Chapter 25
லட்சுமணனின் வீட்டு மொட்டை மாடியிலிருந்து சீரியல் பல்புகளால் ஜொலிக்கும் நடேசனின் வீட்டைப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஊர்மிளா…
இதுபோல்தான் அவளை பெண் அழைத்துக் கொண்டு வரும்போது லட்சுமணனின் வீடும் சீரியல் பல்புகளால் ஜொலித்தது.. அவளது லட்சுமணன் அவளைப் பார்க்க ஜமுக்காளம் கொடுக்கும் சாக்கில் வந்தான்.. இன்று அவனில்லை.. அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது.. மாடிப்படியில் யாரோ ஏறிவரும் ஓசை கேட்டது.. கண்களைத் துடைத்துக் கொண்டுத் திரும்பிப் பார்த்தாள்.. செவ்வந்தி வந்து கொண்டிருந்தாள்..
“அடேங்கப்பா.. டவுனில் இருந்தா அவ தலையில என்ன கொம்பா முளைச்சு இருக்கு..? அவ பார்வையும், பேச்சும், பவிசும் என்ன அலட்டு அலட்டறா தெரியுமா..? மதுரைக்காரிக்கு இந்த மேலக்கால் செவ்வந்தியைப் பத்தித் தான் இன்னும் தெரியலை.. என்னமோ அவதான் மாப்பிள்ளையைப் பெத்தது மாதிரி ராங்கி காட்டறா.. கலக் கொடுமை…”
“யாரைப் பத்தி சொல்றீங்க சித்தி…?”
“அவதான் அந்த அலட்டல் அலங்காரி, மதுரைச்சீமை அகங்காரி தெய்வநாயகியைச் சொல்றேன்.. என்னமோ இவ கிட்டத்தான் பட்டும், பனாரஸும் இருக்கிற மாதிரி இதுவரைக்கும் பத்துத் தடவை சேலையை மாத்தி சோக்குக் காட்டறா மகராசி.. கழுத்திலயும், கையிலயும் இருக்கிற நகைகளை அள்ளிப் பூட்டிக்கிட்டு வீடியோவுக்கு விழுந்து விழுந்து போஸ் கொடுக்கிறா.. கல்யாணம் இவளுக்கா இல்லை இவள் மகளுக்கான்னே தெரியலை.. காலக் கொடுமை..”
“தெய்வநாயகி அம்மாவை சொல்கிறீர்களா சித்தி.. அவர்கள் எப்போதுமே பளிச்சென்று டிரஸ் பண்ணிக் கொண்டு இருப்பார்கள்.. அது அவர்களது இயல்பு சித்தி..”
“அதுக்காக..? ஆடுகிற ஆட்டத்தை அவள் வீட்டில் இல்ல ஆட வேண்டும்.. இந்த செவ்வந்தியோட நாத்தனார் வீட்டிலயா ஆட வேண்டும்..?”
“அந்த வீட்டில்தானே அவங்க மகளைக் கொடுக்கப் போறாங்க..?”
“மகளைத்தானே கொடுக்கப் போறா..? என்னமோ மகனைப் பெத்த மாதிரி அதிகாரம் பண்ணிக்கிட்டு இருக்கா?”
“ஏன் என்ன பண்ணினார்கள்..?”
“தலையை வலிக்குது.. காபி கொடுன்னு கேட்கிறா..?”
“பாவம்.. தலையை வலித்திருக்கலாம்.. கேட்டிருப் பார்கள்.. காபிதானே.. கொடுக்கச் சொல்லயிருக்கலாமே..”
“அதை யார் கிட்ட கேட்டாத் தெரியுமா..?”
“யார்கிட்ட கேட்டாங்க…?”
“என்கிட்டக் கேட்கிறா.. எனக்கு பத்திக்கிட்டு வந்திருச்சு.. நல்லா நாலு கேள்வி கேட்டு விட்டுத்தான் வர்றேன்.. யாருகிட்ட ஆட்டம் காட்டறா? காலக் கொடுமை..”
“ஐயையோ.. என்ன கேள்வி கேட்டிங்க சித்தி…”
“நீ ஏம்மா பதட்டப்படறே..? ‘ஏம்மா உனக்கு கையிருக் கில்ல.. காலிருக்கில்ல.. அந்தா இருக்கிற அடுப்பங்கரையில் காபி வைச்சிருக்கு.. போய் ஊத்திக் குடி.. காணாததை கண்டது மாதிரி காபிக்கு இந்தப் பறப்பு பறக்கிற’ன்னு சொன்னேன்.. அந்தப் பொம்பள மூஞ்சி சூம்பிப் போயிருச்சு..”
“அடக்கடவுளே.. அவங்க காபி குடிச்சாங்களா இல்லையா…?”
“யாருக்குத் தெரியும்.. ரோசக்காரின்னா இழுத்துப் போர்த்திக்கிட்டுப் படுத்திருக்கணும்.. இவள் வெட்க மில்லாமல் வேற சேலையை மாத்திக்கிட்டு நலங்கு வைக்க முதல் ஆளா வந்து நிற்கிறாள்.. எல்லாம் காலக் கொடுமை..”
“சித்தி இது அவங்க மகளோட கல்யாணம்.. பிரச்னை பண்ண வேண்டாம்ன்னு நினைத்திருக்கலாம் இல்லையா..?”
“என்னத்தையோ நினைச்சிட்டுப் போகட்டும்.. நமக்கென்ன..? நான் வந்த வேலையை விட்டு விட்டு ஊர் கதையை பேசிக்கிட்டு இருக்கேனே.. ஆமாம் ஊர்மிளா.. நீ ஏன் மாடியிலேயே முடங்கிக்கிட்டு இருக்கிற..? நடக்கிறது உன் சிநேகிதங்களோட கல்யாணம்.. பொண்ணு அழைக்கவும் வரமாட்டேன்னு சொல்லிட்ட.. அங்க நலங்கு ஆரம்பிக்கப் போறது.. இதுக்கும் வராமலிருந்தால் என்ன அர்த்தம்..?”
“இல்லை சித்தி.. முரளிக்கு கூட்டம்ன்னா அலர்ஜி..”
“யாருக்கு உன் மகனுக்கா..? அவன் வீட்டிலயா இருக்கான்..? அப்பவே ஈஸ்வரி மதினி பேரனை இடுக்கிக்கிட்டு கல்யாண வீட்டுக்கு வந்திருச்சு.. அங்க இருக்கிற அத்தனை பேரோடும் உரையாடிக்கிட்டு இருக்கான் உன் புள்ள..”
“அப்படியா..?” சுரத்தில்லாமல் கூறினாள் ஊர்மிளா..
“இப்ப எதுக்கு உன் முகம் வாடிக் கிடக்கு..? லட்சுமணன் நினைவு வந்திருச்சா..?” செவ்வந்தி இதமாய் கேட்க, என்னவென்று வாய்விட்டுச் சொல்ல முடியாமல் இதயத்தைத் துளைக்கும் சோகத்தை வாய் விட்டு அழுது கொட்டித் தீர்த்து விட்டாள் ஊர்மிளா..
தோளில் சாய்ந்து கதறியவளை ஆதரவாய் அணைத்துத் தட்டிக் கொடுத்த செவ்வந்தி..
“அழுதுவிடும்மா… மனப்பாரம் குறையும்.. அழுது முடித்த பின்னால் முகத்தைக் கழுவி தலை சீவி புடவை மாற்றிக் கிட்டு என் கூட கிளம்பிவா.. ஊருக்குள்ள விசேஷம் நடக்கிறப்போ தனியாக் கிடந்து பழசை நினைச்சுக்கிட்டு உட்காரக் கூடாது..” என்று கண்டிப்புடன் கூறினாள்..
“வேணாம் சித்தி.. எனக்கு மனம் சரியில்லை…”
“ஏன் சரியில்லை..?” என்று மாடிப்படியிலிருந்து குரல் கேட்டது.. திரும்பிப் பார்த்தனர்.. நடேசன் நின்று கொண்டிருந்தான்..
ஊர்மிளா அவசரமாய் முகத்தைத் துடைத்துக் கொள்ள அவன் ஊர்மிளாவை முறைத்துக் கொண்டு அருகில் வந்தான்..
“இங்கே என்ன பண்ணிக்கிட்டு இருக்க..?”
“இல்லை.. எனக்கு ஒரே தலைவலி.. அதுதான் சித்தி வந்தாங்க..” ஊர்மிளா உளறிக் கொட்டி கிளறி மூடினாள்..
“அப்போ சரி.. உன் தலைவலி சரியான பின்னால் நானும் அபிராமியும் கல்யாணம் பண்ணிக் கொள்கிறோம்.. அத்தை போய் பொண்ணு வீட்டை பேக்கப் பண்ணுங்க..”
“நிஜமாவாடா சொல்றே..?” செவ்வந்தி உற்சாகமாய் தெய்வநாயகியை விரட்டத் தயாரானாள்..
“ச்சு.. நல்ல காரியம் நடக்கப் போகிறது.. அபசகுணமாய் இது என்ன பேச்சு..?”
“தெரியுதில்ல.. அப்பக் கிளம்பி கல்யாண வீட்டுக்கு வா..”
“நடேசன்..” ஊர்மிளா தயங்கினாள்..
“அங்கே யாராவது எதையாவது சொல்லி விட்டால்…?”
“இப்படிப் பேசுவது நீதானா..? எந்தக் காலத்தில் இருக்கிற..? நீ சுமங்கலி.. என் லட்சுமணன் வாழ்ந்துகிட்டுத் தான் இருக்கான்.. இப்படி கிறுக்குத்தனமாய் எதையாவது பினாத்திக்கிட்டு இருந்தால் எனக்கு கெட்ட கோபம் வந்துவிடும்.. கிளம்பு…” நடேசன் அதட்டினான்..
“அடியாத்தே.. ஏண்டியம்மா இந்தப் பயத்தாலா வராமல் இருந்த..? வாதாயி.. நீ நடந்து வர்ற பாதையில பூ மலரும் கண்ணு.. உன்னை நீயே தாழ்த்தி நினைக்கலாமா..? காலக்கெடுமை..”
செவ்வந்தியும் நடேசனும் ஊர்மிளாவை அதட்டி மிரட்டி கூட்டிக் கொண்டு போயினர்.. கல்யாண வீட்டில் நலங்கு ஆரம்பிக்கப் போகும் தருணம் அவர்கள் உள்ளே நுழைந்தனர்.. அபிராமியின் முகம் தோழியைக் கண்டதும் மலர்ந்தது.. அவள் அருகில் அழைக்கத் தட்ட மாட்டாத வாளாய் ஊர்மிளா அவள் அருகில் சென்று நின்றாள்.. அவள் பயந்தது போலவே நடந்தது.. கல்யாண வீடு களேபர வீடு ஆனது..
Reviews – Kathirudhen Katriniyle / காத்திருந்தேன்… காற்றினிலே…
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.