Chapter 22
செவ்வந்தியும் சாந்தாவும் ஒரு இடத்தில் ஒன்று கூடி விட்டால் போதும்.. எப்பேர்ப்பட்ட மன்னாதி மன்னரை யும் மண்ணைக் கவ்வ வைத்து விடுவார்கள்.. இவர்களது ஜாடைப் பேச்சுக்கள் தங்களைப் பற்றித்தான் என்று தெரிந்தாலும் எதிராளி வாயே திறக்க மாட்டாள்.. ஏனென்றால் இவர்கள் இருவரின் பெயரும் அவ்வளவு பிரசித்தி பெற்றருந்தது.. ஊர்மிளாவின் கல்யாணத்தில் இவர்கள் ‘கலக்கிய கலக்கல் இன்றளவும் ஊர்மிளாவின் உறவினர்களால் பேசப்படுகின்றது..’ அப்பேர்ப்பட்ட பெண்மணிகள் இருவரும் நடேசனுடன் ஊர்மிளா சேர்ந்து காரில் வேலைக்குப் போய் வருவதைப் பற்றி ஓர் சொல் சொல்லவில்லை.. அவர்களின் நெருக்கமான பழக்கம் கண்டு நடேசனின் தாயே பெண் கேட்க முனைந்தபோது சொந்த நாத்தனார் என்ற போதும் செவ்வந்தி மௌனம் சாதித்தாள்.. சாந்தாவோ கட்டிய கணவனிடம் கூட சந்தேகப்பட்டு எந்த வார்த்தையும் கூறவில்லை…
பெருந்தன்மை மிக்க தயாநிதியும் முற்போக்கு சிந்தனை கொண்ட சுந்தரமும் சூழ்நிலையால் நடேசனும் ஊர்மிளாவும் காதலிப்பதாக நினைத்தனர்.. அதை இந்த இரு பெண்களும் துளிக்கூட நம்பவில்லை..
இதுதான் இறைவனின் படைப்பில் நாம் காணும் அதிசயம்.. முள் போன்ற வெளித்தோற்றமுடைய பலாப் பழத்தின் தோலைப் படைத்தவன் உள்ளே இனிப்பான பலாச்சுளைகளை வைத்தான்.. கொட்டுகின்ற தேனிக்களின் கூட்டில் இனிப்பான தேனை வைத்தான்.. செவ்வந்தியும், சாந்தாவும் இவை போலத்தான்.. வெளியே பார்த்தால் தெரியும் தன்மை அவர்கள் மனதில் இல்லை..
ஊர்மிளாவைப் பற்றி இருவருமே மிக உயர்வாக நினைத்தார்கள்.. அருமையாக நினைத்தார்கள்.. பெருமையாக நினைத்தார்கள்…
அடுத்த நாளே அபிராமியின் வீட்டுக்கு அனைவரும் பெண் கேட்டுப் போனார்கள்.. அவர்களது வழக்கமான டாடா சுமோவில் போய் மதுரையில் இறங்கினார்கள்..
“ஏண்ணே அபிராமியின் வீடு இவ்வளவு பெரிசா..? பரவாயில்லையே.. நடேசன் பிடிச்சாலும் பிடிச்சான் புளியங்கொம்பா பிடிச்சிருக்கான்..” என்று ஆச்சரியப்பட்ட படி செவ்வந்தி டாடா சுமோவில் இருந்து இறங்கினாள்..
“ஏலேய் சுந்தரம்.. உன் பெண்டாட்டியை வாயை அடக்கி வை.. எங்க நடேசன் ஒன்னும் புளியங்கொம்பைத் தேடி வளைக்கலை..அதுவா என் மகனின் அழகையும், அறிவையும் கண்டு வளைஞ்சு வருது.. அதை விட்டு விட்டு என் மகன் தேடி அலைஞ்சான்னு பட்டம் கட்டினால் நம்ம சும்மா இருக்க மாட்டேன்.. சொல்லி வை…” சுப்புத்தாய் பொரிந்தாள்..
“ஆமாம்.. உங்க தங்கச்சி புருசன் சொல்லி வைச்சா உடனே சரிங்க மாமான்னு அடக்க ஒடுக்கமா உங்க தங்கச்சி கையைக் கட்டி வாயைப் பொத்திக்கப் போறது போல சுப்புத்தாயி அக்கா தம்பி கிட்ட புலம்புதே..” சாந்தா கலைமதியின் காதோடு கூறினாள்..
அதற்கேற்றார் போல் சுந்தரம் சாதாரணமாய் திரும்பி யதார்த்தமாய் ஒரு பார்வை மனைவியைப் பார்த்து வைக்க அவள் சுட்டெரிக்கும் சூரியன் ஆகிப் போனாள்..
“என்ன பார்வை ஒரு மாதிரியா இருக்கு..? என்ன விசயம்..? அக்கா போட்டுக் கொடுத்ததும் தம்பி பாயத்துடிக்கறீங்களோ.. பெரிய சீமையில் இல்லாத சம்பந்தம்… எங்க அண்ணன் மருமகள் ஊர்மிளா இல்லைன்னா இந்த சம்பந்தம் உங்க அக்காவுக்கு வாய்ச்சிருக்குமா..? சும்மா வெட்டி வாய் பந்தல் போட்டுக்கிட்டு இருந்தால் தாய்மாமன் சொந்தம் கொண்டாடிக்கிட்டு நீங்க முன்னாடி நிற்க முடியாமல் செய்திருவேன் ஜாக்கிரதை.. உங்க அக்காவுக்கு இந்த பவிசெல்லாம் புதுசு.. எனக்கு அப்படியில்லை.. என் பிறப் பென்ன, வளர்ப்பென்ன.. உங்களுக்கு வாக்கப்பட்டு இதுக கிட்ட எல்லாம் உறவு முறை கொண்டாட வேண்டி யிருக்கு.. காலக் கொடுமை…”
சுந்தரம் பல்லைக் கடித்தார்..
“அடியேய்.. ஊர் விட்டு ஊர் வந்திருக்கிறோம்.. கொஞ்சம் மலை ஏறாமல் கூட வா.. அந்தப் பொண்ணு பாவம் தெரியாத்தனமாய் நம்ம நடேசனை காதலித்து வைத்திருக்கிறது. நம்ம குடும்ப வரலாறு தெரிஞ்சுச்சுன்னு வை.. அவளிருக்கிற திசை பக்கமே திரும்பிப் பார்க்காது.. ஒரு காதலைப் பிரிச்ச பாவம் உனக்கு வேணாம்டி.. கை எடுத்துக் கும்பிடறேன்.. பொறுத்துப் போடி தாயே…”
சுப்புத்தாய் தம்பியின் முதுகில் ஒரு போடு போட்டாள்..
“ஏண்டா.. எருமை மாடு மாதிரி வளர்ந்திருக்கிறாயே.. பொண்டாட்டியை அடக்கி வைக்க துப்பு இல்லை.. கையெடுத்துக் கும்பிடு போடறான்.. எனக்கு அசிங்கமா இருக்குடா..”
“அக்கா.. இதுக்கு அசிங்கத்தைப் பார்த்தே.. இந்த வீடு பொண்ணு பார்க்கிற வீடா இல்லாமல் பஞ்சாயத்து பண்ணி வைக்கும் வீடா மாறி விடும்.. ஒத்தைப் பிள்ளையைப் பெத்து வைச்சிருக்க.. அவனுக்கு நல்லபடியா கல்யாணம் நடக்கணும்.. நீ இதையெல்லாம் கண்டுக்காதே…”
“எப்படியோ போய்த் தொலை..” என்று தலையில் அடித்துக் கொண்டு கூறினாள் சுப்புத்தாய்..
செவ்வந்தி வெகுண்டு திரும்ப அந்த போர்டிகோ போர்க்களமாக ஆகிவிடும் அபாயம் உருவானது.. நல்லவேளையாக அபிராமியின் அப்பா தணிகைநாதன் கைகூப்பி வரவேற்றபடி வந்து விட்டார்..
“வாங்க வாங்க.. பிரயாணம் சௌகர்யமாய் இருந்ததா..? உள்ளே வாங்க.. தெய்வநாயகி இங்கே வா…”
உள்ளேயிருந்து பெண்ணின் தாயார் தெய்வநாயகி விரைந்து வந்தாள்.. அவள் உடுத்தியிருந்த பட்டுச்சேலையின் அகலமான கெட்டிக்கரையையும் கைகளில் குலுங்கிய தங்க வளையல்களின் பருமனையும் கண்டு சாந்தாவும், செவ்வந்தியும் கண்களால் ‘பார்த்தாயா’ என்று வினவிக் கொண்டார்கள்..
அனைவரும் உள்ளே சென்று அமர்ந்ததும் அபிராமி காபி தம்ளர்களுடன் வந்தாள்.. மாநிறம், ஒடிசலான உடல், இடுப்பு வரை இருந்த அடர்த்தியான தலைமுடி இவற்றுடன் இருந்தவளை ‘சராசரி’ என்று ஒதுக்க முடியாமல் செய்தது அவளின் பெரிய காதுவரை அகன்ற கருவிழிகள்.. நடேசன் அவள் கண்ணோடு கண் கலக்க அவளும் அவனுக்கு பதிலுக்கு பார்வைகளை அனுப்பி வைத்துக் கொண்டி ருந்தாள்..
தணிகைநாதன் பேச ஆரம்பித்தார்..
“எங்களுக்கு எல்லாமே திருப்தி.. ஆனால் மாப்பிள்ளை கல்யாணத்துக்கு அப்புறம் எங்க பொண்ணை கிராமத்துக் குத்தான் வரணும்ன்னு கண்டிச்சு சொல்லிட்டாராம்.. அதுதான் சங்கடமாயிருக்கு..”
“இதில் சங்கடப்பட என்ன இருக்கு..? கிராமத்தில் இருக்கிறவங்க மனுசங்க இல்லையா..? டவுனில் உங்க வீட்டிலே இருக்கிற வசதிகள் எல்லாம் எங்க கிராமத்து வீட்டில் இருக்கு.. சொத்து சுகம் குறையாமல் ராணி மாதிரி உங்க பொண்ணு இருக்கலாம்.. அதை விட்டு விட்டு எதையோ தப்பாச் சொல்லிட்ட மாதிரி பேசறீங்க.. காலக் கொடுமை..” என்றாள் செவ்வந்தி..
ஆரம்பிச்சுட்டாளா..? என்று சுந்தரம் தலைமேல் கை வைத்துக் கொள்ள சாந்தா அடுத்து ஆரம்பித்தாள்..
“எல்லா கண்டிசனுக்கும் சம்மதித்துத்தானே பெண் பார்க்க வரச் சொன்னீங்க.. இப்ப புதுசா பேசுற மாதிரி பேச்சை ஆரம்பிக்கறீங்க.. இது எல்லாம் எங்கள் குடும்பத்தில் பழக்க மில்லை..”
‘எங்களுக்கு மட்டும் பழக்கமா..?’ என்று கேட்கத் துடித்த நாவைக் கட்டுப்படுத்திக் கொண்டு தெய்வநாயகி கணவனைப் பார்த்தாள்.. அதற்குள் அபிராமி முந்திக் கொண்டாள்..
“அப்பா… கல்யாணம் ஆனபின்னால் ஹஸ்பெண்ட் வீட்டில் இருந்தால்தான் எனக்கு மரியாதை.. நானும் அதைத்தான் ஆசைப்படறேன்.. அதனால் இனி இந்தப் பேச்சு வேண்டாமே ப்ளீஸ்…”
முளையிலேயே பிரச்சனை கிள்ளப்பட்டு விட அபிராமி, நடேசனின் திருமணத்தை நிச்சயம் செய்துவிட்டு வெற்றிகரமாய் அந்தக் குடும்பக் குழு திரும்பி வந்தது…
Reviews – Kathirudhen Katriniyle / காத்திருந்தேன்… காற்றினிலே…
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.