Chapter 18
சிறு குழந்தைபோல் மல்லுக்கட்டிய மனைவியை வழிக்குக் கொண்டு வர அவர் முயற்சி செய்து கொண்டி ருந்தபோது கலைமதியும் சாந்தாவும் அங்கே வந்தனர்.. ஈஸ்வரி பொங்கி வரும் அழுகையை முந்தானையால் வாயடைத்துக் கட்டுப்படுத்திக் கொண்டு அவர்களைப் பார்த்து வரவேற்கும் பாவனையில் தலை அசைத்தாள்.. சாந்தாவின் கூர்விழிகள் நிலைமையைக் கண்டு பிடித்து விட்டன.. கணவனிடம் ஜாடை காட்டினாள்.. அவர் அண்ணனைப் பார்த்தார்… தயாநிதி துண்டை எடுத்து அடிக்கடி முகத்தைத் துடைத்துக் கொள்வதைக் கண்டு இரக்கப்பட்டவர், “சுந்தரம் வந்தானா அண்ணே…” என்று கேட்டு விட்டார், தயாநிதி தம்பியை ஆழமாய் நோக்கி..
“அவன் எதுக்கு வந்தான்னு தெரியுமா..?” என்று கேட்டார்..
“தெரியும்ண்ணே.. என்னிடம் சொல்லி விட்டுத்தான் வந்தான்..” என்றார் கலைமதி சங்கடத்துடன்..
இப்போது ஈஸ்வரி பொங்கி அழுக ஆரம்பித்து விட்டாள்.. சாந்தா அவசரமாய் அறைக்கதவை அடைத்து விட்டு வந்தாள்.. ஈஸ்வரியின் கரம் பிடித்து ஆறுதல் கூறினாள்..
“அக்கா இங்க பாரு.. அழுது என்ன ஆகப் போகுது.. அழுகையை நிப்பாட்டு..”
“எனக்கு மனசு தாங்கலையே சாந்தா.. என் பேரன் முகத்திலதானே என் லட்சுமணன் முகத்தைப் பார்த்துக் கிட்டு இருக்கேன்.. ஆண்டவன் அதற்கும் வழிவிட மாட்டாரா..?”
சாந்தா மௌனம் சாதித்தாள்… கலைமதி அண்ணனிடம் வினவினாள்..
“நீங்க சுந்தரத்துக்கு என்ன பதில் சொன்னீங்க அண்ணே..”
“நான் என்னத்தைச் சொல்றதுன்னு நீயே சொல்லு.. பையனைப் பெத்தவங்க தயங்காம பொண்ணு கேட்கும் போது நாம என்ன செய்யறது..?”
“ஊர்மிளாவோட மனசில் என்ன இருக்கோ.. அதைக் கேட்காமல் எதையும் முடிவு பண்ணிடாதீங்க மாமா..” சாந்தா கூறினாள்..
“அதுக்கும் சம்மதம் இருக்கும்போலத் தெரியுதேம்மா..”
“என்னது..” என்று மற்ற மூவரும் ஒரே குரலில் கேட்க தயாநிதி, தானும் சுந்தரமும் மொட்டை மாடியில் நின்று கொண்டு இருந்தபோது கீழே நடேசனும், ஊர்மிளாவும் பேசிக் கொண்டிருந்ததை விவரித்தார்.. ஈஸ்வரியின் அழுகை நின்று விட்டது..
“என்னால் நம்பவே முடியலையே..” சாந்தா ஆச்சர்யத்துடன் கூறினாள்..
ஈஸ்வரி எதுவும் பேசவில்லை.. முகத்தை துடைத்துக் கொண்டாள்.. அவளது முகம் இப்போது தெளிவடைந் திருந்தது.. கணவரைப் பார்த்தாள்..
“அதனாலதான் பலராமனிடம் ஊர்மிளாவோட பெத்தவங்களை வரச் சொல்லி விட்டீங்களா..?”
“ஆமாம் ஈஸ்வரி.. நாளைக்கு அவங்க வந்ததும் அவங்ககிட்டயும் ஒரு வார்த்தை கேட்டு விடலாம்.. பெத்தவங்க இல்லையா…?”
“சரி.. வரட்டும் பேசி ஒரு முடிவுக்கு வாங்க…”
ஈஸ்வரியின் திடீர் அமைதியும் மாற்றமும் சாந்தாவை கவலை கொள்ளச் செய்தது.. பெண் மனம் பெண்ணறியும்..
“அக்கா உங்களுக்கு இதில் சம்மதமா..?”
“மருமகளே சரின்னு சொல்லியிருக்கு.. அதுவும் நடேசன் கிட்டவே சொல்லியிருக்கு.. இனிமே நான் பேச என்ன இருக்கு சாந்தா..? அதுக்கு இதுதான் சரின்னு பட்ட பின்னால் நாம பெரியவங்களா இருந்து செய்ய வேண்டியதைச் செய்து விடலாம்..”
அவள் எழுந்து சென்று விட்டாள்.. அந்த வினாடியி லிருந்து ஈஸ்வரி அதிகம் பேசவே இல்லை.. தன் போக்கில் வீட்டு வேலைகளைக் கவனித்தாள்.. மகளும், மருமகளும் கேட்பதற்கெல்லாம் ‘உண்டு, இல்லை’ யென்று ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னாள்.. பேரனை மட்டும் தன்னோடு வைத்துக் கொண்டாள்.. ஊர்மிளா இது எதையும் அறியாதவளாய் வளைய வந்தாள்..
தாடிக் கொம்பில் பலராமன் போய் சேர்ந்ததும் சத்திய வதியும் ஜனார்த்தனமும் வழக்கப்படி மகளைப் பற்றி விசாரித்தனர்.. பேரனைப் பற்றிக் கேட்டு மகிழ்ந்தனர்..
“பாலமுரளி எவ்வளவு சேட்டை பண்ணுகிறான் தெரியுமா..? கைக்குள் அடங்கி இருக்க மாட்டேன் என்கிறான்ம்மா.. நடேசன் மாமா தூக்கினால் மட்டும் அவர்கிட்ட எவ்வளவு சமத்தா இருக்கிறான் தெரியுமா..? எனக்கே மாமா மேல் பொறாமை வந்திருச்சு.. அவ்வளவு அட்டாச்மெண்ட்டா பாலமுரளி அவர்கிட்ட ஒட்டு கிறான்ம்மா…”
“அந்தத் தம்பி அங்கேதான் இருந்துச்சா..?”
“இல்லைம்மா.. நான் போன பின்னால்தான் வந்தார்.. என்னைப் பார்த்ததும் எனக்காக நாள் பூராவும் அக்கா வீட்டிலேயே இருந்தார்.. அக்காவும், அவரும் குட் பிரெண்ட்ஸ் தெரியுமா..?”
“அப்படியா.. ஊர்மிளாவின் மாமனார் மாமியார் நல்லா இருக்காங்களா…?”
“ம்ம்.. அப்பா, உங்களையும், அம்மாவையும் மாமா நாளைக்கு மேலக்காலுக்கு வரச் சொன்னார்.. ஏதோ முக்கியமாய் பேசணுமாம்..”
ஜனார்த்தனமும் சத்தியவதியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்..
“எதற்குன்னு சொன்னாராடா..?” ஜனார்த்தனம் வினவினார்..
“இல்லைப்பா.. ஆனால் கட்டாயம் உங்களை வரச் சொன்னார்..”
அதற்கப்புறமும் வெகுநேரம் நடேசனைப் பற்றியே பேசிக் கொண்டு இருந்துவிட்டு பலராமன் தூங்கிவிட சத்தியவதியும், ஜனார்த்தனமும் மறுநாள் மேலக்கால் போவதற்கான வேலைகளைச் செய்து விட்டுத் தூங்கினார்கள்..
மறுநாள் மகனிடம் வீட்டையும், தோட்டத்தையும், மாடுகளையும் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டுக் கிளம்பிச் சென்றனர்..
“வாங்க மச்சான்.. வாம்மா சத்தியவதி..” என்று சுரத்தில்லாமல் வரவேற்றார் தயாநிதி.. ஈஸ்வரி அதைக் கூட வாய் விட்டுச் சொல்லவில்லை..
மௌனமாய் தலையை மட்டும் வரவேற்கும் விதமாய் ஆட்டினாள்..
‘என்னவோ நடந்திருக்கிறது..’ என்று புரிந்து விட்டது ஊர்மிளாவின் பெற்றோர்களுக்கு… சத்தியவதி வாங்கிக் கொண்டு போன பழங்களையும், பிஸ்கெட் வகையறாக் களையும் ஈஸ்வரியிடம் கொடுத்துவிட்டு,
“ஊர்மிளா வேலைக்குப் போய் விட்டாளா..” என்று விசாரித்தாள்..
“ம்ம்..” என்றாள் ஈஸ்வரி.. ஜனார்த்தனத்தின் முகத்தை ஒரு தரம் பார்த்து விட்டு, “பேரன் எங்கே..?” என்றாள் சத்தியவதி..
“தூங்கறான்..” என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லிவிட்டு உள்ளே சென்று விட்டாள் ஈஸ்வரி..
‘என்னவாக இருக்கும்.. மாமியார் மருமகள் சண்டையோ..?’ என்று குழம்பியவாறு இருவரும் தயாநிதியின் முகத்தைப் பார்த்தார்கள்.. அவர் தயக்கத்துடன், “நம்ம நடேசனைத் தெரியுமில்லையா..?” என்று கேட்டார்…
ஜனார்த்தனத்தின் முகம் மலர்ந்தது…
“தெரியாமல் என்ன..? பலராமன் விடிய விடியத் தூங்கவேயில்லை.. நடேசன் புராணம்தான்.. நடேசனை அவ்வளவு பிடித்திருக்கு அவனுக்கு..”
உள்ளே காபிக் கலந்து கொண்டிருந்த ஈஸ்வரியின் கண்கள் கலங்கின.. மௌனமாக காபியை தம்ளர்களில் ஊற்றி எடுத்து வந்து கொடுத்தாள்..
“மதினி ஏன் என்னமோ மாதிரி இருக்காங்க அண்ணே” தாள மாட்டாமல் சத்தியவதி வினவினாள்..
தயாநிதி மனைவியை ஏறிட்டார்.. அவள் பதில் சொல்லாமல் உள்ளே போகத் திரும்ப தயாநிதி “ஈஸ்வரி” என்று கடினமாக அழைத்தார்.. நின்று திரும்பிப் பார்த்தாள் அவள்..
“இப்படி வந்து உட்காரு…”
பேசாமல் அவள் வந்து உட்கார்ந்தாள்.. ஜனார்த்தனம் புரியாமல் விழிக்க,
“மச்சான் நடேசனோட அம்மா பொண்ணு கேட்கிறாங்க..?” என்று படாரென்று சொல்லி விட்டார்..
“யாருக்கு பொண்ணு கேட்கிறாங்க..?”
“நடேசனுக்குத்தான்..”
“யாரை..?” புரியாமல் கேட்டார்கள் இருவரும்.. தயாநிதி விட்டத்தைப் பார்த்துக் கொண்டே பதில் கூறினார்..
“உங்க பெண் ஊர்மிளாவை…”
“என்னது..”
ஜனார்த்தனத்திற்கும் சத்தியவதிக்கும் நம்பவே முடிய வில்லை.. நடேசன் அவன் வீட்டிற்கு ஒரே மகன்.. அவனுக்கு எப்படி மறுமணம் செய்யும் பெண்ணை அதுவும் குழந்தையுடன் இருக்கும் பெண்ணை மணம் முடிக்க விரும்புகிறார்கள்..?
ஈஸ்வரியின் பாராமுகத்திற்கு பொருள் விளங்கியது அவர்களுக்கு..
Reviews – Kathirudhen Katriniyle / காத்திருந்தேன்… காற்றினிலே…
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.