Chapter 05
தன்னைச் சுற்றி ஓர் மனிதச் சிலந்தி.. சதி வலை பின்னிக் கொண்டிருப்பதை அறியாதவளாய் கஸ்தூரி கனவுகளில் சஞ்சரித்தாள்…
தனது காதல் ஜெயித்துவிட்டதை அவளால் இன்னமும் கூட நம்ப முடியவில்லை.. சரவணன் தனக்கு மட்டும்தான் என்பது உண்மைதானா என்ற பிரம்மிப்பில் இருந்தாள்.. சரவணனை கோயிலில் சந்தித்தபோதெல்லாம் அதைக் கேட்கவும் செய்தாள்..
“ஏன் அத்தான்.. நிஜமாகவே உங்களுக்கு என்னை பிடித்திருக்கிறதா..?”
“ஏண்டி.. நிச்சயம் பண்ணி பரிசமே போட்டு விட்டேன்.. இன்னும் ஏன் இப்படிக் கேள்விகளைக் கேட்டு என் உயிரை எடுக்கிற..?”
“இல்லை அத்தான்..”
“என்ன இல்லை..?”
“அது வந்து..”
“அதுதான் வந்துவிட்டாயே.. இன்னும் என்ன..?”
“நீங்கள் ரொம்பவும் அழகு அத்தான்..”
சரவணனின் முகம் ஒளிர்ந்தது.. தான் விரும்பும் பெண்ணின் வாயால் ‘அழகு’ என்று சொல்லைக் கேட்பதும்.. அவளால் ரசிக்கப்படுவதும் எவ்வளவு பெரிய இன்பம் என்பதை அனுபவபூர்வமாய் உணர்ந்தான்..
சொன்னவளோ பேரழகி.. ஆனால், அதை உணராத அறியாமையைக் கொண்டிருந்தாள்.. அந்த அறியாமை அவளது அழகை அதிகப்படுத்த.. மூக்கைப் பிடித்துத் திருகினான்..
“சரி.. நான் அழகு.. அதுக்கு என்ன..?”
“இல்லை.. இல்லை.. உங்களுக்கு நான் பொருத்தம் தானா..?”
சரவணன் இமைக்காமல் முறைத்தான்.. அவள் பயத்துடன் விழிகளைத் தாழ்த்திக்கொண்டாள்.. தன் பின்னலில் சேட்டை பண்ணியபடியே லேசாய் இமைகளை உயர்த்தி அவனைப் பார்ப்பதும்.. அவனது முறைப்பைக் கண்டதும் உடல் நடுங்க.. இமை மூடிக்கொள்வதுமாக இருந்தவளைப் பார்த்து சிரிப்பு வந்துவிட்டது..
‘இவளை என்ன செய்தால் தேவலாம்..?’
“ஏய்ய்.. மக்கு.. கிட்ட வாடி..”
“எதுக்கு..?”
“ம்ம்.. குடும்பம் நடத்த.. அடச் சீ.. கிட்ட வா..”
அவன் அதட்டவும் அவசரமாய் அருகே வந்தாள்..
சரவணன் தன் பையிலிருந்த செல்போனின் திரையை காண்பித்தான்..
“இதைப் பாரு..”
“இது செல்போன்.. இது எனக்குத் தெரியாதா..?”
“அறிவாளி.. செல்போனில் உன் முகம் தெரிகிறது.. அதைப் பாரு..”
கஸ்தூரி பார்த்தாள்.. அவளது முகம் அழகாகத் தெரிந்தது..
“பார்த்துவிட்டாயா..?”
“ம்…”
“எவ்வளவு அழகாக இருக்கிறாய் பார்த்தாயா..?”
“ம்.. ம்..”
“எனக்கு பொருத்தம்தான் என்பதை புரிந்துகொள் கிறாயா..?”
“ம்…”
“வாயைத் திறந்து சொல்லுடி..”
“ம்.. ம்..”
கஸ்தூரி அன்று சமாதானமானது போல் போய் விட்டாள்.. மறுநாள் மாலையில் புதிதாய் ஒரு கேள்வி யோடு அவனுக்காக காத்திருந்தாள்.. சரவணன் வந்ததும் தன் கையில் இருந்த விபூதி, குங்குமத்தை அவனது நெற்றியில் பூசி விட்டாள்.. அவன் வேண்டுமென்றே கண்ணை கசக்கவும், அவள் பதறிப்போய் அருகே தன் வாயைக் குவித்து ஊதிவிட்டாள்..
அவளது அக்கறையைக் கண்டு அவன் மனம் மிருது வானது.. தனக்கு வெகு அருகில் இருந்த அவளது கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டான்..
கஸ்தூரியின் உடல் சிலிர்த்தது.. வெட்கத்துடன் விலகிக் கொண்டாள்.. அவள் ஏதோ கேட்க நினைப்பது அவனுக்குப் புரிந்தது..
“என்னடி..?”
“என்ன..?” அவள் விழிகளை விரித்தாள்..
“என்னவோ உன் அழகிய மண்டைக்குள் குடைந்து கொண்டிருக்கிறதே.. அது என்னன்னு கேட்டேன்..”
“சொன்னால் நீங்க கோபித்துக்கொள்வீங்க..”
“சொல்லாவிட்டாலும் நான் கோபித்துக்கொள்ளத் தான் செய்வேன்..”
“அத்தான்..”
“சொல்லு..”
“அந்தப் பெண்கள் மூன்று பேரும் வெளிநாட்டில் படித்தவர்களாமே..?”
அவள் யாரைச் சொல்கிறாள் என்றுகூட சரவணனுக்குத் தெரியவில்லை.. புரியாமல் விழித்தான்..
“யாரைச் சொல்கிற…?”
“வேறு யாரைச் சொல்வேன்..? உங்கள் மாமன்களின் மகள்களைத்தான் சொல்கிறேன்.. அவங்க மூன்று பேரும் ரொம்ப நாகரிகமாமே..?”
சரவணனுக்கு சிரிப்பதா.. இல்லை அழுவதா என்றே தெரியவில்லை..!
‘இவளுக்கு ஏன்தான் புத்தி இப்படிப் போகிறதோ..?’ என்று நொந்தபடி அவளைப் பார்த்தான்..
“ஏண்டி.. உன் லொள்ளுக்கு ஒரு அளவே இல்லையா..?”
“இதுக்குத்தான் நான் சொல்லமாட்டேன்னு சொன்னேன்.. நீங்கள்தான் என்னை வற்புறுத்தி சொல்ல வச்சீங்க.. இப்ப திட்டுறீங்க..”
கஸ்தூரி அழகாக சிணுங்கினாள்.. சரவணனுக்கு அவளைத் தன்னுடன் சேர்த்து அணைத்துக்கொள்ள வேண்டும் போல் இருந்தது..
ஆனால்.. ‘இவள் ஏன் இப்படி இருக்கிறாள்..?’ யோசனையுடன் அவளைப் பார்த்தான்..
‘இதை வளரவிடுவது ஆபத்தாயிற்றே.. வாழ்நாள் முழுவதும் இவள் இப்படியே பிதற்றிக் கொண்டிருந்தால் எப்படி நிம்மதியாய் வாழ முடியும்..? இவளுக்கு இதுவே பிழைப்பாக போய்விட்டதே..’
அவளை சரி பண்ணுவதற்கு என்ன செய்வது என்ற யோசனையில் அவன் இருக்க.. மாமன் மகள்களைப் பற்றிய நினைவுகளுக்குக் போய்விட்டான் என்று அவள் தப்புக் கணக்கு போட்டாள்..
“பார்த்தீங்களா.. இதுக்குத்தான் நான் அன்றைக்கே சொன்னேன்..”
“என்னத்தைடி சொன்னாய்..?”
“நீங்க உங்களுக்குப் பொருத்தமான பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கங்கன்னு சொன்னேனா இல்லையா..?”
“ஏண்டி.. நீ அடங்கவே மாட்டாயா.?”
“பார்த்தீங்களா.. என்னைக் கண்டாலே உங்களுக்குப் பிடிக்காமப் போயிருச்சு… இதுக்குத்தான் நான் அப்பவே சொன்னேன்..”
“என்ன சொன்ன..?” என்று அவன் கேட்கவில்லை..
அவள் என்ன சொல்வாள் என்பதுதான் அவனுக்கு மனப்பாடம் ஆகிவிட்டதே..
சரவணன் கவலையில் ஆழ்ந்தான்.. கஸ்தூரிக்கு தன் காதல் புரிய வேண்டும் என்று! தன் மனதில் கஸ்தூரியைத் தவிர வேறு யாருக்கும் இடமில்லை என்பதை அவளுக்கு எப்படித் தெரிய வைப்பது என்ற தவிப்பு..
‘அதிர்ச்சி வைத்தியம் செய்தால்தான் இவள் சரிப்படுவாள்..’ என்று முடிவிற்கு வந்தான்..
இந்த முடிவால் ஏற்படப் போகும் பின் விளைவுகளைப் பற்றி அறியாமல், தன் காதலியைப் பார்த்து மர்மமாகப் புன்னகைத்தான்..
‘இவர் ஏன் இப்படிச் சிரிக்கிறார்..?’ கஸ்தூரியின் விழிகளில் தெரிந்த அச்சத்தைக் கண்டு தனக்குள் மேலும் நகைத்துக் கொண்டான் சரவணன்..
‘முள்ளை.. முள்ளால்தான் எடுக்க வேண்டும்..’
இளம் வயதிலேயே தனியாகத் தொழில் ஆரம்பித்து வெற்றிபெற்ற சரவணன்.. தனக்குள் மனக் கணக்கைப் போட்டான்.. அவன் கணக்கு பிசகி, அவனது காதல் கேள்விக்குறியாகப் போவதை அறியாமல் கஸ்தூரியிடம் வம்பு வளர்க்க ஆரம்பித்தான்..
“இப்ப என்னங்கிற.. நீ..? உனக்கு என் மாமன் மகள்களைப் பற்றித் தெரிய வேண்டும்.. அவ்வளவு தானே..?”
“நான் ஒன்னும் அப்படிச் சொல்லவில்லை..”
“நீ எப்படிச் சொன்னாலும்.. நான் சொல்றதைக் கேட்டுக்கொள்..”
“என்னவாம்..?”
“என் பெரிய மாமா ஆதிமூலத்தின் மகள் ஆஷா ஒரு பஞ்சவர்ணக்கிளி.. அவள் அழகென்ன.. அறிவென்ன.. ஸ்டைலென்ன.. அட.. அட..”
“எதற்கு இத்தனை அடா போடுகிறீங்க…?”
“அது ஆச்சரியத்தால் வந்த ‘அட’டீ..”
“ஆச்சரியத்தால் வந்ததா..?”
“ஆமாம்.. அப்படியே பாலைக் குழைத்து உடம்பெல்லாம் அப்பினாற் போல ஒரு நிறம்..”
சரவணன் இதைச் சொன்னதும், கஸ்தூரி அவசரமாய் தனது பொன் மஞ்சள் நிறத்தைப் பார்த்துக்கொண்டாள்.. அதைக் கவனிக்காதவன் போல் உதட்டில் நமட்டுச் சிரிப்போடு, மேலும் கதை பினைய ஆரம்பித்தான்..
கலவரமாய் கதை கேட்டுக் கொண்டிருந்தவளும்.. காதலாய் கதை சொல்லிக்கொண்டிருந்தவனும், தூண் மறைவில் மறைவாய் நின்று அவர்கள் பேசுவதை கவனிக்கும் துரைசிங்கத்தைக் கவனிக்கவே இல்லை..
Reviews – Katrodu Thuthuvitten / காற்றோடு தூதுவிட்டேன்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.