Chapter 15
கதிரேசனின் தங்கையான காயத்ரியைக் காதல் செய்தபோது.. மகேஷ்வரன் வெறும் பத்து ஏக்கர் நிலத்துக்கு சொந்தக்காரர்.. ஊரிலேயே பாதிச் சொத்தை தன் வசம் வைத்திருக்கும் கதிரேசன், தன் தங்கையைக் கொடுக்கத் தயங்கியதை.. இன்றளவும் அவர் மறக்க வில்லை..
‘ஏழை காதலிக்கக் கூடாதா..?’ என்று துரைசிங்கம் கேட்ட கேள்வி அவரது இதயக் கதவை தட்டி.. அந்த நாள் நினைவுகளை விழித்து எழச் செய்துவிட்டது..
காதலித்து மணந்த மகேஷ்வரன், துரைசிங்கத்தின் காதலுக்கு காவலாய் நிற்க தீர்மானித்துவிட்டார்..
எனவே, மனைவியின் ஒதுக்கத்தைக் கண்டு கொள்ளாமல் வீர நடைபோட்டு மகளின் அறைக்குள் சென்றார்..
அங்கே கட்டிலில் குப்புறப்படுத்து அழுது கொண்டிருந்தாள் கஸ்தூரி, கனிவுடன்.. மகளின் அருகே அமர்ந்து, கூந்தலை வருடிக் கொடுத்தார் மகேஷ்வரன்..
“அப்பா..” அவசரமாய் எழுந்து அமர்ந்து முகத்தைத் துடைத்துக் கொண்டாள் கஸ்தூரி..
“அழுதாயாம்மா..?”
“இல்லைப்பா..”
“ஏன்ம்மா பொய் சொல்றே.. அப்பன்காரன் நான் உயிரோடு இருக்கும்போது.. உன் கண்ணில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வரலாமா..?”
“நான் ஏதோ வருத்தத்தில் இருந்துட்டேன்ப்பா..”
“உன் மனசில் என்ன இருக்குன்னு எனக்குத் தெரியும்மா..”
மகேஷ்வரன் நிதானமாய் கூறவும், கஸ்தூரி திகிலுடன் தந்தையைப் பார்த்தாள்..
“உங்களுக்குத் தெரியுமா.. என்ன தெரியும்..?”
“எல்லாம் தெரியும்..”
“எல்லாம்ன்னா..?”
“துரைசிங்கம் எல்லாத்தையும் சொல்லிவிட்டான்ம்மா..”
“அப்பா..”
அதிர்ச்சியில் கஸ்தூரியின் இதயமே நின்று போய் விடும் போல இருந்தது..
‘துரைசிங்கம் அப்பாவிடம் சொல்லிவிட்டானா..? இனி எப்படி அப்பாவின் முகத்தில் நான் விழிப்பேன்..?’
அவள் தவிப்பதை அறியாத காதலின் காவலர் மகேஷ்வரன் மேலும் தொடர்ந்தார்..
“அவன் சொன்ன பின்னால்தான் நான் ஒரு முடிவிற்கு வந்தேன்..”
‘அவன் என்ன சொன்னான்..? அப்பா என்ன முடிவு செய்தார்..?’
“உன்னை அவனுக்கே கல்யாணம் பண்ணி வைத்து விடுகிறேன் கஸ்தூரி.. நீ கவலைப்படாதே..!”
‘ஐயோ.. தொட்டவனுக்கே கட்டி வைத்துவிடலாம்னு அப்பா முடிவு பண்ணிவிட்டாரா..?’
“இதுதான் சரின்னு நான் நினைக்கிறேன்..”
‘அப்போ.. சரவணனை கல்யாணம் பண்ணிக்க எனக்கு தகுதி இல்லைன்னு அப்பா முடிவு பண்ணிட்டாரா..?’
“அடுத்த முகூர்த்தத்திலேயே உனக்கும், துரைசிங்கத்திற்கும் கல்யாணம்..”
‘அதற்கு பதில் என்னை வெட்டியே கொன்று விடுங்கள் அப்பா..’
“உன் அம்மாவைப் பற்றி நீ கவலைப்படாதே..”
‘நான் என்னைப் பற்றித்தான் கவலைப்படுகிறேன்..’
“யார் தடுத்தாலும் துரைசிங்கம்தான் உனக்கு மாப்பிள்ளை..”
‘அதற்கு பதில் நான் தூக்கில் தொங்கிவிடுகிறேன்..’
“அவனுக்கென்னம்மா ராஜா.. என் தங்கை மகன்.. நீயேன் இதைப் பெரிதா நினைத்துக்கொண்டு அழ வேண்டும்..?”
‘அப்போ.. உங்க தங்கச்சி மகன் எது செய்தாலும், நீங்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராய் இருக்கிறீர்கள்.. உங்களிடம் எனக்கு நியாயம் கிடைக்காதாப்பா..? அவன் செய்தது உங்களுக்கு பெரிய தப்பாக தோன்றவில்லையா..?’
“சொத்து சுகம் யாருக்கும்மா வேண்டும்..? குணம் தான் பெரிது..”
‘அந்தக் குணம் சரவணனிடம் மட்டும்தான்ப்பா இருக்கிறது.. இந்த நாயிடம் இல்லை.. இது ஏன் உங்களுக்குத் தெரியவில்லை..?’
“நான் இன்றைக்கே அழைப்பிதழ் அடிக்கக் கொடுத்துடறேன்..”
‘அப்படியானால் நானும் இன்றைக்கே இந்த உலகத்தை விட்டுப் போய்விடுகிறேன்..’
“எப்படியோ.. நான் இந்த முடிவிற்கு வர துரைசிங்கம் தான் காரணம்..”
‘என்னுடைய முடிவிற்கும் அவன்தான் காரணம்ப்பா..’
மகேஷ்வரன் எழுந்து அறையைவிட்டுப் போகும் போது.. கஸ்தூரி தலைநிமிர்ந்து அவரது முதுகை பார்த்தாள்.
கடைசியாக ஒரு முறை தகப்பனின் முகத்தைப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது..
“அப்பா..” என்று அழைத்தாள்..
“என்னம்மா..?” அவர் அவசரமாய் திரும்பினார்..
“ஒன்றுமில்லையப்பா.. அம்மாவிடம் இதைச் சொன்னீங்களா..?”
“சொல்லிட்டேன்ம்மா..”
கஸ்தூரியை அவமானம் சூழ்ந்துகொண்டது..
‘அம்மாவிற்கும் இந்த அசிங்கம் தெரிந்துவிட்டதா..?’
மகள் மவுனித்துவிடவும்.. மகேஷ்வரன் வெளியே போய்விட்டார்..
கஸ்தூரி எழுந்தாள்.. முகத்தைத் துடைத்துக் கொண்டாள்.. தாயைத் தேடிப் போனாள்.. பின் பக்க முற்றத்தில் இருந்த துணி துவைக்கும் கல்லிக் சோகச் சித்திரமாய் காயத்ரி அமர்ந்திருந்தாள்..
“அம்மா..” என்று தீனமாக அழைத்தாள் கஸ்தூரி..
“ச்சீ.. என் முகத்திலேயே விழிக்காதே..” வெறுப்புடன் முகம் திருப்பிக்கொண்டாள் காயத்ரி..
திட்டம் போட்டு தன் அண்ணன் குடும்பத்தை.. கணவனும், மகளும் சேர்ந்து அவமானப்படுத்திவிட்டார்கள் என்ற கோபம் அவளுக்கு..
கஸ்தூரிக்கோ கால்களுக்குக் கீழ் பூமி நழுவுது போல் இருந்தது..
‘கடைசியில் அம்மாவும் என்னை வெறுத்துட் டாங்களா..?’
அசையாமல் ஒரு நிமிடம் நின்றிருந்தவள், வேகமாய் மாடி அறைக்குப் போனாள்.. மர பீரோவைத் திறந்தாள்.. பூச்சி மருந்து பாட்டில்கள் அணிவகுத்து நின்றன.. ஒன்றை எடுத்து, மூடியைத் திறந்து வாயில் ஊற்றிக்கொண்டாள்.. அங்கேயே படுத்துவிட்டாள்..
சற்று நேரத்தில் காலை உணவுக்காக கஸ்தூரியை அழைத்து கொண்டே மாடியறைக்கு வந்த பொன்னம்மாள் வாயில் நுரை தள்ளிக் கிடந்த கஸ்தூரியைக் கண்டதும் பதறிப் போய் அலறினாள்..
“ஐயோ.. ஐயையோ.. எல்லாரும் ஓடி வாங்களேன்..”
வீட்டில் இருந்த பண்ணை ஆட்கள்.. அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள்.. காயத்ரி.. செவ்வந்தி என அனைவரும் ஓடி வந்தனர்..
பக்கத்தில் மூடி திறந்து காலியாகக் கிடந்த பூச்சிமருந்து பாட்டில் செய்தியைச் சொல்லியது..
காயத்ரி.. தன் கோபத்தை மறந்து கதறினாள்.. எதனால் மகள் இந்த முடிவிற்கு வந்திருக்கக்கூடும் என்று அவளால் யூகிக் முடியவில்லை..
“கஸ்தூரி.. நான் பெற்ற தங்கமே..! கண்ணைத் திறடி..”
“மதனி.. அழாதீங்க.. டேய் தங்கராசு.. வண்டியைக் கட்டுடா..”
“கட்டை வண்டியில் போனா.. எப்ப போய் சேருகிறது..? பேசாமல் தங்கச்சியைக் கட்டிக்கப் போறவருக்கு சொல்லிவிடு அத்தை.. அவரே காருக்கார மகராசன்.. ஒரு நொடியில் பறந்து வந்திர மாட்டாரா..?”
மகளின் திருமணத்திற்கு அழைப்பு அடிக்க துரைசிங்கத்தையும் கூட்டிக்கொண்டு, பைக்கில் ஏறி அருகில் இருந்த நகரத்திற்கு போய்விட்ட மகேஷ்வரனுக்கு விசயத்தைத் தெரியப்படுத்த முடியாமல் போக.. சரவணனுக்கு செய்தி விரைந்தது..
அடுத்த சில நிமிடங்களில்.. அவனது காரின் ஒலி வாசலில் கேட்டது.. நான்கே எட்டில் மாடி அறையை அடைந்தவன்.. வாயில் நுரை தள்ளி தரையில் வீழ்ந்து கிடந்த கஸ்தூரியை பார்த்தான்.. ஆவேசத்துடன் அவளைக் கையில் அள்ளிக்கொண்டான்.. பின்னால் காயத்ரி வருகிறாளா.. இல்லையா என்று கூடப் பார்க்காமல்.. காரின் பின் பக்க கதவைத் திறந்தான்.. அவசரமாய் உள்ளே ஏறிய காயத்ரி, மகளை மடி தாங்கிக்கொள்ள.. செவ்வந்தி.. சரவணன் அருகே அமர்ந்து கொண்டாள்..
“காலையில காப்பிகூட குடிக்கலை, நான் இட்லியை அவித்து வைத்துட்டு.. சட்னியை அரைச்சுட்டுப் பார்த்தால்.. யாரும் சாப்பிடவரலை.. கூப்பிடப் போனால்.. இந்தப் பொண்ணு இப்படி குடை சாய்ஞ்சு கிடக்குது..”
விசாரித்தவர்களுக்கு பொன்னம்மாள் விளக்கம் சொல்லிக் கொண்டிருக்க.. கார் அங்கிருந்து பறந்தது..
மருத்துவமனையில் காரை நிறுத்திவிட்டு.. கஸ்தூரியை தூக்கிக்கொண்டு உள்ளே ஓடினான் சரவணன்.. அடுத்த சில மணி நேரங்கள்.. எல்லோரும் அனலில் நிற்க மருத்துவர்கள்.. இடைவிடாமல் போராடி கஸ்தூரியின் உயிரை மீட்டனர்..
Reviews – Katrodu Thuthuvitten / காற்றோடு தூதுவிட்டேன்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.