Chapter 17

0Shares

மகேஷ்வரனும், காயத்ரியும் பேசிவிடக்கூடாது.. அவனது தாய் மாமனை தனியே விடக்கூடாது.. மனைவியுடன் அவர் சமாதானம் ஆகிவிட்டால், சரவணனின் பக்கம் அவர் சாய்ந்துவிடுவார்.. அந்த வாய்ப்பு ஏற்பட்டுவிடக் கூடாது..

சரவணன், காயத்ரியைப் பார்த்த பார்வையில் செய்தி இருந்தது.. அதைப் புரிந்துகொண்ட காயத்ரி சோர்வுடன் தலையைப் பிடித்தபடி எழுந்தாள்..

“என்ன அத்தை..?”

“காலையில் இருந்து காப்பி கூடக் குடிக்கலை சரவணா.. தலையைச் சுத்துது.. இரண்டு இட்லியைப் பிய்த்து வாயில் போட்டால்தான் சரி வரும்..”

“அப்படியா..? அப்ப மாமா கூடப் போய் சாப்பிட்டுட்டு வாங்க..”

துரைசிங்கம் விழித்துக்கொண்டான்.. அவனுக்கு சரவணனின் திட்டம் புரிந்துவிட்டது..

“ஏன்ப்பா.. இப்ப நீ என்னை காப்பி குடிக்கக் கூப்பிட்டாயே.. அத்தைக்கு இட்லி வாங்கிக் கொடுத் துட்டு, நீயும் காப்பி குடிச்சிட்டு வா..”

“அறிவு கெட்டதனமாய் பேசாதேப்பா..”

“ஏன்ப்பா.. அப்படி நான் என்ன சொல்லக் கூடாததைச் சொல்லிட்டேன்..”

“உனக்கு அறிவே இல்லை துரைசிங்கம்.. இதை ஆயிரம் தடவை சொல்வேன்.. அத்தையைக் கூப்பிட்டுக் கொண்டு நான் ஓட்டலுக்குப் போனால்.. நம்ம ஊர்க்காரங்க என்ன சொல்வாங்க..?”

“என்ன சொல்வாங்க.. அண்ணன் மகனோடு சாப்பிடப் போய் இருக்குன்னு சொல்வாங்க..”

“கூறு கெட்டவனே.. மாமா இருக்கும்போது நான் கூட்டிட்டுப் போனால்.. புருசன், பொண்டாட்டிக்குள்ள என்ன சண்டையோ.. எதுவோ..! அதனாலதான் மகள் மருந்தைக் குடிச்சிட்டாள்ன்னு சொல்ல மாட்டாங்களா..?”

மகேஷ்வரனின் மனதிற்குள் பொறி தட்டியது.. ‘அதனால்கூட மகள் இந்த முடிவிற்கு வந்திருப்பாளோ..?’ என்று யோசித்தார்.. எதுவாக இருந்தாலும் இப்போது காயத்ரியைச் சாப்பிட அழைத்துச் செல்வது தன் கடமை என்பதை உணர்ந்தவராய் எழுந்து கொண்டார்..

“வா காயத்ரி.. போய் சாப்பிட்டுட்டு வரலாம்..”

‘என்னது.. புருசனும், பொண்டாட்டியும் தனியாச் சாப்பிடப் போகிறாங்களா..? விடக்கூடாதே..’

துரைசிங்கம் அவசரமாய், “நானும் வருகிறேன் மாமா..” என்று தொற்றிக்கொள்ள பார்த்தான்..

“அட இருப்பா.. நீ எங்கே போற..? இப்போதுதானே உன் தொண்டையில் பச்சைத் தண்ணிகூட இறங்காதுன்னு சொன்னாய்..”

“அது இல்லைப்பா.. எனக்கும் நா வறளுது..”

“அப்ப.. அவங்க ரெண்டு பேரும் வந்த பின்னால் என்கூட வா.. நான் நல்லா உன்னை கவனிச்சு அனுப்பறேன்..”

“நீ எதுக்குப்பா என்னைக் கவனிக்கணும்..? எனக்கு என் மாமன்தான் எல்லாமும், அவர் என்னைக் கவனிச்சுக்குவார்..”

‘என்னமாய் கைக்குள் போட்டுக்கிறான்..’ காயத்ரி பல்லைக் கடித்தாள்..

‘இத்தனை நாளாய் இவனைக் கவனிக்காமல் போனேனே..!’ என்றும் மனதிற்குள் நொந்துகொண்டாள்..

“அட இருப்பா.. கஸ்தூரியின் பக்கத்தில் ஆள் இருக்க வேண்டாமா..?”

“அதான் நீ இருக்கிறாயே..”

“நான் மட்டும் இருந்தால் ஊர் என்ன சொல்லும்..?”

‘இவன் எதற்கு இன்றைக்கு ஊரைப் பற்றி அதிகமாய் கவலைப்படுகிறான்..?’ துரைசிங்கம் எரிச்சல்பட்டுக் கொண்டு இருந்தபோது,

“அதுவும் சரிதான் சிங்கம்.. நீ சரவணன் கூட இரு.. ரெண்டு பேரும் கஸ்தூரியைப் பார்த்துக்கங்க.. நாங்க இப்ப வந்துவிடுவோம்..” என்று சொல்லிவிட்டு.. மனைவியுடன் மகேஷ்வரன் சென்றுவிட்டார்..

‘போச்சு.. போயே போச்சு.. அத்தை காதல் பண்ணி.. என் மாமனை கல்யாணம் பண்ணிக்கொண்ட மகராசி.. இந்த வயசிலேயும் என் மாமன், அத்தை நில்லுங்கன்னு சொன்னா நிற்பார்.. உட்காருன்னா உட்காருவார்.. முதன் முதலா இவர்களைப் பிரிச்சு வெச்சு ஜெயிக்கப் பார்த்தால், இந்தச் சரவணன் கோந்து இல்லாமலே இதுகளை ஒட்ட வைச்சுட்டானே..’

வெறுப்புடன் தாய் மாமனும், அவருடைய மனைவியும் போன திசையைப் பார்த்துக்கொண்டிருந்த துரைசிங்கத்தின் தோளின் மேல் அழுத்தமாய் தன் கரத்தைப் போட்டான் சரவணன்.. துரைசிங்கம் அதை விலக்கப் பார்த்தான் முடியவில்லை! இரும்புப் பிடியாய் அவன் தோளில் இருந்தது சரவணனின் கரம்..

“கையை எடு..”

“எடுக்கத்தான் போறேன்.. உன் கையை மட்டு மில்லை.. தலையையும் சேர்த்து..”

“மிரட்டுகிறாயா..? சரவணா.. நீ கோபம் வந்தால் தான் பொறுக்கி போல் நடந்துகொள்வாய்.. நான் பிறவியிலேயே பொறுக்கி.. உன் தலையை எடுக்க எனக்கு அதிக நேரமாகிவிடாது..”

“அதையும் பார்த்துவிடலாம்.. டேய், ஆம்பளைன்னா நேருக்கு நேர் என்கூட மோதுடா, அதை விட்டுவிட்டு.. பொட்டைச்சி மாதிரி ஏண்டா.. முதுகுக்கு பின்னால வேலை பார்க்கிற..?”

“டேய்.. அது ராஜதந்திரம்.. ஜெயிக்க முடியாமல் பேடித்தனமாய் நீ பேசாதே..”

“யார் பேடி..? ஒன்றும் தெரியாத சிறு பெண்ணை விஷம் குடிக்கும் அளவிற்கு கொண்டு போன நீ பேடியா.. இல்லை நான் பேடியா..? ஏண்டா.. உன் மாமன் உனக்கு நல்லதுதானே பண்ணுகிறார்..? நீ ஏண்டா அவருக்கு துரோகம் பண்ணுகிற..?”

“நான் உன்னிடம் அறிவுரை கேட்டேனா..? எனக்கு உபதேசம் பண்ணுகிற வேலையை விட்டுவிட்டு, உருப்படியாய் உன் மாமன் மகள்களில் ஒருத்திக்கு தாலி கட்டி வாழும் வழியைப் பாரு..”

“இதோ பாருடா.. எனக்கு இவன் யோசனை சொல்கிறான்.. டேய் துரைசிங்கம்.. எனக்கு என் மாமன் மகளைக் கட்ட ஆசையில்லை.. உன் மாமன் மகளைக் கட்டத்தான் ஆசை..”

“அது நடக்காது.. நான் நடக்க விடமாட்டேன்..”

“நீ யாருடா என் கல்யாணத்தைத் தடுக்க..?”

இருவரும் உக்கிரமாய் மோதிக்கொண்டு இருக்கையில்.. கஸ்தூரி லேசாக புரண்டு படுத்து கண் விழித்தாள்..

“அம்மா..” என்று ஈனஸ்வரத்தில் அழைத்தாள்..

“கஸ்தூரி..” சரவணன் அருகில் விரைந்தான்..

“அத்தான்.. நீங்களா..?”

“நானேதான்.. என்ன முட்டாள்தனம் இது..?”

“முட்டாள்தான் அத்தான்.. முட்டாள்தான்.. யார் என்ன சொன்னாலும் நம்பிக்கொண்டு இருந்த நான் முட்டாள்தான்..”

“போனது போகட்டும்.. அலட்டிக்காதே..”

அவர்கள் இணக்கமாய் பேசிக்கொண்டு இருந்ததைக் கண்ட துரைசிங்கத்தின் உடல் தகித்தது.. அவனும் கஸ்தூரியின் அருகே சென்றான்.. அவளது நெற்றியில் கரத்தை வைத்தான்..

யாரென்று பார்த்த கஸ்தூரி.. அதிர்ந்து போய் அவனுடைய கரத்தை தட்டிவிட்டாள்..

“பாவி…! எப்படி இங்கு வந்தாய்..? அத்தான்.. இவனை போகச் சொல்லுங்க.. இவன் என் கண் முன் நின்னா நான் இவனைக் கொன்றுவிடுவேன்.. ஆமாம்..”

“கஸ்தூரி.. நான் உன் ஆசை மாமாம்மா..”

“டேய்.. இனியொரு முறை இதுபோல பிதற்றினால், நீ செத்துவிடுவாய்.. போ.. என் கண் முன்னால் நிற்காமல் போய்விடு..”

கஸ்தூரி வெறி கொண்டவளாய்.. கட்டிலின் அருகே இருந்த எதையோ எடுத்து அவன் மீது வீசினாள்.. துரைசிங்கம் அவசரமாய் விலகிக்கொள்ள.. அறைக்குள் வந்து கொண்டிருந்த செவ்வந்தியின் காலடியில் அது விழுந்தது..

“என்னம்மா கஸ்துரி..?” செவ்வந்தி பதற்றத்துடன் கேட்டாள்..

“அத்தை.. அத்தை..” கஸ்தூரி தேம்பினாள்..

சரவணன் சட்டென்று அருகில் அமர்ந்து, அவளது தலையைத் தாங்கிக் கொண்டான்.. அவனது மடியில் முகம் புதைத்து அவள்விட்ட கண்ணீர்.. அவனது உடையை நனைக்க அவன் துணுக்குற்றான்..

செவ்வந்தியை பார்த்தான்.. அவளது கண்களிலும் அந்த துணுக்குறுதல் தெரிந்தது.. துரைசிங்கத்தை அவள் யோசனையுடன் பார்த்தாள்.. தன் கையில் இருந்த துணிப்பையை சரவணனிடம் நீட்டிவிட்டு மகனிடம் கூறினாள்..

“துரைசிங்கம்.. வெளியில் வா..”

“எதுக்கு..?”

“உன்கிட்ட பேசணும்..”

“வர முடியாது..”

“இப்போ வரப் போகிறாயா.. இல்லையா..?”

“முடியாதும்மா..”

“இப்ப நீ அப்பன் இல்லாத பிள்ளை.. இப்போ என்கூட வெளியில் வரலைன்னா.. அம்மாவும் இல்லாத பிள்ளையாய் ஆகிவிடுவாய்.. தெரிந்து கொள்..”

“அம்மா..”

“நீ என்னை அம்மான்னு நினைச்சு பூஜை பண்ண வேண்டாம்.. மனுஷியாய நினைச்சு.. என் வார்த்தைக்கு மதிப்பு கொடு..”

செவ்வந்தி முகம் இறுகி வெளியில் நடந்தாள்..

துரைசிங்கம் மவுனமாக பின் தொடர்ந்தான்..

0Shares

Reviews – Katrodu Thuthuvitten / காற்றோடு தூதுவிட்டேன்

0
0 out of 5 stars (based on 0 reviews)
Excellent
Very good
Average
Poor
Terrible

Write a Review

What others Say about this book!

There are no reviews yet. Be the first one to write one.

0 Shares
  • Facebook
  • Email
  • Copy Link
Copy link