Chapter 06
துரைசிங்கத்திற்கு அவன் சிக்கலாக்க வேண்டிய காதல் கதைக்கு ஒரு நூல் முனை கிடைத்துவிட்டது.. தலையை ஆட்டிக் கொண்டு அதை ரசித்தபடி கண்களில் வன்மம் மின்ன மனதிற்குள் கூறிக்கொண்டான்..
‘சரவணா.. நீ வகையாய் சிக்கிக் கொண்டாயடா.. இதை வைத்தே என் திருவிளையாடலை ஆரம்பிக்கிறேன் பார்..’
துரைசிங்கம், கஸ்தூரியோடு வளர்ந்தவன். அவளது குணாதிசயம் அவனுக்கு அத்துபடி..
கஸ்தூரி பால் மனம் கொண்டவள்.. யார் எதைச் சொன்னாலும் நம்பிவிடுவாள்.. தான் மிகவும் நேசிக்கும் நபரோ.. பொருளோ.. தனக்கு மட்டுமே சொந்தமாக இருக்க வேண்டும் என்று நினைப்பாள்.. சிறுவயதில் அவள் ஆசையாய் கேட்டு, ஒரு பொம்மையை தேடிப் பிடித்து மகேஷ்வரன் வாங்கி வந்து கொடுத்தார்.. அதை இரவும்.. பகலும் தன் வசம் அவள் வைத்திருந்ததையும், அதன் மேல் மற்றவர் பார்வை படவிடாமல் பாதுகாத்ததையும் நினைத்துப் பார்த்த துரைசிங்கத்தின் இதழ்களில் சிரிப்பு அரும்பியது..
சரவணன் பிரிந்து வளர்ந்தவன்.. விடுதிகளில் தங்கி படிப்பை முடித்தவன்.. வளர்ந்த பருவப் பெண்ணாகத்தான் அவன் கஸ்தூரியைப் பார்த்தான்..
அவளது குண.. இயல்பைப் பற்றி அதிகம் அறிய வில்லை.. அறிந்திருந்தால் ஒருவேளை.. இந்த விபரீத விiயாட்டில் ஈடுபடாமல் இருந்திருப்பானோ.. என்னவோ..?
சரவணன் கண்களில் காதல் மின்ன, கஸ்தூரியின் மஞ்சள் மேனியை ஆசையுடன் பார்த்தபடி மேலும் தொடர்ந்தான்..
“அடுத்து என் இரண்டாவது மாமா சேசகோபாலனின் மகள் நிஷா.. அவள் சிறுவயதில் டெல்லியில் படித்தாள்.. பெரியவளானதும் வெளிநாட்டில் படிக்க பறந்துவிட்டாள்.. அவள் நடந்து வந்தால்.. நம் இந்தியாவில் உள்ள அத்தனை ‘மாடல்’ அழகிகளும் பிரமித்துப் போய்விடுவார்கள்.. அப்படி ஒரு நளினம்..”
கஸ்தூரியின் மான் விழிகளில் தெரிந்த அச்சத்தில் பிரமித்துப் போய் கட்டுண்டு இருந்தவன், சரளமாய் சரடுவிட்டான்..
அவளது கருவிழிகளின் ஓரத்தில் நீர் முத்துகள் திரண்டன..
“ஸ்டைல்ன்னா ஸ்டைல்.. அப்படியொரு ஸ்டைல்..! வாயைத் திறந்தால் பாரின் இங்கிலீசை அட்டகாசமாகப் பேசுவாள்.. நீயும் இருக்கிறாயே.. பட்டிக்காடு.. ஒரு வார்த்தை உருப்படியாய் இங்கிலீஸ் பேசுவாயா..? படித்து என்ன பிரயோஜனம்..? ம்ஹூம்..? நீ ஒன்றுக்குமே லாயக்கு இல்லைடி..”
கஸ்தூரியின் நீண்ட பின்னலில் பார்வை தவழ.. தன் காதலியை அள்ளிப் பருகுவது போல் பார்த்துக்கொண்டே இதைக் கூறினான் சரவணன்.. கஸ்தூரியின் பார்வை தொலைதூர வானில் நிலைத்திருந்தது..
சரவணனைப் பார்த்திருந்தால் ஒருவேளை அவனது காதலை அவள் உணர்ந்திருப்பாள்.. அவள்தான் வெறுமை நிறைந்த மனத்தோடு இலக்கில்லாமல் வெறித்துக் கொண்டு உட்கார்ந்துவிட்டாளே..!
“அவர்கள் இரண்டு பேரையும் ஒருத்தி தூக்கிச் சாப்பிட்டு விடுவாள்னா… அவள் எப்படிப்பட்ட தேவதையாக இருப்பாள்ன்னு நான் உனக்குச் சொல்ல வேண்டுமா..?”
“எவ.. அவ..?”
எரிச்சலுடன் கஸ்தூரி கேட்டாள்.. சரவணனுக்கு இன்னும் சிரிப்பு வந்தது..
தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, ‘அது நீதாண்டி..’ என்று மனதிற்குள் கூறிக்கொண்டான்.. வெளியே ஒன்றும் தெரியாதவன் போல் முகத்தை வைத்துக் கொண்டு..
“வேறு யார்.. என் மூன்றாவது மாமா வாசுதேவனின் மகள் ஷாஷாதான்..”
“ஷாஷாவா..?”
“ஆமாம்.. ஏன் இப்படிக் கேட்கிறாய்..?”
“இப்படியெல்லாம் கூட பெயர் வைப்பாங்களா..?”
“அவர்கள் அதிக நாகரிகம்.. அப்படித்தான் வைப்பார்கள்.. உன்னைப் போல் பட்டிக்காட்டில் பிறந்திருந்தால் ‘கஸ்தூரி’ன்னு கர்நாடகமாய் பெயர் வைத்திருப்பார்கள்..
பெயரைப் பார்.. கஸ்தூரியாம்.. கஸ்தூரி..! இதுவே என் மாமன் மகள்களின் பெயரைக் கேட்டாயில்லை.. ஆஷா.. நிஷா.. ஷாஷா.. பெயர்ன்னா அது பெயர், ஆஹா.. ஆஹா..”
கஸ்தூரிக்கு அழ வேண்டும் போல் இருந்தது.. அவள் பதில் கூறாமல்.. தன் பூஜைக் கூடையை எடுத்துக்கொண்டு சரவணனிடம் சொல்லிக்கொள்ளாமல் கோயிலைவிட்டு ஓட்டமும், நடையுமாய் வெளியே விரைந்துவிட்டாள்..
புருவங்கள் முடிச்சிட அவள் சென்ற பாதையையே வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தான் சரவணன்.. அவன் மனதில்.. கஸ்தூரியைக் கண்டதும் அவன் எழுதிய கவிதையின் வரிகள் ஓடின..
‘கஸ்தூரி…
பொருத்தமான பெயரடி உனக்கு..!
உன் கண்களில் தெரியும் அச்சம்..
கஸ்தூரிமானின் அச்சம்..
உன் மேனியின் நிறமோ..
கஸ்தூரி மஞ்சளின் நிறம்..
பொருத்தமான பெயரடி உனக்கு..!’
அவளது பெயரை உச்சரிக்கும்போதே வாய் மணப்பதாய் உணர்பவனின் நெஞ்சத்தை அறியாமல், அவன் நேசிப்பவள் சென்றுவிட்டாள்.. தோள்களைக் குலுக்கியவன்.. எழுந்தான்..
மறுநாள் மாலையில் அவன் வந்து காத்திருக்க.. தூண் மறைவில் துரைசிங்கமும் கண்காணிப்பதற்காக காத்து நிற்க.. தளர்ந்த நடையோடு கஸ்தூரி வந்தாள்..
முதலில் வந்துவிட்ட சரவணன், அவளது நெற்றியில் குங்குமப் பிரசாதத்தை இட்டுவிட.. அவள் கண்களில் இருந்து ‘பொல பொல’ வென்று கண்ணீர் துளிகள் உதிர்ந்துவிட்டன..
‘இன்றைக்கு வம்பிழுக்க வேண்டாம்..’ என்று மனதிற்குள் முடிவு செய்து கொண்டான்.. கஸ்தூரியின் கை விரல்களோடு தன் விரல்களைக் கோர்த்துக் கொண்டான்..
அதைப் பார்த்த துரைசிங்கம் கண்கள் சிவந்தான்..
சரவணனின் விரலோடு.. விரல் பிணைத்திருந்த கஸ்தூரியோ.. கொஞ்சம் மனப்பாரம் குறைவதை உணர்ந்தாள்..
“ஏண்டி.. நேற்று என்னிடம் சொல்லாமல் போன…?”
“சும்மாதான்..”
“இன்னைக்கு ஏன்… இவ்வளவு நேரம் கழித்து வந்தாய்..?”
“சும்மாதான்..”
“உன் முகம் ஏன் வாடி இருக்கிறது..?”
“சும்மாதான்..”
“இப்படி ‘சும்மாதான்.. சும்மாதன்’னு சொல்பவள் ‘சும்மா’ இருக்காமல் ஏண்டி.. உன் மனதை நீயே கலங்கடித்துக் கொள்கிற..? எனக்கு என்ன வேலை வெட்டி இல்லைன்னு நினைத்தாயா..? கரும்பு மில்லில் ஆயிரம் வேலைகள் இருக்கு… அத்தனையையும் போட்டுவிட்டு, உன் முகத்தைப் பார்க்க ஓடி வந்திருக்கிறேன்.. நீயானால் எதையாவது பினாத்திக் கொண்டிருக்கிற.. அப்புறம் எனக்கு கோபம் வருமா.. வராதா..?”
மண்டபத்தின் மேல் படியில் அவன் அமர்ந்திருக்க.. ஒரு படி தள்ளி.. அடுத்த படியில் அமர்ந்திருந்த கஸ்தூரி ஆறுதல் தேடி அவன் மடியில் தலை சாய்த்தாள்..
சரவணன் உருகிவிட்டான்.. ‘எல்லாமும் எனக்கு நீ ஒருவன் மட்டும்தான்..’ என்பதை செயலில் உணர்த்திய கஸ்தூரியின் காதல் கண்டு அவன் மனம் தளும்பியது..
அவளது தலைமுடியைக் கோதியவாறு மெல்லிய குரலில் அவளுக்கு மட்டும் கேட்கும்படி பாடினான்..
“என் மனது ஒன்றுதான்..
உன் மீது ஞாபகம்..!
வான் நிலவு ஒன்றுதான்..
வான் மீது சத்தியம்..!”
கஸ்தூரி இப்போது வாய் விட்டு அழுதாள்.. அவனது கால்களை இறுக்கமாக சரணாகதி வேண்டுபவள் போல பற்றிக்கொண்டாள்..
அன்று வீடு திரும்பும்போது.. அவளது நெஞ்சில் தைரியமும்.. சரவணனுக்கு அவள் மேல் இருந்த காதல் பற்றிய நம்பிக்கையும் முளை விட்டிருந்தன..
துரைசிங்கம் இந்தத் திருப்பத்தை எதிர்பார்க்க வில்லை.. சரவணன் மேலும்.. மேலும்.. கஸ்தூரியின் பொறாமையைத் தீயை தூண்டிவிடுவான்.. நேரம் பார்த்து அதில் பெட்ரோல் ஊற்றி, சரவணனின் காதலை அந்தத் தீயில் போட்டு பொசுக்கிவிடலாம் என்று அவன் போட்ட கணக்கு தவறிவிடுமோ என்று பயந்துவிட்டான்..
மாமன் வீட்டில் கஸ்தூரியின் முகத்தில் பழைய மகிழ்வு மீண்டிருந்ததைக் கண்ட துரைசிங்கம், அவளுக்குள் முளை விட்டிருந்த நம்பிக்கையை கண்டு கொண்டான்..
‘ஊஹூம்.. இந்த இணக்கம் இவர்களுக்கு வரக்கூடாதே.. இதை முளையிலேயே கிள்ளி எறிந்து விட வேண்டுமே..’
துரைசிங்கம் தருணம் பார்த்துக் காத்திருந்தான்.. கஸ்தூரியின் மனதைக் கலைப்பதற்கான நேரமும் அவனுக்கு கூடிய விரைவிலேயே வாய்த்துவிட்டது..
கோடைவிடுமுறையை.. அத்தையின் கிராமத்தில் கழிக்க விரும்பிய சரவணனின் மூன்று மாமன்களின் பெண்களும் விளாத்திகுளத்திற்கு வருகை தந்தனர்..
Reviews – Katrodu Thuthuvitten / காற்றோடு தூதுவிட்டேன்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.