Chapter 19

0Shares

ஜனார்த்தனத்திற்கும் சத்தியவதிக்கும் மறுப்பேதும் இல்லை என்று தெரிந்தவுடன் மனம் உடைந்து போனாள் ஈஸ்வரி.. அதை அறியாதவர்களாய் அவர்கள் உற்சாகத் துடன் பேசிக் கொண்டிருந்தார்கள்..

“அவங்க உங்ககிட்ட நேரா வந்து பொண்ணு கேட்டாங்களா அண்ணே…”

“இல்லம்மா.. நம்ம செவ்வந்தியோட புருசன் தான் நடேசனோட தாய் மாமன்.. அவன்தான் வந்து அவங்க பெண் கேட்டதாச் சொன்னான்..”

“நம்ம ஊர்மிளா கிட்ட சம்மதம் கேட்டிங்களா.. இல்லை நாங்க பேசி சம்மதம் வாங்கணுமா..?”

ஈஸ்வரியின் விழிகளில் ஏளனம் தெரிந்தது.. தயாநிதி விழியால் மனைவியை எச்சரித்தவாறு,

“அவங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டிருந்ததைக் கேட்டப்போ…”

“யாரு ரெண்டு பேரும் அண்ணே…”

“நடேசனும், ஊர்மிளாவும்மா..”

“ஓகோ அவங்க என்ன பேசிக்கிட்டாங்க..”

தயாநிதி சொன்னார்.. சத்தியவதியின் முகத்தில் நிம்மதி வந்தது.. சற்று நேரத்தில் அவர்கள் வந்திருக்கும் செய்தி அறிந்து செவ்வந்தியும் சுந்தரமும் முதலில் வந்தனர்.. கலைமதியும் சாந்தாவும் பின்னால் வந்தனர்..

“எப்போ வந்தீங்க மதினி…” சாந்தா சம்பிரதாயமாய் கேட்டாள்..

“இப்பத்தான் வந்தோம்.. அண்ணன் நல்ல செய்தி சொல்றாரு.. செவ்வந்தியோட வீட்டுக்காரர்தான் இந்தப் பேச்சை ஆரம்பித்து வைத்தாராமே..” என்று சாந்தாவிடம் பேச்சை ஆரம்பித்து செவ்வந்தியின் முகத்தைப் பார்த்து சத்தியவதி பேசி முடிக்க செவ்வந்தி முகத்தில் எந்தவித உணர்ச்சியும் காட்டாமல் சிலை போல் நின்றாள்..

ராமையா, சுப்புத்தாய் இருவரையும் சுந்தரம் அழைத்து வர எல்லோரும் கலந்து பேசினார்கள்.. மாலை நெருங்கியது..

“இப்ப நடேசனும் ஊர்மிளாவும் வந்திருவாங்க.. நாம பேசி முடிவு பண்ணிட்டோம்ங்கிறத அவங்ககிட்ட சொல்லிடலாம்..” என்றார் தயாநிதி.. சாந்தாவையும், செவ்வந்தியையும் தவிர மற்றவர்கள் ஆமோதித்தனர்.. ஈஸ்வரியும் சுபத்ராவும் இடிவிழுந்தது போல் இடிந்து போய் அமர்ந்து இருந்தனர்.. வாசலில் கார் சத்தம் கேட்டது.. நடேசன் ஏதோ சொல்ல ஊர்மிளா சிரித்தபடி உள்ளே வந்தாள்.. பெற்றோரைக் கண்டதும்,

“அம்மா, அப்பா எப்ப வந்தீங்க..” என்று முகம் மலர அவர்களிடம் சென்றாள்.. பின்னாலேயே தொடர்ந்து வந்த நடேசன் தன் பெற்றோரைக் கண்டதும் வியந்தான்..

“என்னப்பா.. நீங்களும் அம்மாவும் இங்கே இருக்கீங்க.. ஏதும் விசேஷமா..? எல்லோரும் கூடிப் பேசிக்கிட்டு இருக்கீங்களே..”

“எல்லாம் உன் கல்யாண விஷயம்தாம்ப்பா…” என்றார் ராமையா..

“என் கல்யாணமா.. ஊர்மிளா உங்ககிட்ட சொல் லிட்டாளா..?” என்று ஊர்மிளாவை செல்லமாய் அவன் முறைக்க அவள் கலகலவென்று சிரித்தபடி மறுத்தாள்..

“ஐயோ.. நான் ஒன்றும் சொல்லலைப்பா.. இவங்களுக்கே விசயம் தெரிந்து பேசுகிறார்களோ என்னவோ..”

“அம்மா.. நான் உன்னிடம் சொல்லணும்னு நினைச்சேன்.. நான் ரொம்ப நாளாவே..” என்று தாயிடம் நடேசன் மென்று விழுங்க,

“காதலிக்கிறார்…” என்று சிரித்தாள் ஊர்மிளா..

அங்கே பெரியவர்களிடம் தர்ம சங்கடமான மௌனம் நிலவியது.. ஊர்மிளா அதைக் கவனத்தில் போட்டுக் கொள்ளாமல் தொடர்ந்தாள்..

“அத்தை.. உங்க மகனை நீங்க கவனிக்கிறதே இல்லை.. அவர் எவ்வளவு நாளா சின்சியரா காதலிக் கிறேன்னு பினாத்திக்கிட்டு இருக்கார் தெரியுமா..? நீங்க மட்டும் கவனிச்சிருந்தால் எப்பவோ கல்யாணப் பேச்சை ஆரம்பித்திருப்பீங்க.. இப்ப மட்டும் எப்படித் தெரிந்தது அத்தை..?”

ஊர்மிளா சுப்புத் தாயிடம் உற்சாகமாய் வினவ அவள் புன்னகைத்தாள்..

“எல்லாம் ஓர் யூகம்தான்ம்மா.. நீ என் மகனைக் கவனிச்சுக்குவங்கிற நம்பிக்கையில்தான் இந்தப் பேச்சை ஆரம்பித்தேன்ம்மா…”

“இது என்ன அத்தை இப்படிச் சொல்லிட்டிங்க.. உங்க மகன் எனக்கும் என் மகனுக்கும் எவ்வளவோ செய்திருக்கார்.. பதிலுக்கு அவரை நல்ல முறையில் கவனிக்க மாட்டேனா என்ன..?”

தயாநிதி தொண்டையைச் செறுமிக் கொண்டார்..

“அப்போ கல்யாணத்துக்கு நாள் குறிச்சிரலாமா..?”

மற்றவர்கள் தலை அசைக்க ஊர்மிளா வினவினாள்..

“பொண்ணைப் பார்க்காமல் பொண்ணு வீட்டுக் காரங்களைக் கேட்காமல் நீங்களாவே நாள் குறிப்பதா..?” 

சுப்புத்தாய் புரியாமல் விழித்தாள்..

“பொண்ணு பார்க்கிறதா..? அதுதான் நீ இருக்கிறாயேம்மா..?”

“நான் பார்த்தால் மட்டும் போதுமா அத்தை.. நீங்களும் பார்க்க வேண்டாமா..? என் மேல் உங்களுக்கு இருக்கிற நம்பிக்கைக்கு ரொம்ப நன்றி அத்தை.. ஆனால் நீங்கள், மாமா ரெண்டு பேரும் வரப்போகிற மருமகளை ஒரு தடவைப் பார்த்துவிட்டு அப்புறம் அவங்க அப்பாம்மா கிட்டப் பேசி நாள் குறித்து விடறது நல்லது அத்தை..”

ஊர்மிளா பேசப்பேச செவ்வந்தியின் முகம் ஒளிர்ந்தது. சாந்தாவின் முகத்தில் கறுமை மாறியது.. ஈஸ்வரி நிமிர்ந்து உட்கார்ந்தாள்.. சுபத்ரா தன் அண்ணியின் முகத்தை அன்புடன் பார்த்தாள்.. மற்றவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.. அவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.. நடேசன் வெட்கத்துடன் வாசலைப் பார்த்தான்.. செவ்வந்தி சாந்தாவை ஓர் தரம் பார்த்துக் கொண்டு வாய் திறந்தாள்.. அவளது ஒவ்வொரு வார்த்தையும் மிகக் கவனமாக வெளிவந்தது..

“ஊர்மிளா நடேசனுக்கு வரப்போகிற பொண்ணு நல்லவளா இருக்கணும்னு தான் நாங்க எல்லோரும் ஆசைப் படறோம்.. உன்னை மாதிரி படிச்ச பெண்ணா அழகும், அறிவும் இருக்கிற பொண்ணா இருக்கணும்னுதான் நாங்க கேட்கிறோம்..”

ஊர்மிளாவைத்தான் மணப்பெண் என்று அவள் குறிப்பிடவில்லை.. ஆனால் ஊர்மிளாவைத் தவிர வேறு ஒரு பெண் என்றும் அவள் தெரிவிக்கவில்லை.. உண்மை அறியாமல் வாய் விட அவள் தயாராக இல்லை…

செவ்வந்தி கெட்டிக்காரி.. ஒரு வகையில் ஆழ்ந்த அறிவாளி.. மனிதரை எடை போடுவதில் அவள் கணக்கீடு என்றுமே பிசகியதில்லை.. ஊர்மிளா லட்சுமணனை மறந்து இன்னொரு ஆணை கனவில் கூட நினைத்துப் பார்க்க மாட்டாள் என்பது அவளது அனுமானம்…

அதே நேரத்தில் நடேசன் சம்மதம் கேட்க ஊர்மிளா ‘நான் சம்மதித்தால் போதுமா’ என்று கூறியிருக்கிறாள்.. அது ஏன்..? எதற்கு..? என்ற கேள்விக்கு தெளிவான விடை கிடைக்கவில்லை..

இவை எல்லாவற்றிற்கும் விடை அளிக்க முடிவு கட்ட ஊர்மிளாவாலும், நடேசனாலும் மட்டுமே முடியும்.. எனவே இனியும் அமைதி காக்காமல், வாய்திறந்து ஊர்மிளாவின் வாயைத் திறக்க வைப்பதே உசிதம் என்ற செவ்வந்தி முடிவெடுத்து செயல்படுத்த ஆரம்பித்தாள்..

செவ்வந்தி மிகச் சாதுர்யமாய் உரையாடினாள்.. இரண்டு தரப்பிற்கும் பொதுவானதாக ஒவ்வொருவருக்கும் சார்புடையதாக தோன்றும் வகையில் அவள் பேசினாள்.. ஊர்மிளா இலகுவாகப் பதில் கொடுத்தாள்..

“இது என்ன சித்தி இப்படிக் கேட்கறீங்க.. நடேசனுடைய நல்ல மனத்திற்கு என்னைவிட பெட்டரான பொண்ணே கிடைச்சிருக்கே…”

செவ்வந்தி எல்லோரையும் ‘அட முட்டாள்களா…’ என்று ஓர் பார்வை பார்த்தாள்.. ராமையா, சுப்புத்தாய் இருவரின் முகத்திலும் குழப்பம் நிலவியது.. ஜனார்த்தனம், சத்தியவதியின் முகங்களில் ஏமாற்றம் தென்பட்டது.. தயாநிதி, ஈஸ்வரி ஆகியோரின் முகங்களில் நிம்மதி கலந்த பரவசம் தோன்றியது.. கலைமதி, சுந்தரம் இருவரின் முகத்திலும் வியப்பு உதயமானது..

முகம் மாறாமல், இதுதான் நடக்கும் என்பதை அறிந்தவர்களாய் சாந்தாவும், செவ்வந்தியும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்..

ஊர்மிளாவிற்கும் நடேசனுக்கும் உற்சாகம் மட்டுமே இருந்தது..

0Shares

Reviews – Kathirudhen Katriniyle / காத்திருந்தேன்… காற்றினிலே…

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link