Chapter 19
மகேஷ்வரனின் அறிவுக்கண்ணை திறக்க நினைத்தாள் காயத்ரி..
“ஏன்..?” அவர் புரியாமல் விழித்தார்..
“நான் உங்களிடம் கேட்டால்.. நீங்கள் அதே கேள்வியை என்னிடம் திருப்பிக் கேட்கிறீர்களா..?
சரி.. இந்த அறிவாளி ஏன் அப்படியொரு முடிவை எடுத்தார்..?”
“ஏன்னா.. கஸ்தூரியும், துரைசிங்கமும் ஒருவரை யொருவர் காதலிக்கிறார்கள்.. இது நமக்கு தெரியாமல் போய்விட்டது..”
“அடடா.. அப்படியா.. அப்புறம்..?”
“ஏண்டி.. நான் என்ன வேடிக்கை கதையா சொல்றேன்..?”
“உங்களுக்கு கதை சொல்லத் தெரியாது.. அது எனக்கும் தெரியும்.. உங்களுக்கு இந்தக் கதையை யார் சொன்னது..?”
“துரைசிங்கம்தான் சொன்னான்.. ‘ஏன் மாமா.. ஏழை காதலிக்கக் கூடாதா?’ன்னு கேட்டான்..”
“ச்சு.. ச்சு.. நெஞ்சைத் தொட்டுட்டான்.. உங்களுக்கு அப்படியே.. நாம் காதல் செய்த காலத்தில் நடந்ததெல்லாம் நினைவுக்கு வந்திருக்குமே..?”
“எப்படிடீ.. இவ்வளவு சரியா சொல்றே…?”
“வெத்தலையில் மை தடவிப் பார்த்தேன்.. ம்.. நல்லா வந்திரும் என் வாயில.. ச்சே.. மனுசனுக்கு வயதானால் அறிவு கூடணும்.. இங்கே குறையுது..”
“துரைசிங்கத்தை நீ சந்தேகப்படுறயா…?”
“இதுக்கெல்லாம் நான் பதில் சொல்லமாட்டேன்.. இதே கேள்வியைச் சரவணனைப் பார்த்து நீங்கள் கேட்டிருந்தால், நான் பதில் சொல்லலாம்.. அவன் என் அண்ணன் மகன்.. துரைசிங்கம் என் நாத்தனாரின் மகன்.. அதனால், நான் வேணும்னே அவன் மேல் பழி போடுவதாய் ஊர் சொல்லிவிடும்..”
“காயத்ரி.. நீ என்னடி சொல்கிறாய்..?”
“துரைசிங்கம் சொல்வது உண்மைதானான்னு ஒரே ஒரு கேள்வியை கஸ்தூரியிடம் கேட்டிருந்தால் இப்படி நடந்திருக்காது.. என்னைச் சொல்லிவிட்டு.. நீங்கள் இப்போது என்ன பண்ணி வைத்து இருக்கிறீர்கள்..? உங்கள் தங்கை மகன் சொல்வது உண்மைதான்னு முழுதாய் நம்பலாமா..? கஸ்தூரியிடம் உண்மை என்னன்னு ஒரு வார்த்தைக் கேட்டிருக்க வேண்டாமா..?”
“கஸ்தூரி.. நிச்சயம் பண்ணின கல்யாணத்தை நிறுத்தினாளே..?”
“அது ஏன்னு அவளிடம் கேட்க வேண்டியதுதானே..!”
“அவள்தான் காரணம் கேட்காதீங்கன்னு அழுதாளே..?”
“அப்போ உங்களிடமும், என்னிடமும் சொல்ல முடியாத காரணம் எதுவோ.. அவளுடைய கல்யாணத்தை நிறுத்தி இருக்கிறது.. துரைசிங்கத்தின் மீதான காதலை நம்மிடம் சொல்ல அவள் ஏன் தயங்க வேண்டும்..? அவனும் முறைப்பையன்தானே..!”
“உன்னிடம் பயந்திருக்கலாம்..”
“நான் அவளைப் பயமுறுத்தியது இல்லையே..”
“சரவணன் உன் அண்ணன் மகனாயிற்றே..?”
“அதைச் சொல்லி அவளை நான் கல்யாணத்திற்கு சம்மதிக்க வைக்கலையே..! உங்களிடம் அவளாகத்தானே சம்மதம் சொன்னாள்..?”
“நேற்று அவள் கல்யாணம் வேண்டாம் என்றதும் கோபப்பட்டாயே..!”
“பரிசம் போட்ட கல்யாணத்தை நிறுத்துவது தப்பு.. இதுவே மாப்பிள்ளை சரவணனாக இல்லாமல்.. துரைசிங்கமாக இருந்திருந்தாலும் நான் கோபப் பட்டிருப்பேன்.. எனக்கு என் அண்ணன் வேறு.. செவ்வந்தி வேறில்லை..”
“துரைசிங்கம் படிக்காதவன்.. ஊர்சுற்றி.. குடிகாரன்.. என்றெல்லாம் பழித்தாயே..”
“உண்மையைத்தானே சொன்னேன்..! இதே விசயங்கள் சரவணனிடம் இருந்திருந்தால், அதையும் தயங்காமல் சொல்லி இருப்பேன்.. எனக்கு என்
பெண்ணின் வாழ்க்கை முக்கியம்.. அவளைக் கல்யாணம் பண்ணிக்கிறவன்.. நல்லவனாக இருக்க வேண்டுமா..?”
“ஆனால்.. துரைசிங்கம் சொன்ன காதல் விவகாரம்..”
“பொய்..”
“அவனும், கஸ்தூரியும் காதலித்தது..?”
“கட்டுக்கதை..”
“கஸ்தூரி அவனிடம் அழுதாளாமே..?”
“அவன் சொல்வது உண்மையாக இருந்திருந்தால்.. அவள் துரைசிங்கத்துடன் கல்யாணம் என்றதும் மகிழ்ந்து போயிருக்க வேண்டுமே.. ஏன் மருந்ததைக் குடித்தாள்..?”
“நான் தப்புச் செய்துவிட்டேனா..?”
“ஆமா..”
“இப்போ என்ன செய்வது..?”
“விசயத்தை ஆறப் போடுவோம்.. சரவணன் வேறு ஒன்றைச் சொல்லுகிறான்..”
“என்னவாம்..?”
“அவனும், கஸ்தூரியும் காதலர்களாம்.. அதனால்தான் என் அண்ணன், மகனுக்காக பெண் கேட்டு வந்தாராம்.. அவங்க ரெண்டு பேருக்கும் ஒரு சின்ன விசயத்தில் கொஞ்ச நாட்களாவே மனஸ்தாபமாம்.. சரவணனோட மாமன் மகள் மேல் நம்ம கஸ்தூரிக்கு பொறாமையாம்..”
“இது என்னடி.. நீ இப்படிச் சொல்ற..? பரிசம் போட்ட பின்னால்.. கஸ்தூரி, சரவணனை கோயிலில் சந்தித்துப் பேசுவது எனக்குத் தெரியும்..”
“தெரிந்துமா.. அவளுக்கு இந்தக் கல்யாணத்தில் விருப்பமில்லைன்னு நினைத்தீர்கள்..?”
“சரவணன் தானாக வந்து பேசி இருப்பான்னு நினைத்தேன்டி..”
“இப்படி நீங்களாகவே எதையாவது நினைத்து தொலையுங்க.. எனக்கு நல்லாத்தான் வருது வாயில..”
“நானும் அப்போதிருந்து பார்க்கிறேன்.. வாயில் நல்லா வருது, வருதுன்னு சொல்லிக்கிட்டே இருக்கே..! அப்படி என்னதான் உன் வாயில் வரும்..?”
“ச்சு.. நீங்க ஒரு மனுஷன்னு உங்ககிட்ட வீட்டு விசயம் பேச வந்தேன் பாருங்க.. என்னைச் சொல்லணும்..”
“விடு.. விடு.. என்கிட்ட விசயத்தைச் சொல்லிட்ட இல்ல.. இனி துரைசிங்கத்தை நான் பார்த்துக்கிறேன்..”
மருத்துவமனை வளாகத்தில் துரைசிங்கத்துடன் பேசிக்கொண்டிருந்த செவ்வந்தியின் குரலில் என்றும் இல்லாத கண்டிப்பு இருந்தது..
“சொல்லுடா..”
“எதைச் சொல்லச் சொல்ற..?”
“உன்னைக் கண்டாலே கஸ்தூரிக்கு ஏன் கொலைவெறி வருது..?”
“என்னைக் கேட்டால்.. எனக்கு எப்படித் தெரியும்..?”
“அப்போச் சரி.. அவளிடமே போய் கேட்கிறேன்..”
“இங்க பாரும்மா.. இதிலெல்லாம் நீ தலை கொடுக்காதே..”
“எதிலெல்லாம் நான் தலை கொடுக்கக்கூடாது..? நல்லா இருந்த பொண்ணு.. கல்யாணத்துக்கு காத்திருந்த பொண்ணு.. விஷத்தைக் குடிச்சு.. உயிரை விடத் துணிஞ்சிருக்கா.. அது ஏண்டா..?”
“ஏம்மா.. உனக்கே இது நல்லா இருக்கா..? அது மருந்தைக் குடிச்சதுக்கு நான் எப்படி பொறுப்பாளி ஆவேன்..? என்னவோ.. அவளை வாயைத் திறக்கச் சொல்லி.. அவவாயில் நான் பூச்சி மருந்து ஊத்தியது போல இப்படி குடைகிறாயே..?”
“துரைசிங்கம்.. உன்னை எனக்குத் தெரியும்டா..”
“ஏம்மா.. பெத்த மகனை எந்த தாய்க்குத்தான் தெரியாது..! இது ஒரு விஷயம்னு.. அதுக்கு இம்மாம் பெரிய ‘பில்ட் அப்’ கொடுத்து பேசிக்கிட்டு இருக்கயே.. வெளியே சொல்லிராதே.. சிரிச்சிரப் போறாங்க..”
“யாரும் சிரிச்சிடக் கூடாதுன்னுதான் இத்தனை நாளும் உன் குறைகளை.. இழுத்துப் போர்த்தி மூடி மறைத்து வாழ்ந்துக்கிட்டு வந்தேன்.. ஆனா, எப்போ ஒரு வயசுப் பெண்ணின் கையைப் பிடிச்சு நீ இழுத்துட்டியோ.. அதற்கு மேல் நான் பொறுமையா இருக்க மாட்டேன்..”
“வயசுப் பெண்ணின் கையைப் பிடிச்சு நான் இழுத்ததை நீ பார்த்தியா..? ஏம்மா.. நீ வேற எழவைக் கூட்டறே..?”
“டேய்.. இந்த பம்மாத்து வேலையெல்லாம் என்கிட்ட வேண்டாம்.. நானும் பொம்பளதாண்டா.. ஒரு பொம்பளைக்கு ஏன் இவ்வளவு ஆத்திரம் வருதுன்னு எனக்கும் தெரியும்..”
“சும்மா நீயாய் கற்பனை பண்ணிக்கிட்டு.. இல்லாததையும் பொல்லாததையும் சொல்லாதே..”
“டேய்.. உனக்கு கஸ்தூரியின் மேல் இருந்த ஆசை எனக்குத் தெரியுங்கிறதை நீ மறந்திராதே..”
“தெரிஞ்சு என்ன செய்து கிழிச்சே..! நானாவது.. ஆயிரம் பொய்யை அவிழ்த்துவிட்டு.. உன் அண்ணன் காரனிடம் மனசை மாற்றி.. கஸ்தூரியை எனக்கே கட்டிக் கொடுக்க சம்மதிக்க வைச்சேன்..”
Reviews – Katrodu Thuthuvitten / காற்றோடு தூதுவிட்டேன்
Write a Review
What others Say about this book!
There are no reviews yet. Be the first one to write one.