Chapter 02

0Shares

விளாத்திகுளம் என்ற அந்த கிராமம், ஆற்றோரமாய் அமைந்திருக்கும் வளமையான இடம். பச்சைப் பசேல் என்ற வயல்வெளிகளும், அதில் நிறைந்திருக்கும் நீரும், நீந்திப் பறக்கும் நாரைகளுமாக.. கண்ணைக் கவர்ந்து இழுக்கும்.

அந்த ஊரின் பெரிய பண்ணையாரின் மகள்தான் காயத்ரி.. அவள் அண்ணன் கதிரேசன், தன் தங்கைக்கு தோதான ஜோடி அந்த ஜில்லாவிலேயே இல்லை என்று ஜில்லாவிட்டு ஜில்லா போய் மாப்பிள்ளை தேடிக் கொண்டிருக்க.. காயத்ரியோ உள்ளூரிலேயே தனக்கு வரன் தேடினாள்..

தான் உண்டு, தன் வயல் உண்டு.. வயதான பெற்றோரும், உடன் பிறந்த தங்கை செவ்வந்தியும் உண்டு என்று வாழ்ந்து வந்த மகேஷ்வரனை.. ‘எங்க பார்த்தாலும்.. நீ மட்டும்தான் உண்டு..’ என்று காயத்ரியின் மேல் துதி பாட வைத்துவிட்டாள் அவள்..

செய்தியை அறிந்த கதிரேசன் வெகுண்டார்.. தங்கள் வசதிக்கு கொஞ்சம் கூட பொருந்தி வராத மகேஷ்வரனின் மேல் மையல் கொண்ட தங்கையின் மேல் ஆத்திரம் கொண்டார்..

காயத்ரி தன் காதலில் உறுதியாக நின்றாள்.. வேறு வழியின்றி.. வசதி இல்லாத மாப்பிள்ளையாக இருந்தாலும் இனம் ஒன்றுதானே என்ற நினைவுடன் அவளை மகேஷ்வரனுக்கே மணம் முடித்துக் கொடுத்தார் கதிரேசன்..

ஆனால்… தன் விருப்பப்படி வாழ்வைத் தேடிக்கொண்ட தங்கையை தள்ளியே வைத்தார்..

காயத்ரி அதைப் பற்றிக் கவலையே படவில்லை.. தன் மனதிற்குப் பிடித்த மணாளனோடு மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தினாள்..

தன்னை நம்பி வந்த மனைவியின் மேல் உயிரையே வைத்திருந்த மகேஷ்வரன், தங்கை செவ்வந்திக்கு உள்ளூரிலேயே மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்தார்..

காயத்ரியின் அண்ணன் கதிரேசனுக்கு சரவணன் பிறந்த மறுமாதம்.. மகேஷ்வரனின் தங்கை செவ்வந்திக்கு துரைசிங்கம் பிறந்தான்..

நீண்ட நாட்களாக குழந்தை இல்லாமல் இருந்த மகேஷ்வரன்-காயத்ரி தம்பதிக்கு ஆறு ஆண்டுகள் கழித்து பிறந்த அருமை மகள்தான் கஸ்தூரி..!

அரைத்துவிட்ட கஸ்தூரி மஞ்சளின் நிறத்தில் குழந்தை இருந்ததால், ‘கஸ்தூரி’ என்ற பெயரிட்டார்கள்.. மகேஷ்வரனும், காயத்ரியும்..

கஸ்தூரி வளர.. வளர.. அவளது அழகும் சேர்ந்து செழித்தது.. விளாத்திகுளத்திலேயே கஸ்தூரியின் அழகுக்கு நிகர் யாருமில்லை என்ற பெயர் ஏற்பட்டுவிட்டது..

தங்கை மேல் இருந்த மனச் கசப்பால்.. பண்ணையார் கதிரேசன் ஒதுங்கி இருந்தாலும், அவருடைய மகன் சரவணன்… அத்தை மகளிடம் இருந்து ஒதுங்கி இருக்க விரும்பவில்லை..!

அவனைவிட ஆறு வயது இளையவளான கஸ்தூரியின் கள்ளமில்லாத முகத்தையும்.. வட்டமான பெரிய விழிகளையும்.. அந்த விழிகளின் மேல் குடை போல் கவிழ்ந்து படபடக்கும் இமைகளையும்.. நாள் பூராவும் பார்த்தாலும் போதாது என்று அவனுக்குத் தோன்றியது..

கஸ்தூரியின் மேல் சரவணன் கொண்ட மையல் போல் மகேஷ்வரனின் தங்கை செவ்வந்தி மகன் துரைசிங்கமும் ஆசை கொண்டிருந்தான்..

செவ்வந்தியின் கணவன் சிங்காரம் குடிப்பழக்கத்தில் சொத்தை அழித்துவிட்டு இறந்து போக.. தங்கையின் பொறுப்பை தயங்காமல் ஏற்றுக்கொண்டார் மகேஷ்வரன்..

வருடாந்தர விளைச்சலில் செவ்வந்தியின் வீட்டில் நெல் மூட்டைகளை இறக்கிவிட்டுத்தான், தன் வீட்டிற்கு நெல் மூட்டை ஏற்றப்பட்டிருக்கும் வண்டியை ஓட்டுவார்..

அப்படிப்பட்ட தாய் மாமனின் தயவில் படித்த துரைசிங்கம், கல்லூரியின் பக்கம் தலை வைக்காமல் பின்தங்கி விட்டான்.. அதை பெரிது பண்ணாமல் தனக்கு உதவியாக அவனை வைத்துக்கொண்டார் மகேஷ்வரன்..

தாய்மாமனின் நிழலில் அவன் உழைத்ததற்கு, மாமன் மேல் கொண்டிருக்கிற விசுவாசம்தான் காரணம் என்று மற்றவர்கள் நினைத்தனர்.. மாமன் மகள் மேல் இருக்கும் ஆசைதான் காரணம் என்பதை புதைத்து வைத்திருந்தான் அவன்..

ஆண்டுகள் ஓடின.. சரவணன் முதுகலைப் பட்டதாரியாகி சொந்தஊரில்.. சொந்தமாய் கரும்பு ஆலை ஒன்றை நிறுவினான்..

கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த கஸ்தூரி, தன் சைக்கிளில்.. அவனது கரும்பு மில்லைக் கடந்து தினமும் கல்லூரி சென்று வந்தாள்..

ஒருநாள் அவளது சைக்கிள் டயர் காற்று இறங்கிப் போக தள்ளிக்கொண்டே வந்தபோது.. காரின் மீது சாய்ந்து நின்றிருந்த சரவணன் அவளை வம்புக்கு இழுத்தான்..

“என்ன… அத்தை மகளே.. சைக்கிளை ஏன் உருட்டிக்கிட்டே போகிற…?” என்று கேட்கவும்.. கஸ்தூரிக்கு கோபமும், ரோசமும் பொத்துக்கொண்டு வந்தது..

“ம்ம்.. வேண்டுதல்..! அதுதான் உருட்டிக் கொண்டே போறேன்..”

நீண்ட பின்னலை பின்னால் விசிறியபடி சொன்ன அவளின் தோற்றம் மனதில் பதிய, அவன் மயங்கிப் போனான்..

அவளுடன் இன்னும் பேச வேண்டுமென்ற ஆவல் கிளர்ந்து எழுந்தது.. மேலும் வாயைப் பிடுங்கினான்..

“வேண்டுதலா…? இப்படிக்கூட வேண்டிக் கொள்வாங்களா..?”

“உங்களைப் போல ஆள்கள் இருக்கும் ஊரில் எப்படி வேண்டுமானாலும் வேண்டிக்கொள்வாங்க…”

“இதைப் பாருடா.. என் அத்தை பெத்த அன்னக்கிளி.. இப்படிப் போட்டுத் தாக்குறதை..! தினமும் ஊமை போல் சைக்கிளில் நீ போய் வருவதைப் பார்த்துவிட்டு.. பேசா மடந்தைன்னு நினைத்தேனே..?”

“உங்கள் நினைப்பிற்கு நான் பொறுப்பில்லை..”

“அது எப்படி..? நினைவைக் கொடுத்தவள் பொறுப் பில்லாமல் பேசலாமா.. தூக்கம் கெடுவது எனக்குத்தானே..!”

“என்னது..?”

கோபமாய் நிமிர்ந்தன கஸ்தூரியின் விழிகள்.. அவற்றில் அவன் கலக்க.. தன்னுள் தெரிந்த ஏதோ ஒன்றில் அவள் கட்டுண்டு நின்றுவிட்டாள்..

“என்ன கஸ்தூரி.. பேச்சையே காணோம்..?”

“நான் போகணும்..”

“போ.. நான் என்ன உன் கையைப் பிடிச்சா நிறுத்தி இருக்கிறேன்..?”

“கையைப் பிடிப்பீங்களோ..?”

“கட்டாயம் பிடிப்பேன்.. அதுக்கு உரிமையுள்ளவன் தானே..? ஏன் நான் கையைப் பிடித்தால் நீ உன் கையை இழுத்துக் கொள்வாயா..?”

சரவணன் அருகில் வரவும், பயந்த விழிகளோடும்.. நீண்ட பின்னலோடும்.. நெற்றியில் திலகத்தோடும்.. அவள் பின்னால் நகர்ந்ததைக் கண்ட சரவணனின் கண்கள் மின்னின..

‘அச்சம்.. மடம்.. நாணம்.. பயிர்ப்பு..’ 

பெண்களுக்கே உரிய நான்கு வகை குணங்களை அன்று அவளிடம் கண்டான்.. மனதைப் பறிகொடுத்தான்.. அவளைத் தொட்டு இழுத்து பயம் போக்க அவனது நெஞ்சம் விழைந்தது.. பயந்து விலகுபவளின் அருகே செல்ல அவனது மனம் தயங்கவும் செய்தது..

அவனுடைய டிரைவரை அழைக்க.. அவன் ஓடோடி வந்தான்..

“கோபி, பக்கத்தில் சைக்கிள் ரிப்பேர் கடை இருக்கா..?”

“இருக்கு முதலாளி..”

“இந்த சைக்கிளைத் தூக்கி டிக்கியில் போட்டுக் கொண்டு போய், டயரை மாத்திட்டு வா..”

டிரைவர், கஸ்தூரியின் சைக்கிளை தூக்க முயல.. அவள் அவசரமாய் தடுத்தாள்..

“வேண்டாம்.. வேண்டாம்..”

டிரைவர், சரவணனின் முகம் பார்க்க.. அவன் கஸ்தூரியை அதட்டினான்..

“என்ன வேண்டாம்..?”

“என் சைக்கிளை நீங்க ஒன்னும் ‘ரிப்பேர்’ பண்ணித் தர வேண்டாம்..”

“ஏன்..?”

“நீங்கள் சண்டைக்காரங்க..”

அவள் குழந்தையாய் முறைக்க.. சரவணனுக்கு சிரிப்பு வந்துவிட்டது..

“யார் சண்டைக்காரங்க..? நானா..”

“நீங்க எல்லாரும்தான்..”

“நாங்க எல்லாரும்னா..?”

“உங்க குடும்பம் மொத்தமும்..”

“உன் அம்மா மட்டும் யார்..? அவங்களும் எங்க குடும்பம்தானே..?”

“அவங்க என் அம்மா..”

“அதுக்கு முன்னால் அவங்க யார்..?”

கேள்விகள் தொடர்ந்தன.. பதிலும் கிடைத்தது..

அந்தப் பதில், கஸ்தூரியின் வாழ்வை வண்ணமயமாக்கி.. அவளுக்கு வாழ்வின் மறுபக்கத்தை உணர்த்தியது..

0Shares

Reviews – Katrodu Thuthuvitten / காற்றோடு தூதுவிட்டேன்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link