Chapter 16

0Shares

கிழிந்து போன நாராய் கட்டிலில் கிடந்தாள் கஸ்தூரி.. அவளது தலைமாட்டில் அமர்ந்துகொண்டு சத்தமே இல்லாமல் கண்ணீர் வடித்தாள் காயத்ரி.. வெளிவராந் தாவில் நின்று கொண்டு விளாத்திகுளத்துக்காரரிடம் பேசிக் கொண்டிருந்தாள் செவ்வந்தி.. அறையில் யோசனையுடன் குறுக்கும், நெடுக்குமாய் நடந்தான் சரவணன்..

“சொல்லுங்க அத்தை.. என்னதான் நடந்தது..?”

“எனக்கு ஒன்றுமே பிடிபடலயே சரவணா.. நேற்று உன் மாமா, கல்யாணத் தேதியைப் பத்திப் பேசினாரு.. அப்ப கஸ்தூரி குறுக்கே வந்து, கல்யாணமே வேணாம்னு அவருகிட்ட சொல்லி அழுதாள்..”

“என்ன சொல்கிறீங்க..” சரவணனின் நடை நின்று விட்டது..

“ஆமாம்.. கல்யாணத்தில் அவளுக்கு விருப்ப மில்லைன்னு சொல்லிட்டா..”

“இருக்காது அத்தை.. கஸ்தூரி அப்படி சொல்லி இருக்க மாட்டாள்..”

“நீ வேற ஏன்ப்பா எரிகிற கொள்ளியில இன்னும் கொஞ்சம் மண்எண்ணையை ஊத்துற..? அவள் அப்படித்தான் சொன்னாள்..”

“எப்படி அத்தை..? அவள் என்னைக் காதலித்தாள்..”

“என்னப்பா சொல்கிற..?” ஆச்சரியத்துடன் கேட்ட காயத்ரியின் கண்ணீர் இப்போது நின்றுவிட்டது..

“ஸாரி அத்தை.. நானும், அவளும் இரண்டு, மூன்று வருசங்களாகவே காதலிக்கிறோம்.. எங்கள் காதலை அப்பாவிடம் சொன்னேன்.. அதனால்தான் உங்கள் வீட்டிற்கு பெண் கேட்டு வந்தார்.. அம்மாவும் அவங்க அண்ணன் மகளை மருமகளா ஆக்கிக்கணுங்கிற எண்ணத்தை விட்டாங்க.. என் மாமன் பெண்களும், எங்க காதலை ஆதரித்து விலகிக்கொண்டார்கள்.. கதை இப்படி இருக்கும்போது எப்படி கஸ்தூரி என்னைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லி இருப்பாள்..?”

காயத்ரி தன் சேலை முந்தானையில் முகத்தை துடைத்துவிட்டு யோசனையுடன் எழுந்தாள்.. அறை வாயிலில் நின்றுகொண்டிருந்த செவ்வந்தியை அழைத்தாள்..

“என்ன மதினி..?”

“நம்ம கஸ்தூரிக்கு துணி மாத்திவிடணும்.. கொஞ்சம் கடைத்தெரு வரைக்கும் போய் ரெண்டு ‘நைட்டி’ வாங்கிக் கிட்டு வர்றியா..?”

“சரி மதினி..”

செவ்வந்தி பணத்தை வாங்கிக்கொண்டு போனதும்.. அறைக் கதவை அடைத்தாள் காயத்ரி.. அவளது செய்கைகளைப் புரியாத பார்வையுடன் பார்த்துக் கொண்டிருந்த சரவணன்,

“என்ன விசயம் அத்தை..?” என்று கேட்டான்..

“சரவணா.. நான் தப்ப செய்துட்டேன்.. கஸ்தூரி கொஞ்ச நாட்களாகவே கலங்கிப் போயிருந்தாள்.. முகமே சரியில்லை.. அதை வைத்துத்தான் உன் மாமா, இந்தக் கல்யாணத்தில் மகளுக்கு இஷ்டமில்லைன்னு நினைத்து விட்டார்..”

“அது.. வேறு ஒன்றுமில்லை அத்தை.. எங்களுக்குள் சின்ன கசமுசா.. அவள் மேல் நான் கொஞ்சம் கோபமாக இருந்தேன்..”

“ஏன்ப்பா..?”

“நாங்க கோயிலில் சந்திப்போம்.. அவளுக்கு தாழ்வு மனப்பான்மை.. என் மாமன் பெண்கள் மேல் பொறாமை.”

“இது பெண்களுக்கு இயல்பாய் வருகிற உணர்வு தானே…”

“நானும் அப்படித்தான் நினைத்தேன்.. ஆனால், ஒரு நாள் இவள் துரைசிங்கத்துடன் சைக்கிளில் முன் கம்பியில் உட்கார்ந்துகொண்ட கோயிலுக்குள் வந்திருந்தாள்.. அங்கே என் மாமா பெண் ஷாஷாவை பார்த்துவிட்டு, கோபித்துக் கொண்டு போய்.. கோயில் வாசலில் நான் பார்க்கும்போதே.. துரைசிங்கத்தின் தோள் மேல் சாய்ந்து அழுதாள் அத்தை..”

“நம்ம கஸ்தூரியா..? சேச்சே.. இருக்காது சரவணா..”

“கண்ணால் பார்த்த நான் என்ன பொய்யா சொல்லுறேன்..”

“என்னால் இதை இன்னமும் நம்பமுடியவில்லை.. கஸ்தூரி மனசில் கள்ளம் இல்லாம பேசிப் பழகுகிறவள்..”

“நானும் அவளை குறை சொல்லவில்லையே..! அந்த துரைசிங்கம் மனசில் விரசம் இருந்திருக்கே..”

“அவன் என்ன பண்ணினான்..?”

“என் நண்பன் சாரதிகிட்ட.. சரவணன் கனவில் கூட கஸ்தூரியைக் கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு சொன்னானாம்..”

“என்ன ஒரு நெஞ்சழுத்தம்..?”

“அதனால் கஸ்தூரியிடம் நான் கோபமாய் நடந்து கொள்ள வேண்டியதாகிவிட்டது.. அவள் என்ன இன்னும் சின்னக் குழந்தையா..? உலக நடப்பு தெரிய வேண்டாமா..?”

“நிஜம்தான்..! ஆனால், நீ மனம்விட்டுப் பேசி இருந்தால், நிலைமை இந்த அளவுக்கு முத்தி இருக்காதே சரவணா.. இப்பப் பாரு.. அந்தப் படுபாவி நினைச்சதை சாதிச்சிட்டான்..”

“ஏன் அத்தை.. அவன் என்ன செய்துவிட்டான்..?”

“அவன் ஏதோ செய்திருக்கிறான்..! இல்லாவிட்டால் உன் மாமா அவனுக்கு கஸ்தூரியை கல்யாணம் பண்ணி வைக்க முடிவு பண்ணி இருக்கமாட்டார்..”

“அத்தை…”

“ஆமாம்..! அவரும், துரைசிங்கமும் இப்ப கல்யாணப் பத்திரிகை அடிக்கத்தான் போய் இருக்காங்க..”

சரவணின் முகம் சினத்தைக் காட்டியது.. கட்டிலில் கண் மூடிக் கிடந்த கஸ்தூரியைப் பார்த்தான்..

“இவளுக்கு விசயம் தெரியுமா..?”

“தெரிஞ்சி இருக்கணும்..! அதனால்தான் பாவி மக விஷத்தைக் குடிச்சிருக்காள்.. இது அந்த மனுசனுக்கு தெரியலையே..!”

சரவணன் கலக்கத்துடன் கஸ்தூரியின் அருகே அமர்ந்து, அவளத கலைந்த தலைமுடியை நீவி சரி செய்தான்..

“தப்பு பண்ணிட்டீங்க அத்தை.. அவள் கல்யாணம் வேணாம்னு சொன்னால், அதில் ஏதாவது காரணம் இருந்திருக்கும்.. எனக்கு தகவல் சொல்வதை விட்டு விட்டு.. துரைசிங்கத்திற்கே கட்டிக் கொடுக்க நீங்க எப்படி முடிவு செய்யலாம்..? எனக்கு இவளை நன்றாகத் தெரியும்.. இவளுடைய மனசு புரியும்.. ஒரு நாளும் இவள் என்னைவிட்டு இன்னொருத்தனுக்கு பொண்டாட்டி ஆக மாட்டாள்..”

“இதை அவரிடம் யார் சொல்வது..?”

“யாரும் சொல்ல வேண்டாம்.. நான் ஒரு நாளும் கஸ்தூரியை இன்னொருவனுக்கு விட்டுக் கொடுக்க மாட்டேன்.. நீங்க ஒரு காரியம் பண்ணுங்க..”

“என்னப்பா..”

“இப்ப மாமா ஓடி வருவாரில்ல.. அவரிடம் ஏன் அவர் இந்த முடிவை எடுத்தாருன்னு கேட்டுச் சொல்லுங்க..”

“சரி..”

கதவு படபடவென்று தட்டப்பட்டது.. காயத்ரி திறந்தாள்.. துரைசிங்கம் பின் தொடர, மகேஷ்வரன் பதற்றமாக உள்ளே வந்தார்..

“என்னடி நடந்தது.. என் பொண்ணுக்கு என்ன ஆச்சு..?” அவர் பரபரப்பாக கேட்க..

“ம்.. பூச்சி மருந்தைக் குடித்துவிட்டாள்..” என்று வெறுமையாய் பதில் சொன்னாள் காயத்ரி..

“ஏண்டி.. அப்படியொரு முடிவுக்குப் போனாள்..?”

“என்னைக் கேட்டால்.. எனக்கென்ன தெரியும்.. நீங்கள் தானே அவள்கிட்ட காலையில் பேசிக்கிட்டு இருந்தீங்க.. நீங்கதான் ஏன் அவள் இப்படிப் பண்ணினான்னு காரணத்தைச் சொல்லணும்..”

“நல்லாத்தானே பேசிக்கிட்டு இருந்தா..”

“நல்லா யோசிச்சு பதில் சொல்லுங்க.. அவள் நல்லாவா பேசினாள்..?”

மகேஷ்வரனின் மனதில் ‘பளீர்’ என்று அந்தச் சிந்தனை வந்தது..

காலையில் அவர் பேசப் பேச.. தனது முகத்தையே பார்க்காமல் சிலையாய் கஸ்தூரி அமர்ந்துவிட்ட கோலம் அவரது மனக் கண்ணில் தோன்றியது..

அறையைவிட்டு வெளியேறும்போது.. அவள் ‘அப்பா..’ என்று அழைத்ததும், அவர் திரும்பி ‘என்ன..?’ என்று கேட்டபோது ‘ஒன்றுமில்லை’ என்று கூறியதும் நினைவுக்கு வந்தது..

‘என் தங்கம்.. கடைசியாய் இந்த அப்பனின் முகத்தைப் பார்த்துக்க நினைத்தாளா..?’ அவரின் நெஞ்சம் குலுங்கியது.. குமுறியது..

சரவணனின் பார்வை துரைசிங்கத்தை சுட்டெரித்துக கொண்டு இருந்தது.. அவனது பார்வையை லட்சியம் செய்யாமல், கட்டிலில் கிடந்த கஸ்தூரியை எரிச்சலுடன் பார்த்தான் துரைசிங்கம்..

‘பாவி மகள்.. இந்த ஆட்டம் காட்டுகிறாளே..! அந்த மழை நாளில் இவளைத் தொட்டு ஆள நினைச்சால் வாளியாலே அடிச்சு மண்டையை உடைத்தாள்.. இப்ப ஒரு வழியா என் மாமன்காரனை ‘கரெக்ட்’ பண்ணி.. கல்யாண பத்திரிகை அடிக்கப் போனால்.. அங்கு வாசலிலேயே இவள் சாகக் கிடக்கிறாள்ன்னு போன் வருது.. சண்டாளி.. தாலி கட்டாமலும் இவளைத் தொட விடமாட்டேன் என்கிறாள்.. தாலியைக் கட்டவும் விடமாட்டேன் என்கிறாள்.. மருந்தைக் குடித்தவள் செத்து தொலைந்திருக்க கூடாதா..?’

அவனது மனதில் ஓடிய எண்ணங்களை அறிந்தவன் போல் சரவணன், அவன் தோள் மேல் கை போட்டான்..

“என்னப்பா..?”

“வா.. போய் காபி குடிச்சிட்டு வரலாம்..”

“கஸ்தூரி இப்படிக் கிடக்கும்போது.. என் தொண்டையில் பச்சைத் தண்ணி கூட இறங்காது..”

துரைசிங்கம், மகேஷ்வரனின் அருகில் போய் நின்று கொண்டான்.. அவனது நோக்கம் சரவணனுக்கு தெளிவாகத் தெரிந்தது..

0Shares

Reviews – Katrodu Thuthuvitten / காற்றோடு தூதுவிட்டேன்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link