Chapter 03

0Shares

கஸ்தூரி, சரவணனை முறைப்புடன் பார்க்க.. அவனோ சிரிப்புடன் ஏறிட்டான்.. கஸ்தூரி பல்லைக் கடித்துக் கொண்டாள்..

“என்ன சிரிப்பு வேண்டிக் கிடக்கு..?”

“எனக்கு வேண்டியது இருக்குது… சிரிக்கிறேன்.. உனக்கு என்ன நஷ்டம்.. கஷ்டம்..?”

“என்னைப் பார்த்து ஏன் சிரிக்கணும்..?”

“நான் கேட்டதற்கு நீ பதில் சொல்லலைன்னா, சிரிக்காமல் என்ன செய்வாங்களாம்..?”

“ஆஹா.. பெரிய விடை இல்லாத கேள்வியைக் கேட்டு விட்டீர்களாக்கும்.. பீற்றிக் கொள்கிறீங்களே..? எனக்கு அம்மா ஆவதற்கு முன்னால், அவங்க என் அப்பாவின் பெண்டாட்டி… போதுமா..”

“போதாதே.. உன் அப்பாவிற்கு பெண்டாட்டியா ஆவதற்கு முன்னால் அவங்க யார்..?”

“யார்..?”

கஸ்தூரி பதில் சொல்லத் தெரியாமல் விழித்தாள்.. கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்தாலும்.. அறியாமையுடன் விழிக்கும் அவளின் சுபாவம் அவனை ஈர்த்தது..

“என் அப்பாவின் தங்கை.. என் தாத்தா, பாட்டிக்கு மகள்.. என்னோட அத்தை..” சரவணன் சொந்தத்துடன் கூறினான்..

கஸ்தூரியின் மனதில் ஏதோ ஓர் இனம் புரியாத உணர்வு தோன்றியது.. மனம் படபடக்க அவனை நிமிர்ந்து பார்த்தாள்..

“நீ யாரோ இல்லை.. என் சொந்த அத்தை மகள்.. நானும் உனக்கு வழிப்போக்கன் இல்லை.. உன் மாமன் மகன்.. இப்போது சொந்தம் புரிகிறதா..? கோபி.. நீ சைக்கிளை எடுத்துக்கொண்டு போ..”

கஸ்தூரியால் இப்போது தடுக்க முடியவில்லை.. டிரைவர் சைக்கிளை எடுத்துப் போய் விட.. அவள் தன் தலையில் சூடி இருந்த முல்லை மலர்களை பிய்த்து போட்ட  வண்ணம்.. தரையை பெருவிரல் நகத்தால் கீறிக்கொண்டு நின்றிருந்தாள்..

“மெல்ல..! பூமியில் இருந்து நீர் ஊற்று வந்துவிடப் போகிறது..” என்றான் சரவணன், கேலியாக..

“நீர் ஊற்று வருமா..? எப்படி..?” விழிகளை விரித்தாள்..

“வெட்கப்படுகிறேன் பேர் வழின்னு இப்படித் தரையை கால் பெருவிரலால் நோண்டினால் நீர் வராதா..?”

அவனது கேலியில் முகம் சிவந்தவள், கால் மாற்றி நின்றாள்..

“நீ நின்றால் எனக்கு கால் வலிக்கிறது…” மென்மையாக கூறினான்..

“ம்.. என் கால், நான் நிற்கிறேன்.. உங்களுக்கு எப்படி கால் வலிக்குமாம்..? அந்தக் கதையெல்லாம் என்னிடம் வேண்டாம்..”

“ஓஹோ.. கதை பேசுவதைக் கண்டுபிடித்துவிடும் அளவிற்கு நீ கெட்டிக்காரியா..? பயமாய் இருக்கிறதே..”

“பயப்படுகிற ஆளைப் பாரேன்..”

“நீதான் பாரேன்..”

சரவணன் அவளை விழுங்கிவிடுவதைப் போல் பார்க்க.. கஸ்தூரியின் முகம் அந்தி வானமாய் சிவந்து விட்டது.. அவன் ரசனையாய் அவளைப் பார்த்துக் கொண்டே இருந்தான்.. தூரத்தில் கார் வருவது தெரிந்தது..

“அப்பாடா.. என் சைக்கிள் வந்துவிட்டது..” அவள் ஒரு விடுதலை உணர்வுடன் கூறுவதைப் புருவம் உயர்த்திப் பார்த்தான்..

“இதில் உனக்கு இவ்வளவு சந்தோஷமா..?”

“ஏன் இப்படிக் கேட்கிறீங்க…?”

“என்னை விட்டு ஓடுவதிலேயே குறியாய் இருக்கிறாய்..!”

அவனது வார்த்தைகள் குற்றம் சாட்டும் தொனியில் இருப்பதை உணர்ந்தவள், திகைப்புடன் நிமிர்ந்து பார்த்தாள்..

அவன் விழி பேசிய மொழி.. அவள் அதுவரை அறியாதது..

கஸ்தூரி தன் வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறப்பதைப் போல் உணர்ந்தாள்..

அவளது மனதில் பாரதியின் கவி வரிகள் ஒலித்தன..

 ‘இனம் விளங்கவில்லை – எவனோ

என் அகம் தொட்டுவிட்டான்..’

சரவணன், கஸ்தூரியின் மனக் கதவைத் தட்டித் திறந்துவிட்டான்.. திறந்த அவளது மனக் கதவு அவனுக்காக வழிவிட.. ஓர் அரசனைப் போல் அவளில் பிரவேசித்து குடியேறிவிட்டான்..

அதன் பின்னால், கஸ்தூரி கல்லூரிக்குச் செல்லும் பாதையில் தினமும் காத்திருப்பதை வழக்கமாகக் கொண்டான்.. அவளும்.. அவனுடன் பேசும் நேரம் தவிர.. மற்ற நேரங்களில் உயிரைப் பிரியும் உணர்வைப் பெற்றாள்.

கஸ்தூரியின் கல்லூரிப் படிப்பு முடிந்தது.. அவளது வரவுக்காக காத்திருந்த சரவணன், சந்திப்பு தளத்தை கோயிலுக்கு மாற்றிக்கொண்டான். தினமும் மாலை வேளைகளில் தவறாமல் கோயிலுக்கு வருவதை கஸ்தூரி தன் வழக்கமாக்கினாள்..

ஒருநாள் மாலையில் அவளது முகம் வாடி இருப்பதைக் கண்ட சரவணன் காரணத்தைக் கேட்டான்..

“அத்தான், நீங்கள் பணக்காரர்..”

“அது என்ன பெரிய குற்றமா..?”

“நாங்கள் உங்கள் அளவுக்கு வசதியான குடும்ப மில்லை..”

“ச்சு.. இப்போது நீ என்னதான் சொல்ல வருகிற…?”

“என் தோழி சொல்கிறாள்..”

“என்ன சொன்னாள்..?”

“நீங்கள் சும்மாதான் என்னுடன் பொழுது போக்குக்காக பழகுகிறீர்களாம்..”

“அப்புறம்..?”

“கல்யாணம்ன்னு வரும்போது நீங்க உங்களுடைய மாமன்களின் மகள்களைத்தான் கல்யாணம் பண்ணிக் கொள்வீங்களாம்..”

கஸ்தூரியின் விழிகள் நீரில் மிதக்க.. சரவணன் செய்வதறியாது திகைத்தான்..

அவனுடைய தாய் ராஜலட்சுமி பிறந்தது பெரிய செல்வந்தரின் குடும்பத்தில்.. அவனுடைய தாய் மாமன்கள் மூன்று பேரும்.. சென்னை, பெங்களூர், கோயம்புத்தூர் என்று மூன்று ஊர்களிலும் பெயர் பெற்ற கோடீஸ்வரர்கள்.. அவர்களின் பெண்கள் வெளிநாட்டுப் படிப்பும், அளவற்ற செல்வமும் கொண்டவர்கள்..

‘எத்தனை கோடி பணம் இருந்தாலும்.. மனதுக்கு பிடித்தவளுடன்தானே வாழ முடியும்..? அது ஏன் இந்த மக்கு கஸ்தூரியின் மரமண்டையில் ஏறவில்லை..?’ என்று ஆயாசமாக இருந்தது சரவணனுக்கு..

“நீ வீட்டுக்குப் போ..”

அவன் விருட்டென்று கோயில் மண்டபத்தைவிட்டு எழுந்து, வெளியே சென்றுவிட்டான்..

கஸ்தூரி அன்று இரவு.. தாய், தகப்பன் அறியாமல் தலையணையை தன் கண்ணீரால் நனைத்துக் கொண்டிருந்தாள்..

விடிந்து.. சூரியன் கிழக்கே உதயமாகி தன் பவனியை ஆரம்பித்தும்விட்டான்..

கடமைக்காக எழுந்து, குளித்து முடித்து வந்தவளை, வாசலில் கேட்ட பேச்சுக் குரல்கள் இழுத்தன..

‘யாராக இருக்கும்..?’ என்ற அசிரத்தையாய் எட்டிப் பார்த்தவளின் விழிகள் விரிந்தன..

வீட்டு வாசலில் நான்கு கார்கள் வரிசையாய் நிற்க.. கதிரேசனும், ராஜலட்சுமியும் சீர்வரிசைகளுடன் கஸ்தூரியைப் பெண் கேட்டு வந்திருந்தனர்..

‘வராத விருந்தாளிகள் வந்திருக்கிறார்கள்..’ என்ற நினைவில் அவசரமாய் வந்தவர்களை வரவேற்று உபசரித்தார் மகேஷ்வரன்..

கூடத்தை நிரப்பி இருந்த சீர்வரிசைகளைப் பெருமையுடன் பார்த்த காயத்ரி.. கணவனை ஏறிட்டாள்.. அவள் விழிகளில் மன்றாடல் தெரிந்தது.. தன் மனைவி பிறந்த வீட்டினருடன் உறவாட விரும்புவதை அறிந்து கொண்டாலும், மகேஷ்வரன் நிதானமாகவே செயல் பட்டார்..

“காபி, பலகாரம் சாப்பிடுங்க மச்சான்..”

“அதுக்கென்ன மாப்பிள்ளை.. வந்த வேலை முடியட்டும்.. இருந்து விருந்தே சாப்பிட்டுட்டுப் போகிறோம்..”

“மச்சான் என்ன சொல்ல வர்றீங்கன்னு எனக்குப் புரியலையே.. கொஞ்சம் விளக்கமாகச் சொன்னால் தேவலை..”

“அன்றைக்கு நீங்க, எங்க வீட்டுப் பெண்ணை, உங்க வீட்டுக்கு கொண்டு வந்திட்டீங்க.. இன்றைக்கு நாங்க, உங்க வீட்டுப் பெண்ணை எங்க வீட்டுக்கு கொண்டு போக வந்திருக்கிறோம்..”

“அப்படின்னா..?”

“உங்கள் மகள் கஸ்தூரியை.. என் மகன் சரவணனுக்கு கல்யாணம் பண்ணிக் குடுங்கன்னு பெண் கேட்டு வந்திருக்கிறோம் மாப்பிள்ளை..”

காயத்ரி பரவசப்பட்டுப் போனாள்.. ஆவலாய் மகேஷ்வரனின் முகத்தை அவள் பார்க்க.. அவர் நிதானமாய் பேசினார்..

“ரொம்ப சந்தோசம் மச்சான்.. என் மகளைப் பெண் கேட்டு நீங்க வந்ததில் எனக்குப் பெருமைதான்.. ஆனால்..”

மகேஷ்வரன் ‘ஆனால்’ போட்டதில் கதிரேசன் கேள்விக் குறியோடு தங்கையின் முகத்தை ஏறிட்டார்.. காயத்ரி கைகளைப் பிசைந்தபடி கணவனின் முகம் பார்த்தாள்..

அண்ணன்.. தங்கை இருவரின் பார்வை பரிமாற்றத்தைக் கண்டும் காணாதவர் போல் மகேஷ்வரன் எழுந்து நின்றார்..

“மச்சான்.. கல்யாண விசயத்தில் ஆம்பளையாக இருந்தாலும், பொம்பளையாக இருந்தாலும் அவங்கவங்க சம்மதத்தைக் கேட்டிரணும். ஏன்னா.. வாழ்க்கையில கல்யாணம் ஒரு தடவை வந்து போகிற விஷயம்..”

0Shares

Reviews – Katrodu Thuthuvitten / காற்றோடு தூதுவிட்டேன்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link