றினிலே…

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link