Chapter 04
ஒரு நொடி.. காயத்ரியின் திருமணத்தின்போது.. ‘பொட்டப்புள்ளக்கி தானாக மாப்பிள்ளை தேடிக்க எவ்வளவு தைரியம் இருக்கணும்.. வீட்டில் சொல்கிற மாப்பிள்ளைக்கு கண்ணை மூடிக்கிட்டு கழுத்தை நீட்டுவதை விட்டுவிட்டு காதலாம்.. கத்தரிக்காயம்..’ என்று தான் பேசியதற்கு பதில் சொல்லுகிறாரோ என்று கதிரேசன் நினைத்தார்..
அது இல்லை என்பது மகேஷ்வரன் அடுத்துப்பேசிய பேச்சுகளில் இருந்து அவருக்குத் தெளிவானது..
“மச்சான்..! ராஜா.. ராணிக் காலத்திலே சுயம்வரம்னு ஒண்ணை வச்சாங்க.. அப்போ பார்த்தீங்கன்னா மாப்பிள்ளைகள்தான் வரிசையாக உட்கார்ந்திருப்பாங்க.. பொண்ணு, கையில் மாலையோடு மண்டபத்தைச் சுற்றி வந்து பார்க்கும்.. பிடித்த மாப்பிள்ளையின் கழுத்தில் மாலையைப் போடும்.. காலம் வளர.. வளர.. நாமும் வளர்ந்திருக்கணும்.. ஆனால், மத்த விசயங்களில் வளர்ந்த நாம.. நம்ம வீட்டுப் பொண்ணுக விசயத்தில் கீழேதானே போய்கிட்டே இருக்கோம்..
பொண்ணு பார்க்க மாப்பிள்ளை வந்து பிடிச்சிருக்குன்னு சொல்லிவிட்டால், பெண்ணோட சம்மதத்தைக் கூடக் கேட்காமல் தள்ளிவிடத் தானே பார்க்கிறோம்.. ஒற்றைப் பொண்ணைப் பெற்றவன் நான்.. அது மனசு கஷ்டப்படக் கூடாதுன்னு நினைக்கிறேன்.. அது விருப்பம் எனக்கு முக்கியம்.. ஒரு நிமிஷம் பொறுங்க.. என் பொண்ணுகிட்ட சம்மதம் கேட்டுவிட்டு வருகிறேன்.. அவளுக்கு சம்மதம்னா, எனக்கும் இந்தக் கல்யாணத்தில் பரிபூரண சம்மதம்..”
‘இவ்வளவுதானா..?’ என்ற மன நிம்மதியுடன் சிரித்தார் கதிரேசன்..
மகனின் காதல் விவகாரம் அறிந்துதானே அவர் பெண் கேட்டு வந்திருக்கிறார்.. எனவே..
“அதுக்கென்ன மாப்பிள்ளை, கஸ்தூரிகிட்டே கேட்டுட்டு வாங்க.. நாங்க அதுவரைக்கும் தங்கச்சிகிட்டே பேசிக்கிட்டு இருக்கோம்..” என்றார்..
மகேஷ்வரன் உள்ளே சென்றார்.. கஸ்தூரி அவசரமாய் தலையை உள்ளே இழுத்துக்கொண்டாள்..
“கஸ்தூரி.. உன் தாய் மாமன் வீட்டில் உன்னைப் பெண் கேட்டு வந்திருக்காங்க.. உனக்குச் சம்மதமாம்மா..?” என்று கனிவுடன் மகளிடம் கேட்டார் மகேஷ்வரன்..
“எனக்கு சம்மதம்தான்ப்பா..”
மகளின் விருப்பத்தை அறிந்த உடனே.. சபைக்கு வந்து கதிரேசன் நீட்டிய நிச்சயதாம்பூலத் தட்டைப் பெற்றுக்கொண்டு திருமணத்தை உறுதி செய்துவிட்டார் மகேஷ்வரன்..
வயலுக்குச் சென்றிருந்த துரைசிங்கம் வழக்கம் போல் மதிய நேரத்தில் மாமன் வீட்டிற்கு வந்தபோது, தடபுடலாக விருந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது..
புரியாமல் திகைத்து விழித்தவனிடம், சாப்பிட்டு விட்டு வந்த உறவுக்காரர் ஒருவர் சொன்னார்..
“என்னப்பா.. துரை.. என்னவோ சந்தையில் வித்த ஆடு போக, இருக்கிற சொச்ச ஆடு மாதிரி இந்த முழி முழிச்சிக்கிட்டு நிற்கிற.. நீ சாப்பிடப் போகலையா..?”
“ம்ம்ம்.. போகணும் பெரியப்பா.. ஆனால், மாமன் வீட்டில் விருந்து போடறாங்களே, என்ன விசேஷமாம்..?”
“ஏம்ப்பா.. உன் மாமன் வீட்டு விருந்தைப் பத்தி ஒண்ணும் தெரியாதவன் போல என்கிட்ட கேள்விக் கேட்கிற.. விளையாடுகிறாயா..?”
‘ஆமாம்ய்யா.. குடுகுடு கிழவன் உன் கூட நான் சடுகுடு விளையாடணும்னு வந்திருக்கேன்.. ஆளைப்பாரு கேள்வியைப் பாரு..’ மனதிற்குள் கடுகடுத்துக் கொண்டே துரைசிங்கம் வெளியே வெள்ளையாய் ஒரு சிரிப்பை சிரித்தான்..
“காலையிலேயே கழனிக்குப் போய்விட்டேன்.. பெரியப்பா. அதான் விசயம் தெரியலை..”
“என்னது, விசயம் தெரியாதா..? உன் ஆத்தா செவ்வந்தி அங்கே விழுந்து விழுந்து விருந்து பரிமாறிக் கிட்டு இருக்கா.. நீ இப்ப வந்து இப்படிக் கேட்கிற..?”
“ஏன் பெரியப்பா..?”
“உன்னோட மாமன் மகள் கஸ்தூரிக்கு கதிரேசன் மகன் சரவணன் பரிசம் போட்டுட்டான்ப்பா.. அதுக்குத்தான் விருந்து நடக்குது..”
கை கழுவிவிட்ட பெரியவர், தோளில் கிடந்த துண்டில் கையைத் துடைத்துக் கொண்டே அங்கிருந்து நகர.. துரைசிங்கத்தின் முன்னால் உலகமே சுழன்றது..
‘சேரவே சேராது என்று நினைத்த சொந்தங்கள் சேர்ந்து விட்டதா.. கஸ்தூரி அவனுக்கு இல்லையா..? அவளை சரவணன் தட்டிக்கொண்டு போய்விட்டானா..’
மனம் கொதிக்க நின்றிருந்தவனிடம் யாரோ..
“சாப்பிடப் போப்பா..” என்று கூற..
‘இந்த விருந்தில நான் கலந்து கொள்வதா..?’ என்று வெதும்பியவன் வேகமாய் கண்மாய்கரைப் பக்கம் சென்று விட்டான்..
அவனுடைய கூட்டாளிகள் செய்தியைக் கேள்விப் பட்டதும் அவனை இன்னும் கொஞ்சம் உசுப்பேற்றி விட்டனர்..
“நல்ல ஆளு வந்து வாய்ச்ச போ… கண்ணுக்கு முன்னால வளர்ந்த பொண்ண.. கைக்குள்ள போட்டுக்க முடியாம கோட்டை விட்டுவிட்டு வந்து நிற்கிறயே..?”
“ஏம்ப்பா துரைசிங்கம்.. நீ பெயரிலதான் வெறும் சிங்கம் போல இருக்கு.. நிசத்துல வெறும் சுண்டெலி தானா..? ஐயய்யோ..”
“என் முறைப் பொண்ணையெல்லாம் எவனாவது கட்ட நினைச்சான்னு வையிப்பா.. ஒரே வெட்டுத்தான்.. முறைப்பெண்ணைப் போய் தோத்துட்டு வந்து நிற்கிறயே..?”
“அட நீ வேற ஏம்ப்பா.. அவன் வயித்தெரிச்சலைக் கிளப்பற..! தட்டிக்கிட்டுப் போய் இருக்கிறவனும், கட்டிக்கிற முறையில் இருக்கிறவன்தானே..!”
“அதுவும் சரிதான்.. அவனோ படிச்சவன்.. நீ படிப்பில் கம்மி.. அவன் முதலாளி.. நீ உன் மாமனை அண்டிப் பிழைக்கிறவன்..”
“ஏய்யா.. இவன் அவனோட மாமனை அண்டிப் பிழைச்சாலும் நாளைக்கு மாமன் மகளைக் கட்டிக்கிட்டா.. மாமனோட சொத்து பூராவும் இவனுக்குத்தானே..?”
“இதுக்கு இப்படிச் சொல்ற.. அவன் ஆள் வெள்ளையும்.. சொள்ளையுமா.. அழகாய்.. அம்சமாய் இருக்கான்… நம்ம ஆளு ரவுடி போல இல்ல இருக்கான்..”
“ரவுடி.. ரவுடி போலத்தானே இருப்பான்..? ஹா.. ஹா..”
“ஆமாம்.. இவன் பெரிய ரவுடி.. கட்டிக்கப் போற பெண்ணை தோத்துப்புட்டு வந்து நிற்கறவனெல்லாம் ஒரு ரவுடியாடா..?”
இரவு வெகு நேரம் கழித்து.. ஊர் அடங்கிய பின்னால் வீட்டுக்கு வந்த மகனுக்காக கதவைத் திறந்த செவ்வந்தி..
“எங்கேடா தம்பி போயிட்ட..? இன்னைக்கு உன் மாமன் வீட்டில ஊருக்கே விருந்து ஆக்கிக் போட்டாங்க.. நீ ஒருவாய் சாப்பிடாமல் போயிட்டயே..?” என்று ஆற்றாமையுடன் கேட்டாள்..
“இப்படி சாப்பாட்டுக்கே ஆலாய் பறந்து, பொண்ணை விட்டுக் கொடுத்துவிட்டு வந்து நில்லு..” துரைசிங்கம் சீறினான்..
“என்னடா மகனே.. இப்படியொரு குண்டைத் தூக்கி என் தலையில் போடுற..?” செவ்வந்தி விதிர்த்தாள்..
“எதுக்கும்மா இப்படி அலறுற..? அப்படி நான் என்ன கேட்கக் கூடாததைக் கேட்டுட்டேன்..? என் மாமன் மகளைக் கட்டிக்க எனக்கு உரிமை இல்லையா..?” வாதாடினான்..
‘தகுதி இருக்கணும்..’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள் செவ்வந்தி..
நினைப்பதை எல்லாம் எல்லாராலும்.. எல்லா நேரங்களிலும் வெளியில் சொல்ல முடிவதில்லை..! இது செவ்வந்திக்கு அப்படிப்பட்ட நேரம்..
கணவனை இழந்து, அண்ணனின் நிழலில் மகனை வளர்த்துக் கொண்டிருப்பவளுக்கு மகனின் மனம் கோண பேச மனமில்லை.. எனவே, பேச்சின் போக்கை வேறு திசையில் திருப்பி விட்டுவிட்டாள்..
“என் அண்ணனுக்கு மகள் மேல் உயிர்.. கஸ்தூரி எதைச் சொன்னாலும் அவர் கேட்பார்.. கஸ்தூரி, சரவணன் வேணும்னு கேட்டுவிட்டாள்.. கல்யாணத்திற்கு தேதியைக் குறிச்சிருக்கார்.. நாளைக்கே நீதான் வேணும்னு அவ சொல்லிவிட்டால்.. கல்யாணத்தை உன்னுடன் நடத்தி வைத்துவிடுவார்.. என்ன செய்யலாம்.. கஸ்தூரி, சரவணன் மேலல்ல ஆசைப்பட்டுவிட்டாள்..”
மகனைச் சமாதானம் செய்ய செவ்வந்தி அடிக்கடி இந்த வார்த்தைகளை பிரயோகிக்க ஆரம்பித்தாள்..
அதன் விளைவு எதிர்மறையாய் அமைந்து போகும் என்று அவள் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.. பாவம்..!
‘சொல்ல வைக்கிறேன்.. இந்த துரைசிங்கம்தான் வேணும்னு கஸ்தூரியின் வாயால் நான் சொல்ல வைக்கிறேன்..’
மனதில் சூது வைத்துக்கொண்டான்..
அது தெரியாமல் செவ்வந்தி.. மகன் அமைதியாகி விட்டான் என்று நினைத்து அமைதியாகிவிட்டாள்..
மகனின் மனதில் இருக்கும் வஞ்சகமும்.. சூதும் அவளுக்கு தெரியாமலே போய்விட்டது..
தெரிந்திருந்தால் வேரிலேயே அதைப் பிடுங்கி எறிந்திருப்பாள்.. தாயால் பண்படுத்த முடியாத மகனின் போக்கு எங்குமில்லை..
செவ்வந்தி அறியாமல் துரைசிங்கம் தன் வேலைகளைத் தொடங்கினான்.. வயல்வெளியை விட்டுவிட்டு.. தாய் மாமனின் வீட்டிலேயே அதிக நேரத்தைச் செலவிடவும் ஆரம்பித்தான்..
Reviews – Katrodu Thuthuvitten / காற்றோடு தூதுவிட்டேன்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.