Chapter 27

0Shares

“ஹலோ நான்தான் நெடுஞ்செழியன்.. தர்மபுரியி லிருந்து மாற்றலாகி வந்திருக்கிறேன்..” ஊர்மிளாவின் முன் கரம் நீட்டி அவன் சொன்னான்..

“மாற்றல் வாங்கிட்டு வந்திருக்கீங்கன்னு சொல்லுங்க” என்றாள் அபிராமி..

நீட்டிய அவனின் கரங்களைப் புறக்கணித்து ‘வணக்கம்’ சொன்ன ஊர்மிளா,

“உங்க நேட்டிவ் தர்மபுரியா..?” என்று வினவினாள்..

“ஊஹூம்.. இந்த சங்கத் தமிழ் வளர்த்த மதுரை தான் சாருக்கும் சொந்த ஊர்.. யூனியனிஸ்ட்.. மேலிடத்தோட மோதினார்.. தர்மபுரிக்கு தூக்கி அடிச்சிட்டாங்க.. இப்பத் தான் சொந்த ஊருக்குத் திரும்பி வருகிறார்..” அபிராமி விளக்கினாள்..

“ஏண்டி அவர்கிட்ட கேள்வி கேட்டால் நீ பதில் சொல்கிறாயே.. எப்படி? உனக்குத் தெரிந்தவரா..?” 

“நான் இந்த ஆபிஸிற்குத் தெரிந்தவன்.. ‘யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே’ங்கிற மாதிரி நான் வருவதற்கு முன்னாலேயே என்னைப் பற்றிய செய்திகள் வந்திருக்கும்..”

நெடுஞ்செழியன் சிரித்தபடி கூறிவிட்டு ஊர்மிளாவின் வலப்பக்கம் இருந்த இருக்கையில் அமர்ந்தான்.. போன வாரம் வரை அந்த சீட்டில் வேலை பார்த்த மலர்விழி மணமாகி கணவனின் ஊருக்கு மாற்றல் வாங்கிப் போய் விட்டிருந்தாள்..

ஊர்மிளா இடது புறமாக அமர்ந்திருந்த அபிராமியின் பக்கம் திரும்பி, “என் கூடவே தானே இருக்கிறாய்..? எப்போது இதையெல்லாம் கண்டு பிடித்தாய்..?” என்று வினவினாள்..

“அதுக்குப் பெயர் இன்வெஸ்டிகேஷன் டெக்னா லஜிங்க..” என்று நெடுஞ்செழியன் குரல் கொடுத்தான்..

“இன்வெஸ்டிகேட் ஜர்னலிசம் பற்றிக் கேள்விப்பட் டிருக்கிறேன்.. இது என்ன புதுசா ஒரு டெக்னாலஜி..?”

“புலனாய்வுங்க..”

“அப்படின்னா…?”

“இதோட ஒரிஜினல் பெயர் புறம் பேசுதல்.. நம்மைப் பற்றி நாலு பேர் வாயைக் கிளறி அவர்கள் நாலு விதமாப் பேசுவதைத் தெரிந்துகொண்டு.. ‘அப்படியாம், இப்படி யாம்’ன்னு பத்திரிகையில் எழுதினால் அது இன்வெஸ்டிகேட் ஜர்னலிசம்.. ஆபிஸில் இதுபோல் பேசுவதும் அது போல்தான்..”

நெடுஞ்செழியன் விளக்கம் சொன்ன விதத்தில் ஊர்மிளாவிற்கு அடக்க முடியாமல் சிரிப்பு வந்தது.. அபிராமி அவன் வாயை மேலும் கிளறினாள்..

“நீங்கள் பெரிய போராளியாமே…”

“சத்தம் போட்டுச் சொல்லாதீங்க.. தீவிரவாதின்னு பிடிச்சிட்டுப் போயிடப் போறாங்க..”

“அப்ப நீங்க தீவிரவாதி இல்லையா..?” வம்புக்கு இழுத்தாள் அபிராமி..

“சரியாப் போச்சு.. திரும்பவும் தண்ணியில்லாக் காட் டுக்கு என்னைப் பத்தி விடணும் என்கிற முடிவோட இருக்கீங்க போல.. ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு பெரிய நல்ல மனது இருக்கக் கூடாது மிஸஸ் நடேசன்..”

“அவள் நடேசனின் வொய்ப் என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்..?”

ஊர்மிளா ஆச்சரியமாய் வினவ நெடுஞ்செழியன் புன்னகைத்தான்..

“லேடிஸ்தான் இன்வெஸ்டிகேசன் பண்ணுவீங்களா..? ஆண்கள் நாங்கள் புலனாய்வு பண்ண மாட்டோமா..?”

“அதுவும் பெண்களைவிட கோடி மடங்கு அதிகமாகப் புலனாய்வு பண்ணுவார்கள்.. புறம் பேசுவார்கள்..” கேலியாகக் கூறினாள் அபிராமி..

“ஆண்கள் மேல் எவ்வளவு நல்ல அபிப்ராயம்..? இவ்வளவு நல்ல அபிப்ராயத்தை வைத்துக் கொண்டு எப்படித் திருமணம் என்ற ஒரு பந்தத்தை ஒரு ஆணுடன் ஏற்படுத்திக் கொண்டீர்கள்…?”

“எனக்கு கால் வலி சார்.. நாலு இடத்திற்கு அலைந்து, புலனாய்வு பண்ணிப் புறம் பேச முடியவில்லை.. இதே ஒரு ஆண் என்றால் ஆபிஸ் அக்கப் போர் முதல் உலக நடப்பு வரை விரல் நுனியில் வைத்திருப்பாரே.. அதனால் அலைச்சலில்லாமல் செய்தி கேட்டுக் கொள்ள ஒரு ஆணைத் திருமணம் செய்து கொண்டேன்…”

“ஹாஹா….” என்று பலமாகச் சிரித்தான் நெடுஞ்செழியன்..

“மெல்லச் சிரிங்க சார்.. இது பிரிட்டிஷ்காரங்க காலத் தில் கட்டின கட்டிடம்.. சுவரெல்லாம் அதிருது பாருங்க.. விழுந்து வைக்கப் போகுது..”

அபிராமி சிரிக்காமல் எச்சரித்தாள்.. ஊர்மிளாவால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.. வாய் பொத்தி அவள் சிரிப்பை அடக்க முயன்றால் கண்ணில் கண்ணீரே வந்து விட்டது..

நெடுஞ்செழியன் அவளைக் கனிவாகப் பார்த்தான்..

“இப்படி ஒரு ஆட்டோ பாம் தோழிக்குப் பக்கத்தில் அமைதியே வடிவாய் நீங்களா..? ஆச்சரியமாக இருக்கிறது..”

ஊர்மிளா ஒரு வழியாய் சிரித்து முடித்து விட்டு அபிராமியைப் பார்த்துக் கூறினாள்..

“கொஞ்சம் வாயைக் குறைத்துக் கொண்டு வேலையைப் பாருடி…”

“அப்படியென்றால் என்னை ஆபரேசன் பண்ணிக் கொள்ளச் சொல்கிறாயா…?”

“எதற்கு ஆபரேசன் பண்ண வேண்டும்..? உனக்கு உடம்புக்கு என்ன..?” பதட்டமாய் தோழியை ஏறிட்டாள் ஊர்மிளா..

“நீதானே வாயைக் குறைத்துக் கொள்ளச் சொன்னாய்.. நீளத்தை குறைத்துக் கொள்ள வேண்டுமென்றால் ஆபரேசன் பண்ண வேண்டாமா…?”

“எனக்குன்னு வந்து பிரெண்டா வாச்சிருக்கயே..” தலையில் அடித்துக் கொண்டாள் ஊர்மிளா..

“இது என்னடி இப்படி அலுத்துக் கொள்கிறாய்.. என் வீட்டுக்காரரே இப்படிப் புலம்பியது இல்லை…” என்ற அபிராமி கூற,

“பாவம் வெளியே சொல்லாமல் மனதில் பூட்டி வைத்திருக்கிறார் போல..” என்றான் நெடுஞ்செழியன்..

ஊர்மிளா.. ‘களுக்’கென்று சிரிக்க அபிராமி அவளை முறைத்தாள்..

“இதுக்கு மட்டும் சிரி.. என் வாய் நீளம்.. அவருக்கு வாயே கிடையாதா..? நானும் பார்க்கிறேன்.. எல்லோருமே ஆண்கள்ன்னா பேசப் பயப்படுகிறார்கள்.. அதே பெண்கள் என்றால் அட்வைஸ் மழை தான் கொட்டும்..”

“சரி சரி சரி.. தெரியாமல் சொல்லி விட்டேன் ஸாரி..” ஊர்மிளா காதைப் பிடித்துக் கொள்ள,

“மன்னித்தேன்.. மறந்தேன்.. வேலையைப் பார்..” என்றாள் அபிராமி..

“அப்பாடி இப்போதோவது விட்டாயே..”

அதற்குப் பின்னர் அவர்கள் அரட்டையை மறந்து வேலையில் மூழ்கினார்கள்.. மதியச் சாப்பாட்டு நேரத்தில் நடேசன் அங்கே சாப்பிட வந்தவன் நெடுஞ்செழியனைக் கட்டி அணைத்துக் கொண்டான்…

“செழியா.. எப்படிடா இருக்க..? நீ திரும்பவும் மதுரைக்கே வரப் போகிறாய்ன்னு தெரிந்ததும் நான் எவ்வளவு சந்தோசப் பட்டேன் தெரியுமா..?”

“ஆனால் உன் வொய்ப்க்குத்தான் அவ்வளவு சந்தோசமில்லை போல் தெரிகிறது..”

“ஏன் நீ என் பெஸ்ட் பிரண்டுன்னு அவகிட்ட சொல்லி யிருக்கேனே.. ஏன் அபிராமி நீ அதைச் சொல்லவில்லையா?”

“அதைத் தவிர மற்ற எல்லாவற்றையும் சொன்னார்கள்”

“ஒருவேளை நீங்க திக் பிரண்ட்ஸ் என்றதும் அபிராமிக்கு பொறாமை வந்து விட்டதோ என்னவோ..” ஊர்மிளா குறும்பாக நகைத்தாள்..

நடேசனும் சிரித்தபடி, “வாடா சாப்பிடலாம்..” என்றான்.

“ஓகே..” என்றபடி தன் கேரியரை எடுத்துக் கொண்டு அவர்களுடன் இணைந்து கொண்டான் நெடுஞ்செழியன்..

இப்படித்தான் ஆரம்பமானது நெடுஞ்செழியனின் நட்பு. அவர்கள் நால்வரும் இணைந்து சாப்பிட்டார்கள்.. மதுரையில் கடை வீதிக்கும், கோவிலுக்கும் செல்வதாக இருந்தால் சேர்ந்தே வெளியில் போனார்கள்.. நாளாவட்டத் தில் அவர்களின் நட்புச் சங்கிலி இறுகிப் பலமானது..

நெடுஞ்செழியன் ஊர்மிளாவிற்கு நடேசன் அபிராமியைப் போல் ஒரு நெருங்கிய நல்ல நண்பன் ஆகி விட்டான்.. கண்ணியம் காப்பாற்றும் தன்மையில் நடேசனை யும் மிஞ்சியவனாய் அவனிருக்க அவன் ஆண் என்ற பேதமின்றி தோழமையில் அவள் அவனுடன் பழக ஆரம்பித்தாள்..

அலுவலக அக்கப் போர்களில் அவர்களின் நட்பை பற்றிய பொறாமை கலந்த பேச்சுக் கிளம்பியது.. எனினும் நடேசன், நெடுஞ்செழியன் என்ற இரண்டு இரும்புத் தூண்களின் பாதுகாப்பில் ஊர்மிளா பத்திரமாய் இருந்ததால் அலுவலகம் பதுங்கிப் பேச்சை அடக்கியது..

ஒரு நாள் அவர்கள் நால்வரும் பாலமுரளியின் பிறந்த நாளுக்காக உடை வாங்கப் போனார்கள்.. நாலு கடை ஏறி இறங்கிப் பார்த்துப் பிடித்ததாகத் தேர்வு செய்து பணத்தைக் கொடுத்து விட்டுக் காரில் ஏறி உட்கார்ந்து கொஞ்ச தூரம் போனதும் அபிராமி கேட்டாள்..

“ஊர்மிளா டிரெஸ்ஸை வெளியில் எடு ஒரு தரம் பார்க்கலாம்..”

“ஏய், உன்னிடம்தானே டிரஸ் இருக்கிறது..?”

“இல்லையே.. நான் எடுத்து வரவில்லையே.. ஏங்க நீங்கள் எடுத்து வந்தீர்களா..?”

“நானா.. இல்லையே.. செழியா நீ கொண்டு வந்தாயா..?”

“இல்லையேடா..”

“சரியாப் போச்சு.. ஒன்றுக்கு இரண்டு ஆண் பிள்ளை கள் கூட வந்தீங்கன்னு தான் பேரு.. ஒரு டிரெஸ் பேகை ஒழுங்காய் எடுத்து வரும் பொறுப்பு ஒருத்தருக்குக்கூட இல்லை..” அபிராமி திட்டினாள்..

“ஏண்டி இதையே நான் திருப்பிச் சொல்லக் கூடாதா?” நடேசன் பதிலுக்கு மோதிக் கொண்டிருக்கையில் வெளியே சடசடவென்று மழை கொட்ட ஆரம்பித்தது..

“இப்போது என்ன செய்வது..?” நடேசன் முணுமுணுத்தான்..

“ஏன் தெருவின் இந்த முனையில் நாம் இருக்கிறோம்.. அந்த முனையில் கடை இருக்கிறது.. காரைத் திருப்ப வேண்டியதுதானே…”

ஊர்மிளா புரியாமல் கூறினாள்.. அந்தத் தெரு ஒரு வழிப்பாதையில் இருக்கிறது.. நடேசன் இன்னும் பல தெருக் கள் சுற்றித்தான் அந்தத் தெருவிற்குள் வர வேண்டும். 

“மழை வேறு பெய்கிறதே..” அபிராமி கவலையுடன் கூறினாள்.. அவளுக்கு ஒரு வாரமாய் நல்ல காய்ச்சல்.. இன்று தான் சற்றுக் குணமாகியது போல் இருக்க அலுவலகம் வந்திருந்தாள்..

“இது ஒன்வே ஊர்மிளா.. காரைத் திருப்ப முடியாது..” நடேசன் கூறிக் கொண்டிருக்கும்போது நெடுஞ்செழியன்..

“குடை இருக்கிறதா..?” என்று கேட்டாள்..

“ம்ம்.. இருக்கிறது..” என்றாள் ஊர்மிளா..

குடையை வாங்கி விரித்துப் பார்த்தபடி காரிலிருந்து இறங்கிய நெடுஞ்செழியன்..

“நான் போய் எடுத்து வருகிறேன்.. ஆமாம்.. டிரெஸ் என்ன கலர்..?” என்று கேட்டான்..

“நீங்கள் பார்க்கவில்லையா..?” என்று அபிராமி கேட்க,

“அவன் இதையெல்லாம் ஆழமாய் பார்க்க மாட்டான்..” என்ற நடேசன் ஊர்மிளா பக்கம் திரும்பி,

“நீ கூடப் போய் எடுத்து வா..” என்றான்..

“இன்னொரு குடை இல்லையே..” என்று ஊர்மிளா தயங்க,

“பரவாயில்லை.. ஒரு குடையில் இருவரும் போகலாம்..” என்றான் நடேசன்..

ஊர்மிளா இறங்கி நெடுஞ்செழியனுடன் கடை நோக்கி நடந்தாள்.. ஒரே குடையின் கீழ் இருவரும் அந்தக் கொட்டும் மழையில் கடை நோக்கி நடந்ததையும் உள்ளே போன கொஞ்ச நேரத்தில் துணி பார்சலோடு வெளியில் வந்து கார் நோக்கி நடந்து காரில் ஏறிக் கொண்டதையும் ஒருவன் சுவாரஸ்யமாய் பார்த்துக் கொண்டிருந்தான்..

அவன் கலெக்டர் ஆபிஸிற்கு பக்கத்திலிருக்கும் கார்ப்பரேசன் ஆபிஸில் வேலை பார்க்கிறான்.. பக்கத்தி லிருந்த அவன் நண்பன்..

“என்ன வீரபத்ரா.. அவங்களை அப்படிப் பார்க்கிறாய்..?” என்று கேட்டான்..

“அந்தப் பொம்பளையும் அந்த ஆளும் எங்க ஆபிஸிற்குப் பக்கத்தில் இருக்கும் கலெக்டர் ஆபிஸில் வேலை பார்க்கிறவங்கடா..”

“இருக்கட்டுமே.. அதற்கா அந்தப் பார்வை பார்க்கிறாய்”

“அதெல்லாம் இல்லை.. இதுக இந்த ஆட்டம் போடுது களேன்னு பார்க்கிறேன்…”

“ஏண்டா.. மழை கொட்டுதுன்னு மழைக்கு ஒதுங்கி வந்து நின்னால் ரோட்டில் அப்பாவியாய் நடந்து போறவங் களைப் பார்த்து எகனைக்கு மொகனைக்கு பேசிக்கிட்டு இருக்க.. பேசாமல் இருக்கிறாயா இல்லை மழையில் பிடிச்சுத் தள்ளி விடவா..? ஏண்டா.. அவங்க ரெண்டு பேரையும் பார்த்தால் நல்ல குடும்பத்து ஆள்கள் மாதிரித்தெரியுது.. உன் குணத்தைக் காண்பிக்காதே.. அபாண்டமாய் பேசாதே.. சொல்லி விட்டேன்.. சே.. மழை விட்டால் ஓடி விடுவேன்.. இந்தக் காட்டு மழையில் உன்கிட்ட வந்து மாட்டிக் கொண்டேனே…”

“ஏய்ய்.. அடங்கறியா.. அவங்க ரெண்டு பேரும் நல்ல குடும்பமா..? முதலில் அவங்க ரெண்டு பேரும் ஒரே குடும்பமில்லை.. அதைத் தெரிஞ்சுக்க..”

“இப்ப நீ என்ன தான் சொல்ல வருகிறாய்..?”

“டேய்.. அந்தப் பொம்பளை ஒரு விடோடா…”

“சேச்சே.. பார்த்தால் தெரியலையே…”

“அவ அப்படித்தான் அலப்பரையா இருப்பாள்…”

“அடுத்த வீட்டுப் பெண்களை அவள் இவள்ன்னு சொன்னே… பல்லை பேத்துடுவேன் ராஸ்கல்…”

“பாருடா.. புத்தி சொல்ல வந்திட்டாரு…”

“இப்ப என்னங்கிறே.. அவங்க விடோவாயிருந்தால் அது தப்பா..?”

“அது தப்பில்லை.. அந்த ஆம்பிளை அவ கூட வேலை பார்க்கிறவன்.. அவங்க சேர்ந்துதான் வேலை பார்ப்பாங்களாம். சேர்ந்துதான் சாப்பிடுவாங்களாம்.. இப்பப் பார்த்தியே.. இது போல சேர்ந்துதான் ஊர் சுத்துவாங்களாம்…”

“உனக்கு யார் சொன்னது..?”

“அட.. அந்த ஆபிஸில் வேலை பார்க்கும் என் பிரண்ட் சொன்னான்டா…”

“உன்னை மாதிரி ஆளோட பிரண்ட் எப்படியிருப்பான் உன்னை மாதிரி தானே இருப்பான்.. மழை விடா விட்டாலும் பரவாயில்லை.. உன் பக்கத்தில் நின்று நீ பேசுவதைக் கேட்டுக் கொண்டிருப்பதற்கு நனைந்தாலும் பரவாயில் லைன்னு நான் இடத்தைக் காலி பண்ணுவது தான் எனக்கு நல்லது..”

எரிச்சலுடன் நனைந்து கொண்டே போய் விட்டான் நல்ல குணமுள்ள அந்த மனிதன்.. ஏளனமாய் அவனைப் பார்த்துச் சிரித்த அந்த வீரபத்ரன் அடுத்த இரு மாதங்களில் ஊர்மிளாவின் நாத்தனார் சுபத்ராவைப் பெண் பார்க்க வந்தான்..

0Shares

Reviews – Kathirudhen Katriniyle / காத்திருந்தேன்… காற்றினிலே…

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link